இரவு 23

சூரியன் நடுவானில் தன் கதிர்களை தாராளமாகப் பரவவிட்டுக் கொண்டிருக்கும் வேலையில், அந்த நீலக் கடலும் சூரியனின் வெப்பத்தைக் குறைக்க தன் அலைகளால் மணலை நனைத்துக்கொண்டிருந்தும் வெப்பம் குறையவில்லை. அங்கு அலையும் நாய்களும் வெப்பம் தாங்காமல் படகு அடியில் சென்று நிழல் தேடி ஓடிக்கொண்டிருந்தன. அந்த மெரினா கடற்கரையே ஓரிரு காதல் ஜோடிகளைத் தவிர வேறு யாரும் இன்றி இருக்க, அந்த வெயிலிலும் கல் என அமர்ந்திருந்தான் ஆர்யன். கால்களில் அலைகள் வந்து நனைத்துவிட்டுப் போக,  சூடான வெயில் சுள்ளென்று முகத்தில் அடிக்க, இவன் எந்த ஒரு உணர்வும்  இன்றி அந்த நீலக் கடலை வெறித்தபடி இருந்தான்.

இங்கு மாணிக்கம் இரவிலிருந்து ஆர்யனுக்காக காத்திருந்தது தான் மிச்சம். அவன் வரவே இல்லை. அதில் சோர்ந்தவராக மாணிக்கம் அமர்ந்திருக்க, ஆதித்தி மற்றும் மயூரி தான் துணைக்கு இருந்தனர். கிருபா ஆர்யனை தேடிச் சென்றிருந்தான். மாணிக்கம், “அவன் பேச ஆரம்பிச்சதும் பழையபடி மாறிடுவான்னு நினைச்சேன். அது என் தப்பு தான். எவனோ பண்ண தப்புக்கு என் பையனை நானே தண்டிச்சிட்டேன்“ என்று மனம் உடைந்து பேச, அதித்தி, “அப்பா… புலம்புறதை நிறுத்துங்க. இப்ப தான் கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு வரான்ல. சீக்கிரம் சரி ஆகிடுவான்ப்பா. இந்த வருஷம் இல்லன்னா என்ன, அடுத்த வருஷம் பார்த்துக்கலாம்“ என்று சமாதானம் செய்தாள்.

“இல்லை அதிதி எனக்குத் தெரியும். நான் அவனை ஒதுக்கி வச்சதுக்கு அவன் தரும் தண்டனை ம்மா. என்ன ஆனாலும் அவன் பிறந்தநாளுக்கு என்னைப் பார்க்க மாட்டான். சாப்பிடக்கூட மாட்டான். நாளைக்குத்தான் அவன் வருவான் பாரு. நொந்துபோய் என் பிள்ளை வருவான். இதுகூட பரவாள, ஒரு நாள்ன்னு போய்டலாம். ஆனா எங்கே கடைசிவரை தனியாகவே இருந்துருவானோன்னு தான் பயமா இருக்கும்மா கல்யாணம்னு போச்சு எடுத்தாலே வேணாம்னு போயிடுறான் என்ன பண்ண தெரியல “ என்று வருந்த அதிதி “ அப்பா ஃபீல் பண்ணாதிங்க நான் அவன் கிட்ட பேசுறேன் என்ன தான் மனசுல நினைச்சிட்டு இருக்கான்னு கேக்குறேன்  “ என்று அருகில் சென்று சொல்ல அது எதுவும் மாணிக்கம் காதில் விழுந்தால்தானே அவர் பாட்டுக்கு புலம்பியபட இருந்தார். அவரை பார்த்து வருந்திய மயூரி என்ன செய்ய என்று புரியாமல் முழித்துக்கொண்டும் மாணிக்கத்தை சமாதானம் செய்துகொண்டும் இருந்தாள்.

