“மயூரி என்ன லட்சுமிம்மான்னு கூப்பிடுறியா ப்ளீஸ் “ என்று லல்லி மயூரியிடம் கேட்டு நிற்க, மயூரி “ சரி, கூப்பிடுறேன் லட்சுமிம்மா. ஆனா எனக்கு ஒரு சந்தேகம் “ லல்லி அம்மா என்று அழைத்ததிலேயே மகிழ்ந்தவளாக அவளை அணைத்து கன்னத்தில் முத்தம் கொடுத்து “ என்ன சந்தேகம் என் மயூ செல்லத்துக்கு “ என்று கொஞ்ச, மயூ மலர்ந்த முகத்துடன் “ உங்க பேரு லல்லிதானே? அப்போ நான் லல்லி அம்மான்னுதானே கூப்பிடணும்? அதை விட்டுட்டு ஏன் லட்சும்மான்னு கூப்பிடணும்? “ அதை கேட்டு லல்லி ஒரு கசந்த சிரிப்பு உதிர்த்தபடி “ அது வந்து மயூ செல்லம் “ என்று ஏதோ சொல்லப் போக, அதற்குள் “ நான் குடிக்கப் போறேன் என் கப்புல கற்பனை கொட்டுது மாமா “ என்று பாடல் காதில் கேட்க, மயூரி கனவில் இருந்து கண்விழித்துப் பார்த்தால் அவள் போன் தான் வெகு நேரமாக அடித்துக்கொண்டு இருந்தது.
அதில் எரிச்சலான மயூரி “ யார்டா அது டிஸ்டர்ப் பண்றது? “ என்று போனைப் பார்க்க, ஜெகன் தாத்தா என்று பெயர் ஒளிர்ந்தது, உடனே போனை எடுத்து பார்க்க அதில் இரண்டு மிஸ்டு கால் வந்ததாக காட்டியது. அதைப் பார்த்து “என்ன, நம்ம ஜெகா தாத்தா கால் பண்ணிருக்காரு? ஏதாவது பிரச்சனையா இருக்குமோ? “ என்று வேகமாக ஜெகன் தாத்தாவிற்கு போன் செய்ய, அவரும் போனை உடனே எடுத்தார். எடுத்தவர் “ சாரி மயூ, உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா? “என்று வருந்தமாக மயூரியிடம் கேட்க, மயூரி “ அது பரவாயில்லை ஜெகா தாத்தா, என்ன விஷயமா கால் பண்ணீங்க? “ அதற்கு அவர் தயங்கிய படி
“அது வந்தும்மா நம்ம ஜெய் தம்பி இங்க வந்து அந்தப் புளியமரம் அடியில கண்ணை மூடி உட்கார்ந்து இருக்காருமா அதான் உன்கிட்ட சொல்ல கால் பண்ணேன்“ அதைக் கேட்ட மயூரி “ என்னது ஜெய் அங்க வந்துருக்கான அங்க வர அளவு என்ன பிரச்சனை வந்து எவ்வளவு நேரம் ஆகுது ஜெக தாத்தா”
“அது இப்போதான் கொஞ்சம் நேரம் முன்னாடி மயூரி.“
“ஓ சரி தாத்தா நான் வர வரை அவன கொஞ்சம் பாத்துகோங்க இதோ நான் வந்துறேன். “ என்று சொல்லிவிட்டு வேக வேகமாக எழுந்து பல் விளக்கி முகம் மட்டும் கழுவி உடை அணிந்து கிளம்பினாள் மயூரி . கிளம்பியவள் வெளியே வந்து எதிர் வீட்டு காலிங் பெல்லை அடித்தாள். அன்று ஆர்யன் மார்னிங் மாணிக்கத்தை டாக்டரிடம் ஜெனரல் செக்கப் கூட்டிச் சென்று வந்தவன் அப்போதுதான் ஆபிஸ்க்கு கிளம்பிக்கொண்டு இருந்தான், அப்போது பார்த்து பெல் சத்தம் கேட்க்க கதவு பக்கமாகத் திரும்பிப் பார்த்தான் மாணிக்கம் சென்று கதவைத் திறந்தார். மயூரிதான் நின்று கொண்டு இருந்தாள். ஆர்யன் அவளைப் புருவம் சுருக்கி எட்டிப் பார்க்க, முகத்தில் சிறு பதற்றம் தெரிய என்ன பேசுகிறாள் என்று கவனித்தான்.
