கம்பெனியில் ஆர்யனுக்கும் வேலை தலைக்கு மேல் இருக்க, அதைப் பார்த்துக் கொள்ளவே நேரம் சரியாக இருந்தது. ஆனால் அதிலும் மயூரியின் மீது ஒரு கண் வைத்து, அவள் மீட்டிங்கு போவது, வருவது என்று அங்கும் இங்குமாக வேலை செய்வதைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தான்.
காலை மாணிக்கம் தந்த இட்லியைக்கூட உண்ணாமல் கேக், டீயை மட்டும் குடிப்பதையும் பார்த்தவன் “ இந்த ஜெய் சார் ஏன் இவள தனியா விட்டு போனாரு “ என்று எண்ணியபடி இருந்தான். ஆர்யனின் டீம் கேபின் மயூரியின் டீம் அருகேதான் இருந்தது. அதனாலேயே ஆர்யனுக்கு அங்கிருந்து மயூரியைப் பார்த்துக் கொள்ள இலகுவாகவே இருந்தது.
பின் மதியம் போல மயூரி இட்லியை எடுத்துக்கொண்டு சாப்பிடச் செல்ல, ஆர்யனும் அவள் பின்னேயே சென்று அங்கே இருக்கும் உணவை வாங்கிக்கொண்டு அவள் அருகே சென்று “உட்காரலாமா” என்று கேட்க, மயூரியும் “ம்ம்ம் உட்காருங்க” என்று சொன்னதும் அமர்ந்துவிட்டான். அங்கு உணவு உண்டு கொண்டிருந்த மற்ற டீம் தான் ஆ… என்று பார்த்துக் கொண்டிருந்தது. அதை கண்டும் காணாதது போல ஆர்யன் “வொர்க் நிறையவா மேம் இருக்கு” என்று ஃபார்மலாகப் பேச, அதைக் கேட்ட மயூரி “ஆர்யன், நார்மலாகவே பேசுங்க. நம்ம மட்டும்தானே இருக்கோம்” அது கேட்டு உள்ளே மகிழ்ந்த ஆர்யன் “என்ன பிரச்சனை? உங்க டீம்ல இருக்க யாரும் வீட்டுக்குப் போகாலய?”
“ஏன்? என்ன ஆச்சு? அப்படி என்ன வேலை பென்டிங் இருக்கு?“
“உங்களுக்கு சென்ட் பண்ண வேண்டிய ஃபைல் கரப்ட் ஆகிடுச்சு. அதைத்தான் இப்போ ரீ க்ரியேட் பண்ணிட்டு இருக்கோம் ஆர்யா .“ “ரீகிரியேட் பண்றீங்கல? அதுக்கு டைம் இருக்கா உங்ககிட்ட? வேணும்னா த்ரீ டேஸ் டைம் எடுத்துக்கோங்க. நான் அட்ஜஸ்ட் பண்ண பார்க்கிறேன்.“ என்று மயூரியின் சோர்வான முகத்தைப் பார்த்து சொல்ல,
ஆர்யனை பார்த்து லேசாக சிரித்த மயூரி, “தேங்க்ஸ் ஆர்யன். பட் நாங்க ட்ரை பண்ணி பார்க்கிறோம். அப்படி முடிக்க முடியலனா நீங்க டைம் தந்துதான் ஆகணும். வேற வழி இல்லை.“ என்று கைகளை விரிக்க, ஆர்யன் சரி என்பது போல தலையசைத்து, “என்ன மயூரி, இட்லி மட்டும் எப்படி போதும்? நான் வேணா போய் கேடரிங்ல ஃபுட் வாங்கித் தாரேன். சாப்பிடுங்க.“ “அய்யோ ஆரி, எனக்கு இது போதும். இதுக்கு மேல சாப்பிட்டா வேலை பார்க்க முடியாது. காதுல ஆராரோ ஆரிராரோன்னு பாட்டு கேட்க ஆரம்பிச்சிரும்.“ என்று பயப்பட, ஆர்யன் சிரித்தபடி, “சரி சாப்பிடுங்க.“ என்று அவனும் சாப்பிட்டான்.
