ரவு 11

போனின் அலாரம் தொடர்ந்து அடிக்க அதை கண்மூடிய நிலையிலேயே அணைத்து அருகில் வைத்துக்கொண்டு தலையணையை கட்டிப்பிடித்தபடி உறங்கி கொண்டு இருந்தான் ஜெய். அப்போது போன் மீண்டும் விடாமல் அடிக்க, அதில் கடுப்பான ஜெய் போனை எடுத்து தூக்கிப் போடப் போக, போன் திரையில் “மயூரி” என்ற பெயர் ஒளிர்ந்து கொண்டு இருந்தது.

அதை பார்த்தும் ஜெய் அடித்துப் பிடித்து எழுந்து அமர்ந்து போனை எடுத்து காதில் வைக்க, மயூரி “என்ன பண்ற ஜெய்… தூங்கிட்டா  இருந்த….” என்று ராகம் போட, அவள் குறளை வைத்தே பிரச்சனை எதுவும் இல்லை என்று புரிந்துகொண்ட  ஜெய் “சொல்லு மயூ தூங்கிட்டு தான் இருக்கேன்…” என்று மீண்டும் கட்டிலில் படுத்துகொண்டான்,

“எருமை மாடு! மணி என்ன ஆகுது பாரு. டுடே வேற ஏதோ இம்பார்ட்டன்ட் மீட்டிங் இருக்காமே உன்னோட மெயின் கம்பெனில. அதான் எழுப்பிவிட கால் பண்ணேன்.” அதைக் கேட்ட ஜெய் எழுந்து அமர்ந்துகொண்டு, “அது எப்படி உனக்குத் தெரியும் மயூ? பாஸ்கர் அங்கிள் சொன்னாரா?”

 “ஆமா, அவர் தான் சொன்னாரு. அதுல என்ன தப்பு இருக்கு? நீ அங்கிளை ஏதாவது சொன்னா நான் டென்ஷன் ஆகிடுவேன்.”

“அவர ஏன் நான் சொல்ல போறேன், ஆமா மீட்டிங்கிற்குப் போக எனக்குத் தெரியாதா? அதை நீ கால் பண்ணி வேறு சொல்லனுமா?” “மீட்டிங் இருக்குன்னு தெரிஞ்ச மட்டும் போதாது, போய் அட்டென்ட் பண்ணணும். நீ மட்டும் இந்த மீட்டிங் அட்டென்ட் பண்ணாம இருந்த, அப்புறம் இருக்கு உனக்கு” என்று மயூரி மிரட்ட, ஜெய் “சரிடி எருமை, போறேன்”

“ம்ம்ம் குட் இது தான் நல்ல பிள்ளைக்கு அழகு. சரிடா நான் தூங்கப் போறேன். பாய், குட் நைட் ஹ…..” என்று கொட்டாவி விட்டபடி மயூரி போனை வைத்துவிட, அவளின் குட் நைட்டில் சிரித்த ஜெய் அவன் படுக்கையை விட்டு எழுந்து நெட்டி முறித்துவிட்டு பாத்ரூம் சென்று வந்து டீ-ஷர்ட் ஒன்று அணிந்துகொண்டு கீழே இறங்கிச் செல்ல, கீழே வேலையாட்கள் அனைவரும் அவரவர் வேலையைச் சரியாகச் செய்துகொண்டிருக்க, அதை ஒரு நிமிடம் நின்று பார்த்தவன் சமையல் அறைக்குச் சென்றான்.

ஜெய் வயது 29. அவன் தற்போது இருப்பது அவனின் தாத்தாவின் வீடு. இதற்கு முன் இவனுடைய அப்பார்ட்மென்ட் ஒன்றில் ஒரு ஃபிளாட்டில் இவனும், அதன் பக்கத்து ஃபிளாட்டில் மயூரியும் என்று இருந்தனர். எப்போது மயூரி சொந்தமாக அப்பார்ட்மென்ட் வாங்கிச் சென்றாளோ, அப்போதே இவன் இங்கு வந்துவிட்டான். இவன் தாத்தாவின் வீடு பழைய மாளிகை போல் இருக்கும். ஜெய்யின் தாத்தா ராம்குமார் பார்த்துப் பார்த்து கட்டிய வீடு இது. இதில் இல்லாத வசதியே இல்லை என்று சொல்லும் அளவு பிரமாண்டமாக கட்டியிருந்தார்.