மயூரி “அங்கிள் ஒரு எமர்ஜென்சி. ஃபிரண்டைப் பார்க்கப் போறேன். ஈவினிங்தான் வருவேன். ஏதாவதுனா கால் பண்ணுங்க அங்கிள் சரி நான் போயிட்டு வரேன்“ என்று கிளம்பிவிட்டாள் அவள் பின்னேயே ஆர்யனும் “போயிட்டு வரேன்ப்பா“ என்று சொல்லிவிட்டு செல்ல, ஒரு நிமிடம் மயூரி அவனைத் திரும்பிப் பார்த்துவிட்டு “இவர் என்ன இந்த டைம் ஆபீஸ் போறாரு?“ என்று எண்ணியபடி லிஃப்ட் அருகே நிற்க, ஆர்யன் மயூரி முகத்தைத்தான் பார்த்துக் கொண்டு இருந்தான். அவன் இன்றுதான் மயூரியை மேக்கப் எதுவும் போடாமல் பார்க்கிறான்.
முகத்தில் ஒட்டியிருந்த சிறு சிறு துண்டு முடிகள் முகம் கலுவியிருந்த அடையாளமாக அந்த முடிகள் நனைந்து முகத்தோடு ஒட்டி என்று முகம் வேறுமையாக இருந்தாலும் அழகாகவே இருந்தது. இப்படி தன் கண் அவள் முகத்தையே சுற்றுவதை உணர்ந்த ஆர்யன் தன் தலையை உலுக்கிக் கொள்ள லிப்ட் வந்தது.
இருவரும் லிப்டில் ஏற ஆர்யன் மயூரி பக்கமே திரும்பவில்லை. அப்போது மயூரியின் போன் “நான் குடிக்கப் போறேன்…” என்று சத்தம் போட ஆர்யன் அவளை வேகமாகத் தலை திருப்பிப் பார்க்க மயூரி போனில் வந்த மார்க்கெட்டிங் காலை கட் செய்துவிட்டு அவள் கார் நோக்கி இறங்கிச் சென்றுவிட்டாள்.
ஆர்யன் “எப்ப பாரு அந்த நினைப்புல தான் இருப்பா போல. என்ன ரிங் டோனோ? குடிக்கப் போறேன், கடிக்கப் போறேன்னு” என்று முனங்கிவிட்டுச் சென்றான். இங்கு மயூரி காரில் ஆசிரமம் நோக்கி சென்றாள். அங்கு இவளுக்காவே ஜெகன் வெளியே வந்து நின்று கொண்டு இருந்தார். மயூரி அவரை பார்த்துவிட்டு அவர் அருகே செல்ல ஜெகன் “ இப்பவே கண்ண தகறக்கல ம்மா மயூரி அவன் ஏதோ டிப்ரஷன்ல இருப்பான் போலும்மா. டாக்டரைப் வேனா வர சொல்லவாம்மா?” என்று கவலையுடன் கேட்க அதற்கு மயூரி “டாக்டர்லாம் வேணாம் தாத்தா. நான் பார்த்துக்கறேன் ” என்று ஜெய் அருகில் வந்து அமர ஜெய் உடனே கண்கள் திறந்து மயூரியைப் பார்த்துச் சிரிக்க அவன் சிரிப்பில் கடுப்பான மயூரி அவன் தலையில் கொட்டி
“இங்க எல்லாரையும் பதற வச்சிட்டு சிரிக்கிற” என்று முறைக்க ஜெய் “நான் என்ன பண்ண? கொஞ்சம் ரிலாக்ஸா இருக்கலாம்னு இங்க வந்து உட்கார்ந்தேன். இதுல என்ன தப்பு?”
