இரவு 33

மயூரி நன்றாக யோசித்ததாலோ அல்லது தலையை சுவற்றில் அடித்து உடைத்ததாலோ அல்லது மேரி போட்ட ஊசியாலோ எது என்று தெரியவில்லை. அவள் மயங்கிய பின் அதே நினைவுகள் தொடர்ந்தது. கதவைத் திறந்து கொண்டு கண்கள் மூட மாடியை நோக்கி ஓடிய மயூரியை யாரோ பின்னிருந்து பிடிக்க, மயூரி பயந்து கத்தி அழுதபடி “என்னை விடு, என்னை விடு“ என்று கத்த, அப்போது லல்லி “மயூரி நான் தான், பயப்படாதே..” என்று லல்லியின் குரல் கேட்ட பின்னர்தான் கண்களையே திறந்து பார்த்தாள். லல்லி பதட்டத்துடன் மயூரியைப் பார்க்க, பயந்துபோன மயூரி லல்லியை அணைத்துக்கொண்டு தேம்பத் தொடங்கினாள். அப்போது அந்த அரக்கன் அங்கே வந்து கேவலமாக லல்லியைப் பார்த்து சிரித்து விட்டு “கட்டோ தாம் ஹாபி போலோ? அமி கரச்ட்டோ தேபோ…. பாபா… ஹேட்டா குச் சுந்தரா” என்று பெங்காளியில்  “ரேட் எவ்வளவுன்னு சொல்லு தந்துறேன்… பாப்பா… அழகா இருக்கா?” என்று அவன் பார்த்த பார்வையில் லல்லி பயந்து மயூரியை அவள் சேலை கொண்டு மூடியபடி “நீ கேட்கிற பொண்ணுங்க கீழே இருக்காங்க. இங்கே என் பொண்ணுகிட்ட வராத” என்று கோபமாக பெங்காலியில் பதில் சொல்ல, அதைக் கேட்டு அவனும் “ஓ.. உன் பொண்ணா…சரி ஐட்டம் மார்க்கெட்டுக்கு வரும்போது பார்த்துக்கறேன் காக்காவுக்குப் பொறக்குறது மயிலாகிடுமா என்ன?” என்று பெங்காலியில் பேசியபடி செல்ல லல்லி அவள் சேலையை மயூரி மீது போர்த்தியபடியே அவர்கள் அறைக்குச் சென்று கதவைச் சாத்திவிட்டு மயூரியை அணைத்தபடியே அமர்ந்துவிட்டாள். மயூரிக்கு லல்லியின் உடல் நடுங்குவது தெரிய, லல்லியை இறுக அணைத்தபடியே “ சாரி லட்சு ம்மா… தெரியாம தூங்கிட்டேன்… இனிமே இப்படி தூங்க மாட்டேன் ப்ராமிஸ்… “ என்று தேம்பிக்கொண்டே பேச மயூரியின் குறளைக் கேட்ட லல்லி “ சரிடா தங்கம் அழுகாதிங்க நல்ல பிள்ளைல என் மயூ செல்லம் அழுகாத “ என்று சமாதானம் செய்தாள் லல்லி. அதை கேட்டு மயூரியின் தேம்பல் நின்று போக லல்லியின் முகத்தை அண்ணாந்து பார்த்தாள் மயூரி, உடனே லல்லி வரவழைத்த சிரிப்புடன்

“ இதுக்காக தான் தங்கம் பகல்ல தூங்கி நைட் முழிச்சு இருக்க சொல்றேன். நைட் இங்க நிறைய அரக்கன்க வருவாங்க மயூரி, அவங்க கண்ணுல நம்ம பட்டா நம்மள முழுங்கிடுவாங்க. மயூ, நம்ம நிம்மதியா பயம் இல்லாம தூங்கனும்னா அது பகல்ல மட்டும் தான் முடியும். மயூ, அத எப்பவும் நீ மறக்க கூடாது. பகல்ல தான் தூங்கனும். மத்த நேரம் தூங்குனா அரக்கன் வந்துருவான், சரியா மயூரி “ என்று மயூரியை நன்றாக பயமுறுத்தி வைத்துக்கொண்டாள் லல்லி.

