இரவு 18

அந்தப் பெரிய ஹாலில் டிவி பார்த்தபடி ஆப்பிள் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு கை அவள் கழுத்தில் ஊர அதைத் தட்டிவிட்டுப் பயந்து திரும்பிப் பார்க்க ஒரு பெண் தெளிவில்லா நிலையில் கண்கள் சொருக நின்றுகொண்டிருந்தாள். அந்தப் பெண்ணைப் பார்த்துப் பயந்து பின் செல்ல அவள் கையைப் பிடித்த அந்தப் பெண் குழறலாக “எங்க போற இங்க வா…” என்று இழுத்து அவள் மடியில் அமர வைத்துக்கொண்டவள் கட்டி அணைத்தபடி “நீ க்யூட்டா இருக்க” என்று அவள் கன்னத்தில் முத்தம் தர அடித்துப் பிடித்து எழுந்தாள் அவள். முகம் வியர்க்க எழுந்தவள் சுற்றும் முற்றும் பார்க்க அவள் அருகில் ஒரு பெண் பேச்சு மூச்சின்றி கைகள் கட்டப்பட்ட நிலையில் இருக்க அந்தப் பெண்ணைப் பார்த்துக் கண்கள் சிவக்கக் கோபம் கொண்டவளாக அந்த உயிரற்ற பெண்ணை “கையை எடு கையை எடு கையை எடுடி…” என்று கத்திக்கொண்டு அடித்தவள் பின் வாய்விட்டுச் சிரித்துக்கொண்டு “உன்னை என்ன பண்ணப்போறேன் பாரு” என்று சொல்லியவள் அந்த உடலை அதே அறையில் ஒரு ஓரமாகப் பள்ளம் தோண்டிப் புதைத்தவள் அந்த இடத்தையே பார்த்தபடி அவள் போட்டிருந்த அந்த அரை நிலா டாலரைக் கடித்துக்கொண்டிருந்தாள்.

இங்கு பார்க்கில் மயூரி சொன்னதைக் கேட்டு அதிர்ந்த ஆர்யன் “உங்க பயம் ஏன்னன்னு உங்களுக்குத் தெரியாதா, அது எப்படி எதுக்குன்னு தெரியாமல இவ்வளவு பயம்” குழப்பமாக ஆர்யன் அவளை பார்க்க, மயூரி “எனக்கு என் சின்ன வயது ஞாபகம் இல்லை பதின்மூனு வருஷம் முன்னாடி கல்கத்தாவில் ஜெய் தாத்தா கார் முன்னால ஓடி வந்து விழுந்திட்டனா. அவர்தான் என்னை ஆஸ்பத்திரியில் சேர்த்து சிகிச்சை பார்த்தது. மூனு நாள் ஆச்சாம் நான் கண் விழிக்க. கண் முழுச்சதும் எனக்கு எதுவும் ஞாபகம் இல்லை. ‘மயூரி மயூரி’ ன்னு காதில ஏதோ சத்தம் கேட்டுட்டே இருக்கும். அதை வச்சி தான் என் பெயர் மயூரி ன்னு நானே நினச்சி வச்சிகிட்டன். நான் ஆஸ்பத்திரியில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிட்ட அப்புறம் என்னை ஒரு ஆஸ்ரமத்தில சேர்த்து படிக்க வைத்து இப்போ இந்த கம்பெனியில் வேலை செய்றேனா, அதற்கு காரணம் என் நண்பன் ஜெய் அப்புறம் அவர் தாத்தா தான். இவங்க இல்லைன்னா நான் என்ன பண்ணியிருப்பேன்னு தெரியல” என்று குரல் கரகரக்க சொல்லி முடித்தாள் மயூரி.

மயூரி சொன்னதை ஜீரணிக்கவே ஆர்யனுக்கு சில நேரம் தேவைப்பட்டது. பின் அவனே “அப்போ உங்க அப்பா அம்மா யாருன்னு கூட தெரியாதா?” என்று கேட்க.

