இரவு 29

உறங்கிக் கொண்டிருந்த மயூரியை யாரோ தொடுவதைத் தூக்கத்தில் உணர்ந்தவள் மெதுவாகக் கண்களைத் திறக்க, அவள் முன் சிவந்த கண்களுடன் பற்களில் இருக்கும் கறை தெரிய சிரித்தபடி ஒருவன் அமர்ந்திருக்க, பயந்த மயூரி “அம்மா…” என்று கத்தியபடி நகர்ந்து சென்றவள், “யாரு நீங்க…?” என்று வெளிறிய முகத்துடன் அமர்ந்தபடியே வேகமாக கைகளை வைத்து நகர்ந்து சுவரோடு ஒன்றி பயத்துடன் அவனைப் பார்க்க, அதற்கு அவன் சிரித்தபடியே “பயபே நா பாப்பா..ஏடிகே ஏசு..” என்று அவன் பேசிக்கொண்டே மயூரியின் கால்களை பற்றி இழுக்க மயூரி பயந்து “ என்ன விடு…என்ன விடு…. லட்சு ம்மா… லட்சு ம்மா…” என்று கத்த அந்த நபர் “ சிட்கா கரோன சுப் கரோ….” என்று அவள் வாயை கைகளால் மூடியவன் மயூரி போட்டு இருந்த மினி கவுனை கழற்ற முயல அவன் செயலில் பயந்து போன மயூரிக்கு அவன் செயல் புரியவில்லை என்றாலும் இவன் நம்மளை ஏதோ செய்ய போகிறான் என்று புரிந்து பயந்தவள்  அவள் வாயைப் பொத்தி இருந்த அவன் கையை முடிந்த அளவு அழுத்தி கடித்து விட அவன் வலியில் அவளை கன்னத்தில் அடித்துவிட்டு கைகளை உதறியபடி மயூரியின் பிடியைத் தளர விட அவள் முழு சக்தியையும் திரட்டி வேகமாக அவனைத் தள்ளிவிட்டு கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தாள். மயூரிக்கு லல்லி எங்கு இருப்பாள் என்று தெரியாமல் மாடியில் இருக்கும் கங்கா அம்மாவை நோக்கி ஓடினாள்.

அந்த அரக்கன் இவள் பின்னாலேயே துரத்த, கண்களை மூடிக்கொண்டு நிற்காமல் படியில் ஓடினாள். மூச்சு திணற ஓடியவள் கண்முன் நின்றது எதையும் பார்க்கவில்லை. பின்னால் அவன் துரத்தி வருகிறான், நின்றால் பிடித்துவிடுவான் என்று நெஞ்சு முழுக்க பயம் நிறைய, படியில் ஓடியவள் கால் தடுக்கி படியில் விழுந்து உயிர் வலி கொடுத்தாலும் மீண்டும் எழுந்து ஓடினாள். வெளிச்சம் தெரியும் வரை ஓடினாள்.

இவள் பெயரைச் சொல்லி கத்தும் சத்தம் எங்கோ இருந்து கேட்டபோதும் அப்போதும் மயூரி நிற்கவில்லை. இப்படி ஓடி மாடிக்கு வந்தவள் பயந்து அங்கு இருந்த சுவற்றின் மீது ஏறி அந்த மாடிக்குத் தாவி விடுவோம் என்று அதன் மீது ஏற ஒரு வலிய கரம் இவள் வயிற்றோடு இவளைப் பிடித்து பின்னோக்கி இழுக்க, அவ்வளவு தான் அரக்கன் கையில் மாட்டிக்கொண்டோம். அவன் நம்மை ஏதோ செய்து விடுவான் என்று உடல் தூக்கிப் போட மயங்கி ஆர்யன் மீது விழுந்தாள் மயூரி.

அன்று ஆர்யனுக்கு விடுமுறை அவன் மதிய உணவை மாணிக்கத்துடன் சாப்பிட்டுவிட்டு, மாணிக்கம் மதியம் எப்போதும் போடும் ஒரு குட்டி தூக்கத்தைப் போடச் சென்றுவிட, ஆர்யன் மயூரி முழித்து இங்கு எப்போது வருவாள் என்று கதவைத் திறந்து வைத்துக்கொண்டு டிவியில் ஒரு கண்ணும், வாசலில் ஒரு கண்ணும் என்று இருந்தான். அன்று காலை மயூரிக்கு வேலை அதிகம் இருந்ததால் நேரம் கழித்தே சோர்வாக வந்தாள். சோர்வாக வந்தவளிடம் நிறுத்த வைத்து பேச மனதில்லாமல் இப்போது அவள் விழித்து வர காத்து இருந்தான். அன்று மயூரிக்கு ஆபிஸில் வேலைப்பளு அதிகம் தான். அதனாலேயே மிக சோர்வாகத்தான் வந்தாள். அவள் சோர்வைப் பார்த்து மாணிக்கமும் பாலை சூடாகக் காய்ச்சி அவளைக் குடிக்க வைத்தே அனுப்பி வைத்தார். பால் குடித்து வந்தவள் கண்கள் சொக்க அங்கு சோபாவிலேயே தொப்பென்று விழுந்தவள் அடுத்த நிமிடம் உறங்கியும் போனாள்.