அன்று முழுவதும் உணவு எதுவும் உண்ணாமல் அடுத்த நாள் காலை நான்கு மணி அளவில் ஆர்யன் வீட்டுக்கு வந்தான். வந்தவன் நிலையைப் பார்த்து மயூரி பயந்து தான் போனாள். முகம் முழுக்க கலைத்து கண்கள் சிவந்து தலை உடை எல்லாம் கலைந்து என்று பரதேசி போல உள்ளே வந்தவன் அங்கு இருக்கும் யாரையும் கண்டுகொள்ளாமல் அவன் அறைக்குச் சென்று குளித்து படுத்துவிட்டான்.

 அங்கு அவனைப் பார்த்த மாணிக்கம் கலங்கிப் போய் இருந்தார். அவரு சமதானம் செய்து பின் மயூரி அவள் வீட்டுக்கு வந்தவள் “இந்த ஆரி ஏன் இப்படிப் பண்றாரு. ஒவ்வொரு வருஷமும் இப்படித்தான் பண்ணுவாருன்னா ஏதோ ரொம்ப டிஸ்டர்ப் ஆகியிருப்பாரு போல” என்றபடி அவள் வரைந்த படத்தைப் பார்த்தவள் “பாவம் அங்கிள்” என்று விட்டு தூங்கச் சென்றுவிட்டாள்.

அதன் பிறகு ஆர்யன் மீண்டும் சுருண்டு அவன் கூட்டுக்குள் சென்று பதுங்கிக்கொண்டவனாக யாரிடமும் பேசாமல் ஒரு இறுக்கத்துடனே இருந்தான். இதை கவனித்த மாணிக்கம் சோர்ந்து போய் முகத்தில் சோகம் இழையோட இருக்க அதை பார்த்த மயூரிக்கு ஆர்யன் மேல் தான் கோபம் வந்தது. பின் இவள் ஒரு முடிவு எடுத்தவளாக இவள் வேலை முடித்து வரும் வழியில் ஆர்யனை பார்த்து பேச வேண்டும் என்று நினைத்துக்கொண்டாள்.

அதே போல அன்று காலை வேலை முடித்து விட்டு வீட்டுக்கு வந்த மயூரி காரை பார்க் செய்துவிட்டு இறங்க, ஆர்யன் அப்போதுதான் ஜாகிங் செய்ய கீழே இறங்கி வந்தான். அவனைப் பார்த்த மயூரி அவனிடம் சென்று, “ஆர்யன், உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்” என்று நிறுத்த, ஆர்யனும் “சொல்லுங்க மயூரி” என்று நின்றான். ஆர்யனை ஒரு வாரம் கழித்து அன்றுதான் பார்க்கிறாள். முகத்தில் மீசை, தாடி இன்னும் வளர்ந்து சாமியார் போல நிற்கும் அவனைப் பார்த்த மயூரி மனதில், “என்ன, நாளுக்கு நாள் சாமியாராகிட்டே போறாரு விட்டா சன்யாசம் வாங்கிட்டு போய்டுவாரு போல” என்று யோசித்தவளாகச் சுற்றிப் பார்த்துவிட்டு.

