இரவு 19

எங்கு பார்த்தாலும் இருள் சுற்றி இருக்க எதுவும் தெரியவில்லை. உடம்பு முழுக்க வலி. கை கால்களை அசைக்க முடியவில்லை. என்னவென்று கையைப் பார்க்க, அது இவள் படுத்து இருந்த கட்டிலில் கட்டி இருந்தது. கால்களையும் அசைக்க முடியவில்லை. “இது என்ன இடம்?” என்று பயந்து சுற்றிச் சுற்றிப் பார்க்க, திடீரென்று ஒரு கை அவள் கால்களைத் தொட, பயந்துபோய்ப் பார்த்தாள். லல்லிதான் கீழே தலையில் ரத்தம் வர விழுந்து கிடந்தார். அவர் கன்னத்தில் விரல் தடம் பதிந்திருந்தது. வாய் கிழிந்து ரத்தம் வந்தபடி இருக்க, மயூரி “லட்சுமம்மா…” என்று தேம்பி அழுதாள், லல்லி தட்டுத்தடுமாறி எழுந்து அவள் கைகால் கட்டுகளை அவிழ்த்துவிட, மயூரி லலிதாவைக் கட்டிப்பிடித்துக்கொண்டு “லட்சுமம்மா…. லட்சுமம்மா…..” என்று அழுதபடி இருக்க, லல்லி கண்கள் சொருக மயூரி மீது சரிந்தார்.

 முகம் முழுக்க வியர்க்கப் பதறி எழுந்தாள் மயூரி. எழுந்தவள் மூச்சு வாங்கப் பயந்து தலையணையை கட்டிக்கொண்டு “லட்சுமம்மா…” என்று முனங்க, அவள் கண்முன் அதே புகை உருவம் தோன்றியது. அதைப் பார்த்துப் பயந்த மயூரி கட்டிலை விட்டு கீழே விழுந்து எழுந்து பயந்து கண்முன் தெரியாமல் ஓடிச் சென்று, மாணிக்கம் வீட்டுக் கதவைத் தட்டினாள். பின்னாடி அந்த உருவம் வருகிறதா என்று வேற திரும்பித் திரும்பிப் பார்த்தபடி நின்றாள். கதவைத் திறந்த மாணிக்கம் பார்த்தது மயூரியின் பதட்டமான முகத்தையே. மாணிக்கம் பேசும் முன் அவரைத் தள்ளிக்கொண்டு உள்ளே சென்று கதவைப் பூட்டிக்கொண்டாள் மயூரி. கதவைப் பூட்டிவிட்டதை உறுதிசெய்துவிட்டுப் மயூரி பெருமூச்சு விட, அதன்பின்தான் மாணிக்கத்தையே கவனித்தாள்.

மாணிக்கம் மயூரி செய்வதை ஒரு புரியாத பார்வை பார்த்தவர் “யார் வெளியே இருக்க யாரைப் பார்த்து பயப்படுறம்மா?“ என்று கதவை திறக்க செல்ல அதை தடுத்த மயூரி சிரித்தபடி“அது யாரும் இல்லை அங்கிள், அது நான் கெட்ட கனவு கண்டேன் அங்கிள், அதான் பயந்துட்டேன்“ என்று திக்கித் திணறிப் பேசினாள் மயூரி.

 மயூரியின் வெளிறிய முகத்தைப் பார்த்துவிட்டு மாணிக்கம் “வாம்மா வந்து உட்காரு“ என்று உட்கார வைத்தவர் “மணி பத்துக் கூட ஆகல, அதுக்குள்ள கெட்ட கனவுன்னு முழிச்சிட்டியேம்மா. சரி, ஏதாவது சாப்பிடுறியா?“ “என்னது மணி பத்துதான் ஆகுதா?“ என்று நேரம் பார்த்தவள் பின் மாணிக்கத்திடம் திரும்பி “உங்க ஸ்பெஷல் டீ போட்டுத் தரீங்களா அங்கிள்?“ “தோ, போய் போட்டு வரேன்“ என்று எழுந்து சென்று டீ போட்டு வருவதற்குள் மயூரி சோபாவிலேயே அயர்ந்து தூங்கிவிட மாணிக்கம் “ரொம்ப டயர்டா இருப்பாங்க போல“ என்று உள்ளே சென்று புது போர்வை ஒன்றை எடுத்து வந்தவர் மயூரி மீது போர்த்திவிட்டு லைட்டை ஆஃப் செய்துவிட்டு மதிய உணவு க்கான  சமையல் வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டார்.