மயூரி டீம் எட்டு மணி அளவில் வேலையை முடித்து கிளம்பிவிட, மயூரி, “வீட்டுக்கு போனாலும் தூங்காமதான் முடியாதே. அதுக்கு நாளைக்கு டெமோவையும் முடிச்சிட்டு போயிடலாம். நாளைக்கு இங்க வர வேலையும் இருக்காது.“ என்று யோசித்தவள் வேலையை தொடர்ந்து பார்க்க, அவளைப் பார்த்த ஆர்யன், “இப்போ வீட்டுக்கு போனா அப்பா டார்ச்சர் தாங்க முடியாது சோ மயூரி கிளம்புற வரை இங்கேயே நம்ம ஒர்க்க பார்ப்போம்.“ என்று மாணிக்கம் இடம் மயூரியுடன் வருகிறேன் என்று சொல்லிவிட்டு, இவன் வேலையைப் பார்க்க, இரவு மணி ஒன்றாக மயூரி கண்கள் தூக்கத்துக்கு சொக்கத் தொடங்கியது.
மயூரி சுற்றிப் பார்க்க அவள் கேபின் வெளிச்சமாகவே இருந்தது. அவளுக்குத் தெரியும் இப்போது உறக்கம் வருவது போல இருந்தாளும் அதை நம்பி தூங்கினாள். ஒரு சில நிமிடத்தில் முழித்து விடுவாள் என்று தெரியும். அதை எண்ணியவளாக இவளும் சிறிது நேரம் தூங்கினால். இவள் தூங்குவதைப் பார்த்த ஆர்யன், இவள் கேபின் லைட்டை அணைத்துவிட்டு மயூரி நன்றாகத் தூங்கட்டும் என்று நினைத்தான். ஆர்யன் என்னவோ மயூரி நன்றாகத் தூங்கட்டும் என்று எண்ணித்தான் லைட்டை அணைத்தான் ஆனால் அங்கு நடந்ததோ வேறு.
இங்கு மயூரி அவள் நினைத்ததைப் போல அரை மணி நேரத்தில் மூச்சுத் திணற எழுந்து அமர்ந்தாள். அமர்ந்தவள் கண்ணில் சுற்றி இருள் சூழ்ந்து இருக்க, அந்த இருளின் நடுவில் ஓர் உருவம் அவளை நோக்கி நடந்து வருவது போல ஒரு வின்பம், அதைத் திகைத்துப் பார்த்துக்கொண்டு இருந்தாவளால் நகர முடியவில்லை.
அவள் காதில் “டேய் வேணாம் விடுடா அவளை விடுடா ப்ளீஸ் உன்ன கெஞ்சிக் கேட்டுக்குறேன் ப்ளீஸ் டா” என்று சத்தம் கேட்க, மயூரி அவள் காதுகளை இருக்க மூடிக்கொண்டாள். அந்த உருவம் மட்டும் இவள் அருகே நெருங்கி வந்து கொண்டு இருந்தது. அந்த உருவத்தின் உடல் முழுக்க கருப்பாக இருக்க, பார்க்க மனிதன் போலத் தெரியவில்லை. அதைப் பார்த்த மயூரிக்குக் கத்தக்கூட வாய் வரவில்லை. அது அருகில் வர வர மயூரி அசையாமல் எதிலோ கட்டி வைத்தது போல அமர்ந்திருந்தாள்.