அன்று அவள் வேளை பார்த்தது ஒரு ஹாரர் கேம் வகையைச் சேர்ந்த ஒரு கேம், அதில் வரும் கேரக்டர்களில் ஒன்றைத்தான் அவள் டிசைன் செய்து கொண்டு இருந்தாள். அந்தக் கேரக்டர் பார்க்க கொடூரமான முகம் வைத்து மனித உருவில் இருக்கும். அந்த கேரக்டர் குழந்தையைத் துரத்திப் பிடித்து ஒளித்து வைக்க, அதை கண்டுபிடிப்பது போல இருக்கும் அந்தக் கேம். அந்த கேமில் வரும் அவனை இவளால் வரையவே முடியவில்லை. கை நிறைய தடுமாறியது. அதனோடு இதயம் வேகமாகத் துடிக்க ஏதோ படபடப்பு. இவள் நினைத்திருந்தாள் அதை வேறு ஒருவரிடம் கொடுத்து அனிமேஷன் செய்ய வைக்கலாம்.

ஆனால் மயூரிக்கு அது பிடிக்காது. என்ன ஆனாலும் அவள் வேலையை அவள் தான் செய்ய வேண்டும் என்ற குணம் உடைய அவளுக்கு இதை கொடுக்க மனதே இல்லை என்றாலும் அதை வரையவும் பயமாக இருந்தது. இருப்பினும் “என்ன மயூ, குழந்தை மாதிரி இந்த மூஞ்சிக்கு போய் பயப்படுற? பீ ஸ்ட்ராங் மயூ!” என்று அவளுக்கு அவளே தட்டிக்கொடுத்துக்கொண்டு அனிமேஷனை உருவாக்கியவள் நேரம் சென்றே முடித்தாள்.

அந்த கேரக்டர் முகமா அல்லது அந்த கேமின் ஸ்டோரியா எது மயூரியின் நினைவுகளை தூண்டிவிட்டது என்று தெரியவில்லை. ஆனால் ஏதோ ஒன்று தூண்டி விட்டதின் விளைவுதான் அந்த கனவு. அந்தக் கனவில் கதவைத் திறந்து ஓட நினைத்தவள் நினைவிலும் அவள் வீட்டு கதவை படார் என்ற சத்தத்தோடு திறந்து கொண்டு அந்தக் கனவு கொடுத்த தாக்கத்தில் இருந்து விடுபடாமல் படியில் வேகமாக ஓடினாள். மயூரிக்காக ஹாலில் காத்து இருந்த ஆர்யனுக்கு கதவு வேகமாக திறக்கும் சத்தம் கேட்டு என்னவென்று வெளியே வந்து பார்க்க மயூரி கதவு திறந்து இருக்க மயூரி படியில் வேகமாக ஓடிக் கொண்டு இருந்தாள். ஆர்யனுக்கு ஒரு நிமிடம் ஒன்றும் புரியாமல் திகைத்து நின்றவன் மறு நொடியே நினைவு வந்து மயூரி பின்னாலேயே “மயூரி….. மயூரி…”என்று கத்திக்கொண்டு ஓடினான்.

 இவர்கள் இருந்த அப்பார்ட்மெண்டில் மொத்தம் இருபது மாடி. ஆர்யன், மயூரி இருந்தது ஐந்தாவது தளம். அதிலிருந்து பதினைந்து மாடி நிற்காமல் மயூரி ஓட, அவளைத் தொடர்ந்து ஓடிய ஆர்யனுக்கே முடியவில்லை. இருந்தும் மயூரிக்கு ஏதோ பிரச்சனை என்று புரிந்தவனாக அவளைத் துரத்த, மயூரி படியில் கீழே விழுந்தவள். அப்போழுதும் நிற்காமல் மீண்டும் எழுந்து திரும்பி கூட பார்க்காமல் ஓட எப்படியோ ஆர்யன் அவள் அருகில் நெருங்கிவிட்டான். ஆனால் அதற்குள் மயூரி மாடியை அடைந்துவிட ஆர்யன் மயூரி நின்றுவிடுவாள் அதற்கு மேல் எங்கே செல்ல முடியும் என்று நின்று பார்க்க மயூரி பாட்டுக்கு அந்த மாடியின் திண்டில் ஏற பயந்துபோன ஆர்யன் அவள் குதிக்கச் செல்லும் முன் நெடிநேரத்தில் அவள் வயிற்றோடு அவளைப் பிடித்துத் தூக்க மயூரி உடல் தூக்கிப்போட மயங்கி விழுந்தாள்.

