இரவின் ஒளியில்

கண்ணில் கட்டியிருந்த துணியைத் தாண்டி அவள் கண்ணீர் தரையைத் தொட்டது. அவள் கை கால்கள் கட்டப்பட்டு அசைய முடியா நிலையில் தரையில் கிடந்தாள் மயூரி. கை கால்களை அசைத்துக் கட்டை அவிழ்க்க முயர்ச்சி செய்ய, அவளால் முயல மட்டுமே முடிந்தது, கட்டை அவிழ்க்க முடியவில்லை. முயன்று தோற்றவளாகக் கத்தத் தொடங்கினாள்

 “டேய் யாருடா நீ என்னை ஏன்டா கடத்துன? என்னை விடுடா பொருக்கி நாயே!” என்று அவள் பாட்டுக்கு வாய்க்கு வந்ததை திட்டிக்கொண்டிருந்தாள். பின் திட்டுவதை நிறுத்தி “ப்ளீஸ் நீ யார இருந்தாலும் என்னை விட்டுடு. நான் போலீஸ் கிட்டலாம் போகமாட்டேன். பணம் கூடத் தறேன் ப்ளீஸ்” என்று கெஞ்சியும் பார்க்க பலன் பூஜ்யமே. இவள் எவ்வளவு கத்தியும் கெஞ்சியும் பதில் எதுவும் வரவில்லை. கத்தி கத்தி இவள் தொண்டை வறண்டதுதான் மிச்சம். பின் கத்துவதை நிறுத்தி அமைதியாக இருந்தவள் கண்ணுக்குள் அவன் பிம்பம். அவனைப் பார்ப்பதற்கு முன்பு இப்படி ஏதாவது இவளுக்கு நடந்திருந்தால் இவ்வளவு துடித்திருப்பாளா? என்று கேட்டால் அது சந்தேகம் தான். அவன் அவள் வாழ்வில் வரும் முன் ஏன் வாழ்கிறோம் என்று தெரியாமல் யோசிக்கும் அளவுதான் வாழ்ந்துகொண்டிருந்தாள்.

ஆனால் இப்போது எத்தனை ஆசையுடன் தனக்கு என்று ஒரு குடும்பம், தனக்காக ஒருவன் என்று எவ்வளவு சந்தோஷமாக இருந்தாள். அதை எல்லாம் நினைத்து அடக்க முடியாத கோபத்தில் “ஆ…….” என்று அந்த அறையே அதிரும் வகையில் கத்தியிருந்தாள் மயூரி.

ஒரு வருடம் முன்… கட்டிலில் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தாள் மயூரி. அப்போது அவளின் அன்னை வந்து “மயிலு ம்மா, மயிலு எழுந்திரு, டைம் ஆச்சு பாரு” என்று எழுப்ப, மயூரி கண்களைக் கசக்கி, கஷ்டப்பட்டு கண் திறக்க, அவள் கண்களில் கலங்கலாக அவள் அன்னை முகம் தெரிந்தது. அதில் அவள் அன்னையின் கண்களைக் கசக்கி மீண்டும் பார்க்க, நெற்றியில் சிவப்பு நிறப் பொட்டு, அதன் கீழ் சிறு கீற்றாகக் குங்குமம், கண்களில் அழகாக மை இட்டு, கண்கள் சிரிக்க, தன்னை பார்த்த அன்னையைத் தெளிவாகப் பார்க்க அவள் கைகளால் தன் கண்ணைக் மீண்டும் கசக்கினாள். அப்போது காதில்

“ஒப்பா கங்னம் ஸ்டைல்…” என்று பாட்டு சத்தம் காதைக் கிழிக்க வேகமாக எழுந்து தன் போனை ஆஃப் செய்த மயூரி, “முதல்ல அலார்ம் வைக்கிறதை நிறுத்தணும். ச்சா! இன்னைக்குப் பார்க்க முடியல” என்று சலித்தபடி கைகளைத் தூக்கி நெட்டி முறித்தபடி கட்டிலை விட்டு எழுந்து நேரம் பார்த்தால்.