 அதற்கு அவள் ஒரு பெருமூச்சு விட்டபடி “கல்கத்தா சென்னைன்னு தேடாத இடம் இல்லை. போலீஸ் கம்ப்ளைன்ட்டும் கொடுத்திருக்கோம். என் பெயர், என் போட்டோ வச்சி விசாரித்தும் நான் யாருன்னு யாருக்கும் தெரியவில்லை. நான் கண் விழித்ததும் ஜெய் தாத்தா பேசின தமிழ் நல்லா புரிஞ்சது. அதை வைத்துதான் நான் தமிழ்நாட்டுப் பொண்ணா இருப்பேன்னு நினைச்சி இங்கேயும் தேடினாங்க. பட், நோ க்ளூ. நான் யார், எதுக்கு கல்கத்தா போனேன் எதுவும் தெரியல்லை. டாக்டர் என் கிட்ட என் நினைவு வந்தா தான் என் பயம் போக வாய்ப்பு இருக்குன்னு சொல்லிட்டாங்க. அதான் இப்போ வரை ட்ரை பண்ணிட்டு இருக்கேன்” என்று பேசி முடிக்க ஆர்யனுக்கு என்ன சொல்வதென்று ஒன்றும் புரியவில்லை. “இவளுக்கு ஏன் இவ்வளவு கஷ்டம்? அப்படி கல்கத்தாவில் என்ன நடந்திருக்கும்? அவள் கார் வருவது கூட பார்க்காமல் ஓடி வரும் அளவு” என்று மனதோடு பேசிய ஆர்யன் மயூரியைப் பார்த்து “பி ஸ்ட்ராங் மயூரி. இவ்வளவு தூரம் வந்திருக்கீங்க. கண்டிப்பா எல்லாம் நினைவு வந்து இந்த பயத்திலிருந்து வெளி வருவீங்க. உங்க ஃபேமிலியும் திரும்பி கிடைக்கும்” என்று மயூரியைத் தைரியப்படுத்த, அதைக் கேட்டு சிரித்த மயூரி பேச்சை மாற்றும் விதமாக “ஆமா, ஏன் என்னைப் பார்த்து முன்னாடில்லாம் முறைச்சிட்டே இருப்பீங்க? நான் போட்ட மெயில்க்காகவே?” என்று ஆர்யன் முகம் பார்க்க, அதற்கு அவன் “மிக்கும் …” என்று தொண்டையைச் செருமியவன் தலையைத் திருப்பி கண்களை இருக்கி மூடித் திறந்தவன் மயூரியைப் பார்த்து “அது நீங்க அந்த ரம் பாட்டிலை எடுத்துட்டு போனீங்கள, அதான் நீங்க குடிப்பீங்களோன்னு…” என்று அவன் இழுக்க, அவனைப் பார்த்து முறைத்த மயூரி “என்னை பார்த்தா குடிகாரி மாதிரியா தெரியுது?” மயூரி சொன்னதை கேட்டு பதறிய ஆர்யன்

“அது அப்படி இல்லை அது…உங்க போன் ரிங்டோன் கூட குடியைப் பற்றிதான் இருந்துச்சா அதான்…”

“ஓ அப்படி வர்றீங்க அப்போ ரிங்டோன் வச்சவன் எல்லாம் குடிகாரன் குடிகாரன்னு முடிவு பண்ணிடலாம்னு சொல்றீங்க “ “அது அப்படி இல்லை மயூரி ஒரு மிஸ் அண்டர்ஸ்டாண்டிங்ல தான் “

“ஓ.. சரி சரி ஆனா இதுவே ஒரு பையன் இப்படி பாட்டில்ல எடுத்துட்டு போயிருந்தா இப்படி முறைச்சிருப்பீங்க பசங்கன்னா அப்படிதான்னு விட்டிருப்பீங்க “ என்று மயூரி முகம் திருப்பினாள்,  அதைக் கேட்ட ஆர்யன் மறுப்பாகத் தலையசைத்து “இந்த விஷயத்துல நான் பையன் பொண்ணுன்னு பார்க்கிறது இல்லை எனக்கு குடிக்கிறது பிடிக்காது” என்று முகம் இறுகச் சொல்ல மயூரி “டீடோட்லரா நீங்க சூப்பர்ங்க ஆர்யன் “