“இங்க வச்சி அத பேசுனா நல்லா இருக்காது. எனக்காக இன்னைக்கு ஒரு நாள் ஜாக்கிங் விட்டுட்டு என் வீட்டுக்கு வர்றீங்களா? ரொம்ப நேரம் ஆகாது. டென் மினிட்ஸ் தான். பேசிட்டு அப்பறம் நீங்க கண்டினியு பண்ணிக்கோங்க “ என்று அவள் கண்களை சுருக்கி கேட்க ஆர்யன் தலை  சம்மதமாக அசைந்தது. பின் இருவரும் சேர்ந்து மயூரி வீட்டிற்கு சென்றனர். அங்கு மயூரி “உள்ள வாங்க ஆர்யன். ஃபர்ஸ்ட் டைம் வீட்டுக்கு வந்துருக்கீங்க. ஜூஸ் குடிக்கிறீங்களா?” என்று மயூரி உபசரிக்க  அதற்கு அர்யன் மறுப்பாக தலையசைத்து “ஏதோ பேசணும்னு சொன்னீங்களே அத சொல்லுங்க. இன்னைக்கு ஆபிஸ்க்கு சீக்கிரம் போகணும் மயூரி டைம் ஆகுது “ என்று ஹோபாவில் அமர்ந்தான் அதைக்கேட்டு மயூரி எப்படி ஆரம்பிக்கிறது என்று முழித்தவள் “ஆ.. பீ லேட்டர் ஹாப்பி பர்த்டே ஆர்யன்“ என்று சிரிக்க ஆர்யன் முகம் கடுகடுவென மாறி, எழுந்து நின்றவன் “இதை சொல்ல தான் கூப்பிட்டீங்களா? அப்போ சரி, நான் கிளம்புறேன்“ என்று செல்லி எழுந்தவனின் டீ சர்ட்டை பிடித்த மயூரி “பொறுமையே இல்லையா உங்களுக்கு? ஒரு நிமிஷம் நான் சொல்றத கேட்கிறீங்களா?“ என்று ஆர்யனை நிருத்த ஆர்யன் திரும்பி மயூரி பிடித்திருந்த சட்டையை பார்க்க மயூரி கையை எடுத்து கொண்டாவள்  வாய்க்குள் “ ரோம்ப தான் “ என்று முனங்கி விட்டு அவனை பாவம் போல் பார்க்க  அவளை பார்த்து முறைத்தபடி  சோபாவில் மீண்டும் அமர்ந்த ஆர்யன் “என் பொறுமையை சோதிக்காம என்ன பேசணுமோ அத சீக்கிரமா பேசுங்க மயூரி “ என்று கைகட்டி அமர்ந்தான். மயூரி அவன் எதிரே இருந்த சோபாவில் அமர்ந்து கொண்டு

“ஏன் ஆர்யன் இப்படி பண்றீங்க ?,அங்கிள் பாவம் தானே? அவரைப் பத்தி யோசிக்காம எங்கே போயிருந்தீங்க அன்னைக்கு முழுக்க உங்களைக் காணோம்னு எவ்வளவு ஃபீல் பண்ணாங்க தெரியுமா?”

“ப்ச்… எங்க ஃபேமிலி விஷயத்துல நீங்க வராதீங்க மயூரி அன்ட் முழுசா எதுவும் தெரியாம பேசாதீங்க .”

 “உங்க ஃபேமிலிதான் அதை இல்லைன்னு சொல்லல நானு. அந்த ஃபேமிலிய ஒழுங்கா பார்த்துக்க மாட்டிக்கிறீங்களே? எப்பவோ நடந்த விஷயத்தை நினைச்சு இப்ப இருக்கிறவங்களை கஷ்டப்படுத்துறீங்க ஆர்யன்.”

“மயூரி என் கஷ்டம் உங்களுக்கு புரியாது.இப்படி எதுவுமே தெரியாம பேசாதீங்க ” என்று கோபத்தை கட்டுப்படுத்தியவனாக ஆர்யன் கண்களை மூடி பேச,

“என்னன்னு சொன்னா தானே புரிஞ்சிக்க முடியும்? ஆர்யன் எதுவுமே சொல்லாம புரிஞ்சிக்க முடியாதுன்னா சொல்லாதிங்க முதல்ல உங்களுக்கு உள்ள என்ன இருக்குன்னு சொல்லுங்க. என்ன மாதிரி உங்களுக்கு ஷேர் பண்ண ஆளா இல்லை? அப்பா, தங்கச்சி, மச்சான்னு அவ்வளவு பேர் இருக்காங்க. அப்புறம் என்ன? உங்களுக்கு என்ன மாதிரி பேச ஆள் இல்லாம இருக்குறவங்களுக்கு தான் அருமை தெரியும்” என்று மயூரியும் சுயம் இழந்து கத்தி விட, ஆர்யன் மயூரி பேசியதை கேட்டு அமைதியாக மயூரியையே பார்த்த படி இருக்க மீண்டும் மயூரி