ஆர்யன் மயூரியை மடியில் தாங்கியபடி வெயில் என்றும் பாராமல் கீழே அமர்ந்துவிட்டான். பதினைந்து மாடி ஓடி வந்ததின் விளைவாக மூச்சு வாங்கிய படி சிறிது நேரம் கண்களை மூடி அமர்ந்து விட்டான். பின் மெதுவாக கண்களை திறந்து பார்க்க வெயில் முகத்தில் அடிக்க கண்களை சுருக்கிய படி மயூரியை பார்க்க காலையில் போட்டு இருந்த அதே சுடிதார் டாப் பேன்ட் என்று அணிந்து இருந்த உடையில் இடது கால் முட்டியில் துணி கிழிந்து ரத்தம் கசிந்த படி இருக்க முகம் முழுக்க வியர்த்து மயக்கத்தில் முகம் பயத்தோடு இருப்பதை பார்த்த ஆர்யன் அவள் கன்னம் தட்டி “ மயூரி…மயூரி…”என்று எழுப்ப அவள் இடம் அசைவே இல்லை.

அன்று போல இருட்டைப் பார்த்து பயந்து இருப்பாளோ என்று எண்ணியவன் அவளைக் கைகளில் குழந்தை போல தூக்கிக்கொண்டு லிஃப்ட் வழியே அவர்கள் ஃப்ளோர் வரவும் மயூரியின் வீட்டுக்குச் சென்று சோபாவில் படுக்க வைத்தவன் முகத்தில் தண்ணீர் தெளிக்க அவளிடம் அப்போதும் அசைவு இல்லை. பின்னே அவள் போடும் மாத்திரைகள் ஆர்யனின் நினைவுக்கு வர, ஹேண்ட்பேக்கில் இருந்து அந்த மாத்திரைகளைத் தேடி எடுத்தவன் அவளை இவன் மீது சாய்த்து வைத்து வாயில் அந்த மாத்திரையைக் கொடுத்து தண்ணீர் கொடுத்து உலுங்க வைத்தவன் அவள் கைகளைப் பிடித்தபடி அவள் அருகே இருந்த சிறு இடத்தில் அமர்ந்துவிட்டான்.

 மயூரியின் முகத்தையே பார்த்துக்கொண்டு எவ்வளவு நேரம் அமர்ந்திருந்தான் என்று தெரியவில்லை. மயூரியிடம் லேசாக அசைவு தெரிய, அவள் கைகளைப் பிடித்தபடி முட்டி போட்டு அமர்ந்தவன், “மயூரி…” என்று அழைக்க, சட்டென்று ஆர்யனின் குரல் கேட்டு கண்களைத் திறந்தவள், அவன் அவள் கையைப் பிடித்திருப்பதைப் பார்த்து அதை உருவிக்கொண்டு எழுந்து அமர, ஆர்யன் “மயூரி, நான் தான், பயப்படாதே. நான் தான் ஆர்யன்” என்று சொல்லி அவளை இயல்புக்குக் கொண்டுவரப் பார்க்க, மயூரி ஆர்யனையே வெறுமையான முகத்துடன் பார்த்தாள்.

மயூரியின் பார்வையில் என்ன இருந்தது என்று எதுவும் புரியாமல் “நீ இப்போ ஓகே தான மயூரி? ஏன் என்னை இப்படி பார்க்குற?” என்று அவன் கேட்க, அதற்கு மயூரி தலையை மறுப்பாக அசைத்து, “ஒன்னுமில்லை” என்று தலை அசைத்தவள், மெதுவான குரலில் “நீங்க இங்க எப்படி?” என்று அதே வெற்றுப் பார்வையில் பார்த்தபடி பேச, ஆர்யன் “அது நான் டிவி பார்த்துட்டு இருந்தேன் மயூரி அப்போ வெளியே சத்தம் கேட்டு வந்தா, நீங்க படியில வேகமா ஏறிட்டு இருந்தீங்க. கூப்பிட்டு பார்த்தேன், எந்தப் பதிலும் நீங்க சொல்லலை. அதான் பின்னாடியே நானும் மாடி ஏறினா, நீங்க மாடியில இருந்து குதிக்கப் போயிட்டீங்க மயூரி! உடனே நான் சுதாரிச்சுப் பிடிக்கவும் நீங்க மயங்கிட்டீங்க. உடனே நான் உங்க வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். என்ன ஆச்சு மயூரி? ஏன் குதிக்கப் போனீங்க?” என்று அவளை உற்றுப் பார்க்க, மயூரி, “ உங்க ஹெல்ப்க்கு தாங்க்ஸ் ஆர்யன். இப்போதைக்கு என்னால எதுவும் பேச முடியல. நீங்க உங்க வீட்டுக்கு போறீங்களா? நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கணும்” என்று தலையைப் பிடித்துக் கொள்ள, ஆர்யன், “என்ன சொல்ற மயூரி உனக்கு என்ன ஆயிருக்கும் தெரியுமா? நான் கொஞ்சம் லேட்டா வந்திருந்தா கூட நீ கீழ குதிச்சிருப்ப” என்று அவளைப் பார்த்து கத்தத் தோன்றிய மனதை அடக்கியவன் அவளையே பார்க்க, மயூரி தலை குனிந்தபடியே இருந்தாள்.

