ஜெய் பார்க்க ஜாலி கேரக்டர் போல தெரிந்தாலும், அவனை யாரையும் அவ்வளவு எளிதில் நெருங்க விட மாட்டான். ஏன்? இத்தனை வருடங்களில் அவன் அவனுக்கு நெருக்கமாக இதுவரை எண்ணியது என்றால், அவன் தாத்தா, மயூரி, ஜெகன் இவர்கள் மட்டும்தான். நண்பர்கள் அதிகம் இருந்தாலும். அவர்களுடன் நன்றாகப் பழகினாலும் யாரையும் இவன் விஷயத்தில் முடிவு எடுக்க விரும்ப மாட்டான். அப்படி இருக்கும் ஜெய்யின் தாத்தாவின் நினைவு நாளில் யாரோ தெரியாத பெரியவரை மயூரி அழைத்து வந்தது அவனுக்குப் பிடிக்கவில்லை. இருப்பினும் வந்தவரை எப்படி அனுப்புவது என்று பல்லைக் கடித்துக்கொண்டுதான் இருந்தான்.
இது எதுவும் தெரியாமல் மாணிக்கம் இவன் அருகே வந்து “ யாருன்னு தெரியாதவன்னு சங்கடப்படாதீங்க தம்பி பாப்பா வந்து நீங்க வெறும் பூ மட்டும் வைச்சி கும்புடுவிங்கன்னு சொன்னாங்க அதுக்கு தான் நான் அது மட்டும் பண்ணக்கூடாதுன்னு சொன்ன தம்பி அதை கேட்டு பாப்பா கையோடு கூட்டி வந்துட்டாங்க தம்பி கோபப்படாதீங்க “ என்று தன்மையாக பேசும் மாணிக்கத்தை புரியாத பார்வை பார்த்த ஜெய் “ பூ வச்சி பிரேயர் பண்றது மட்டும் போதாதா? வேற என்ன பண்ணனும் சொல்றீங்க “என்று தீவிரமாகக் கேட்டான். ஜெய்க்கு இதைப்பற்றி ஒன்றும் தெரியாது. ஏதோ அவனுக்குத் தோன்றுவதையே இவ்வளவு நாள் செய்துகொண்டிருந்தான். இந்தச் சடங்கு சம்பிரதாயம் பற்றி கூட இருக்கும் யாரும் இதுவரை இவனுக்கு சொல்லியதும் இல்லை. அதனால் எப்படிச் செய்யவேண்டும் என்று கூட அவனுக்குத் தெரியாமல்தான் இருந்தது.
முன்பே இவனிடம் யாராவது சொல்லியிருந்தால் கண்டிப்பாக செய்திருப்பான். அவனுக்கு அவன் தாத்தா விஷயத்தில் எந்தக் குறையும் வைக்கக் கூடாது என்ற நினைப்பில் மாணிக்கத்தை பார்க்க. மாணிக்கம் ஜெய்யைப் பார்த்து, “அது உங்க தாத்தா படம், ஏதாவது இருக்கா தம்பி?” என்று கேட்டு, அந்தப் படத்தை மாட்டியிருந்த இடத்துக்குச் சென்று, இவர் வாங்கி வந்த மாலையை மாட்டியவர் பின் அவர் முன் வாங்கி வந்த விளக்கு ஏற்றி வைத்து, ஊதுபத்தி, பழம் என்று வைத்து, கண்மூடி அவர் ஆத்ம சாந்திக்காக வேண்டினார்.
மாணிக்கம் செய்த அனைத்தையும் பார்த்து இருந்த ஜெய்க்கு மனதில் “ இப்படித்தான் வேண்டனுமா அச்சோ இவ்வளவு நாள் இதை பண்ண முடியாம போயிடுச்சே சாரி தாத்தா “ என்று மனதோடு பேசியபடி நிற்க அவன் அருகே வந்த மாணிக்கம் “ உங்க தாத்தா விரும்பி சாப்பிடுற சாப்பாடு என்னென்னன்னு தெரியுமா தம்பி “ “ஆ.. தெரியும், எங்க தாத்தாவுக்கு சாம்பார் சாதம் போட்டு, அதோடு மட்டன் கிரேவி, மைசூர்பாக்கு அதை சாப்பிட்டு டீ குடிக்க பிடிக்கும்” என்று ஆர்வமாகச் சொல்லிய ஜெய், “இது எதுக்கு கேட்குறீங்க நீங்க?” என்று கேள்வியாக பார்க்க“அது உங்க தாத்தாவுக்கு அவருக்குப் பிடிச்ச சாப்பாடும் படைச்சா அவர் வந்து சாப்பிட்டுப் போவாரு தம்பி, அதான் கேட்டேன்.”