“இதோ பாருங்க ஆர்யன் உங்ககிட்ட இப்படி வந்து பேசணும்னு எனக்கு அவசியம் இல்லதான் ஆனா பேசுறேன்னா அதுக்கு ரீசன் உங்க அப்பா தான். நீங்க இங்க மூவ் ஆகுறதுக்கு முன்னாடி நான் எப்படி இருந்தேன்னு தெரியுமா? தனியா எனக்கு ஏதாவதுன்னா பார்க்கக்கூட ஆள் இல்லாம இருந்தேன் வீட்டுக்கே வர பிடிக்காது. லீவுல இங்க இருக்க மாட்டேன். ஆஸ்ரமம், படம் ன்னு எங்கயாவது கூட்டமா இருக்க இடத்தை தேடி போயிடுவேன். தனிமை எவ்வளவு கொடுமை தெரியுமா? அந்த தனிமை என்ன விட்டு போக வச்சி என்ன அவர் பொண்ணு மாதிரி பாத்துக்குறாரு. அப்படி ஒரு நல்ல அப்பா கிடைக்க நீங்க கொடுத்து வச்சிருக்கணும் ஆர்யன். அவர கஷ்டப்படுத்தாதீங்க” என்று மயூரி பேசி முடித்து ஆர்யனை பார்க்க அவன் தலை கீழே தரையை பார்த்த படி தான் இருந்தது.

தரையை பார்த்தபடி ஆர்யன் பேசத் தொடங்கினான். “என் பிறந்தநாள் இல்லை, எங்க வீட்டில விசேஷம்னா எப்படி இருக்கும் தெரியுமா? எங்க அம்மா அப்பா எவ்வளவு சந்தோஷமா இருப்பாங்க தெரியுமா? காலையிலேயே எழுந்து எங்க அம்மா அப்பா கால்ல விழுந்து எழுந்து ஆசிர்வாதம் வாங்கி ன்னு அன்னைக்கு முழுக்க அம்மா அப்பாவைச் சுத்தி தான் என் நாளே போகும். அப்படி இருக்கிற நாளை எப்படி நான் அம்மா இல்லாம கொண்டாட முடியும். எங்க அப்பா அன்னைக்கு ஆஸ்பிட்டல்ல பார்த்தாங்க பாரு, ஓர் பார்வை என் கண்ணுக்குள்ளேயே நிக்குது ,என் சட்டையைப் பிடிச்சி என் மனைவி எங்கேன்னு கத்தியிருந்தா கூட எனக்கு ஒன்னும் தெரிந்திருக்காது. ஆனா அப்படி எதுவும் என் அப்பா செய்யல்லை. ஏன் தெரியுமா? என்மேல் இருக்கும் பாசத்தால தான். ஆனா அதே அப்பாதான் என்னோட பேசாம ஒதுக்கி நின்னாறு என்ன காயப்படுத்திடுவாங்களோன்னு. அதான் இப்ப வரை ஒதுங்கியே இருக்கேன் என்ன காயப்படுத்துறன்னு அவர் கஷ்டப்பட கூடாது. நான் அன்னைக்கு  அம்மாவைக் காப்பாற்ற எவ்வளவோ கஷ்ட பட்டேன் இருந்தும் முடியல்லை.அன்னைக்கு நான்  குடிக்காம இருந்திருந்தா.., ‘குடி குடியைக் கெடுக்கும்’ன்றத  எனக்கு வலிக்க வலிக்க என் வாழ்க்கை சொல்லிக் கொடுத்திருக்கு.”  என்று கைகளால் முகம் மூடிய ஆர்யன், “எனக்கு என் அப்பாவைத் தனியாகப் பார்க்கும்போது வலிக்குது  மயூரி”

“ அப்போ தனியா பாக்காதீங்க ஆர்யன் “ என்று மயூரி கூறியதை கேட்டு ஆர்யன் நிமிர்ந்து பார்க்க மயூரி “  கூட நீங்க இருங்க அம்மா இல்லன்னு அப்பா தனியா இருப்பாங்கன்னு சொல்றீங்களே ஏன் நீங்க உங்க அப்பா கூட இருந்து அந்த தனிமையைப் போக்குங்க “

