தேய்வானை வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்கள் வாங்கி கொண்டு நடந்து வர அவர் கழுத்தில் இருக்கும் தங்க செயினை பார்த்த இரு வாலிபர்கள் இவள் பின்னேயே முகமூடி அணிந்து கொண்டு பைக்கில் வந்தனர். சரியாக அவர் ஆர்யனை பார்த்து கேட்டை திறக்கவும் அவர் கழுத்தில் இருந்த செயினை தாலி கயிற்றுடன் சேர்த்து இழுத்துவிட அது இரண்டும் இழுத்த வேகத்தில் கழுத்து அறுபட்டு கீழே விழுந்தார். விழுந்த வேகத்தில் தலை ரோட்டில் இருந்த ஒரு கல்லில் குத்தி தலையில் இருந்தும் ரத்தம் வடிய தொடங்கியது. ஆர்யனுக்கு தன் தாய் கண் முன்னே ஆரி என்று கத்திக்கொண்டு விழுந்தது மட்டுமே தெரிந்தது. அவர் எப்படி விழுந்தார் எதுவும் புரியவில்லை.
அம்மா கீழே தான் தவறி விழுந்துவிட்டாரோ என்று எண்ணியவனாகத் தட்டு தடுமாறி எழுந்தவன் பதறியபடி “அம்மா அம்மா…” என்று நடக்கக்கூட இயலாமல் கீழே விழுந்தவன் நான்கு காலில் தவழ்ந்து அவன் அம்மாவை நோக்கிச் சென்றவன், அவன் அம்மா காலை அசைத்து “அம்மா.. என்ன ஆச்சு?” என்று கண்கள் சொருகிய படி தெய்வானையை உலுக்க அவரிடம் அசைவே இல்லை மேலும் அவன் தவழ்ந்து அவர் அருகே செல்ல, தேய்வானையின் கழுத்தில் இருந்து இரத்தம் வழிவது அப்போது பார்த்தான். அதை பார்த்து பயந்த ஆர்யன் “அம்மா.. அம்மா… என்ன ஆச்சி” என்று பெரும் குரல் எடுத்துக் கத்த, அவன் நேரம் அங்கு இவனுக்கு உதவ யாரும் இல்லை. மதிய நேரம் என்பதாலோ இல்லை இவர்கள் தெருவில் வேலைக்குச் செல்பவர்கள் தான் அதிகம் என்பதாலயா என்று தெரியவில்லை, அன்று இவன் குரலுக்கு உதவ ஆள் இல்லை.
தேய்வானை கழுத்தில் வலியும் இரத்தத்தை அவன் கை வைத்து நிறுத்தப் பார்க்க அப்போதுதான் அவர் தலையில் இருந்தும் இரத்தம் வருவதைப் பார்த்தான். அதில் இன்னும் பயந்து அவன் தொண்டை கிழியக் கத்தியவன், அவன் போனைத் தேட, அது அவன் போதையில் நடந்து வரும் வழியில் எங்கோ விழுந்திருக்கும் போல. அதைத் தேடித் தோற்றவன், பின் அம்மாவின் போனை அவர் கையில் வைத்திருந்த பையில் தேட, அதிலும் போன் இல்லை.
பின் போன் வீட்டுக்குள்ளே தான் இருக்கும் என்று அவன் எழுந்து ஓடப் போக கால் பிடறி முக்குப்புற கீழே விழுந்தான். முகம் முழுக்க சிராய்ப்பு. அது எதையும் பொருட்படுத்தாமல் மீண்டும் எழுந்து முடிந்த வரை வேகமாகச் சென்று ஆம்புலன்ஸுக்கு போன் செய்தவன் “அம்மா அம்மா அடி பட்டு இருக்கு.. அட்ரஸ் வந்து ….” என்று குளறிப் பேசியவனுக்கு போதையில் முளை வேலை செய்யாமல் அட்ரஸ் நினைவு வர வில்லை. முதலில் அந்த போதை அதிலிருந்து தெளிவாக வேண்டும் என்று அவன் கன்னத்திலேயே மாறி மாறி அடித்துக் கொண்டவன் அவன் காலில் பெண்ணை வைத்து குத்தியபடியே அட்ரஸ் சொல்லி முடித்தான்.
பின் துணியை எடுத்து தண்ணீரில் நனைத்து தன் அம்மாவின் நெற்றியில் தலையில் அழுத்திப் பிடித்தவன் கண்ணில் இருந்து கண்ணீர் வர “ அம்மா அம்மா… என்று தேய்வானையை அழைத்தபடியே இருக்க தேய்வானை மெதுவாக கண்ணைத் திறந்து ஆர்யனைப் பார்த்தவர் அவன் முகத்தில் இருந்த காயத்தைத் தொட்டுப் பார்த்தவராக “ ஆரி வலிக்குதாடா…. பாத்து ப்பா ..ஆரி “ என்று சொன்னவராக அவர் கை தொப் என்று கீழே விழ பயந்த ஆர்யன் “அம்மா அம்மா என்ன ஆச்சு” என்று கத்தி அழுக தேய்வானையின் உயிர் அவரை விட்டுப் பிரிந்து போனது.
“அம்மா அம்மா எழுந்துறு…ம்மா பேசு…ம்மா எதவது.. பேசு இதோ ஆம்புலன்ஸ் வந்துரும் போயிடலாம்மா இங்க என்ன பாரும்மா இங்க பாரும்மா“ என்று ஆம்புலன்ஸ் வரும்வரை புலம்பியபடிதான் இருந்தான். பின் ஆம்புலன்ஸ் வந்து இருவரையும் கொண்டு ஆஸ்பிட்டலில் சேர்க்க அங்கே தேய்வானை இறந்துவிட்டதாகச் சொல்லவும் ஆர்யன் இடிந்துபோய் அமர்ந்தவன்தான் அதன் பின் சுயநினைவின்றி வெறித்தே இருந்தான்.