“அப்படியா தாத்தாவுக்கு பிடிச்சதா பாத்து படைக்கனும்மா அங்கிள் சரி அப்போ நான் உடனே ஆர்டர் பண்றேன் “ என்று போனை எடுக்க மாணிக்கம் அவனை தடுத்து “ ஹோட்டல்ல ஆர்டர் பண்ண கூடாது தம்பி உங்க தாத்தாவுக்கு பிடிச்சத எச்சில் பண்ணாம செஞ்சி வைக்கணும் ஹோட்டல்னா அவங்க எப்படி சமைச்சிருப்பாங்கன்னு தெரியாதுல தம்பி” என்று பொருமையாக எடுத்து கூற அதை கேட்டு மீண்டும் குழம்பின ஜெய் “ ஏன் அப்படி அங்கிள் எச்சில் பண்ண கூடாது “ என்று ஜெய் கேட்டதற்கு அதை மயூரியும் தலை அசைத்து ஏன் என்பது போல பார்க்க இவர்களை பார்த்து மாணிக்கத்திற்கு ஆர்யன் மற்றும் அதித்தி சிறு வயது நினைவுதான் வந்தது. அவர்களும் இப்படி ஏதாவது சாமிக்குப் படைக்கும்போது கேள்வியாய்க் கேட்டுத் துளைப்பார்கள். குழந்தைகளுக்கு அது எதுக்கு என்று தெரியாததால் அதைத் தெரிந்துகொள்ளக் கேட்பார்கள். ஆனால் இங்கு குழந்தைகள் போல இந்த இரு வளர்ந்த குழந்தைகளும் கேள்வி கேட்டு நிற்பதைப் பார்த்து மனம் கலங்கத்தான் செய்தது மாணிக்கத்திற்கு.
அதை எதுவும் வெளியில் காட்டாமல் மாணிக்கம் “அது சாமிக்கு நாம படைக்கும் போது சாப்பிட்டு பார்த்துதான் வைப்போமா இல்லதானே? அதேதான். இறந்த உங்க தாத்தாவை சாமி மாதிரி நினைச்சு அவருக்கு இப்படி செய்யுறோம். புரியுதா தம்பி?” என்று கேட்க அதற்கு ஜெய், மயூரி இருவரும் புரிந்தது போல தலையசைக்க, மயூரி “அப்போ சாப்பாடுக்கு இப்போ என்ன பண்ண அங்கிள்?” என்று தலைசொறிய, மாணிக்கம்
“நம்மளே செய்யலாம் பாப்பா, அதான் வீட்டுல இத்தனை பேர் இருக்காங்களே” என்று அங்கு இருந்த வேலை ஆட்களையும் சேர்த்து கைகாட்டி சொன்னவர், “எல்லாருக்கும் சேர்த்து செஞ்சிடலாம் தம்பி. உங்க தாத்தா நினைவு நாளுக்கு எல்லாருக்கும் சாப்பாடு போட்ட மாதிரியும் இருக்கும்” என்று ஈசியாகச் சொல்ல, ஜெய், மயூரி ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டு சம்மதமாகத் தலையசைத்தன.
அதன் பின் மாணிக்கம் அனைத்து வேலையையும் கையில் எடுத்துக்கொண்டார். வீட்டு வேலை ஆட்கள் அனைவருக்கும் ஒரு ஒரு வேலையைப் பிரித்துக் கொடுத்து, துரிதமாக சமைக்கத் தொடங்கினர். மாணிக்கம் செய்பவற்றை அனைத்தையும் பார்த்த ஜெய்க்கும் அவருடன் சேர்ந்து வேலை செய்ய ஆசையாக இருந்தது. மயூரி மாணிக்கம் வேலை ஆட்கள் என்று அனைவரும் சேர்ந்து வேலை செய்வதைப் பார்த்த ஜெய்க்கும் ஆசைதான். ஆனால் அவனுக்குத் தான் சமையலில் ஆனா ஆவனா கூடத் தெரியாதே. அதனாலேயே அவர்கள் பேசியபடி வேலை செய்வதை ஏக்கத்துடன் பார்த்துக்கொண்டு இருந்தான்.