“ம்ம்ம் நீ ரிலாக்ஸா இங்க உட்கார்ந்த. வேற பிரச்சனை எதுவும் இல்லை. ஆபிஸ்ல எதுவும் நடக்கல?” என்று மயூரியின் கேள்வியில் திரு திருவென ஜெய் முழிக்க அதில் மயூரி “எதுவும் பண்ணலன்னு சொன்ன அப்புறம் ஏன்டா முழிக்கிற?” என்று அவன் தலையில் மீண்டும் கொட்டு வைக்க ஜெய் பாவமாக முகத்தை வைத்து
“நான் இதுக்குத்தான் மீட்டிங் போகலன்னு அப்பவே சொன்னேன் மயூ” என்று அவள் தோளில் தலை வைத்துக் கொள்ள மயூரி “எவனோ ஏதோ சொல்றான்னு வர வேண்டியதுதானே? அத விட்டுட்டு அவனை அடிச்சி இப்போ இங்க வந்து உட்கார்ந்து என்ன பன்ற ஜெய்?” என்று சலித்துக் கொள்ள.
“இல்லை மயூ, நானும் அமைதியா இருக்கணும்னுதான் கண்ட்ரோல் பண்ணினேன், ஆனா முடியல. ஆமா, உனக்கு எப்படி இது தெரியும்?” என்று மயூரியின் முகத்தைப் பார்க்க, அதில் சிறு புன்னகை பூக்க, மயூரி “எனக்குத் தெரியாதா? நீதான் எப்பவும் ஃபீலிங் ஆனா, புத்தருக்கு போதி மரம் மாதிரி இந்த புளியமரத்துக்குக் கீழ உட்கார்ந்துருவ. அதை வச்சுதான் விசாரிச்சேன்.”
“சரி விடு, இனிமே இதுக்கெல்லாம் ஃபீல் பண்ணாத.” என்று சமாதானப்படுத்திய மயூரி, அவனை அழைத்துக்கொண்டு ஜெகனிடம் செல்ல, ஜெகன் இவர்களுக்கும் சேர்த்து பிரியாணி ஆர்டர் செய்து வைத்திருந்தான். இருவரும் அங்கேயே உண்டுவிட்டு, அங்கு இருந்த குழந்தைகளுடன் சிறிது நேரம் விளையாடிவிட்டுப் புறப்பட வெளியே வர, ஜெய் மயூரியைப் பார்த்து,
“மயூ, நாளைக்கு நான் ஜப்பான் போறேன். திரும்பி வர செவன் டு டென் டேஸ் ஆகும். சோ, தனியா சமாளிச்சிருவியா?” என்று தயக்கத்துடன் கேட்க, அதற்கு மயூரி,
“நீ போடா, நான் பார்த்துக்கிறேன்” என்று தோள் தட்ட, ஜெய் தான் தயங்கி நின்றான். கம்பெனியில் இந்த மாதம் பார்த்து மூன்று கேம்களை முடித்துக்கொடுக்க வேண்டும். ஒன்று முழுதும் முடிந்த நிலையில் இருக்க, மற்ற இரண்டு மட்டும் முடிவு கட்டத்தில் இருந்தது, அதைத் தனியாக எப்படி மயூரியிடம் விடுவது என்று எண்ணித் தயங்கி ஜெய் நிற்க, அவனைப் பூரித்தவளாக மயூரி,
“ஜெய்… நான் பார்த்துக்கிறேன். நீ எதையும் யோசிக்காம போ.” என்று சொன்ன மயூரியின் தெளிவான பேச்சில் நிம்மதியானவனாக ஜெய், “மயூ, துணைக்கு என் பி.ஏ. கேத்தரினை வச்சுக்கோ. அவ ஏதாவதுனா ஹெல்ப் பண்ணுவா” என்று சொல்லியவன் மீண்டும் மயூரி முகம் பார்க்க, அவள் முகம் சோர்ந்து கண்கள் தூக்கத்துக்கு ஏங்க, கொட்டாவி விட்டு நின்றவளைப் பார்த்து மானசீகமாக அவனை அவனே திட்டியவன்,
“மயூரி, சாரி. உன் தூக்கத்தை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். நீ வேணா டுடே லீவ் எடுத்துக்கோயேன்.” என்று ஜெய் சொன்னதை கேட்ட மயூரி “ப்ச், ஜெய் லீவ்லாம் வேணாம்டா என்ன லைட்டா டயர்ட். வீட்டுக்குப் போய் ஃபிரெஷ் ஆனா கரெக்ட் ஆகிட போது. சரி, நான் கிளம்புறேன். நான் இங்க நின்னுட்டே இருந்தா, நீ இன்னும் என் முகத்தைப் பார்த்து அட்வைஸ் மழையைப் பொழிஞ்சிட்டுதான் இருப்ப” என்று காரில் ஏறியவள்,
“ஜெய், ஃபிளைட் டைமிங் என்ன?” என்று கேட்டுவிட்டுச் சென்றாள்.