ஆர்யன் “ உன் காலில்ல அடிபட்டுருக்கு மயூரி “ என்று சொல்ல மயூரி தலை திருப்பி அப்போது தான் பார்ப்பது போல அதை பார்த்தவள் “ ஒ..சரி ஆர்யன் நான் ஆயின்மெண்ட் போட்டுக்கிறேன் “ என்று ஆர்யனை அதை வெறுமை நிறைந்த கண்களுடன் பார்க்க ஆர்யனுக்கு அவளை அப்படி பார்க்கவே முடியவில்லை மயூரி எதோ ஒன்றிற்கோ மிகவும் பயந்து இருக்கிறாள் என்று மட்டும் இவனுக்கு புரிய வர சரி மாத்திரை சாப்பிட்டு இருக்கிறாள் இயல்புக்கு வர சிறிது நேரம் தேவைப்படும் என்று எண்ணியவன் எழுந்து “ எதவதுனா கூப்பிடு மயூரி” என்று சொல்லிவிட்டு கதவை பாதி வரை மட்டும் சாற்றிவிட்டு சென்றான்.

ஆர்யன் சென்றதும் ஹோப்பாவிலேயே அமர்ந்திருந்தவள் கால்கள் நடுங்கத் தொடங்கின. அவ்வளவு வேகமாகப் படியில் ஓடியதன் விளைவு கால்கள் நடுங்கத் தொடங்கியது. மயூரி அவள் நடுங்கும் காலையும் அந்த முட்டிக் காயத்தையும் பார்த்துக் கொண்டிருந்தாள். மெதுவாக எழுந்து அவள் அறைக்குச் சென்று, அவள் உடை முழுவதையும் களைந்து உடலில் ஏதாவது காயம் இருக்கிறதா என்று சுற்றிப் பார்க்க எந்தக் காயமும் தெரியவில்லை.

எப்படித் தெரியும் காயம் சிறு வயதில் எப்போதோ நடந்ததுக்கு இப்பொழுது உடலில் காயத்தைத் தேடினால் எப்படி கிடைக்கும் என்று நினைத்தவள் பாத்ரூம் சென்று ஷவரின் அடியில் நின்றவள் சுவற்றில் தலையைச் சாய்த்து கண்களை மூடி நின்று இருந்தவளுக்கு மீண்டும் ஏதோ தோன்ற வேகமாக வெளியே வந்து உடை மாற்றி அவள் படங்கள் வரையும் அறைக்குச் சென்று புதிதான தூரிகையை வைத்து அதில் வரையத் தொடங்கினாள்.

 முதலில் கண்கள், பின் கழுத்து, பின் கண்ணாடி வளையல் அணிந்திருந்த கைகள், மேலிட்ட வயிறு என்று வரைந்தவளுக்கு வேறு எதுவும் நினைவுக்கு வரவில்லை. கண்களை மூடி நினைவுக்கு கொண்டு வர முயன்றும் பலன் இல்லை. தலையை கைகளால் தட்டினால் அந்த அறையில் நடந்தாள். என்ன செய்தும் நினைவு வராமல் செல்ல, அந்த தூரிகையை தூக்கி எறிந்தவள் தலையை பிடித்தபடி மிக சத்தமாக.“ஆ…..என்று கத்தியவள் சுவற்றில் தலையை வேகமாக மோதி மீண்டும் கத்தியபடி கீழேயே சுருண்டு படுத்துக்கொண்டாள். சுற்றி அவள் அம்மாவின் கண்கள் தான் அதை பார்த்தபடி தாயை தேடி அழையும் குழந்தையாக மாறியவள் கதறி அழுதுகொண்டே “அம்மா எங்கம்மா இருக்க….எனக்கு பயமா இருக்குமா.. என்ன வந்து கூட்டிட்டு போம்மா…” என்று அவள் அழுகையை நிறுத்தாமல் புலம்பியபடி இருந்தாள்.