கோதுமை மாவு எடுத்து அதில் உப்பு, சமையல் எண்ணெய் சேர்த்து பிசைந்து, சப்பாத்தி உருட்ட ஏதுவாக பிசைந்து வைத்துவிட்டு, பன்னீர் எடுத்து அதை லேசாக வறுத்து என்று இரவு உணவுக்கு மயூரி சப்பாத்தி மற்றும் பன்னீர் பட்டர் மசாலா செய்து ஹாட் பாக்சில் வைத்துவிட்டு சென்று குளித்து வந்தவள், மாணிக்கம் வீட்டு பெல்லை அடிக்க மாணிக்கம் வந்து கதவை திறந்தார்.
திறந்தவர் வாசலில் கையில் பாத்திரங்களுடன் நிற்கும் மயூரியை பார்த்துவிட்டு, “என்னம்மா இது கையில” என்று பாத்திரங்களை பார்க்க, மயூரி “கொஞ்சம் நகர்ந்தீங்கன்னா உள்ள வந்து பேசுவேன் அங்கிள்” என்று மயூரி சொன்னதும் வழி விட்டு நின்ற மாணிக்கம் அவள் கையில் இருந்த பாத்திரங்களையும் வாங்கி டேபிளில் வைத்துவிட்டு, “எதுக்குமா இது? நீ இன்னைக்கு சரியா தூங்கக்கூட இல்லை. எதுக்கு தேவையில்லாம உடம்பை போட்டு வருத்திக்கிறம்மா?” என்று சொன்னவர் பேச்சில் இருந்த அக்கறையை கண்டு மகிழ்ந்தவளாக, “அதெல்லாம் ஒண்ணும் இல்லை அங்கிள். நான் ஒன்னு பண்றேன்னு சொன்னா கரெக்டா பண்ணிடுவன். அதுல மயூரி கரெக்டா இருப்பா” என்று சொல்லியவள் நுகர்ந்து பார்க்க வீடு முழுக்க கேக்கின் வாசனை வீசியது, அதை நுகர்ந்துவிட்டு மயூரி, “ம்ம்ம்…..கேக் பண்றீங்களா அங்கிள்?” என்று மாணிக்கத்தை பார்க்க அவர் சிரித்தபடி,
“நீ வந்ததை நான் கவனிக்கலம்மா. இல்லைன்னா உனக்குத்தான் முதல்ல எடுத்துட்டு வந்திருப்பேன்” என்று சாக்லேட் ஃப்ளேவரில் டீ பன்னை எடுத்து வர, அதை பார்த்து வியந்த மயூரி,
“நீங்களா ட்ரை பண்ணீங்களா அங்கிள்?” என்று ஒன்றை எடுத்து சாப்பிட்டு பார்க்க அதில் சாக்லேட் சிப்ஸ் எல்லாம் சேர்த்து சுவை மிக அருமையாக இருக்க, அதை கண் மூடி ரசித்து சாப்பிட்ட மயூரி,
“வாவ் அங்கிள் தி பெஸ்ட்! இது டேஸ்ட் சூப்பர் போங்க!” என்று பாராட்டித் தள்ள மாணிக்கம், “அது நாளைக்கு என் பேரப் பசங்க வராங்களாம்மா. அதான் அவங்களுக்கு பிடிச்ச மாதிரி பண்ணலாம்னு.”
“ஓ……பேரப் பசங்களுக்காக ஸ்பெஷலா செஞ்சதா?”
“ஆமாம்மா, இங்க புது வீட்டப் பார்க்கணும்னு ஒரே அடம்மா. அதான் ஞாயிற்றுக்கிழமை கூட்டிட்டு வர்றேளாம்மா. உனக்கு லீவுதானம்மா ஞாயிற்றுக்கிழமை?”
“ஆமா அங்கிள், லீவுதான். வீட்டுலதான் இருப்பேன். நானும் உங்க பேரப் பசங்களைப் பார்க்க வர்றேன். இப்போ கிளம்புறேன் அங்கிள். ஆபிஸ் போகணும்” என்று கிளம்பப் போக மாணிக்கம், “என்ன, ஆபிஸ் போறியா? காலைல நீ தூங்கவே இல்லையே. ஆபிஸ் போய் எப்படி முழிச்சு வேலை பார்ப்பம்மா?”
“அது பரவாயில்லை அங்கிள். ஒரு நாள் தானே. நான் சமாளிச்சிப்பேன்.” அதைக் கேட்ட மாணிக்கம், “சரி, நீங்க போய் கிளம்பிட்டு என்னைக் கூப்பிடுங்க. நான் வர்றேன்” என்று சொல்ல, மயூரி புரியாமல்,
“ஏன் என்ன அங்கிள்?” என்று கேள்வியாகப் பார்க்க, மாணிக்கம், “ப்ச், நீ போய் கிளம்பும்மா” என்று அனுப்பிவைத்தார். மயூரியும் போய் தலைவாரி, பேக் எடுத்துக்கொண்டு மாணிக்கம் வாசலில் நிற்க, மாணிக்கம் மயூரியைப் பார்த்து, ஃபிளாஸ்க்குடன் வந்தவர் அதை மயூரியிடம் கொடுத்து, “பால் குடிச்சா தூக்கம் வரும்மா. இன்னைக்கு ஒரு நாள் நான் போடுற டீயைக் குடி. தூக்கம் வராது” என்று சொன்னவரைக் கண்கலங்கப் பார்த்த மயூரி, அதை அவரிடம் காட்டாமல்,
“இன்னைக்கு எனக்கு ஜாக்பாட் தான் அங்கிள். டீயோட நைட் ஷிஃப்ட் மாஸ் காட்டப் போறேன் பாருங்க” என்று சொல்லிவிட்டு ஆபிஸ் சென்றாள் மயூரி.