சமையல் அறையில் மிகவும் கவனமாக சத்தம் வராமல் தான் சமைக்க முயன்றார் மாணிக்கம். எங்கு சத்தம் கேட்டு மயூரி முழித்து விடுவாளோ என்று எண்ணி. ஆனால் அவரை மீறி சில சத்தங்கள் எழும்பத்தான் செய்தன. ஆனால் மாணிக்கம் அறியாத ஒன்று இந்த சத்தங்களால்தான் மயூரி நிம்மதியாகத் தூங்க காரணம்  என்று.

சமையல் வேலையை முடித்து மாணிக்கம் வெளியே வர மயூரியின் முனகல் சத்தம் மெல்லிய சத்தம் காதில் விழுந்தது. முதலில் அது என்ன என்று புரியாமல் அருகே செல்ல  “லட்சு ம்மா, லட்சு ம்மா“ என்று மயூரி முனங்கியபடியே இருக்க மாணிக்கம் அருகில் சென்று “மயூரி பாப்பா..“ என்று தொட அவள் உடல் நெருப்பாகக் கொதித்துக்கொண்டு இருந்தது. மாணிக்கம் “அச்சோ, இவ்வளவு ஜூரம் அடிக்குதோ!“ என்று பதறியவராக என்ன செய்வது என்று யோசித்தவர் ஆர்யன் அறை செல்ல அவன் நன்றாக உறங்கிக் கொண்டு இருந்தான்.

அவன் அருகே சென்று மாணிக்கம் “ ஆர்யா… ஆர்யா எழுந்திருப்பா… “ என்று எழுப்ப அவன் உருண்டு படுத்துவிட்டு “ ம்ம்ம்…” என்று சத்தம் மட்டும் கொடுத்தான் . மாணிக்கம் மீண்டும் ஆர்யனை உலுக்கியவர் “ தம்பி மயூரி பாப்பாக்கு ரொம்ப ஜூரமா இருக்கு தம்பி கொஞ்சம் ஆஸ்பிட்டல் கூட்டிட்டு போயிட்டு வாங்க “ என்று எழுப்ப ஆர்யன் வேகமாக எழுந்து அமர்ந்தவன் “ என்னப்பா மயூரிக்கு என்ன “ என்று கண்களை கசக்கிப் கேட்க மாணிக்கம்   “பாப்பா கெட்ட கனவுன்னு இங்க வந்தவங்க டீ கேட்டாங்க ப்பா டீ போடுறதுக்குள்ள ஹால்லேயே தூங்கிட்டாங்க நானும் தூங்கட்டும்னு விட்டேன் இப்போ ஏதோ முனங்கிட்டே இருந்தாங்கன்னு கிட்டே போய் பார்த்தா உடம்பு நெருப்பா காயுது தம்பி “என்று விளக்கமாக விளக்க ஆர்யன் உடனே எழுந்து ஹாலுக்கு சென்று பார்த்தான்.

மயூரி முனங்கியபடிதான் இருந்தாள் உடல் நெருப்பாக கொதித்துக்கொண்டு இருந்தது. ஒரு நிமிடம் என்ன செய்ய என்று முழித்தவன் முதலில் சென்று முகம் கழுவி சட்டை ஒன்று போட்டு வந்தான். பின் மயூரி அருகே சென்று “ மயூரி மயூரி …” என்று லேசாகத்தான் எழுப்பினான் அதற்கே பயந்து எழுந்து அமர்ந்தாள் மயூரி அவள் எழுந்த வேகத்தில் மாணிக்கமே “ பார்த்து ம்மா பார்த்து “என்று பதறத்தான் செய்தார். எழுந்து அமர்ந்த மயூரிக்கு அமரவே முடியவில்லை தலை வின் வின்னென்று வலிக்க தலையை பிடித்துக்கொண்டு ஹோபவிலயே சாய்ந்து கொண்டாள்.

