இரவு 14

ஞாயிற்றுக்கிழமை மதியம் போல் மாணிக்கம் மயூரி வீட்டு கதவைத் தட்டுவதா இல்லை வேண்டாமா என்று கையில் பாத்திரங்களுடன் நின்றுகொண்டிருந்தார். அப்போது மயூரி கதவைத் திறந்துகொண்டு வெளியே வந்தவள் அங்கு நின்றுகொண்டிருந்த மாணிக்கத்தைப் பார்த்து “அங்கிள் இங்க என்ன பண்றீங்க?” என்று அவர் கையில் இருந்ததை பார்த்து புன்னகையுடன் அதை வாங்கிக்கொண்டு உள்ளே மாணிக்கத்தை அழைத்து பாத்திரங்களை மேசையில் வைத்தாள்.

 மாணிக்கம் “நீ தூங்கிட்டு இருப்பன்னு நினைச்சுதான் என்ன பண்ணணும்னு யோசிச்சுட்டு இருந்தேன்மா.” என்று விளக்கம் சொல்ல அதை கேட்ட மயூரி “அது எப்படி அங்கிள் தூங்குவேன்? நீங்க உங்க பேரப் பசங்களை அறிமுகப்படுத்தி வைக்கிறேன்னு சொன்ன பிறகும்.”

“அதுக்காகவாம்மா சீக்கிரம் முழிச்ச?” என்று முகம் பிரகாசிக்க பேசிய மாணிக்கம் மயூரி வீடு முழுவதும் வரும் ஒரு விதமான பழங்கள் என்று சொல்லிட முடியாத ஒரு வாசனை வர அதை நுகர்ந்தவராக “என்ன வாசனைம்மா இது ஒரு மாதிரி இருக்கு?” என்று கேட்டார். அதற்கு மயூரி “அதுவா, இங்க வாங்க காமிக்கிறேன்” என்று கிச்சனுக்கு அழைத்துச் செல்ல அங்கே மாவு பிசைந்து வைக்கப்பட்டும் அதன் அருகில் பருப்பு வேக வைக்கப் பட்டும் இருக்க அதை நுகர்ந்த மாணிக்கம் “இந்த வாசனை வேற மாதிரி இருக்கு. ஹாலில் வந்த வாசனை வேறம்மா” என்று குழப்பமாக பார்க்க அதற்கு மயூரி அங்கு மூடி இருந்த ஒரு டப்பாவை திறக்க அதிலிருந்துதான் அந்த வாசனை வந்தது.

அதை பார்த்த மாணிக்கம் “என்னம்மா இது முந்திரி திராட்சையெல்லாம் ஜூஸில்ல போட்டு இருக்க?” என்று கேள்வியாக பார்க்க அதற்கு மயூரி “அது ஜூஸ் இல்லை அங்கிள், ரம்மு” என்று சிரிக்க அதை கேட்டு அதிர்ந்த மாணிக்கம் “அச்சோ! என்னம்மா சொல்ற? இதெல்லாம் குடிப்பியா? இது உடம்புக்குக் கேடுமா. இந்தப் பழக்கத்தை விட்டுரும்மா மயூரி” என்று பதறிப் பேசிய மாணிக்கத்தைப் பார்த்து சிரித்த மயூரி “அங்கிள்… ஏன் பதறீங்க? ரிலாக்ஸ்! இதை நான் குடிப்பேன்னு எப்போ சொன்னேன்? இது கேக்குக்காக வாங்கினேன்” என்று மயூரி சொன்னதைக் கேட்ட மாணிக்கம் நின்மதி அடைந்தவராக  “கேக்கா செஞ்சு சாப்பிட்டாலும் தப்புதானம்மா?”

 “ஐயோ அங்கிள்! கேக்கா சாப்பிட்டா அதுல போதை இருக்காது. இந்த கேக்க பாரம்பரியமா அப்படித்தான் பண்ணுவாங்க. நான் இந்தக் கிறிஸ்துமஸ்க்கு பண்ணலாம்னு எடுத்து வச்சேன். நான் பண்றதுகூட இதுதான் முதல் தடவை அங்கிள்” என்று அவள் எவ்வளவு சொல்லியும் மாணிக்கம் முகம் தெளியாமல் இருக்க மயூரி கையில் இருந்த டப்பாவை கீழே வைத்துவிட்டு பேசலாம் என்று பேசிக்கொண்டே வைக்க போக அது தவறி கீழே விழுந்து சிதறியது.

