இன்ஸ்பெக்டர் கர்ணாவுக்கு ஒரே குழப்பம், இந்த கேஸை தொடர்ந்து நடத்தலாமா என்று. ஏன் என்றால் இறந்த பெண் ஒரு பாலியல் தொழில் செய்பவள். நிறைய ஆண்களுடன் பழக்கம் இருக்கும். அவர்களில் யாரிடம் போய் விசாரிப்பது என்று யோசித்தவன், பின் ஒரு முடிவு எடுத்தவனாக முதலில் அவள் யார் என்று கண்டுபிடிப்போம் என்று நினைத்தவன், அவன் ஏரியாவில் இந்த தொழிலில் இருக்கும் பெண்களை எல்லாம் ஒன்றாக ஒரே இடத்தில் வரவழைத்தான். போலிஸ் அழைத்ததும் அந்தப் பெண்கள் என்னவாக இருக்கும் என்று ஒரு பதட்டத்துடனே அமர்ந்திருந்தனர்.
அப்போது அந்த அறைக்குள் நுழைந்த கர்ணா இவர்களைப் பார்வையால் அளந்தபடியே உள்ளே வந்து அவர்கள் முன் அமர்ந்தவன், “இந்த ஏரியால தொழில் பண்ற எல்லாரும் வந்துட்டீங்க தானா?“ என்று கடினமான குரலில் கேட்க, அதற்கு அங்கு ஓரத்தில் கைகட்டி நின்ற ஒருவன், “வந்துட்டாங்க சார்“ என்று பணிவாகவே சொன்னான். அவனை ஒரு ஏளனமான பார்வையில் பார்த்துவிட்டு மீண்டும் இவர்களிடம் திரும்பிய கர்ணா, “நேரடியா நான் விஷயத்துக்கு வந்துறேன். மூணு வருஷம் முன்னாடி உங்க குரூப்ல இருந்து திடீர்னு யாராவது மிஸ் ஆனாங்களா? வயசு இருபதுல இருந்து முப்பதுக்குள்ள இருக்கும்“ என்று அனைவரையும் ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு பதிலுக்காகக் காத்து இருக்க, அங்கு இருந்த யாரும் ஒரு வார்த்தை பேசவில்லை. இவர்களின் அமைதியில் “ உங்க அமைதிய பார்த்தா அப்படி யாரும் காணாம போகல போலையே?“ என்று புருவத்தை தேய்த்தபடி கேட்க அவர்களிலிருந்து ஒரு பெண் கோபமாக எழுந்து “நாங்க ஏன் சொல்லணும் சார்? நாங்க தப்பு, ஆனா எங்க கூட இருக்கிறவங்க மட்டும் நல்லவங்க, குடிமக்கள் ன்னு பாதுகாப்பு தருவீங்க. இதுவே எங்களுக்கு பிரச்சனன்னு ஒரு கம்ப்ளைன்ட் கொடுக்க வந்தா கூட எடுத்துக்க மாட்டீங்க. ஆனா இப்போ மட்டும் உங்க கேஸ் முடிக்க நாங்க வேணுமா?” என்று அந்தப் பெண் கோபத்தில் கத்த, அதற்குச் சுற்றி இருக்கும் பெண்களும் ஆதரவு தந்து அமைதி காக்க, கர்ணா “என்ன பேசுறீங்க? என்ன கம்ப்ளெய்ன்ட் எத பத்தி பேசுறீங்க ” என்று ஒரு புரியாத பார்வை ஒன்றை அவன் பார்க்க அந்த பெண் “என்ன கம்ப்ளெய்ன்ட்? அதுகூட உங்களுக்குத் தெரியலையா? எங்க குரூப்ல இருந்து நிறையப் பெண்கள் காணாம போயிருக்காங்க ன்ற கம்ப்ளெய்ன்ட் தான்” என்று நக்கலாகச் சொல்ல,
கர்ணா “இதோ பாருங்க, நான் இங்கு ஒரு வருடமாகத்தான் இருக்கிறேன். என் பார்வைக்கு வரும் கேஸ்களை, முக்கியமா அது யாருடையதாக இருந்தாலும் அலட்சியம் செய்றவன் நான் இல்ல. அதனால என்னென்னு தெளிவா சொன்னீங்கனா தான், என்னால் முடிந்த உதவியைச் செய்ய முடியும்“.
கர்ணா சொன்னதைக் கேட்டு அனைவரும் கூடிப் பேசி முடிவு எடுத்தவர்களாக அந்த கத்திய பெண்ணே முன் வந்து “ கடந்த இரண்டு வருஷமா எங்க ஏரியானு இல்லாம சுத்தி இருக்கிற ஏரியால கூட எங்க தோழில் செய்ற பொண்ணுங்க காணாமப் போயிருக்காங்க “
“ காணாமப் போயிருக்காங்கன்னு எப்படி உறுதியா சொல்றீங்க வேற இடத்துக்கு போய்ருக்களாம்ல “
“காணாம போன சில பேருக்கு எங்களைத் தவிர வேறு யாரும் இல்ல. அதுவும் இல்லாமல் காணாம போன யாரும் அவங்க சேர்த்து வச்ச காசு, அவங்க துணின்னு எதுவுமே எடுத்துப் போகக் கூட வரல. ஒருத்தர்னா பரவாயில்லை, எல்லா காணாம போன பொண்ணுங்களும் இதே மாதிரி அவங்க பொருட்கள எடுக்க வரல. அதை வச்சி தான் சொல்றோம்”
“இதுவரை எத்தனைப் பெண்கள் காணாமல் போயிருக்காங்க?” என்று யோசனையாகக் கேட்க, அதற்கு அந்தப் பெண் சொன்ன எண்ணிக்கையைக் கேட்டு அதிர்ந்துதான் போய்விட்டான் கர்ணா.