“ம்ம்ம்… இப்போ நான் டீடோட்லர் தான் “ என்று அந்த ‘இப்போ’வை அழுத்திச் சொல்ல மயூரி குழப்பமாக அவனைப் பார்க்க ஆர்யன் “நான் குடிச்சிட்டுதான் இருந்தேன் சோஷியல் ட்ரிங்கிங்னுதான் ஆரம்பிச்சேன் ஆனா அது…” என்று அமைதியான ஆர்யன் குரலைச் சிறுமி கொண்டு “அதுக்கு ரொம்ப அடிக்ட் ஆகி நிறைய விஷயம் இழந்துட்டேன் , குடி தப்புன்னு வாழ்க்கை வலிக்கக் கற்றுக்கொடுத்திருச்சி நானும் அதை விட்டு முழுக்க வெளிய வந்துட்டேன். அதைப் பற்றி யோசிக்கக்கூட கூடாதுன்னு தான் குடிக்கிறவங்களை விட்டுத் தள்ளியே இருப்பேன் “ என்று பேசிக்கொண்டே இருவரும் பைக் அருகே வந்துவிட ஆர்யன் “போலாமா மயூரி “ என்று அவள் முகம் பார்க்க அவளும் அவள் குழம்பிய முகத்தை மாற்றிக்கொண்டு “ம்ம்ம் போலாம் “ என்று வண்டியில் ஏறி அமர்ந்தாள்.

இப்போது மயூரிக்குப் பார்க்கிற்கு வரும்போது இருந்த பயம் இல்லை. அதற்கு மாறாக ஆர்யனின் நினைவுதான். அவன் பார்க்கில் பேசியதைத்தான் நினைத்துக்கொண்டிருந்தாள். “எதை இழந்துட்டான் ஆரி? அதைச் சொல்லும்போது அவ்வளவு கஷ்டப்பட்டான்” என்று யோசித்தபடியே வர, அவர்கள் அப்பார்ட்மெண்டும் வந்தது.

பைக்கை விட்டு இறங்கி இருவரும் நடந்து செல்ல, மயூரி “அங்கிள்கிட்ட எனக்கு நடந்ததைச் சொல்லாதிங்க ஆர்யன்” என்று சொல்ல, அதைக் கேட்டு ஆர்யன் “ஏன் அப்பாகிட்ட சொல்லக் கூடாது?” என்று கேள்வியாகப் பார்க்க, மயூரி “அங்கிள் என்னை நினைச்சி ரொம்ப ஃபீல் பண்ணுவாங்க பாவம் அங்கிள். அதான் சொல்ல வேண்டாம்னு சொன்னேன்” என்று மயூரி சொன்னதைக் கேட்டு முகம் மலர சிரித்த ஆர்யன், “எங்க அப்பா எனக்கு அப்பாவா இல்லை உனக்கு அப்பாவான்னு தெரியமாட்டிகிது.” என்று தலையசைக்க, ஆர்யனின் சிரிப்பைப் பார்த்த மயூரி,

 “நீங்க சிரிக்கும்போது அழகா இருக்கீங்க. ஆனா இந்த தாடிதான் அதை மறச்சி டிஸ்டர்ப் பண்ணுது. ஆனா உங்க கண்ணு அது அழகா சிரிக்குது.” என்று மயூரி பேசியதைக் கேட்டு ஆர்யன் காது மடல் சிவக்க நின்றான். மயூரி அவன் காதுகளைப் பார்த்து, “வாவ்! எப்படி ரெட்டா ஆகுது உங்க இயர்ஸ்?” என்று அதை விரல் நீட்டிக் காட்ட, ஆர்யன் அவன் காதுகளை மறைத்தபடி, “அது கொஞ்சம் ஜில்லுன்னு இருக்குல க்ளைமேட். அதான்.” என்று பேசியவன் லிஃப்டை விட்டு இறங்கி அவன் வீட்டு பெல்லை வேகமாக அடிக்க, அவன் முகத்தைப் பார்த்து சிரித்த மயூரி அவன் அருகே வந்து நின்றாள்.