“ மயூரி …. உனக்கு புரியல ..இதைப் பத்தி இனிமே பேச வேணாம் நான் கிளம்புகிறேன் “

“ ஹலோ வெயிட் பண்ணுங்க எங்க கிளம்புகிறீங்க உங்களை கூப்பிட்டதே அங்கிள் உங்களுக்கு கொடுக்கணும்னு வச்சிருந்த கிஃப்ட்டைக் காட்டத்தான் “

“ என்னது கிஃப்ட்டா அப்பா கொடுக்கணும்னு வச்சிருந்ததா “ என்று அதிர்ச்சியுடன் பார்க்க

“ஆமாம் இங்கேயே இருங்க, இதோ வருறேன்” என்று மாணிக்கத்தை அழைத்து வந்து நிறுத்தி, இவள் வரையும் அறை சென்று, கிஃப்ட் ராப்பரால் சுற்றப்பட்ட அந்த ஃப்ரேமை எடுத்து வந்து, மாணிக்கம் கையில் கொடுத்து,

 “பர்த்டே அப்போதான் தரணும்னு இல்லை அங்கிள், இப்போ கொடுங்க” என்று மாணிக்கம் கையில் கொடுத்து ஆர்யனிடம் கொடுக்க வைத்தாள்.

கிஃப்டை வாங்கிய ஆர்யன் குழப்பமாக தன் அப்பாவைப் பார்க்க, மாணிக்கம் சிரித்த முகமாக “பிறந்தநாள் வாழ்த்துக்கள் ப்பா , திறந்து பாரு” என்று விட்டு ஆர்யனையே பார்த்தார். அந்தக் கிஃப்ட் ராப்பர் மேலே ஏதோ ஒரு கார்டு இருக்க, முதலில் அதைத் திறந்து பார்த்தான். அதில் “என் அன்பு மகன் ஆர்யனுக்கு உன் அப்பா அம்மாவின் பிறந்தநாள் பரிசு” என்று எழுதப்பட்டிருந்தது. அதைப் பார்த்து அவன் கண்களிலிருந்து ஒரு துளி கண்ணீர் கீழே வழிய, கை நடுங்க அதை பிரித்தான்.

பிரித்தவன் அந்த ஓவியத்தைப் பார்த்து அப்படியே பார்த்தபடி இருந்தான். அந்த ஓவியத்தின் நடுவில் மாணிக்கம் மற்றும் தெய்வானை அமர்ந்திருக்க, அவர்கள் மடியில் அதிதி மற்றும் கிருபாவின் இரு பிள்ளைகள் அமர்ந்திருந்தனர் பின்னால் அதிதி, கிருபா, ஆரியன் என்று அனைவரும் இருக்க, ஆரியன் அவன் முகம் மாணிக்கத்திற்குப் பிடித்தபடி மீசை தாடி ட்ரிம் செய்து பழைய ஆரியனாக இருந்தான் முகத்தில் சிரிப்போடு .

படத்தைப் பார்த்தபடி இருந்த ஆர்யன் அருகில் அமர்ந்த மாணிக்கம், “அம்மா எங்கேயும் போகல்லை ஆரி. அவள் நம்ம கூடத்தான் இருக்கிறாள். நீ அவளை நினைச்சி இப்படி வேதனைப்படாமல் இரு ஆர்யா. அப்பாவுக்கு நீயாவது வேண்ணும்” என்று கலங்கிய குரலில் சொல்லவும், ஆர்யன் அவன் தந்தையைக் கட்டிக்கொண்டு, “சாரிப்பா, சாரிப்பா. உங்களை இனிமே கஷ்டப்படுத்த மாட்டேன்” என்று வருந்தினான்.

அதை பார்த்த மயூரி “ எப்படியோ அப்பா பையனை சேர்த்து வச்சாச்சு இதுக்கு அப்பறம் அங்கிள் சிரிச்ச முகமாக இருப்பீங்கன்னு நினைக்கிறேன் “ என்று மயூரியும் புன்னகை முகமாக இருக்க அவளை பார்த்த ஆர்யனின் பார்வையில் ஏதோ ஒரு வித்தியாசத்தை பார்த்த மயூரி அவனையே என்ன வென்று உற்றுப் பார்க்க அவளுக்கு என்னவென்று புரியவில்லை.