அருகில் வந்த அந்த உருவம் புகை போல மாறி அவளைச் சுற்றிக்கொண்டது. மயூரி உடம்பு முழுக்க பயத்தில் வேர்வையில் குளித்தது போல இருந்தது. பின் அந்தப் புகை அனைத்தும் புழுவென மாறி அவள் உடம்பு முழுவதும் ஊரத் தொடங்கியது. அதன் அருவருப்பு தாங்க முடியாமல் பெரும் சத்தம் எடுத்து மயூரி “அ… புழு…. ..அ … ச்சி” என்று கத்தியவளாக அதை உடம்பை விட்டுத் தட்டிவிட்டாள், அது அவளை விடாமல் முகம், கழுத்து, கை, கால் என்று முழுதும் ஊரத் தொடங்கியது. அட்டையென ஊறிய புழு அவள் உடைகளிலும் போக, அதைத் தாங்க முடியாமல் அவள் போட்டிருந்த உடையைக் களையப் போக, அதற்குள் ஆர்யன் “மயூரி…. என்ன பண்ற?” என்று அவள் இரு கையையும் பிடித்துக்கொண்டான்.
மயூரி உறங்குவதை அடிக்கடி பார்த்தபடி ஆர்யன் தன் வேலையைப் பார்த்துக்கொண்டிருந்தான். அப்போது திடீரென்று மயூரி தூக்கத்தில் இருந்து பயந்து எழுந்து அமர்வதைப் பார்த்த ஆர்யன், ‘என்ன’ என்பதைப் போல அவளைப் பார்த்தான். மயூரி சிறிது நேரம் எதையோ வெறித்துப் பார்த்தவள், முகம் முழுக்க வேர்க்கத் தொடங்க, ஆர்யன் மயூரியை நோக்கிச் எழுந்து சென்றான், ‘ஏதோ சரியில்லை’ என்று புரிந்தவனாக. இவன் செல்வதற்குள் மயூரி எதையோ பார்த்துப் பயந்து சத்தம் போட்டாள், ‘புழு, புழு’ என்று கத்தியபடி தன் உடலைத் தட்ட, ஆர்யன் எதுவும் புரியாமல், ‘மேம்… மேம், என்ன ஆச்சு?’ என்று அங்கே விரைந்தான் . மயூரி கத்திய சத்தத்தில் அனைவரும் அவள் அருகே வந்து ‘என்ன’ என்பது போலப் பார்க்க, மயூரி அங்கு இருக்கும் யாரையும் கவனிக்காமல் அவள் பாட்டுக்குச் சத்தமாக அவள் தொண்டை வலிக்கக் கத்தினாள். ஆர்யன் மற்றும் அங்கு இருந்த சிலர் அவளை அழைத்தும் எந்தப் பிரயோஜனமும் இல்லாமல் போக, சிறிது நேரத்தில் மயூரி தன் உடையின் மேல் கை வைத்து அதைக் கழற்றப் போக, அதைப் பார்த்த ஆர்யன் மிகச் சத்தமாக, ‘மயூரி… என்ன பண்ற?’ என்று அவள் கைகளைப் பிடித்தான்.
மயூரி ஆர்யனை அப்போதுதான் பார்த்தது போல, ‘ஆரி, புழு, புழு பாரு! ஆரி, பயமா இருக்கு. அதைத் தட்டிவிடு, ப்ளீஸ். பயமா இருக்கு’ என்று அவன் நெஞ்சில் முகம் புதைத்தவளாக அவன் சட்டையை இறுக்கிப் பிடித்துக்கொள்ள, ஆர்யன் ஒன்றும் புரியாதவனாக, ‘மயூரி, என்ன புழு? என்ன சொல்ற? இங்கே எதுவும் இல்லை’ என்று அவள் தலை வருடியபடி பேசினான். அது எதுவும் மயூரி காதில் விழவில்லை போலும். அவள் ஆர்யனுக்குள்ளே புதைந்துகொள்வது போல அவனை இன்னும் நெருங்கி, ‘ஆரி, ஆரி, பயமா இருக்கு ஆரி… புழுவை எடுத்துவிடு, ப்ளீஸ்’ என்று தேம்பியபடி இருந்தாள் மயூரி.