“இருபது பேருக்கு மேல் இருக்கும். இங்கென்னு இல்ல சுத்தி இருக்குற நிறைய ஏரியாக்களிலும், ஏன் பக்கத்து மாநிலத்தில்கூட மூனு பேர் ன்னு தகவல் வந்துச்சி” என்று அந்தப் பெண் சொன்னதைக் கேட்டுத் தலைதான் சுற்றிப் போனது.
“இத்தனை பேர் காணாம போய் இருக்கிறாங்க ஒரு ஸ்டேஷனில் கூடவா கேஸ் எடுக்கல்லை?” அதற்கு அந்தப் பெண் மறுப்பாகத் தலை அசைத்து “நாங்கள் பண்றது தப்பான தொழில் தான். இருந்தாலும் நாங்கள் கட்டாயப்படுத்தி எதுவும் செய்றது இல்லை. தப்புன்னு தெரிஞ்சும் வரவுங்களை மதிக்கிற ஒருத்தர் எங்களை மாதிரி பொண்ணுங்களை மட்டும் ஒரு மனுஷியா கூட பார்ப்பது இல்லை. எந்த ஸ்டேஷன் போனாலும் எங்கள் தொழிலைக் கேட்டுட்டு கம்ப்ளைன்ட் எடுத்துக்க மாட்டிக்கிறார்கள்” அதற்கு கர்ணா “நீங்க எல்லாரும் இங்க கம்ப்ளைன்ட் எழுதி கொடுத்துட்டு போங்க நான் விசாரிக்கிறேன்” என்று சொல்லிய கர்ணாவை கை எடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அந்தப் பெண்கள் பின் “இப்போ கேளுங்க சார் என்ன பதில்னாலும் சொல்றோம்” அதைக் கேட்ட கர்ணா அவர்கள் முன் புறநகரில் அந்த இறந்த பெண்ணின் புடவை மற்றும் பர்ஸை காட்டி “மூணு வருஷம் முன்னாடி உங்க குரூப்ல இருந்த ஏதோ ஒரு பொண்ணு போட்டு இருந்த புடவை பர்ஸ் யாருக்காவது நினைவு இருக்கா” என்று பார்க்க அவர்களுள் ஒரு பெண் எழுந்து “அது வாணி என்னோட ஃபிரண்ட் ஓடது சார்“ என்று கண்கள் கலங்க நின்றாள். அவளைப் பார்த்து கர்ணா “அவங்களுடையதுன்னு எப்படி சொல்றீங்க?“ என்று கேட்க அதற்கு அந்த பெண் “அது என் புடவைதான் சார். காணாம போன நைட் அவ அதைத்தான் கட்டியிருந்தா சார்.“
“அவுங்க எப்போ காணாம போனாங்க?”
“அது மூணு வருஷம் இருக்கும் சார். அவ காணாம போன பிறகு வருஷையா எல்லாரும் காணாம போக ஆரம்பிச்சாங்க சார்” என்று அந்த பெண் சொன்னதைக் கேட்டு மனதில் கணக்குப் போட்டவன், “அப்போ இது ஒரு கொலையோட நிக்கல. இது சின்ன கேஸும் இல்ல” என்று முனங்கியவன் ஒரு பெருமூச்சு ஒன்று இழுத்து விட்டு “அந்தப் பொண்ணோட சொந்தம்னு யாராவது இருக்காங்களா?” என்று கேட்டான் அவனுக்கு கிடைத்த சடலம் அந்தப் பெண்ணுடையதா என்று உறுதிப்படுத்த வேண்டும். அதற்கு குடும்ப நபர் டி.என்.ஏ இருந்தால் அதை வைத்து உறுதிப்படுத்தலாம் என்று நினைத்து கேட்டான். அதற்கு அந்தப் பெண் “சொந்தம்னு யாரும் இல்ல சார்” என்று சொல்லவும் “சரி கடைசியா எந்த நபர் கூட தொழிலுக்கு போனாங்கன்னு தெரியுமா உங்களுக்கு?”