லல்லியால் இரவு முழுக்க மயூரி உடன் இருக்க முடியாது அதனாலேயே இப்படி மயூரியை பயமுறுத்த வேண்டியதாக இருக்கிறது. மயூரியும் “ இனிமே நைட் தூங்க மாட்டேன் லட்சு ம்மா நீங்க வர வரை அலமாரியிலேயே ஒளிஞ்சி இருக்கேன் “ என்று சமத்து பிள்ளையாக சொல்வதை கேட்டு லல்லிக்கு நெஞ்சு வலிக்க தான் செய்தது அதை முகத்தில் காட்டாமல் மயூரியை மடியில் அமர வைத்தபடி ஏதோ சிந்தனையில் இருந்தாள். அப்போது மயூரி

“இன்னைக்கு மட்டும் என் கூடவே இருக்கியா லட்சு ம்மா?“ என்று கையில் வைத்திருந்த கதை புத்தகத்தைப் பார்த்தபடியே கேட்க, லல்லி எச்சிலைக் கூட்டி விழுங்கியபடி, “அது வந்து மயூ ம்மா“ என்று யோசித்து, பின் “நான் உன் கூட நைட் இருந்தா என்னைப் பிடிச்சி அந்த அரக்கன் கிட்ட போட்டுருவாங்க மயூ. நான் போய் அவங்க சொல்றதை செய்யணும். இல்லைன்னா உன்னை என் கிட்ட இருந்து பிரிச்சிடுவாங்க மயூ. இப்போ சொல்லு நான் போகாமல் இங்க இருக்கவா?“ என்று லல்லி கேட்டதற்கு மயூரி மறுப்பாக தலை அசைத்து

“அப்போ வேலை பார்க்க போறதுக்கு முன்னாடி ஒரு கதை சொல்லிட்டு போ லட்சு ம்மா“ என்று மயூரி சொன்னதை கேட்டு லல்லி “கதையா…” என்று சிறிது நேரம் யோசித்தவள் பின் மடியில் இருந்த மயூரியை அணைத்தபடி “ஒரு ஊரில ஒரு ராஜா, ராணி இருந்தாங்களாம். அவங்களுக்கு இளவரசி, இளவரசன் ன்னு இரண்டு குழந்தை இருந்துச்சாம். இவங்க நாலு பேரும் சேந்து  ரொம்ப ரொம்ப ஹாப்பியா இருந்தபோது ஒரு நாள் அவுங்க அரண்மனை உடைஞ்சு கீழே விழ, ராஜாவும் ராணியும் இளவரசி இளவரசனைக் காப்பாற்ற அவுங்க உயிரை விட்டுடாங்க.“

“அச்சச்சோ… பாவம்ல லட்சு ம்மா அவுங்க “

“ஆமா ரொம்ப பாவம் தான் இளவரசியும் இளவரசனும் அவங்க அம்மா அப்பா போய் தங்க இடம் இல்லாம கஷ்டப்பட்டு சொந்தக்காரங்க கிட்ட உதவி கேட்டு போனாங்களாம் அவங்க சொந்தமும் சரி நீங்க இங்க தங்கலாம் அன அதுக்கு இளவரசி வேலைக்கு போகணும்னு சொன்னாங்களாம் இளவரசியும் வேற வழியில்லாம என்ன வேலைன்னு கேட்டதுக்கு வீட்டு வேலை பார்க்கணும்னு சொல்லி அனுப்பி வச்சிட்டாங்களாம் இளவரசியும் அவங்க தம்பிக்காக போகலாம்னு போனாங்களாம் “

“ஏன் இளவரசி மட்டும் வேலைக்குப் போனாங்க? இளவரசனும் உதவி பண்ணலாமே! பாவம் தானே இளவரசி?” என்று மயூரி சொன்னதைக் கேட்டு அவள் தலையை வருடிய லல்லி, “அது இளவரசி பெரிய பொண்ணு. ஆனா இளவரசன் சின்ன பையன். அதான் அவங்களை வேலைக்குக் கூப்பிடலை.”