இந்த வீட்டில் தன் மக்களுடன் சந்தோஷமாக வாழ வேண்டும் என்பதுதான் அவரின் கனவாகவே இருந்தது. ஆனால் அது கடைசி வரை நிறைவேறாமலே சென்றுவிட்டது. அதற்குக் காரணம் ஜெய் அப்பா ஆனந்த். ஆனந்த் பிறந்து சிறிது காலத்தில் அவன் அம்மா இறந்து போய்விட, ராம்குமார் ஆனந்துக்கு மிகுந்த செல்லம் கொடுத்தே வளர்த்தார். அவன் என்ன கேட்டாலும் வாங்கிக் கொடுப்பது என்று இருக்க, ஆனந்த் அவன் கல்லூரி படிப்பை பிரான்ஸ் நாட்டில் படிக்க வேண்டும் என்று சொல்ல, அதற்கும் சரி என்று ஏற்பாடு செய்தார் ராம்குமார். பிரான்ஸ் சென்றவன் படிப்பு முடிந்து வருவான் என்று பார்த்தால், அவன் ஐந்து வருடம் அங்கேயே இருந்துவிட்டு, ராம்குமார் காசு தர மாட்டேன் இனிமேல் நீ அங்கு இருந்தால் என்று மிரட்டிய பிறகுதான் இந்தியா திரும்பினான்.

இந்தியாவிற்கு வந்தவர் கூடவே ஐந்து மாத கர்ப்பிணிப் பெண் எலனுடன் வந்து நின்றார். அதைப் பார்த்து அதிர்ந்த ராம்குமார், “என்ன இது?” என்று ஆத்திரமடைய, ஆனந்த் எலனைக் காதலிப்பதாகவும், அங்கு மூன்று வருடமாக அவளுடன் திருமணம் செய்யாமல் ஒன்றாக வாழ்ந்ததாகவும் கூறி திருமணம் செய்து வைக்கச் சொல்ல, ராம்குமார் உடைந்துதான் போனார்.

பின் வேறு வழியில்லாமல் அந்தப் பெண்ணைப் பற்றி விசாரிக்க, தாய் தந்தை இல்லை என்றாலும் நல்ல பெண் என்று அனைவரும் சொல்ல, திருமணமும் செய்து வைத்துவிட்டார். அனைவரும் முதலில் ஒன்றாகத்தான் இருந்தார்கள். ஜெய் பிறந்து ஒரு வருடம் கழிந்த நிலையில் ஆனந்த் நடவடிக்கை சரியில்லாமல் போனது. எலனை ராம்குமார் முன்பே கொஞ்சுவது, முத்தம் கொடுப்பது என்று இருக்க, அதைப் பார்த்த ராம்குமார் இவர்களைத் தனி வீட்டில் வைத்துவிட்டார். இருந்தாலும் அடிக்கடி இவர் சென்று ஜெய்யைப் பார்ப்பது, அவனை இங்கு வைத்துக் கொள்வது என்று இருந்தார். எல்லாம் நன்றாகத்தான் சென்றது ஜெய்யின் பதினைந்து வயது வரை.

விடுமுறைக்காக ஜெய், அவன் தாத்தா, தாய், தந்தை என்று அனைவரும் ஒன்றாக காரில் ஊட்டி செல்ல, அங்கு ஒரு ஆக்சிடென்டில் ஜெய்யைத் தவிர அனைவரும் இறந்து போனார்கள். அன்றிலிருந்து ஜெய்க்குத் தனிமையே உலகமாக ஆகிப் போனது. அந்த ஆக்சிடென்டில் இருந்து வெளிவர முடியாமல் மிகவும் சிரமப்பட்டான் ஜெய். அவனை அதிலிருந்து வெளிக்கொண்டு வர, அவனைக் குழந்தைகள் ஆசிரமம் ஒன்றில் சேர்த்துவிட்டார் பாஸ்கர். அந்த ஆசிரமத்தில் மனதால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குச் சிகிச்சை கொடுத்து சரி செய்வார்கள். அங்குதான் அவன் மயூரியைப் பார்த்தான்.