“ஏதோ பார்ட்டின்னு சொன்ன அவ கூட ராதா, கீதா, இவர்களும் வராங்க ன்னு சொன்னா. அவுங்க எல்லாம் திரும்பி வந்துட்டாங்க. ஆனா இவள் மட்டும் வரல்லை.“ உடனே கர்ணா, “இந்த ராதா, கீதா இப்போ எங்கே இருக்கிறாங்க?“
“கீதா இரண்டு மாதம் முன்னாடிதான் காணாம போனா சார். ராதாவுக்கு குழந்தை இருக்கு. அவள் தொழிலுக்கு வரது இல்லை. ஏதோ சூப்பர் மார்க்கெட்டில் வேலை பார்த்துட்டு இருக்கிறான்னு கேள்விப்பட்டேன். ஆனால் எங்க ன்னு எதுவும் தெரியாது.“ என்று சொல்லிவிட, இவர்கள் பேசுவதைக் கேட்டுக்கொண்டு இருந்த அந்த புரோக்கர். நைசாக நழுவிச் சென்றான்.
இந்த கேஸ் மிகவும் குழப்பமாகத்தான் இருந்தது. அந்த சடலமும் காணாமல் போன பெண்களுக்கும் சம்பந்தம் இருக்கு என்று உறுதியானால், எத்தனை பேரை என்ன செய்திருப்பான்? கொன்றிருப்பானா? அப்படி கொல்லும் அளவு இவர்கள் மேல் என்ன கோபம் என்று பல யோசனைகளுடன் நின்றவன் கண்ணில் அந்த புரோக்கர் நகர்ந்து செல்வது தெரியவந்து, ஏதோ சரியில்லை என்று உணர்ந்தவனாக அவனை பின்னிருந்து பிடித்து கர்ணா இழுக்க, அப்போது அந்தப் பெண்…
“சார் இவதான் அந்த பார்ட்டிய பத்தி வாணிக்கு அன்னைக்கு சொன்னா அப்பறம் ராதா இருக்கிற இடம் கூட இவனுக்கு தெரிஞ்சு இருக்க வாய்ப்பு இருக்கு சார்” என்று அவள் சொல்ல உடனே கர்ணா அவனை பிடித்து “எங்கடா போற” என்று அடிக்க கை ஓங்க அவன் உடனே பயந்தவனாக “சார் சொல்லிறேன் சார், அடிக்காதீங்க நான் எங்கேயும் போகல” என்று கத்தினான்.
தேடி ஓடி அலைந்து திரிந்து பிடித்தாலும் என் மரணம் உன்னிடம் இல்லை.
இரவு தனியாக அந்த அறையில் சிறு வயது மயூரி நோட்டில் ஏதோ வீடு மரம் என்று வரைந்து கொண்டிருந்தவள் கொட்டாவி விட்டபடி மூடியிருந்த கதவை பார்த்துவிட்டு “லட்சுமம்மா வர இன்னும் எவ்வளவு நேரம் ஆகும்? எனக்கு வேற தூக்கமா வருதே இன்னைக்குன்னு பார்த்து “ என்று அவளுக்கு அவளே பேசியபடி எழுந்து அங்கு இருந்த பீரோவைத் திறக்க, அது ஒரு பகுதி காலியாக இருக்க, மறு பகுதியில் கலர் அடிக்கும் தூரிகைகள், கதை புத்தகங்கள் என்று இருந்தது, அதில் ஒரு படங்கள் போட்ட கதை புத்தகத்தை எடுத்து கீழே கவிழ்ந்து படுத்தபடி கதை படித்துக் கொண்டு இருந்தவள் அப்படியே தூங்கிப் போனாள். எப்போதும் பகலில் தூங்கும் மயூரி அன்று பாதியிலேயே எழுந்துவிட, இரவு இரண்டு மணிக்கு மேல் முழிக்க முடியவில்லை. பாவம் குழந்தை, அவளும் என்ன செய்வாள்? அவளை மறந்து தூங்கிவிட்டாள்.
மணி நான்கு இருக்கும் ஒரு அறையில் இருந்து கண்கள் சிவந்த நிலையில் நாற்பது வயது நபர் ஒருவன் வெளியே வந்தான். வந்தவன் அவன் சட்டை பட்டனை சரி செய்தபடி அந்த தாழ்வாரம் வழியே படி நோக்கிச் செல்ல அப்போது அங்கு ஒரு அறையில் மட்டும் பிரகாசமாக லைட் எரிய அதன் அருகே அவன் சென்றான்.
அந்த அறை வெளிப்புறம் தாழ் போட்டு இருக்க உள்ளே என்ன இருக்கும் என்று நினைத்த படி அதைத் திறந்து உள்ளே நுழைந்தான் அவன். உள்ளே பத்து வயது நிரம்பிய மயூரி வாயில் எச்சில் ஒழுக தூங்கி கொண்டு இருந்தாள்.
பார்க்கும் பார்வைதான் எல்லாம் என்பார் அது உண்மைதான். மனிதனின் கண்களில் ஒரு குழந்தை குழந்தையாகத்தான் தெரிவாள். ஆனால் அங்கு அன்று மயூரி பார்த்தது மனிதனை அல்ல, மனித உருவில் இருந்த மிருகத்தை. மனிதன் உருவில் கடவுளை மட்டும் பார்க்கச் சொல்லாதீர்கள், அதே உருவில் தான் அரக்கர்களும் இருக்கிறார்கள் என்று சொல்லி வளர்