அவனை முதலில் பார்க்காத மாணிக்கம் பின் எதேச்சையாக பார்த்தவர் அவன் கண்ணில் தெரிந்த ஆசையை கண்டுகொண்டவராக மயூரியை அழைத்து அவளிடம் ஏதோ சொல்லி அனுப்ப அவர்களையே பார்த்துக்கொண்டு இருந்த ஜெய்யும் என்ன என்று அவர்களைத்தான் பார்த்துக்கொண்டு இருந்தான். ஜெய்யிடம் வந்த மயூரி “வா ஜெய், நம்ம எல்லாரையும் சாப்பிட வைக்கிற இடத்தை ரெடி பண்ணாலாம் ” என்று அவனை இழுத்துச் சென்று ஹாலில் இருந்த சோபா, சேர், டைனிங் டேபிள் என்று அனைத்தையும் நகர்த்தி வைத்து அந்த இடத்தை சுத்தம் செய்து அனைவரும் அமர என்று எல்லாம் ரெடி செய்தபடி பேசிக்கொண்டே செய்தனர். பின் மாணிக்கம் அனைத்து சமையல் வேலையும் முடித்தவராக வந்தவர்.
அங்கு வந்து ஜெய் முகத்தைப் பார்க்க அவன் முகம் இப்போது சந்தோஷமாகத்தான் இருந்து அதில் திருப்தி கொண்டவனாக “தம்பி வாங்க தாத்தாவுக்கு சாப்பாடு வைங்க“ என்று அழைத்துச் சென்று தாத்தாவின் படம்முன் வாழை இலை போட்டு அதில் அவருக்கு பிடித்தது போல சாம்பார் மட்டன் கிரேவி மைசூர் பாகு அப்பளம் என்று வைத்தவன் பின் தண்ணீரும் வைத்து கண்மூடி வணங்கி சிறிது நேரம் நின்றவன் பின் மாணிக்கத்திடம் திரும்பி “அவ்வளவு தானா அங்கிள்“ என்று அவர் முகம் பார்த்து நிற்க மாணிக்கம் அவன் கையில் இலையில் சிறு அளவு உணவு போட்டுக் கொடுத்தவர் “இதை கொண்டு போய் காக்காவுக்கு வச்சிட்டு அது சாப்பிடுதான்னு பாத்துட்டு வாங்க தம்பி“ என்று சொல்ல அதை கேட்ட ஜெய் மற்றும் மயூரி இது எதற்கு என்று பார்க்க, அவர்களைப் பார்த்து சிரித்த மாணிக்கம், அதன் காரணத்தையும் விளக்கி, அவனை அனுப்பி வைத்து, பின் இங்கு இருக்கும் அனைவரையும் சாப்பிட வைத்து, பின் இவர்களும் சாப்பிட்டு அனைத்தும் முடிய நேரம் ஒன்று ஆனது. சாப்பிட்டு முடித்த பின் கிளம்புகிறேன் என்று சொன்ன மாணிக்கத்தை விடாமல் பிடித்த ஜெய், “இன்னும் கொஞ்சம் நேரம் இங்கே இருக்கிறீர்களா அங்கிள்?” என்று இவர்கள் சென்ற பின் வரும் தனிமையைப் பிடிக்காமல் கேட்க, அவன் கேட்ட விதத்தில் மாணிக்கத்திற்கும் அவனை மறுக்க தோன்றாமல் சரி என்று அங்கேயே ஜெய்யுடன் பேசிக்கொண்டு இருந்தார். மாணிக்கம் சாதாரண காய்கறி வியாபாரி. ஜெய்யோ பெரிய கம்பெனியின் முதலாளியாக இருக்க, இவர்கள் இடையே பேசிக்கொள்ள என்ன இருக்கும்? ஒன்றும் இருக்காது. அதனாலேயே என்ன பேச என்று இருவரும் தயங்க, இவர்களைப் பார்த்த மயூரி கொட்டாவி விட்டபடி, “நீங்க பேசுவீங்களோ இல்லை பாடுவீங்களோ, என்னம்மோ பண்ணுங்க. நமக்கு தூக்கம்தான் முக்கியம்” என்று நினைத்தவளாக மாணிக்கம் மேலே தூங்கி விழுந்தவள், பின் அவர் மடியிலேயே தூங்கத் தொடங்கிவிட்டாள். மாணிக்கமும் அவள் தலையைத் தடவியபடி அவளைத் தூங்க விட்டவராக. அவளைப் பார்த்து ஜெய்யிடம், “பாப்பா நல்ல பொண்ணு தம்பி” என்று சொல்லி சிரிக்க, அவர் முகத்தில் இருந்த புன்னகையில் ஜெய்யும் சிரித்தவன், “எப்படி அங்கிள், உங்களுக்கு சமைக்கத் தெரியும்?” என்று கேட்டது தான் தாமதம் மாணிக்கம் அவர் மனைவி தேய்வானையை பற்றி சொல்ல ஆரம்பித்தார்