 அப்போது கதவைத் திறந்த மாணிக்கம் மயூரியைப் பார்த்துவிட்டு “மயூரி பாப்பா… உள்ளே வாங்க…” என்று உள்ளே அழைத்துச் சென்று அவளை அமரவைத்தவர் “என்னம்மா நீ நம்ம உடம்பை நாம தானே பாத்துக்கனும்? இப்படி இரண்டு ராத்திரி முழிச்சி வேலை பார்த்தா உடம்பு என்ன ஆகிறது? ஏன் வேற யாரும் இல்லையாம்மா உன் கூட வேலை பார்க்க? நீ மட்டும்தான் பார்க்கிறியா என்ன? இதோ பார் இவன்லாம் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துடுறான்” என்று ஆர்யனைக் காட்ட, அவன் மாணிக்கத்தைப் பார்த்து முறைத்தபடி “நானும்தான் நைட் வேலை பார்த்துட்டு வந்திருக்கேன். ஆனா என்னைக் கவனிக்க ஆள் இல்லை?” என்று புலம்பியபடி செல்ல, மாணிக்கம்

 “அவன் கிடக்கிறான் ம்மா எப்ப பாரு இப்படி புலம்பிக்கொண்டேதான் இருப்பான். சரி நான் போய் பால் எடுத்துக்கொண்டு வறேன். குடிச்சிட்டு தூங்கப் போங்க” என்று எழுந்திருக்க, மயூரி “அச்சோ அங்கிள்! எனக்கு உங்க பையன் கடையில வாங்கித் தந்துடாங்க. பால் வேண்டாம்” என்று மறுக்க, மாணிக்கம் “என்னது ஆர்யன் வாங்கித் தந்தானா? ரெண்டு பேரும் சேர்ந்தா வந்தீங்க? அவன் வண்டிக்கு என்ன ஆச்சு?” என்று கேள்வியாய் கேட்க, அதற்கு மயூரி “அது என் கார் ரிப்பேர் அங்கிள். அதான் உங்க பையன் கூட வந்தேன். அவுங்க வண்டி நல்லாதான் இருக்கு” என்று சமாளித்தாள். அதைக் கேட்ட மாணிக்கம் “சரி தோசை சுட்டுத் தறேன். அதைச் சாப்பிட்டுட்டுத் தூங்குங்க” என்று எழுந்து சென்றார்.

இங்கு அறைக்குள் வந்த ஆர்யன் கண்ணாடி முன் நின்று அவன் முகத்தைப் பார்க்க, அவன் காது மடல்கள் சிவந்திருந்தன. அதை கைகளால் மறைத்தபடி, “என்ன இது இப்படி சிவந்திருக்குது? ஏன்?” என்று பார்த்துக் கொண்டிருக்கும்போது, மாணிக்கம் “ஆர்யா…சாப்பிட வா…” என்று அழைக்க, அவனும் சென்றான். மாணிக்கம் இருவரையும் உண்ண வைத்துவிட்டே தூங்க அனுப்பினார். மயூரிக்கு இவர்களுடன் இருக்கும்போது, இவளும் இவர்களில் ஒருத்தி போலத் தோன்ற, முகம் மலர்ந்தே இருந்தது. ஆனால் அந்த மலர்ச்சி அனைத்தும் அவள் வீட்டுக்குள் நுழையும் வரைதான். அவள் வீடு பொருட்களால் நிறைந்திருந்ததே தவிர, அதில் வேறு எதுவும் இல்லை. இவளுக்காகக் காத்திருக்க யாரும் இல்லை. அதை நினைத்த மறுநொடி அவள் கண்கள் கலங்க, அப்படியே நின்றுவிட்டால். நின்றபடியே மயூரி யோசிக்க தொடங்கினாள் அவள் அம்மாவின் கண் லலிதாவின் முகம் என்று அனைத்தையும் யோசிக்க அவள் உடல் வியர்க்கத் தொடங்கியது. மீண்டும் அவள் உடல் அருவருப்பை உணரப் பயந்த மயூரி, குளியலறைக்கு விரைந்து, ஷவர் கீழே நின்று உடல் சிவக்கத் தேய்த்துக்கொண்டே இருந்தாள் அந்த அருவருப்பு நீங்கும் வரை.