காரில் கம்பெனிக்குச் சென்று இறங்கியவள் அவள் கன்னங்களில் கைகளை வைத்துத் தட்டியபடி “டயர்டா ஆகாத மயூ“ என்று அவளுக்கு அவளே சொல்லியபடி கையில் பேக் மற்றும் ஃப்ளாஸ்க் உடன் உள்ளே சென்றாள். உள்ளே ஆர்யன் கோடிங் பார்த்துக்கொண்டு இருக்க மயூரி இவன் டீமைத் தாண்டிச் செல்ல விவேக் ஆர்யனை அழைத்து
“இவங்கதான் மயூரி மேம், உங்களுக்கு மெயில் போட்டவங்க. நாங்க கூட சொன்னோம்மே சார், நைட் ஷிஃப்ட் மட்டும்தான் பார்ப்பாங்கன்னு. அது இவங்கதான்“ என்று ஆர்யன் காதில் சொல்லிவிட்டுச் செல்ல ஆர்யன் மயூரியை நிமிர்ந்து பார்த்தான். மயூரி எப்போதும் போல வந்ததும் முதலில் அவள் டீம் மெம்பர்ஸிடம் அப்டேட் கேட்டுக்கொண்டு இருந்தாள்.
ஆனால் எப்போதும் இருக்கும் பிரகாசம் அவளிடம் இல்லை. முகம் சோர்ந்து இருந்தது. அதைப் பார்த்த ஆர்யன் “லீவ் போட்டாதான் என்ன? அவ்ளோ டயர்டா இருந்தும் ஆபிஸ் வரணுமா? அதுவும் நைட் ஷிஃப்ட்“ என்று தலையைத் திருப்பப் போக அப்போதுதான் புதிதாக அவள் கையில் இருக்கும் ஃப்ளாஸ்க்கைப் பார்த்தான் ஆர்யன்.
அதைப் பார்த்தும் யார் கொடுத்திருப்பார் என்பதைக் கண்டுகொண்ட ஆர்யன் தலையை இருபக்கமும் அசைத்துவிட்டு “எங்க அப்பா இத்தனை வருஷத்துல என் நைட் ஷிஃப்ட்ல கூட இப்படி டீ போட்டு கொடுத்தது இல்லை“ என்று பெருமூச்சு ஒன்று விட்டவனாக வேலையை முடித்து கிளம்பினாள்.
இங்கு மயூரி அவள் டீமுடன் பேசி முடித்து அதன் அருகே இருந்த அவள் டேபிளில் அமர அப்போது தான் ஆர்யன் வீட்டுக்குக் கிளம்புவதைப் பார்த்தாள். பார்த்தவள் ஒரு நிமிடம் அவனை உற்று பார்த்து விட்டு பின் அவள் வேலையைத் தொடர்ந்தாள்.
வீடு வந்த ஆர்யன் களைப்பாக அமர மாணிக்கம் “வாங்க தம்பி சாப்பிடுறீங்களா?” என்றதும் ஆர்யன் சென்று முகம் கழுவி இலகுவான உடை அணிந்து வந்து அமர்ந்தான். பின் மாணிக்கம் அவன் தட்டில் சப்பாத்தி மற்றும் பன்னீர் பட்டர் மசாலாவை வைக்க அதை ஒரு புருவம் ஏற்றிப் பார்த்தவன் “இது எப்போ கத்துக்கிட்டப்பா?” என்று சிறிது சப்பாத்தியைப் பிய்த்து மசாலாவில் தொட்டு சாப்பிட மிக ருசியாக இருந்தது.