அதை பார்த்து மகிழ்ந்த மாணிக்கம் “அச்சோ! கீழே விழுந்துருச்சேம்மா. இதை இனிமே கேக்ல ஊத்த முடியாதுதான?” என்று அவர் போலியாக வருந்தியதை பார்த்த மயூரி

“அது சரி, கீழேதான் ஊத்தணும்னு எழுதி இருந்தா என்ன பண்ண முடியும்?” என்று அதை சுத்தம் செய்தாள். பின் மாணிக்கம் “இந்தக் கேக் வேணாம்மா அந்த காலத்து கேக் நமக்கு எதுக்கு நம்ம இந்த காலத்து கேக் பண்ணலாம் ” என்று மயூரியிடம் பலவாறு சொல்லி அந்த கேக் செய்யும் என்னத்தை மாற்றி விட்டு அவளை சாப்பிட அமர வைத்து உணவு பரிமாறிவிட்டே வந்தார்.

இங்கு மாணிக்கம் வீட்டில் கிருபா, அதித்தி, ஆர்யன் மூவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தனர். அப்போது அதித்தி, “அண்ணா, அப்பா எப்படி இவ்வளவு சூப்பராக கேக் பண்றாரு?” என்று விசாரிக்க  அதற்கு ஆர்யன்

“அப்பா தான் எதிர் வீட்டிலேயே ஒரு கேக் மாஸ்டரை வச்சிருக்காரே. அவங்க கொடுக்கிற ட்ரெயினிங் தான் எல்லாம்.” என்றபடி மயூரியை நினைத்து அவன் லேசாக புன்னகைக்க,  ஆர் சொன்னதை கேட்ட கிருபா, “என்னது? கேக் மாஸ்டரா? எந்த கடை மாஸ்டர்டா?”

 “கடை மாஸ்டர்லாம் இல்லை மச்சான். எதிர் வீட்டுல ஒரு பொண்ணு இருக்கு. பேரு மயூரி. அவங்க தான் கேக் செய்ய அப்பாவுக்கு சொல்லித்தருவாங்க அதை தான் அப்படி சொன்ன .” அதற்கு  அதித்தி, “ஓ… அப்போ அவங்களுக்கு தான் அப்பா சாப்பாடு எடுத்துட்டு போனாங்களா இப்போ?”

“ஆமா அதி, அங்க தான் அப்பா போயிருக்காங்க. இன்னைக்கு ஆவது சாப்பாடு மட்டும் தான் போகுது. மத்த நாளா  இருந்தா பால், டீன்னு வரிசையா போகும். பல டைம் அப்பாக்கு நான் அவரு பையனா இல்ல அந்த பொண்ணான்ற ரேஞ்சுக்கு அப்பா அந்த பொண்ணு புராணம் தான் பாடுவாங்க.”

அதைக் கேட்டு சிரித்த கிருபா, “அப்புறம் மூஞ்சை இஞ்சி தின்ன மங்கி மாதிரி வச்சிருந்தா டவுட் வரத்தானே  செய்யும்.” என்று சிரிக்க,  அதைக் கேட்டு அவனை ஆர்யன் அடிக்க, மாணிக்கம் உள்ளே வந்தார். வந்தவர் அதித்தி அருகில் அமர, அதித்தி, “அப்பா, என்ன ஸ்மெல் உங்க மேல இருந்து வருது?” என்று மாணிக்கத்தைப் பார்க்க, அவரும் அதை நுகர்ந்தவராக, “அது இந்த ரம்மு கீழே கொட்டிச்சு. அது மேல பட்டிருக்கும் போல,” என்று சாதாரணமாகச் சொல்ல, அதைக் கேட்டு இவர்கள் தான் அதிர்ந்து போனார்கள்.