ஆர்யன் “ மயூரி ஹாஸ்பிட்டல் போலாமா? ரொம்ப ஃபீவர் அடிக்குது உனக்கு “

“ இல்லை ஆர்யன் பரவாயில்லை நான் பார்த்துக்கிறேன் “ என்று எழுந்திருக்கப் போக அவளால் சுத்தமாக முடியவில்லை. தள்ளாடி மீண்டும் சோபாவில் அமர்ந்துவிட்டால், மாணிக்கம் “ என்னம்மா நீங்க இப்படி இருக்கீங்க, நிற்கக்கூட முடியலை உங்களால. முதலில ஹாஸ்பிட்டல் போங்க “ என்று வற்புறுத்த, மயூரியின் தலை வெடித்துவிடும் போல் வலித்தது. அதை பொறுக்க முடியாமல் கண்களை மூடியபடி மயூரி “ ஆரி கொஞ்சம் என் வீட்டுக்குப் போய் தலைவலி டேப்லெட் எடுத்துட்டு வர்றீங்கள? ரொம்ப தலை வலிக்கிது“   அதற்கு மாணிக்கம் “ என் கிட்ட இருக்குமா தலைவலி மாத்திரை “என்று எடுக்கச் சென்றான். அதை கேட்ட மயூரி

“ ஆரி அது டாக்டர் எனக்காகக் கொடுத்த டேப்லெட். என் பெட் ரூம்ல பெட் பக்கத்துல இருக்கிற டெஸ்க்ல இருக்கும். ப்ளீஸ் எடுத்துட்டு வாங்க “ என்று தலையை பிடித்தபடி பேச, ஆர்யன் மாணிக்கத்திடம் சொல்லிக்கொண்டு மயூரி வீட்டுக்குச் சென்றான்.

இங்கு மயூரியின் வீடு பூட்டப்படாமல் திறந்தே இருந்தது. அதைப் பார்த்து ஆர்யன், “என்ன டோர் லாக் பண்ணாம வந்திருக்க?” என்று எண்ணியபடி உள்ளே செல்ல, ஹாலின் அருகே இரு கதவுகள் இருக்க, ஆர்யன் முதல் கதவைத் திறந்து உள்ளே சென்றவன் அதிர்ந்து நின்றுவிட்டான். அந்த அறை முழுக்க ஒரு பெண்ணின் கண் ஓவியமாக வரையப்பட்டிருந்தது. பாதி சுவரில் மாட்டப்பட்டும், பாதி கீழே ஒரு மூலையில் அடுக்கப்பட்டும் இருந்தது. அதைச் சுற்றிப் பார்த்த ஆர்யனுக்குத் தோன்றியது, இது அனைத்தும் ஒரே பெண்ணின் கண் என்பது மட்டும்தான். படங்களைப் பார்த்த ஆர்யன் நடந்து உள்ளே செல்ல, அந்த அறையின் ஒரு பக்க சுவரில் மட்டும் ஒரு பெண்ணின் முழு உருவம் வரையப்பட்டிருந்தது. அதைப் பார்த்த ஆர்யன், “அந்தக் கண் இவங்களுடையது இல்லை போலயே. அப்போ இரண்டு வேறு வேறு ஆளு போல. ஆமா, இவங்களை எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே” என்று அருகில் சென்று பார்க்க, அதற்குள் ஆர்யனின் போன் அடிக்க, அப்போதுதான் இவன் வந்த வேலை நினைவுக்கு வர, தலையில் தட்டிக்கொண்டு அந்த அறையை விட்டு வெளியே வந்து அடுத்த அறைக்குள் நுழைந்தான்.

அந்த ரூம் நிலை அதற்கு மேலே இருந்தது. ரூமில் லைட், ஏசி என்று அனைத்தும் போட்டு, ஜன்னல் கார்டனும் திறக்கப்பட்டு மிக வெளிச்சமாக இருந்தது அந்த ரூம். அந்த ரூமைப் பார்த்து அப்படியே நிற்காமல், ரூமில் லைட், ஏசியை அணைத்து, அந்த மாத்திரையும் எடுத்துக்கொண்டு வந்தான். இங்கு மாணிக்கம் மயூரிக்கு டீயை சூடு செய்து எடுத்து வர, அப்போதுதான் ஆர்யனும் வந்தான். அவன் வந்து மாத்திரையை நீட்ட, அதை தண்ணீர் எதுவும் இல்லாமலே போட்டுக்கொண்டவள் அமைதியாக அப்படியே கண் மூடி அமர்ந்து விட்டாள். பின் சிறிது நேரம் கழித்து எழுந்தவள் சிரித்த முகமாக மாணிக்கம் மற்றும் ஆர்யனைப் பார்த்தாள். அவளைப் பார்த்த மாணிக்கம், “என்னம்மா மயூரி, இப்படி உனக்கு தலைவலிக்குது. பேசாம நீ என் கூட கிளம்பு. எனக்கு ஒரு டாக்டரைத் தெரியும், நல்ல கைராசி டாக்டர் ஒரு ஊசி போட்டா போதும், உடம்புல இருக்குற எல்லாம் சரியாகிடும்.” என்று அக்கரையுடன் போச அதை கேட்ட மயூரி மலர்ந்த முகத்துடன் “இன்னைக்கு நான் வேற டாக்டர் கிட்ட அப்பாயின்மென்ட் வாங்கிட்டேன் அங்கிள். நாம வேணா இன்னொரு நாள் போலாம் நீங்க சொன்ன டாக்டர் கிட்ட” என்று எழுந்தவள் மாணிக்கம் கையில் இருந்த டீயை வாங்கி ரசித்துக் குடிக்க, ஆர்யன், “டீ குடிக்க மாட்டேன்னு சொன்னீங்க?” “அது அங்கிள் போட்டா குடிப்பேன்” என்று புன்னகை செய்தாள்.

