ரவு 34

மருத்துவர் அறை முன் ஆர்யன், ஜெய், மாணிக்கம் மூவரும் பதட்டத்துடன் அமர்ந்திருந்தனர். மயூரி உள்ளே சென்று அரை மணி நேரத்திற்கு மேலாகிவிட்டது. இருந்தும் அவள் வெளியே வராமல் இருப்பதால் ஏற்பட்ட பதட்டம் தான் இது. மயூரி அந்த அறையை விட்டு வெளியே வந்து எந்தப் பிரச்சனையும் இல்லை என்று சொன்ன பிறகுதான் மூவரும் அமைதியாகினர். மயூரி “சரி வாங்க கிளம்பலாம்.” என்று நகரப் போனவளை தடுத்த மாணிக்கம் “ஒரு நிமிஷம்ம்மா, டாக்டர் கிட்ட ஒண்ணு கேட்கணும்” என்று அவர் மருத்துவர் அறைக்குள் சென்றுவிட்டார்.

மாணிக்கம் சென்றதைப் பார்த்து மயூரி “ஆர்யன், ஏன் அங்கிள் இந்த டாக்டர பார்க்கணும்னு சொல்றாங்க? அங்கிள்க்கு ஏதாவது பிரச்சனையா?” என்று கேள்வியாக பார்க்க, ஆர்யன் “இல்லை, அப்பாவுக்கு எனக்கு தெரிஞ்சி எந்த பிரச்சனையும் இல்லையே” என்ற ஆர்யனுக்கும் ஒரே குழப்பம்தான், “அப்பா டாக்டர் கிட்ட என்ன பேசப் போறாரு” என்று யோசனையாக நின்று கதவையே பார்த்தபடி நின்றான்.

உள்ளே சென்ற மாணிக்கம் மேரி முன் அமர்ந்து “டாக்டர், உங்ககிட்ட மயூரி பத்தி கொஞ்சம் பேசணும்” என்று தயக்கத்துடன் பேசினார். மேரி “என்ன சந்தேகம் கேட்கணும்? கேளுங்க” என்று சிரித்த முகமாகத்தான் சொல்ல மாணிக்கம், “அது மயூரி பாப்பா இருக்காங்களே, அவங்க பழைய நினைவுகளைப் பத்தி நான் இப்போ பேசலாமா?”

“அ.. தாராளமா பேசலாம் ஆனா அவுங்கள ரொம்ப யோசிக்க விடக் கூடாது. தலைவலி வர அளவு யோசிச்சா நேத்தி நடந்துச்சே அந்த மாதிரி அவுங்க அந்த நினைவுகுள்ள ஆழ்ந்து போயிடுவாங்க.“ அதை கேட்ட மாணிக்கம்

“தலைவலி வராம பாத்துக்கணும்மா டாக்டர். மத்தபடி கேட்குறதுனால வேற பிரச்சனை வராதே.“

“வராது தைரியமா கேளுங்க” என்று டாக்டர் மேரி சொன்னா பிறகு தான் மனதில் ஒரு நிம்மதியே பிறந்தது. பின் டாக்டருக்கு நன்றி சொல்லி விட்டு மாணிக்கம் வெளியே வர மயூரி “என்ன அங்கிள் டாக்டர் கிட்ட இவ்வளவு நேரம் பேசுனீங்க?” என்று மயூரி மாணிக்கத்தைப் பார்த்துக் கேட்க, அதற்கு அவர் சுற்றிப் பார்த்தபடி, “வீட்டுக்குப் போய்ப் பேசிக்கலாம்மா, இங்கே வேண்டாம்” என்று வீட்டுக்கு நால்வரும் செல்ல, மயூரிக்கு அவள் வீடு செல்லும் வரை “என்னவா இருக்கும் டாக்டர் கிட்ட அங்கிள் பேசுற அளவுக்கு?” என்று எண்ணியபடியே வர, அதே சிந்தனைதான் ஜெய் மற்றும் ஆர்யனுக்கும் கூட. இப்படி நால்வரும் நான்கு சிந்தனையுடன் வீடு வந்து சேர, மயூரி வீட்டுக்குள் வந்த மறு நொடி மாணிக்கத்திடம் கேட்கத் தொடங்கிவிட்டாள்.