அதித்தி, “அப்பா, என்ன சொல்றீங்க? ரம்மா?” என்று அதிர, மாணிக்கம் இவர்கள் முகத்தைப் பார்த்துவிட்டு, “அது இந்த எதிர் வீட்டு பாப்பா கிட்சன்ல தெரியாம கொட்டிருச்சு,” அதைக் கேட்ட கிருபா, “அந்த பொண்ணுக்கு அந்தப் பழக்கமெல்லாம் இருக்கா?” என்று வாயைப் பிளக்க, அதைக் கேட்டு மாணிக்கம் வேகமாக, “அச்சோ தம்பி, அப்படி இல்லை. அந்தப் பொண்ணு நல்ல பொண்ணு. அது சமைக்க வாங்கிருக்கு. ஏதோ கேக்ல ஊத்துவாங்களாமே, அதுக்கு தான் வாங்கி வச்சிருந்துச்சு. ஏதோ கிறிஸ்துமஸ்க்கு செய்யப் போறேன்னு.” அதைக் கேட்ட ஆர்யன் மனதில், “அப்போ அதை சமைக்க தான் அன்னைக்கு வாங்கிட்டு போனாளா?” என்று நிம்மதி அடைய, அதித்தி, “இந்த ப்ளம் கேக் செய்வாங்களே, அதுக்கா அப்பா?” என்று கேட்க அதற்கு மாணிக்கம் “ஆமாம்மா, ஆனா அது முழுக்க கீழே ஊத்திக்கிச்சு,” என்று எழுந்து சென்று உடை மாற்றி வந்தார்.

இங்கு மயூரி உண்டு முடித்து பருப்பு போளி செய்துவிட்டு மாணிக்கம் வீட்டு கதவைத் தட்டினாள். அங்கு மாணிக்கம் “மயூரி பாப்பா வந்துட்டாங்க போல” என்று சந்தோஷமாக ஓடிப்போய்க் கதவைத் திறந்து “வாம்மா…” என்று அவள் கையில் இருந்த தட்டை வாங்கிக்கொண்டு அழைத்து வந்து சோபாவில் அமர வைத்தார்.

அங்கு இருந்த மூவரும் இவளைக் குறு குறுவெனப் பார்க்க மயூரி “அய்யோ இப்போ என்ன பேச, எது பேச இப்படிப் பார்க்குறாங்க? ஹாய்னு ஆரம்பிப்போமா?” என்று மனதில் எண்ணியவளாக “ஹாய்…” என்று பொதுவாகச் சொல்ல இவளைப் போலவே மூவரும் ஒன்றாக “ஹாய்…” என்று சொல்லிச் மீண்டும் இவளையே பார்க்க மயூரி “ ஏதாவது பேசுவாங்களன்னு பாத்த என்னை பாக்குறாங்களே என்ன பேச கேக் பத்தி பேசலாமா “ என்று மனசுக்குள்ளேயே புலம்பி கொண்டு இருந்தாள்.

அப்போது தட்டில் போளியை வைத்து எடுத்து வந்த மாணிக்கம் மூவருக்கும் கொடுத்துவிட்டு “சாப்பிட்டுப் பாருங்க, மயூரி பாப்பா பண்ணது நல்லா இருக்கும்” என்று சொல்லிச் செல்ல மயூரி “அய்யோ என்ன எல்லார் முன்னாடியும் பாப்பான்னு சொல்றாரே அங்கிள்” என்று வெட்கமாகிப் போக அதை முகத்தில் காட்டாமல் சிரித்தபடி இருந்தாள்.

உள்ளே சென்ற மாணிக்கம் மயூரிக்கு அவர் செய்த கேக்கை கொடுத்து “இன்னைக்கு நல்லா வந்துச்சிம்மா. என் பேரப் பசங்க நல்லா இருக்குன்னு சொன்னாங்க. நீயும் சாப்பிடு” என்று திரும்பி இவர்களைப் பார்த்து “இன்னும் நீங்க சாப்பிடலையா?” என்று மூவரையும் பார்க்க பின்னர்தான் மூவரும் மயூரியை பார்பதை விட்டு சாப்பிட்டனர். அதைச் சாப்பிட்ட மூவரின் கண்கள் விரிய பார்க்க அதித்தி “சூப்பரா இருக்குங்க! ஏதோ கடையில செஞ்ச மாதிரியே இருக்கு. எப்படிப் பண்ணீங்க?” என்று ரெசிப்பி கேட்க மயூரி “ எப்பா டாப்பிக் கிடைச்சிருக்கு”  மகிழ்ந்தவளாக அதித்தியிடம் இயல்பாகப் பேசத் தொடங்கினாள்.