அவள் உடல் வலியைக் காட்டியும் அவள் தேய்பதை நிறுத்தவில்லை. கண்ணில் கண்ணீர். ஏன் என்று தெரியாத ஒரு பதட்டம். ஏதோ அவளைத் துரத்தும் வின்பம். காதுக்குள் பல சத்தங்கள். அதைக் கேட்க முடியாமல் காதை மூடி கீழே அமர்ந்துவிட்டாள். எவ்வளவு நேரம் தண்ணீரில் இருந்தாள் என்று தெரியவில்லை. அவள் உடல் குளிரில் நடுங்கத் தொடங்க பொறுமையாக எழுந்து உடை மாற்றி சோபாவில் அமர்ந்தாள்.

 தலையில் இருந்து தண்ணீர் சொட்டு சொட்டாக விழ, தலையைத் துவட்டும் தெம்பும் அவளுக்கு இல்லை. அப்போது அவள் போன் விடாமல் அடித்து அவள் கவனத்தை அதன்புறம் திருப்பினாள், யார் என்று எடுத்துப் பார்த்தாள். ஜெய் தான் அழைத்துக்கொண்டு இருந்தான். அவனுக்கு இந்நேரம் விஷயம் தெரிந்திருக்கும் என்று நினைத்தவள் போனை எடுத்து இயல்பாகப் பேசுவது போல் பேசினாள். “சொல்லு ஜெய், கால் பண்ணியிருக்க.” “மயூ, உனக்கு ஒன்னும் இல்லைதானே? இப்போ நீ எங்கே இருக்க?” எனப் பதட்டமாக அவன் குரல் கேட்க, மயூரி, “டேய் லூசு, இந்த டைம் நான் எங்கே இருப்பேன்? வீட்டிலதான் இருக்கேன்.” “இல்லை, அந்த வாட்ச்மேன் நீ ஏதோ கத்தி மயங்கிட்டன்னு சொன்னான்.” “டேய், லைட் தெரியாம ஆஃப் ஆகிருச்சு. அதுல நான் கொஞ்சம் பயந்து மயங்கிட்டேன். அவ்வளவுதான்டா.” “இல்லை,  கோடிங் டீம் ஹெட் ஓட ஹெல்ப்ல தான் உன்னைக் கூட்டிட்டுப் போனாங்களாம். உனக்குத் தனியா நடந்து போறதுகூட முடியலைன்னு சொன்னார்.” “அவர் எங்க பிளாட் தான். அதான் எனக்கு ஹெல்ப் பண்ணார். மத்தபடி ஒன்னும் இல்லை ஜெய். நான் நல்லாதான் இருக்கேன். இப்போ தூக்கம் வேற வருது. என்ன டிஸ்டர்ப் பண்ணாமல் நீ போய் என்ஜாய் பண்ணுடா.”

“சீரியஸ்ஸா உனக்கு ஒன்னும் இல்லை தானே மயூரி?“ “டேய் எனக்கு ஒன்றுமில்லை. நீ போய் என்ஜாய் பண்ணு. நான் தூங்கப் போறேன். பாய்!“ என்று போனை வைத்தவள், முயன்று அவள் எண்ணத்தைத் திசைதிருப்பியவள் எழுந்து தலை துவட்டிவிட்டுத் தூங்கக் கட்டிலில் படுத்துக் கண்களை மூட, கண்ணுக்குள் லல்லியின் முகம், தலையிலிருந்து ரத்தம் வழிய, ஒரு கன்னம் வீங்கி, உதடு கிழிந்த நிலையில் அவள் “மயூரிம்மா….” என்று கைகளை நீட்ட, பதறி எழுந்தாள் மயூரி.