காரை ஓட்டிக்கொண்டு இருந்த மயூரிக்கு தூக்கம் கண்களைச் சொக்க, அதைத் துரத்தும் விதமாக ரேடியோவை ஆன் செய்யதாள், அதில் “கண்ணா நீ தூங்குடா என் கண்ணா நீ தூங்குடா” என்று பாட்டு ஓட, அதைக் கேட்டு கடுப்பான மயூரி, “நானே தூக்கம் வர கூடாதுன்னு தான் பாட்டு போட்டேன், இதுல இந்த ரேடியோ நேரம் தெரியாம பாட்டைப் போட்டுருக்கான் பாரு தூங்குடான்னு விட்டா தூங்க வச்சிறுவான் போல” என்று திட்டிக்கொண்டு பாட்டை மாற்றியவள், செல்லும் வழியில் சூப்பர் மார்க்கெட்டில் இரவு சமையலுக்குத் தேவையான பொருட்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பினாள்.
வீடு வந்தவள் களைப்புடன் லிஃப்ட் ஏறி, இவள் வீடு திறந்து உள்ளே சென்று சோபாவில் விழுந்தாள். சிறிது நேரம் கண்களை மூடித் திறந்தவளாக, நேரத்தைப் பார்க்க மணி ஆறு என்று காட்டியது. அதைப் பார்த்து பெருமூச்சு ஒன்று விட்டுக்கொண்டவள், எழுந்து பால்கனி சென்று வானத்தைப் பார்த்தவாறு,
“தூங்கக் கூடாது, தூங்கிடாத மயூ” என்று அவளுக்கு அவளே சொல்லிக்கொண்டு இருந்தாள்.
மயூரியின் தூங்கா இரவுகள் பல இருந்தாலும், அதில் ஒரு இரவாவது தூங்கிடும் ஆசை அவளிடமும் இருக்கத்தான் செய்தது. அனைவரையும் போல வெளிச்சம் இல்லாத இடத்தில் கண் மூடித் தூங்கும் ஆசையும் இவளுக்கு உண்டு. ஆனால் அந்த இருள், அந்த சத்தம் இல்லாத இரவு, அதை நினைத்தாலே மேனி எங்கும் ஒரு நடுக்கம். ஏன் இந்த நடுக்கம், அதன் காரணம் எதுவும் அவள் நினைவில் இல்லை, இருந்தும் பயம். இருள் சூழ்ந்த இடத்தில் கண் மூடவே பயந்து நடுங்கினாள். அந்தப் பயத்தையும் மீறி கண் மூடித் தூங்க எத்தனையோ முறை முயன்றும் இருக்கிறாள். அந்தச் சமயம் எல்லாம் அவள் மூச்சுத் திணறி யாரோ அழுத்தும் உணர்வில் லைட்டைப் போட்டுவிட்டு அமர்ந்துவிடுவாள். அதையும் மீறி இரவில் தூங்கினால் என்ன ஆகும் இவளுக்கு என்று இவளுக்கே தெரியாத புதிர் தான். அந்த புதிர் அவிளும் நாளும் சீக்கிரமே வர போவது அறியாமல் இருள் சூழ்ந்து கொண்டு இருக்கும் வானை வெறித்தி கொண்டு இருந்தாள் மயூரி.