“நான் ஆஸ்பத்திரிக்குப் போய்ப் பார்த்தப்ப என் மனைவி பேட்ல தூங்கிட்டு இருந்த மாதிரி தான் இருந்தா. நானும் அவளுக்கு ஒன்னும் இல்லை, என் தேவாவுக்கு ஒன்னும் இல்லைன்னு மனசுல சொல்லிட்டே கிட்டப்போய் அவளைக் கூப்பிட்டேன். அவள் எழுந்திருக்கவே இல்லை ம்மா. நான் எப்பொ கூப்பிட்டாலும், இதோ வந்துவிட்டேன் ங்க ன்னு எங்கிருந்தாலும் வந்துடுவா. ஆனா, அன்னைக்கு வரவே இல்லை. டாக்டர் வந்து சீக்கிரமா வந்திருந்தா ஏதாவது பண்ணியிருக்கலாம் ன்னு சொன்னாங்க. தேவா வர முடியாத தூரம் போய்ட்டா ன்னு சொன்னாங்க எதோ பேப்பர்ள கையெழுத்து வாங்கிட்டு போய்டாங்க.“ என்று கண்களைத் துடைத்தவர், “என்னை விட்டு எங்கேயும் போக மாட்டேன் ன்னு சொல்லுவா. அவங்க அம்மா வீட்டுக்குக் கூட அடிக்கடி போகாதவ நான் தனியா இருப்பன்னு. அன இப்போ என்னை தனியா விட்டுப் ஓரேடியா போய்ட்டா ம்மா” என்று கண்களை மூடித் திறந்தவர், சுயம் வந்தவராக மயூரியைப் பார்க்க, அவள் கண்ணிலும் கண்ணீர்தான். அதைப் பார்த்த மாணிக்கம்.
“ என் கஷ்டத்த சொல்லி உன்னையும் அழ வச்சிட்டேனா ம்மா “ என்று கண்களை துடைக்க
“அச்சோ அங்கிள் அப்படிலாம் இல்லை“ என்று மயூரியும் கண்களைத் துடைத்தவள், “அதுல இருந்துதான் ஆர்யா இப்படி தாடி மீசன்னு ஆகிட்டாங்கள அங்கிள்.“
“அது நான் என் மனைவி போன துக்கத்துல அவன கவனிக்கல. ஒரு கோபம், அவன பாக்கும் போதெல்லாம் எங்க என் பையன நானே காயப்படுத்திடுவேனோன்னு நான் ஒதுங்கிதான் இருந்தேன். அத பார்த்து புரிஞ்சிக்கிட்ட ஆர்யன் அவனே ஒதுங்கிக்கிட்டான்மா. சரியா பேசாம ஒரு மாதிரி ஆகிட்டான்மா. இப்போ இந்த வீட்டுக்கு வந்துதான் ஏதோ பேசுறான்மா அதுக்கு முன்னாடி வரை என் முகத்த பாத்து பேச மாட்டான் ம்மா .“
“இப்பவும் உங்களுக்கு கோபம் இருக்கா அங்கிள் உங்க பையன் மேல?“ அதற்கு மறுப்பாக தலை அசைத்த மாணிக்கம் “முதல்ல வந்த கோபம் கூட பின்னாடி அந்த செயின்காக தான் எல்லாம்னு தெரிஞ்ச அப்பறம் போயிருச்சிம்மா. ஆனா அவன் தான் அப்படியே ஒதுங்கி எல்லாரையும் ஒதுக்கி வச்சான். ஆனா கிருபா தம்பி மட்டும் தான் அவன் பேசலேன்னாலும் அவரே போய் பேசிட்டு அவனை விடாம பிடிச்சுகிட்டாரு. அந்த விஷயத்துல தான் என் பொண்ணு அதிதிக்கு கிருபா தம்பிய பிடிச்சி போய் ஒத்த கால்ல நின்னு கல்யாணம் பண்ணிகிட்டா. நல்ல பையன் அவரு.“
என்று பேசிக்கொண்டு இருக்கும்போது கிருபா கால் செய்ய “நூறு ஆயுசு இவருக்கு“ என்று சொல்லி போனை எடுத்துப் பேசி முடித்தவர் மயூரியை பார்த்து “அது இன்னும் இரண்டு நாள்ல ஆர்யனுக்கு பிறந்தநாள். இந்த வாட்டி ஆவது கொண்டாடணும்னு ப்ளான் போட்டு இருக்காங்க“ அதை கேட்ட மயூரி “இந்த வாட்டியாவதுனா இதுக்கு முன்னாடி கொண்டாடுனது இல்லையா அங்கிள்?“
“ அது என் மனைவி தேவா இருந்த அப்போ கொண்டாடுனது அதுக்கு அப்பறம் எங்கே கொண்டாட விட்டான்? அன்னைக்குன்னு பார்த்து எங்கயாவது போய் ஒலிஞ்சிப்பான். இந்தப் படம் கூட அவன் பிறந்த நாளுக்கு கொடுக்க தான் வரையச் சொன்னான். கொஞ்சம் அதுக்குள்ள வரஞ்சி தரியாம்மா?” அதற்கு சம்மதமாக தலை அசைத்து சென்றவள். இரண்டு நாளில் எப்படியோ கஷ்டப்பட்டு படத்தை வரைந்து முடித்து ஆசையாக அவனிடம் தரச் சொல்ல, பர்த்டே பாயை காணவில்லை.