“ அது என் மனைவி தான் சொல்லி தந்தா தம்பி ஏன் இன்னைக்கு உங்க தாத்தவுக்கு விருந்து படைச்சோம்ல அதுகூட அவ தான் சொல்லி தந்தா “
“ ஏன் அங்கிள் அதுக்கு முன்னாடி இது எதுவும் உங்களுக்கு தெரியாதா “ என்று மாணிக்கம் முகம் பார்க்க
“ ஆமா தம்பி தெரியாது எனக்குன்னு யாருமில்ல தம்பி என் பதிமூனு வயசுல இருந்து நான் தனியா தான் இருக்கேன் அதுனாலயே எனக்கு எதுவும் தெரியாது “
அதை கேட்டு அதிர்ந்தவனாக ஜெய் “ உங்க ஃபேமிலி அங்கிள் “ என்று கேள்வி கேட்க மாணிக்கம் முகம் சிறு சோகத்தை தாங்கியபடி “ அப்பா அம்மா ரெண்டு பேரும் வீடு இடிந்து இறந்துட்டாங்க “ என்று அதோடு முடித்து கொண்டவர் மீண்டும் அவர் மனைவி சொல்லும் சாமி கதைகள் என்று ஆரம்பித்து நேரம் ஆவது தெரியாமல் பேசிக்கொண்டே செல்ல ஜெய்யும் மிக ஆர்வமாக ஒரு சிறுவன் போல சோபாவில் கால்களை மடக்கி கைகளை ஆட்டி இவனுக்கு தெரிந்த கதை நாட்டில் நடப்பவை என்று பேசியபடியே இருந்தனர்.
பின் இருவரும் மயூரி முழிக்கும் வரை பேசிவிட்டு ஆறு மணிப்போலத்தான் வீடே திரும்பினர். ஜெய்க்கு இவர்களை அனுப்ப மனமே இல்லை என்றாலும் அனுப்பி வைத்தான்.
கேர்டில் இன்ஸ்பெக்டர் கர்ணா ஏதோ ஒரு கேஸ் விஷயமாக வந்தவன் அதை முடித்துவிட்டு நடந்து சென்று கொண்டிருக்க அங்கே பெண்கள் சில பேர் கும்பலாக நின்று வக்கீலிடம் பேசிக்கொண்டிருக்க அவர்களைப் பார்த்ததும் புரிந்தது என்ன கேஸுக்காக வந்திருக்கிறார்கள் என்று, பின் அவர்களைப் பார்த்தும் கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்ல, அப்போது திருப்பத்தில் தெரியாமல் ஒரு பெண் இவர் மீது மோதி இடித்து, “அய்யோ… அம்மா” என்று கத்தியபடி கீழே விழ, அந்தப் பெண்ணை அழைத்து வந்த பெண் போலிஸ் உடனே கர்ணாவிடம் மன்னிப்புக் கேட்டு அந்தப் பெண்ணை அழைத்துச் சென்றாள், அப்போது கர்ணா தலையில் திடீர் என்று ஒரு மின்னல் வெட்டு வேகமாகத் திரும்பி நடந்தவன் அங்கு நின்று கொண்டிருந்தா பெண்களுள் ஒருத்தியிடம் இருந்த பையை பிடுங்கித் திறந்து பார்க்க, அதில் மேக்கப் பொருட்கள், கருத்தடை மாத்திரைகள், காண்டம், சில ஆயின்மென்ட் அதனுடன் பணமும் இருக்க, அதை வைத்து இறந்த பெண்ணின் தொழில் என்னவென்று புரிய வந்த மறுநொடி, “அந்த பொண்ணு ஒரு விபச்சாரியா?” என்று அதிர்ச்சியுடன் அவன் வாய் முனுமுனுத்தது.