 “ஓ… அப்புறம் என்ன ஆச்சு லட்சு ம்மா?”

“அப்புறம் இளவரசி வேலைக்குப் போய் அந்தக் காசில பாதி அவங்க சொந்தத்துக்கும் மீதம் பாதி அவ தம்பி படிக்கிறதுக்கும் கொடுத்து வர ஒரு நாள் இளவரசி வேலை பார்க்கிற இடத்திலிருந்து ஒருத்தர் வந்து இளவரசி சொந்தக்காரங்ககிட்ட தூரத்துல ஒரு அரண்மனை இருக்கு அதுல இளவரசிய வேலைக்கு அனுப்புனா உங்களுக்கு நிறைய காசு கிடைக்கும்னு சொல்ல அவங்களும் இளவரசிய அங்க போகச் சொல்லிட்டாங்க. ஆனா இளவரசிக்கு அவங்க தம்பியை விட்டுப் போக விருப்பமே இல்லை. அப்போ அந்த சொந்தக்காரங்க சேர்ந்து நீ போகலைன்னா உன் தம்பியையும் வேலைக்கு அனுப்புவோம் படிக்க விடா மாட்டோம்னு மிரட்ட இளவரசிக்கு வேற வழி இல்லாம அவ தம்பியைப் பிரிஞ்சு தூரத்துல இருக்க அரண்மனைக்குப் போனா.” என்று லல்லி கதை சொல்லிக்கொண்டு இருக்கும்போது கதவு தட்டப்பட லல்லி “நேரம் ஆச்சு போல மயூ நான் அப்புறம் வந்து கதை சொல்றேன்“ என்று அவள் கண்களை துடைத்தபடி எழுந்து சென்றுவிட்டாள். லல்லி சென்றதும் மயூரி சமத்தாக அந்த அலமாரியில் சென்று அமர்ந்துகொண்டாள். அதோடு இங்கு மயூரியும் எழுந்துவிட்டாள். அன்று எதுவும் மயூரிக்கு ஆகவில்லை என்று தெரிந்த பின்னர்தான் மயூரிக்கு மூச்சே வந்தது. இவற்றை நினைத்துப்பார்த்தபடி காலை மூன்று மணி அளவி்ல் அந்த பால்கனியில் நவம்பர் மாதம் குளிர் உடலை ஊசியெனக் குத்தினாலும் அதை ரசித்தபடி நின்ற மயூரி

“அந்த இடத்துல தான் லட்சு ம்மா நான் இருட்டுல தூங்க முடியாது. இங்க அப்படி இல்ல லட்சு ம்மா, இங்க நான் இருட்டுல தூங்கினாலும் ஒன்னும் ஆகாது. அதனால பயப்படாம இருட்டுல என்ன தூங்க விடுங்கம்மா“ என்று லல்லியுடன் மனதோடு பேசியவள் மௌனமாக இறைவனிடமும் லல்லிக்காக வேண்டியபடி அங்கேயே நின்றாள்.