இங்கு கிருபா ஆர்யன் காதில் “ என்னடா மச்சான் அப்பா உனக்கு எதிர்த்த வீட்டுலயே பொண்ணு பார்த்து வச்சிருக்காரு போல “ என்று அவனை இடிக்க அதை கேட்டு முறைத்த ஆர்யன் “ டேய் எருமை அந்த பொண்ணு காதுல விழுந்துற போகுது அப்புறம் பிரச்சனை ஆகிடும் “ என்று முகத்தை சிரித்தபடி வைத்தே பேச  அதற்கு கிருபா

“என்ன பிரச்சனை ஆகிடும் சும்மா பேசுறது தானே அதெல்லாம் தப்பா எடுத்துக்க மாட்டாங்க“

“டேய் அவங்க நான் வொர்க் பண்ற கம்பெனி ஓனர்டா எதவதுன்னா அவ்ளோ தான் முடிஞ்சிடும் சோளி “ இதை கேட்டு ஷாக் ஆன கிருபா “ என்னது உன் ஃபியூச்சர் வைஃப் ஒரு கம்பெனிக்கு ஓனரா “ என்று அதையே திரும்பி வேற மாதிரி சொல்ல அதில்  கடுப்பான ஆர்யன் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைக்க கிருபா “ அ…..” என்று சத்தமாக கத்தி விட்டான்.

 அந்த சத்தத்தில் உள்ளே தூங்கிக் கொண்டு இருந்த குழந்தைகள் அஜய், சுஜிதா எழுந்து வெளியே ஓடி வந்து “ அப்பா, அம்மா “ என்று நிற்க கடுப்பான அதிதி “ நானே இன்னைக்கு தான் அதிசயமா தூங்குறாங்களேன்னு சந்தோஷம் பட்டேன் அது உங்களுக்குப் பொறுக்கலையா, வீட்டுக்கு வருவீங்களா பார்த்துக்கிறேன் “ என்று திட்டி விட்டு இருவரையும் அழைத்து மயூரிக்கு அறிமுகம் படுத்தி வைக்க முதலில் பயந்து பயந்து பேசிய குழைந்தைகள்  பின் இலகுவாக பேசத் தொடங்கி விட்டனர். இப்படி மயூரி சிரித்த முகமாக அவன் வீட்டு ஆட்களுடன் பேசுவதைப் பார்த்த ஆர்யன் அவளையே கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டு இருக்க இதை கவனித்த கிருபா “ நான் பேச்சுக்கு சொன்னதை உண்மையாக்கிடுவான் போலையே “ என்று நினைத்துக் கொண்டான்.

அன்றிலிருந்து ஆர்யா மயூரியைப் பார்த்தால் ஒரு சின்ன சிரிப்பை அல்லது இரு வார்த்தையாவது பேசிவிட்டுத்தான் செல்வான். அதைப் பார்த்து மயூரியே பல சமயம் “இவருக்கு என்ன ஆச்சு” என்று எண்ணுவது உண்டு. இப்படி அனைத்தும் நன்றாகச் சென்றுகொண்டிருக்கும் நேரத்தில் மயூரியின் டீமில் ஒரு கேம் இறுதிப் பகுதிக்கு வரைந்து வைத்திருந்த ஃபைல் முழுவதும் கரப்ட் ஆகி அழிந்து போய்விட்டது, ஒரு சிறிய தவறினால்.

அந்த ஃபைலை இன்னும் இரண்டு நாட்களில் கோடிங் டீம் ஆன ஆர்யனிடம் தர வேண்டும், இல்லை என்றால் இந்த கேமை சொன்ன தேதியில் முடிக்க முடியாமல் போய்விடும். இதோடு சேர்த்து மற்ற கேமிங் டெமோவும் வேறு இருக்க, மயூரி தடுமாறித்தான் நின்றாள். எதை முதலில் முடிக்க, தனியாக எதைச் செய்ய என்று குழம்பியவள், ஜெய்யை மிகவும் மிஸ் செய்தாள்.

 இங்கே ஜப்பானில் ஜெய்யோ புதுப்புது இடங்களைச் சுற்றிப் பார்ப்பது, புது உணவுகளைத் தேடி உண்பது, அங்குள்ள தமிழ் மக்களிடம் பேசுவது என்று அவன் சென்ற வேலை முடிந்தும் அங்கேயே இருந்தான். அவன் திரும்பி வரும்போது ஏன் அங்கே சென்றோம் என்று நினைத்து நினைத்து வருந்தப் போவது தெரியாமல் அங்கே மகிழ்ச்சியாக இருந்தான்.