”டாக்டர் கிட்ட என்ன பேசினீங்க அங்கிள்?“ என்று அதே கேள்வியையே மற்ற இருவரும் கண்ணில் கேட்டு நிற்க, மாணிக்கம் மூவரையும் சோபாவில் அமர வைத்துவிட்டு, உள்ளே சென்றவர் கையில் ஒரு பழைய போட்டோ ஆல்பத்தை எடுத்து வந்து இவர்கள் எதிரில் அமர்ந்தார். ஆர்யன் அந்த ஆல்பத்தை கேள்வியாக பார்த்தபடி, “பாட்டி தாத்தா ஆல்பம் எதுக்குப்பா எடுத்துட்டு வர்றீங்க?“ என்று கேட்க அதற்கு மாணிக்கம் “அமைதியா இரு ஆர்யன்“ என்று சொல்லிவிட்டு மயூரி முன் அதை திறக்க அதன் முன்பகுதியில் ஒரு கருப்பு வெள்ளை போட்டோ இருக்க அதில் இருந்த இருவரைக் காட்டி மாணிக்கம் “இது என் தாத்தா பாட்டி. இவர் எங்க அப்பா ஏழு வயசுல. இது அவரோட தங்கச்சி இரண்டு வயசு“ என்று காட்டியவர் மறுபக்கம் திருப்ப அதில் இவருடைய அப்பா மற்றும் அவர் தங்கை மட்டும் இருந்தனர். அதைப் பார்த்து மாணிக்கம்

“எங்க தாத்தா எங்க அப்பாக்கு பதினைந்து வயசு இருக்கும்போது நெஞ்சுவலியில இறந்துட்டாராம். அப்போ எங்க தாத்தா அவர் குடும்பத்துக்குன்னு வச்சிட்டுப் போனது ஒரு வீடு, நிறைய கடன். திருச்சியில அந்த ஒரு வீட்டை வச்சிட்டு என்ன பண்ணன்னு எங்க பாட்டி முழிச்சப்போ எங்க அப்பா தான் தைரியம் சொல்லி அந்த வயசுலயே வேலைக்குப் போனாராம்” என்று அடுத்த பக்கம் திருப்ப, அதில் ஒரு திருமணப் புகைப்படம் இருந்தது. அதைக் காட்டிய மாணிக்கம் “ எங்க அப்பாக்கு அவர் தங்கச்சிய ரொம்ப பிடிக்கும். ரொம்ப கஷ்டப்பட்டு உழைச்சு வருஷத்துக்கு ஏதாவது ஒரு நகை செஞ்சிடுவாராம் அவர் தங்கச்சிக்குன்னு. அப்படி பார்த்து பார்த்து பண்ணி நூறு சவரன் போட்டு கல்யாணம் பண்ணி வச்சாரு கவர்மெண்ட்ல வாத்தியார் வேலை பார்த்தவருக்கு “ என்று அடுத்த பக்கம் திருப்ப அதுவும் ஒரு திருமண புகைப்படம் தான்.

“ அவங்க தங்கச்சி திருமணம் முடிச்சு இவர் கல்யாணம் பண்ண ரொம்ப லேட் ஆகிருச்சு. முப்பத்தி ஐந்து வயசுல தான் கல்யாணம் பண்ணாங்க. எங்க அம்மாவ அம்மா சைட் சொந்தம்னு யாரும் அவ்வளவா இல்ல. அவங்க அப்பா மட்டும் தான். அவரும் கல்யாணம் முடிஞ்ச அடுத்த வருஷத்துல இறந்துட்டாங்க “ என்று மறுபக்கம் திருப்ப, அதில் இரண்டு வயது ஆன ஒரு பெண் குழந்தைக்கு பாவாடை சட்டை போட்டு, சிறு குடுமி போட்டு, புகைப்படம் எடுத்திருந்தனர். அதை ஆசையாக தடவிய மாணிக்கம், “எங்க அப்பா கல்யாணம் ஆகி இரண்டு வருஷம் கழிச்சு பிறந்தவ தான் எங்க அக்கா லட்சுமி தேவி. அவங்க போட்டோ தான் இது“ என்று மயூரியைப் பார்க்க, லட்சுமி தேவி என்ற பெயர் கேட்டதிலேயே ஏதோ யோசிக்கத் தொடங்கிவிட்டாள் அவளின் யோசனையான முகத்தைப் பார்த்த மாணிக்கம் மேலும் தொடர்ந்தார்

“எங்க அக்கா பிறந்த ரெண்டு வருஷத்துல எங்க அப்பாவோட அம்மாவும் இறந்துட்டாங்க. எங்க பாட்டி இறந்த பிறகு எங்க அத்தையோட ஏதோ பிரச்சனையில அவங்க கூட பேசுறதை நிறுத்தி வச்சிட்டாங்க எங்க அப்பா“ என்று மறு பக்கம் திருப்பியவர் அதில் இருந்த போட்டோவைக் காட்டி “இது எங்க அப்பா அம்மா, இது எங்க அக்கா ஆறு வயசு, இது நானு அப்போ எனக்கு ஒரு வயசு“ என்று காட்டியவர்