ஜெய் சுட்டியான பையன் தான். ஆனால் அந்த ஆக்சிடெண்ட் அதிர்ச்சியில் எப்போதும் ஒரே இடத்தையே பார்த்து இருப்பது, யாராவது பேச வந்தால் பயந்து நடுங்குவது என்று இருக்க, அவனை கவனித்த மயூரி அவன் அருகில் தள்ளி அமர்ந்து வாய் ஓயாது பேசுவது, அவன் பதில் பேசவில்லை என்றாலும் இவள் சென்று பேசுவது, அவனுக்கு சாக்லேட் கொடுப்பது என்று இருக்க, ஜெய் சிறிது சிறிதாக இயல்புக்கு திரும்பினான். பின் பாஸ்கரிடம் மயூரியைப் பற்றி தெரிந்து கொண்டவன், மயூரியைப் நன்றாக பார்த்துகொள்ள வேண்டும் என்று முடிவும் எடுத்து கொண்டான்.

சமையல் அறைக்குச் சென்ற ஜெய், “மீனம்மா இன்னைக்கு என்ன ஸ்பெஷல்?” என்று சமையல் திண்டு மேலே அமர, அங்கு வேலை பார்த்த மீனாட்சி, “தம்பி, காலைக்கு புட்டும் கடலைக்கறியும் பண்ணியிருக்கேன். மதியத்துக்கு என்ன வேணும்னு சொன்னீங்கன்னா அதையும் பண்ண ஸ்டார்ட் பண்ணிடுவேன்.” என்று கைகளை தன் முந்தானையில் துடைத்தபடி பேசினார் அதற்கு ஜெய்

“ம்ம்ம்…. மதியம் இன்னைக்கு எதுவும் வேணாம் மீனம்மா. நான் தாத்தா கம்பெனி போறேன். சோ அங்கேயே சாப்பிட்டுறேன். நைட் மட்டும் சிம்பிளா ஏதாவது பண்ணி வைங்க மீனம்மா.” என்றுவிட்டு புட்டும் கடலைக்கறியும் இரண்டையும் தட்டில் போட்டுவிட்டு உண்ண சென்றான். இவன் தாத்தா வீடு மிக பெரியது. அதை தினமும் சுத்தம் செய்யவே பத்து வேலையாட்கள் தேவை. அதனால் வீடு முழுவதும் ஆட்கள் இருக்கிறார்களோ இல்லையோ, வேலையாட்கள் அதிகம் இருந்தனர். அதனாலேயே வீடு முழுவதும் சிசிடிவி கேமரா செட் செய்து வைத்திருந்தான் ஜெய். காலை சாப்பாடு சாப்பிட்டு முடித்த ஜெய் கிளம்பி தன் தாத்தா மெயின் ஆபீஸ்க்கு சென்றான். அங்கு நடந்த மீட்டிங்கில் கலந்து கொள்ள வேண்டுமே என்று மனம் இல்லாமல் செல்ல, அங்கு இருந்த அனைவரும் இவன் இடம் வந்து வந்து பேசி என்று எப்படியோ நன்றாகவே இன்வெஸ்டர்ருடன் மீட்டிங் முடிவு அடைந்தது.

மீட்டிங் முடிந்து இவன் கிளம்பி இவன் ஆபிஸ் அறையில் இருந்த கார் சாவியை எடுத்துக்கொண்டு திரும்ப இவன் ரூம் வாசலில் இருவர்

 “ இவனும் இவன் அப்பா மாதிரிதான் போல ஆபீஸ்க்கே வர மாட்டிக்கிறான். எப்போ பாரு அந்த கேம் கம்பெனியில் தான் இருக்கான் “ என்று ஒருவர் பேச அதற்கு எதிரில் இருந்தவர்  “ கேமிங்கில் சாதிக்கணும்னு ஆசையா இருக்கபோது சார்  “

“நீங்க வேற ஆசையாவது மண்ணாவது. அவன் அப்பன் வெள்ளைக்காரி பின்னாடி போனான், பையன் அனாதைப் பொண்ணு பின்னாடி சுத்துறான் “ என்று சொல்லி முடித்தது தான் தாமதம், ஜெய் சீறிக்கொண்டு சொன்னவன் சட்டையைப் பிடித்து அவரை அடித்து இருந்தான்.

