ரவு 31

டாக்டர் வர அரை மணி நேரம் ஆனது. அந்த அரை மணி நேரமும் மயூரி அசையவே இல்லை. கால்களில் முகத்தைப் புதைத்தபடியே இருந்தாள். மாணிக்கம், ஆர்யன் இருவரும் என்னதான் பேச்சு கொடுத்தாலும் எதையும் கேட்காதது போல தேம்பியபடியே இருந்தாள். டாக்டர் வந்து மயூரியைப் பார்த்துப் பேச, அவள் அவருக்கும் பதில் சொல்லவில்லை. உடனே டாக்டர் இன்ஜெக்‌ஷன் ஒன்றைப் போட எடுத்து அவள் அருகில் செல்ல, அவரைப் பார்த்துக் கத்தத் தொடங்கிவிட்டாள் மயூரி. உடனே ஆர்யன் மயூரியை அசையவிடாமல் பிடித்துக்கொள்ள, டாக்டர் இன்ஜெக்‌ஷன் போட்டு முடித்தார்.

இன்ஜெக்சன் போட்டு ஐந்து நிமிடங்கள் கடந்தே மயக்கத்திற்குள்ளே சென்றாள் மயூரி. அவள் மயங்கியதும் ஆர்யன் அவளை தூக்கிச் சென்று அவள் கட்டிலில் படுக்க வைத்து டாக்டரிடம் “டாக்டர் நெறத்தியில கூட அடி பட்டு ரத்தம் வருது டாக்டர் கொஞ்சம் என்னன்னு பாருங்க“ என்று சொல்ல டாக்டர் மேரியும் அவனை அர்த்தமாக பார்த்தபடி அவள் காயத்திற்கு மருந்து வைத்து கட்டு போட்டுவிட்டு மாணிக்கம் மற்றும் ஆர்யனை பார்த்து “மயூரிக்கு என்ன ஆச்சுன்னு கொஞ்சம் எக்ஸ்பிளைன் பண்றீங்களா?“ என்று கேள்வி கேட்க, அதற்கு மாணிக்கம், “என்னன்னு தெரியலம்மா, திடீர்னு பாப்பா கத்துற சத்தம் கேட்டுச்சு. வந்து பார்த்தா கீழ விழுந்து அழுதுட்டு இருந்தாங்க. பாப்பாக்கு ஏதாவது பெரிய பிரச்சனையாம்மா?“ என்று கவலையுடன் கேட்க, உடனே ஆர்யன் “எங்க அப்பாவுக்கு என்ன ஆச்சுன்னு தெரியாது டாக்டர். நான் சொல்றேன் என்ன ஆச்சுன்னு. நான் மதியம் டிவி பார்த்துட்டு இருக்கும்போது திடீர்னு ஏதோ சத்தம் கேட்டுச்சுன்னு வெளிய வந்து பார்த்தா மயூரி படியில வேகமா ஏறிட்டு இருந்தா. நான் அவ பேர் சொல்லி கூப்பிட்டும் அவ திரும்பல. ஏதோ பிரச்சனைன்னு பின்னாலயே நான் போய்ப் பார்த்தா மாடியிலிருந்து குதிக்கப் போன, ஆனா அதுக்குள்ள நான் அவளைப் பிடிச்சிட்டேன். உடனே அவ மயங்கிட்டா. கொஞ்ச நேரம் கழிச்சித்தான் முழிச்சா. நீங்க கொடுத்திருந்த மாத்திரையையும் சாப்பிட்டா. ஒரு மாதிரி ஏதோ யோசிச்சிட்டே இருந்தா. என்னைப் போகச் சொல்லிட்டுத் தூங்கப் போவதாகச் சொன்னாள். ஆனால் அவள் தூங்காம இப்படி கத்தி என்ன ஆச்சுன்னு அதுக்கு அப்பறம் தெரியல்லை டாக்டர்” என்று நடந்தது அனைத்தையும் சொல்லி முடிக்க மாணிக்கம் அதிர்ந்து நின்றுவிட்டார்.

மயூரி மாடியில் இருந்து குதிக்க முயன்றாள் என்று சொன்னதை கேட்டதும் நெஞ்சம் அடித்துக்கொள்ள “இந்த சின்ன வயசுல இந்த பொண்ணுக்கு என்ன ஆச்சு “ என்று பதட்டத்துடன் டாக்டரை பார்க்க அவர் “ அது அவ நினைவுகள் திரும்பி வந்ததுல எதாவது நினைவுல இருந்து வெளிய வராம இருந்துருப்பா “என்று மயூரியின் பிபியை செக் செய்த படியே பேசினார்.