அப்போது அங்கு வந்த வாட்ச்மேன் ஆர்யனைப் பார்த்து “மேம் பேக்கில மாத்திரை இருக்கும் சார், அதை போடச் சொல்லுங்க“ என்று சொல்ல, அங்கு இருந்த ஒரு பெண் மயூரி பேகில் இருந்து மாத்திரையை எடுத்து கொடுத்தாள். அதை வாங்கிய ஆர்யன் மயூரியை அவனை விட்டு விலக்கப் பார்க்க, அவள் விலகவே மாட்டேன் என்பது போல அவனுடன் இன்னும் ஒன்றினாள். அதையும் மீறி ஆர்யன் அவள் முகத்தை மட்டும் நிமிர்த்தி மாத்திரையை வாயில் தினிக்க, தண்ணீர் தருவதற்குள் மீண்டும் ஆர்யன் நெஞ்சில் முகத்தைப் புதைத்துக் கொண்டாள். மாத்திரை சாப்பிட்டு ஐந்து நிமிடம் போல் கழித்தே மயூரியின் உடல் நடுக்கம், அவளின் சத்தம் அனைத்தும் முனகல்களாக மாறியது. அப்படியே மயூரி மயங்கி ஆர்யன் மீதே விழுந்துவிட்டாள்.
மயூரியைத் தாங்கிப் பிடித்த ஆர்யன் அவள் கன்னம் தட்டி “ மயூரி… மயூரி… எழுந்திரிம்மா “ என்று அவளை எழுப்ப முயல, வாட்ச்மேன் “ சார், மேடம் மாத்திரை சாப்பிட்ட அப்புறம் முழிக்க கொஞ்சம் நேரம் ஆகுமா சார். அதுனால மேடமை சார் ரூம்ல படுக்க வச்சிருவோம் “ என்று சொல்ல அதைக் கேட்ட ஆர்யனும் சரி என்று தலையாட்ட, வாட்ச்மேன் மயூரியைத் தூக்க உதவ வந்தான்.
ஆர்யன் அவனை கை நீட்டித் தடுத்து விட்டு அவனே அவளை குழந்தை போல தூக்கிக் கொண்டான். பின் அங்கு இருந்த அனைவரையும் வேலை பார்க்கும் படி சொல்லி விட்டு மயூரியை ரூமிற்கு தூக்கிச் சென்றான். அங்கு ஷோபாவில் மயூரியைப் படுக்க வைத்து விட்டு வாட்ச்மேனைப் பார்த்து “உனக்கு எப்படி இதெல்லாம் தெரியும்?” என்று கேட்க, வாட்ச்மேன் “ சார் தான் ஊருக்குப் போறதுக்கு முன்னாடி இதையெல்லாம் சொல்லிட்டுப் போனார். மேடம்க்கு இருட்டுனா பயம், பத்திரமா பார்த்துக்கோங்கன்னு “ அதைக் கேட்டுத் திகைத்த ஆர்யன் “ என்ன, இருட்டுன்னா பயமா? மயூரிக்கு “ என்று சாக் ஆக வாட்ச்மேன் “ ஆமா சார், அந்த மாத்திரை கூட மேம் பயந்தா போட சொல்லி சொன்னாங்க “ இதைக் கேட்டு நன்றாகக் குழம்பிய ஆர்யன் மயூரியைப் பார்த்துக் கொண்டே நின்றான்.
மனதில் ஆயிரம் கேள்வி. “ இருட்டுனா பயம்னா ஏன் நைட் ஷிப்ட் வரணும்? இவ கம்பெனில இவ பிடிச்ச டைம்க்கு வரலாம்ல? அதை விட்டுட்டு ஏன் இவ பயப்படுற நைட் டைம் வரணும்? ஏன், ஏன் இருட்டுனா மயூரிக்கு பயம்? அப்படி அதுக்கு மாத்திரை சாப்பிடுற அளவு என்ன பயம்? “ என்று யோசித்துக் கொண்டு இருக்க, மயூரி தூக்கத்தில் “ லட்சுமிம்மா…”என்று முனங்க அவள் அருகே சென்று “ மயூரி… “ என்று அவளை அழைக்க மெதுவாகக் கண் திறந்து ஆர்யனைப் பார்த்தாள் மயூரி.