அங்கு இருந்த அனைவரும் அவனைத் தடுத்து நிறுத்தி சமாதானம் செய்ய, ஜெய் “ யாரை அனாதைன்னு சொல்ற? அவளுக்கு நான் இருக்கேன்டா. வெறும் பத்து பர்சென்ட் ஷேருக்கே நீ இப்படிப் பேசுவியா? உன்னை என்ன பண்றேன்னு பாரு “ என்று மிரட்ட, அதில் பயந்துபோன அந்த நபர் “ ஜெய், சாரி நான் ஏதோ தெரியாமல் பேசிட்டேன் “ என்று அவர் மன்னிப்புக் கேட்டும், அவரைக் கண்டுகொள்ளாமல் “ இவர் கூட டைஅப் வச்சுக்கணும்னு நினைக்குறவங்க தாராளமா வச்சுக்கோங்க. ஆனா பின்விளைவுக்கு நான் பொறுப்பு இல்லை “ என்று சென்றுவிட, அந்த நபருடன் பேசிய அனைவரும் “ நமக்கு எதுக்கு வம்பு “ என்று அங்கிருந்து கலைந்து சென்றுவிட, அவர் மட்டும் தனித்து விடப்பட்டார்.

அந்த ஆபீஸை விட்டு வெளியே வந்த ஜெய் நேராக ஆஸ்ரமம் கோபமாக சென்றான். ஆஸ்ரமம் வளாகத்தில் காரை நிறுத்தி விட்டு கீழே இறங்க அவன் அருகே ஆஸ்ரமத்தின் பொறுப்பாளர் வந்து நின்று “என்ன ஜெய் வரத சொல்லவே இல்ல எங்க மயூரி நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்களா“ என்று சிரித்த முகத்துடன் கேட்டார் ஜெகன்.

 அவரை பார்த்து சிரித்த ஜெய் “நான் மட்டும் தான் வந்திருக்கேன் தாத்தா மயூரி வரல“ என்று சொல்லியபடி அவன் பர்சில் இருந்து கார்டை எடுத்து ஜெகனிடம் நீட்டியபடி “இங்க வர அவசரத்துல எதுவுமே வாங்கல தாத்தா அதுனால பசங்களுக்கு இன்னைக்கு பிரியாணி ஆர்டர் பண்ணிருங்க நான் கொஞ்சம் உட்கார்ந்துட்டு வரேன்“ என்று காசை கொடுத்துவிட்டு அந்த ஆஸ்ரமம் உள்ளே சென்று அதன் நடுவில் இருந்த புளிய மரம் அருகே போடப்பட்ட பென்ச்சில் கண் மூடி சாய்ந்து அமர்ந்துவிட்டான்.

அங்கு அமர்ந்தவுடன் தான் ஜெய் மனம் சற்று நிம்மதியானது. இங்கு இப்போது எப்படி அமர்ந்திருந்தானோ அதே போல தான் பதிமூன்று வருடங்களுக்கு முன் வாழ விருப்பம் இன்றி உலகையே வெறுத்து அமர்ந்திருந்தவனை தேடி வந்த தேவதை தான் மயூரி. “இதே பென்ச்சில் என் அருகில் அமர்ந்து வாய் ஓயாமல் பேசுவாள். நான் பதில் பேசவில்லை என்றாலும் விடாமல் பேசுவாள். அவள் படித்த கதை, தாத்தாவிற்கு தெரியாமல் சாக்லேட் திருடிய கதை என்று மாற்றி மாற்றி பேசி பேசியே என் தனிமையை போக்கியவள் என் மயூரி“ என்று ஜெய் நினைத்துக் கொண்டிருக்கும் போது யாரோ வந்து இவன் அருகே அமரும் அரவம் உணர்ந்து கண் திறந்து பார்க்க கண் முன்னே மயூரி இவனை பார்த்து முறைத்துக் கொண்டே இருந்தாள்.