அதை கேட்ட ஆர்யன் “அதனால ஏதாவது பிரச்சனையா டாக்டர் மயூரிக்கு?“ என்று கேட்டு நின்ற ஆர்யன் மனதில் “கடவுளே, மயூரிய எப்படியாவது என் கிட்ட நல்ல படியா திருப்பி கொடுத்துடுங்க ப்ளீஸ்“ என்று வேண்டுதலுடன் கேட்க, அவன் பதட்டத்தை பார்த்த மேரி “என்ன டென்ஷன் ஆர்யன்? மயூரி ஸ்ட்ராங் கேர்ள். அவளுக்கு ஒன்னும் ஆகாது“ என்று சமாதானம் செய்ய, ஆர்யன் “என் நேம் உங்களுக்கு எப்படி தெரியும் டாக்டர்?“ என்று கேட்க, அதற்கு டாக்டர் “செஷனுக்கு வரும்போது மயூரி சொல்லியிருக்காங்க உங்களை உங்க அப்பா பத்தி“ என்று சிரித்தவர், “மயூரி முழிக்க த்ரி அவர்ஸ் ஆவது ஆகும். முழிச்சதும் நார்மல் ஆகிடுவாங்க. எதுக்கும் இந்த டேப்லட்ஸை போட சொல்லுங்க. அன்ட் முழிச்சதும் நீங்களே அவளோட பழைய நினைவுகளைப் பத்தி பேசாதீங்க அவுங்களே பேசுற வரை. நாளைக்கு மார்னிங் என்னை வந்து பார்க்க சொல்லுங்க நான் பேசிக்கிறேன். அன்ட் இந்த டைம் லைட்டை ஆஃப் பண்ணிடாதீங்க ஆர்யன்.“  என்று கிளம்ப போனவரை நிறுத்தி ஆர்யன் “மயூரி முழிச்சதும் திருப்பி இதே போல நடந்துக்கிட்டா என்ன பண்றது டாக்டர்?“ என்று பயத்துடனே கேட்டான் அதற்கு டாக்டர் மேரி “அவங்க பிபி நார்மலுக்கு வந்துருச்சு. முழிச்சதும் நார்மல் ஆகிடுவாங்க. சோ டோன்ட் வொரி ஆர்யன்“ என்று சொல்லி கிளம்பிவிட்டார். டாக்டர் சென்றதும் ஆர்யன் வேகமாக ரூமில் இருந்த கார்டனை எல்லாம் திறந்து விட்டவன் அனைத்து லைட்டையும் ஆன் செய்துவிட்டு ஏசியை போட்டுவிட்டு திரும்ப ஆர்யன் செய்வதை எல்லாம் ஒரு புரியாத பார்வையுடன் பார்த்த மாணிக்கம் “என்ன ஆரி பண்ற” என்று கேட்டு நின்றார். அவரைப் பார்த்து ஒரு பெருமூச்சு ஒன்றை விட்டபடி அவரைப் அழைத்து வெளியே சென்ற ஆர்யன் மயூரி பற்றி அவனுக்குத் தெரிந்தவரை சொல்ல அதைக் கேட்ட மாணிக்கம் “என்ன ஆரி சொல்லர நம்ம பாப்பாவுக்கு இதெல்லாம் நடந்துச்சா “ என்று தொண்டை கரகரக்கக் கேட்டவர் பின் “ அந்த ரூம்ல இருக்க படம் யாருதுப்பா “ என்று திணறிப்போய் கேட்க, ஆர்யன் “ அது எனக்கே தெரியாதுப்பா அவளுக்கு கனவு மூலமா நினைவு வரத வரைஞ்சி வைப்பான்னு நினைக்கிறேன் “ என்று ஆர்யன் சொன்னதைக் கேட்டு மாணிக்கம் ஏதோ யோசித்தவர் பின் “ சரிப்பா, மயூரி பாப்பா முழிக்குறதுக்குள்ள நான் பாப்பா சாப்பிடுற மாதிரி கஞ்சி செஞ்சு எடுத்து வரேன் “ என்று சொல்லிச் செல்ல ஆர்யன் மயூரி அருகிலேயே அமர்ந்துவிட்டான். அந்த அறையில் அமர்ந்தபடி அறையைச் சுற்றிப் பார்க்க அறை மிகவும் சுத்தமாக இருந்தது. அனைத்துப் பொருட்களும் நேர்த்தியாக அடுக்கி வைத்திருந்தாள் மயூரி. பின் அப்படியே கட்டில் அருகே பார்க்க அவள் செய்து பாட்டிலில் போட்டு வைத்திருந்த பட்டாம்பூச்சி இருந்தது. அதில் ஒன்றை எடுத்துப் பார்த்து மீண்டும் வைத்தவன் அப்படியே சுற்றிப் பார்க்க கண்ணாடி அருகில் மயூரி கழட்டிப் போட்டிருந்த உடை இருக்க, அதை நெற்றி சுருக்கிப் பார்த்தவன், “இந்த டிரெஸ் தான போட்டு இருந்தா மாடியில் ஓடினப்போ?” என்று யோசித்தவன் தலைக்குள் மயூரி இன்று இவனைப் பார்த்து மட்டும் இல்லாமல் மாணிக்கத்தைப் பார்த்து பயந்தது, அவள் பேசிய வார்த்தை, அன்று ஆபிஸில் நடந்துகொண்டது என்று அனைத்தையும் தலையில் போட்டு சிந்தித்துப் பார்த்தவனுக்குத் தோன்றியது இதுவே “மயூரியை சின்ன வயசுல அப்யூஸ் பண்ணிருக்காங்களா “ என்று திகைத்தவன் கண்கள் கலங்கும் போலிருக்க, வேகமாக மயூரியின் கையைப் பிடித்துக்கொண்டு.