 காலை எட்டு மணியளவில் மாணிக்கத்திற்கு முழிப்பு வர கண் விழித்துப் பார்த்தவர் அருகில் மயூரி இல்லை என்றதும் பயந்து போனவர் வீட்டைச் சுற்றி பதற்றத்துடன் பார்த்தார். அப்போது கதவு திறக்கும் சத்தம் கேட்டு வாசலைப் பார்க்க மயூரி கையில் பையுடன் உள்ளே நுழைவதைப் பார்த்த பின்புதான் மாணிக்கத்திற்கு மூச்சே வந்தது. வீட்டுக்குள்ளே வந்த மயூரி மாணிக்கம் முழித்திருப்பதைப் பார்த்து மெதுவான குரலில் “என்ன அங்கிள் நல்ல தூக்கமா..” என்று கேட்ட மாணிக்கம் “நீ எங்கம்மா தனியா போயிட்டு வர என்ன எழுப்பியிருக்கலாம்ல “ என்று கத்திப் பேச மயூரி “ அச்சோ அங்கிள் கத்தாதீங்க ஆர்யன் ஜெய் முழிச்சிற போறாங்க “ என்று சொல்லவும் தான் மாணிக்கம் அவர்களை கவனிக்கவே செய்தார். ஆர்யன் முகத்தில் கைவைத்து படுத்து இருக்க, ஜெய் அவனின் வயிறில் தலை வைத்து படுத்து இருந்தான். அவர்களைப் பார்த்து சிரித்த மாணிக்கம், “சரி, அவங்க தூங்கட்டும். நீ வாம்மா, நான் உனக்கு டீ போட்டு தரேன்” என்று மயூரியை அவர் வீட்டுக்கு அழைத்துச் சென்றுவிட்டார். பின் சிறிது நேரம் கழித்து மயூரி டீயை எடுத்து வந்தவள் டேபிளில் அதை வைத்துவிட்டு, ஆர்யன் மற்றும் ஜெய் இருவரின் மீதும் தலைகாணியைத் தூக்கிப் போட்டு

“எழுந்திருங்க விடுஞ்சிருச்சி…எழுந்திருங்க விடுஞ்சிருச்சி …”என்று கத்த ஜெய்யிடம் அசைவே இல்லை. ஆர்யன் தான் சத்தம் கேட்டு எழுந்திருக்க முயல அவனால் முயல மட்டும் தான் முடிந்தது. ஆர்யன் “என்ன வயிறுல வெயிட்டா எதோ இருக்கு“ என்று குனிந்து பார்க்க ஜெய் ஆர்யன் வயிற்றில் சுகமாக தூங்கியபடி இருக்க அவனை பார்த்து அதிர்ந்த ஆர்யன் “சார்… சார் எந்திரிங்க..” என்று அவனை போட்டு உலுக்க அப்போது தான் மேதுவாக கண்களை திறந்தான் ஜெய். கண்களை திறந்ததும் அவன் கண்ணுக்கு தெரிந்தது ஆர்யனின் வயிறு தான். அதை பார்த்து பதறி அவன் நகர்ந்து செல்ல மயூரி இவர்களை பார்த்து வாய் விட்டு சிரிக்க தொடங்கி விட்டாள். ஜெய் “ ஓ… உங்க வயிறுல படுத்துடன்னா அதான் எங்கடா என் பிள்ளோ கல்லு மாதிரி இருக்குன்னு நினைச்சான் சாரி ப்ரோ “ என்று சொல்லியபடி நெட்டி முறிக்க ஆர்யன் தான் பேய் அறைந்தது போல அமர்ந்து இருந்தவன் “ இவர் எப்போ என்ன கட்டி பிடிச்சி படுத்தாரு “என்று நினைத்தபடி அமர்ந்து இருக்க சிரிப்பை நிறுத்திய மயூரி “ஆர்யன் உங்க டீ அங்கிள் கிட்ட இருக்கு நீங்க உடனே போவிங்களாம் “ என்று சொல்லிவிட்டு திரும்ப ஜெய் டீயை நன்றாக நுகர்ந்து பார்த்துவிட்டு “ வாவ் என்ன ஒரு நறுமணம் “ என்று சொல்லியபடி குடிக்க போக மயூரி வேகமாக டீயை ஜெய்யிடம் இருந்து பிடிங்கி “ சரியான டாட்டி பாய்டா நி தூங்கி முழிச்சா பிரஷ் பண்ணணும்னு தெரியாது “ என்று திட்டி சன்டை போட்டு அவனை பாத்ரூமுக்குள் தள்ளிவிட்டு திரும்ப ஆர்யன் இன்னும் நகராமல் “ எப்படி…” ன்று யோசித்த படியே இருக்க மயூரி “ உங்களுக்கு வேற தனியா சொல்லனுமா ஆர்யன் “ என்று அதட்டி அவனையும் அனுப்பி விட்டு பின் நால்வரும் காலை உணவை முடித்து கொண்டு மயூரியுடன் காரில் ஆஸ்பிட்டல் சென்றனர்.