பின் இருவரிடமும் சொல்லிக்கொண்டு அவள் வீடு சென்று ரெடி ஆனவள் கேப் புக் செய்து ஆஸ்பத்திரி சென்றாள். ஆஸ்பத்திரியில் டாக்டர் மேரியிடம் இவளுக்கு வந்த காட்சிகளை எல்லாம் சொல்ல, அதற்கு மேரி “குட் மயூரி, நல்ல இம்ப்ரூவ்மென்ட். இத்தனை வருஷம் ட்ரீட்மென்ட்டில் இவ்வளவு காட்சி நினைவுக்கு வந்திருக்குன்னா நீங்க குணமாகிட்டு வர்றீங்கன்னு அர்த்தம்.”

“அன எனக்கு ஒரு டவுட் டாக்டர், இத்தனை வருஷம் இல்லாம அது ஏன் டாக்டர் இப்போ நினைவு வருது?”

 “அது மயூரி, உங்க நினைவுகள ட்ரிகர் பண்ற மாதிரி ஏதாவது விஷயமோ, இல்லை கடந்த காலத்தில் இருக்கிற நபர் யாரையோ நீங்க பார்த்திருக்கலாம். அதனால் உங்க நினைவு பழைய மறந்த விஷயத்தை நினைவுபடுத்தப் பார்க்குது.”

 “டாக்டர், அப்படி பழைய ஆட்களை நான் யாரையும் பார்க்கலையே டாக்டர்.”

 “ஆட்களைப் பார்த்துதான் நினைவுகள் ஞாபகம் வரணும்னு இல்லை மயூரி. எக்ஸாம்பிள்க்கு இப்போ உங்களுக்கு ஒரு ஃபிரண்டு இருக்கான். அவனை மாதிரியே உங்க ஆபீஸில் ஒருத்தனைப் பார்க்குறீங்க. அப்போ உங்க நினைவு ஆட்டோமேட்டிக்கா உங்க ஃபிரண்ட் கிட்ட போகும் தானே? அந்த மாதிரி யாருடைய செயல் இல்லை முகமோ இப்படி ஏதாவது ஒன்னு உங்க நினைவுல இருக்கிற பெர்சனோடு மேட்ச் ஆகி இருக்கலாம். அதனால கூட ட்ரிகர் ஆகி இருக்கலாம்.”

“ இது ஓகே டாக்டர். ஆனா இந்த இல்யூஷன் அத நான் என்ன பண்றது டாக்டர்? எனக்கு ரோம்ப பயமா இருக்கு”

“டோன்ட் வொர்ரி மயூரி, அதுக்கு நான் சில டேப்லெட் தரேன். இல்யூஷன் வர மாதிரி இருந்தா இந்த டேப்லெட்டைப் போட்டுட்டு கண்ணை மூடி ஒரு பத்து வாட்டி மூச்சை இழுத்து விடுங்க. சரியாகிடும். இப்படியே கொஞ்சம் கொஞ்சமா நினைவு உங்களுக்கு வந்துட்டா எல்லாம் சரி ஆகிடும்” என்று டாக்டர் சொன்னதைக் கேட்டு மகிழ்ந்த மயூரி “தாங்க்ஸ் டாக்டர்” என்று சொல்லிச் சென்றாள்.