“மயூரி பயப்படாத உன் ஆர்யன் இருக்கேன் இனிமே உனக்கு எதுவும் ஆக விடமாட்டான் இதுக்கு முன்னாடி என்ன ஆயிருந்தாலும் உன்னை விடமாட்டான் நீ பயப்படாத நான் இருக்கேன் “ என்று அவள் கையை எடுத்து அவன் கன்னத்தில் வைத்துக்கொண்டு மயூரியையே பார்த்தபடி இருந்தான்.

மனதில் “உனக்கு எந்த பிரச்சனையும் இனிமே வராம நான் பார்த்துக்கிறேன் மயூரி“ என்று அதையே சொல்லிக்கொண்டிருந்தான். நினைப்பதெல்லாம் அவ்வளவு எளிதில் நடந்துவிடுமா? நடப்பதைத்தான் அவ்வளவு எளிதில் தடுத்துவிட முடியுமா? போராட்டம் இல்லாத வாழ்க்கைதான் உண்டா?.

 மயூரி கண் விழித்துப் பார்க்கும்போது ஆர்யன் மாணிக்கம் அவர்களுடன் ஜெய்யும் இருந்தான். டாக்டர் மேரி மயூரியின் கார்டியனாக இருக்கும் ஜெய்க்கு போனில் அழைத்து அவள் நிலைமையைச் சொல்லிவிட அடுத்த பத்து நிமிடத்தில் அவன் மயூரி வீட்டுக்கு வந்துவிட்டான். வந்தவன் ஆர்யன் அங்கு அமர்ந்திருப்பதைப் பார்த்து “நீங்க இங்க என்ன பண்றீங்க?“ என்று நேரடியாகவே கேட்டுவிட. அப்போது அங்கு வந்த மாணிக்கம் ஆர்யன் பேசும் முன் “இவன் என் பையன் தம்பி, உங்களுக்குத் தெரியாதா? நம்ம மயூரி பாப்பா கூடத்தான் வேலை பார்க்கிறான். பேரு ஆர்யன்.“  என்று மொத்த இன்ட்ரோவையும் அவரே சொல்லிவிட, அதைக் கேட்ட ஜெய் ஆர்யனிடம் திரும்பி, பேருக்கு ஒரு ஹலோவைச் சொல்லிவிட்டு, மாணிக்கத்திடம் “என்ன ஆச்சு அங்கிள் மயூவுக்கு?” என்று பேசத் தொடங்கிவிட, அவர்களைப் பார்த்த ஆர்யன், “நம்ம அப்பா கிட்ட நம்மளைத் தவிர மத்த எல்லாரும் நல்லா தான் பேசுறாங்க” என்று நினைத்தபடி மயூரியைப் பார்க்கத் தொடங்கிவிட்டான்.

இங்கு மாணிக்கம் நடந்த அனைத்தையும் சொல்லி முடித்தவராக “என்ன தம்பி பாப்பாக்கு இப்படி ஆகிடுச்சு “ என்று வருந்த ஜெய் “ எங்க தாத்தா கார்ல வந்து விழுந்த அப்புறம்ல இருந்து அவளுக்கு இப்படி தான் அங்கிள் அவ பேரை தவிர வேற ஞாபகமே இல்லை அவ விழுந்த அப்போ எப்படி இருந்தா தெரியுமா அங்கிள் உடம்பு முழுக்க நகம் கீறலோட டிரஸ் கிழிஞ்சுன்னு அத எப்படி சொல்ல “ என்று மயூரியை பார்த்து விட்டு மாணிக்கம் மீது சாய்ந்து கொள்ள ஜெய் சொன்னதை கேட்டு ஆர்யன் அவனை முறைத்து பார்க்க மாணிக்கமோ “ தம்பி..” என்று அதிர்ந்தே போய் விட்டார்.