அதை ருசித்தவனாக ஆர்யன் “சூப்பர் ப்பா! பேசாம வேலையை விட்டுட்டு ஹோட்டல் ஒன்னு திறந்துருவோமா?” என்று சாப்பிட மாணிக்கம்
“இது அந்த மயூரி பாப்பா பண்ணதுப்பா. எப்படி இருக்கு? நல்லா இருக்குல்ல?” அதைக் கேட்டு ஆர்யனுக்குப் புரை ஏற இரும்பியபடி
“என்னது? அந்தப் பொண்ணு பண்ணதா?” அதற்கு மாணிக்கம் “ஆமாப்பா. நேத்து நான் மதியம் சாப்பாடு கொடுத்தேன். அதான் இன்னைக்கு நைட் அந்தப் பாப்பா பண்றேன்னு கேட்டாங்க. நானும் சரின்னு சொல்லிட்டேன்ப்பா”
என்று டிவியில் கவனம் போக ஆர்யன் “இதெல்லாம் நல்லாதான் பண்றா. அப்படியே அந்தப் பழக்கத்தையும் நிறுத்திட்டா நல்லா இருக்கும்” என்று முனங்க மாணிக்கம்
“எதை நிறுத்துனா நல்லா இருக்கும் தம்பி?” என்று கேட்க அதற்கு முழித்த ஆர்யன் “அது இந்த சீரியல்ல சொன்னேன்ப்பா” என்று சமாளிக்க மாணிக்கம்மோ
“ஆமாப்பா. என்ன கதைன்னே புரியல. மொதல்ல அப்பா இரண்டவது கல்யாணம் பண்ணா அப்பாறம் பையன் , ஒரு பொண்ணோட புருசன் செத்துட்டான்னு அவள மொத கல்யாணம் பண்ணா இப்போ என்னென்ன செத்தவன் உயிரோட வந்து நிக்குறான். இப்போ இந்தப் பொண்ணு யார் கூட வாழும்னு கேணத்தனமா கதையை கொண்டு போறான்ப்பா” என்று அவர் சீரியல் கதையைப் பேச,
ஆர்யன் “ரைட்டு. இங்கேயே இருந்தா முழு சீரியலும் விலாவாரியாக விளக்கிட்டு தான் விடுவாங்க. எப்படியாவது தப்பிச்சிருடா” என்று எண்ணியவனாக வாய் திறக்காமல் உண்டு முடித்து ரூமுக்கு ஓடி விட்டான்.
டிசம்பர் குளிரில் அனைவரும் போர்த்தி உறங்கிக் கொண்டு இருக்க, ஒரு பெண் மட்டும் அந்த ஆள் அரவமற்ற சாலையில் அவள் இரவு வேலையைப் பார்க்க, கைகளைக் கட்டியபடி நடந்து சென்று கொண்டு இருந்தாள் மெயின் ரோட்டை நோக்கிப் . அந்தப் பெண் வீடு மாறி இரண்டு நாட்களே ஆனது. அதனால், கம்பெனியில் கேப் அட்ரஸ் மாறி, கேப் நாளைதான் வரும் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் நடந்து மெயின் ரோடு சென்று கேப் புக் செய்யலாம் என்று சுடிதார் ஷாலைக் கொண்டு உடலைப் போர்த்தியபடி நடந்து செல்ல, அவளை ஒட்டியபடி வந்து நின்றது அந்தக் கருப்பு நிற கார். அதைப் பார்த்து அந்தப் பெண் பயந்து நகர, காரின் கண்ணாடி இறக்கி, மாஸ்க் அணிந்த ஒரு பெண் லேசாக இருமியபடி, “உக்கு,…உக்கு,..என்ன சிஸ்டர், இந்த நைட் இப்படி தனியா நடந்து போறீங்க? இது சேஃபான ஏரியா இல்லையே?” என்று கேட்க, அந்தப் பெண் காரில் வந்தது பெண் என்றதும் மனம் ஆசுவாசம் அடைந்தவளாக, “அது கேப் புக் பண்ணணும். உள்ளே இருந்து பண்ண யாரும் பிக்கப் பண்ணல. அதான் மெயின் ரோடு போய் பண்ணலாம்னு சிஸ்டர்” அதற்கு அந்தப் பெண், “அதுக்கு தனியாவா வருவீங்க? வீட்டில் இருந்து யாரையாவது கூட்டிட்டு வந்திருக்கலாம்ல?” என்று அக்கறையாகப் பேச, அதற்கு அவள், “அது வந்து…” என்று இழுக்க, உடனே இந்தக் காரில் இருந்த பெண்,
“சரி சிஸ்டர், இனிமே இப்படி தனியா வராதீங்க, நீங்க கார்ல ஏறுங்க. நான் உங்களை மெயின் ரோட்ல விட்டுறேன்” என்று பேச, அதற்கு முதலில் மறுத்தாலும், பின் இந்தச் சமயம் இப்படித் தனியாகச் செல்வது பயமுறுத்த, சரி என்று ஏறிக்கொண்டாள். விதி யாரைத்தான் விட்டது? உதவுவது பெண்ணாகவே இருந்தாலும், பார்த்திருக்க வேண்டும் என்பதை உணராமல் சென்றுவிட்டாளே.
காரில் ஏறிய அந்தப் பெண் திரும்பி ட்ரைவர் சீட்டைப் பார்க்க, முகத்தில் ஏதோ அந்தப் பெண் தெளிக்கவும் சரியாக இருக்க, அந்தப் பெண் மயங்கி சீட்டில் சரிந்தாள். இவள் யார்? எதற்காக இப்படிப் பெண்களைக் கடத்திக் கொள்கிறாள்? அதில் இவளுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இவள் செய்யும் கொலைகள் வெளியே வருமா? இல்லை யாருக்கும் தெரியாமல் போய்விடுமா?