“எனக்கு எங்க அக்கான்னா ரொம்ப பிடிக்கும். எங்க அப்பா ஒன்னும் ரொம்பலாம் சம்பாதிக்கல்லை. எண்ணெய் செக்குல வேலை பார்த்து வரதுதான். அதுல வர சம்பளத்துல எப்பவாவது ஏதாவது வாங்கி வருவாரு. அதை எங்க அக்கா முதல்ல எனக்கு ஊட்டிவிட்டு மிச்சம்தான் சாப்பிடுவா எங்க அக்கா” என்று கண்கள் மின்னச் சொன்னவர் அடுத்த பக்கம் திருப்ப, அதில் பதினேழு வயது நிரம்பிய லட்சுமியும் பன்னிரண்டு வயது ஆன மாணிக்கமும் முகம் முழுக்க சந்தோஷத்துடன் நின்று கொண்டிருந்தனர்.

அதை பார்த்த மறு நொடி மயூரி அதிர்ச்சியில் எழுந்து நின்றுவிட்டாள். அவள் அதிர்வைப் பார்த்து ஆர்யன், ஜெய் “என்ன?” என்று அந்தப் புகைப்படத்தை உற்றுப் பார்க்க, அதில் இருந்தது மயூரி வரைந்து வைத்திருந்த லல்லியின் புகைப்படமே. முதலில் பார்த்தால் தெரியவில்லை, ஆனால் உற்றுப் பார்க்க அது லல்லியே தான். அதைக் கண்டுகொண்ட ஜெய், ஆர்யன் இருவருமே அதிர்ந்துதான் போயினர்.

ஆர்யன் “அப்பா, அத்தைதான் மயூரியைப் பார்த்துகிட்டவங்களா அப்பா. போட்டோ பார்த்தீங்க தானே? அது நம்ம அத்தையா தான?” ஆர்யனின் சிறு வயதில் எத்தனை முறை அந்த புகைப்படத்தைக் காட்டி, “அத்தை சொல்லு” என்றும், “இவங்க உன் அத்தை” என்றும் சொல்லியிருப்பார். எப்படி நான் பார்த்ததும் கண்டுபிடிக்காமல் போனேன் என்று நொந்தவன், பின் உண்மை முகத்தில் அறைய, “அப்போ அத்தை அந்த மாதிரி இடத்திலா?” என்று அதிர்ந்து மயூரியைப் பார்க்க, மயூரி மாணிக்கம் கைகளைப் பிடித்தபடி.

“அங்கிள் லட்சுமி உங்க அக்காவா…” என்று முகத்தில் படர்ந்து ஒரு பதட்டத்தோடு கேட்க மாணிக்கம் “நீ தயங்கி நிக்காத எங்க அக்காவ பத்தி ஜெய் நேத்தே முழுசா இல்லனாலும் அவனுக்கு தெரிஞ்ச வரை சொல்லிடான் ம்மா இப்போ எதுக்கு உன் கிட்ட இத எல்லாம் சொல்றேன்னா எனக்கு என் அக்கா எப்படி இருந்தாலும் என்ன பண்ணிருந்தாலும் அவுங்க வேணும்மா அவங்கள நான் பார்த்து அறுபது வருஷம் ஆகுது ம்மா ஏதாவது அவங்கள பத்தி தெரிஞ்ச கொஞ்சம் சொல்லும்மா என் அக்கா எனக்கு வேணும்” என்று மாணிக்கம் கண்ணீர் விட்டு அழுக மயூரியின் கண்களிலும் கண்ணீர் தான்.

பின் மயூரி கண்களை துடைத்தபடி மெதுவான குறளில் “ எப்படி லட்சு ம்மா அந்த இடத்துக்கு போனாங்க “ என்று கம்மிய குறளில் கேட்க மாணிக்கம் அந்த புகைபடத்தை தடவிய படி “ இதுதான் நானும் எங்க அக்காவும் ஒண்ணா எடுத்துக்கிட்ட கடைசி போட்டோ. இதுக்கு அப்புறம் எடுக்கிற சூழ்நிலையும் அமையல. எடுக்க எங்க அக்காவும் என் கூட இல்ல. “ என்று கண்களைத் துடைத்தவர், “எங்க அப்பா, எங்க தாத்தா கட்டின வீட்டுலதான் இருந்தாங்க. அது ரொம்பப் பழசா ஆகி இருந்துச்சு. அடுத்த வருஷம் எப்படியாவது எடுத்து கட்டணும்னு இருந்தாங்க. ஆனா அதுக்குள்ள அந்த வீடு இடிஞ்சு விழுந்துடுச்சு. அந்த வருஷம் பேஞ்ச மழையில அதுல இருந்து எங்களை காப்பாத்துன எங்க அப்பா அம்மாவுக்கு அவங்களை காப்பாத்திக்க தெரியாம அதுல அவங்க இறந்துட்டாங்க”