மணி மூன்று என்று காட்ட, “அலார்ம் யார் சீக்கிரம் வெச்ச?” என்று யோசித்தவல் பின் அவளே “ வேற யாரா இருக்கும்? இந்த ஜெய் பக்கியாதான் இருக்கும். ஏதோ நியூ ப்ராஜெக்ட் சொன்னானே, அதுக்கு என்னை வர வைக்க இப்படி மாத்திருப்பான் போல” என்று தன் பாட்டுக்கு பேசியபடி பாத்ரூம் சென்று ஃப்ரெஷ் ஆகி வந்தவள், டேபிள் அருகே சென்று அங்கு இருந்த பவுலில் இருந்து பத்து ரூபாய் டேரி மில்க் சாக்லேட்டை ஒன்று எடுத்து அதன் கவரைப் பார்த்து பத்திரமாகப் பிரித்து அந்த சாக்லேட்டைச் சாப்பிட்டபடி கட்டிலில் அமர்ந்து, அந்தக் கவரைச் சிறு சிறு மடிப்பாக மடித்து அதை அழகான ஒரு பட்டாம்பூச்சி போலச் செய்தாள்.

பின் அதை அந்த டேபிளில் இருந்த இன்னொரு பவுலில் போட்டுவிட்டு அதைப் பார்த்தாள். அந்த பவுலும் இந்த சாக்லேட் பட்டாம்பூச்சியால் நிரம்பி இருக்க, அதைப் பார்த்துச் சிரித்துவிட்டு தன் தோள் வரை இருந்த முடியைக் கொண்டை போட்டபடி அதன் பக்கத்து அறையின் கதவைத் திறந்தாள்.

அந்த அறை முழுவதும் விதவிதமாகக் கண்களின் படங்களால் நிரம்பி இருந்தது. அனைத்துக் கண்களிலும் சிறு சிறு மாற்றத்தைத் தவிர வேறு வித்தியாசம் இல்லை. அந்தப் படங்களைத் தன் கைகளால் வருடியபடி அந்த அறையின் நடுவில் போடப்பட்ட நாற்காலியில் அமர்ந்து அவள் முன் இருந்த ஓவியத் துணியில் வரையத் தொடங்கினாள். அவள் வரைந்து முடிக்க ஒரு மணி நேரம் ஆனது. வரைந்த அந்தப் படத்தைப் பார்க்க அவள் கனவில் கண்ட அதே கண், அவள் அன்னையின் கண்.

அதை வருடியபடி உதட்டில் பூத்த புன்னகையுடன் “ மறக்க மாட்டேன் ம்மா “ என்று முனங்கியபடி அதையும் மற்ற படங்களுடன் வைத்துவிட்டு எழுந்து சமையலறைக்குச் சென்றாள். சமையலறைக்குச் சென்றவள் அவள் போனில் பாடல்களைச் சத்தமாக ஒலிக்கவிட்டபடி சிறு சிறு நடன அசைவுகளுடன் நெய், அதில் பவுடர் சர்க்கரை, மைதா மாவு, சிறிது உப்பு என்று இவை அனைத்தையும் பிசைந்து சிறு சிறு உருண்டையாக தட்டி, எண்ணெய் தடவிய தட்டுகளில் அடுக்கி அவனில் வைத்துவிட்டு. பிரிட்ஜில் இருந்த ரெடிமேட் சப்பாத்தியைச் சூடு செய்து அதில் ஸ்ட்ராபெரி ஜாம் போட்டு நடனமாடியபடி உண்டு முடிப்பதற்குள் அந்த நெய் பிஸ்கட்ஸ் ரெடியாகிவிட, அதில் இரண்டை மட்டும் எடுத்துத் தட்டில் வைத்துப் பாலைச் சூடு செய்து கிளாஸில் ஊற்றியபடி நேரத்தைப் பார்த்தாள். நேரம் ஆறு என்று காட்டியது.

பின் ஒரு கையில் பால் மறு கையில் பிஸ்கேட்ஸ் சகிதமாக பால்கனித் திரையைத் தள்ளிவிட்டு அங்கு போட்டிருந்த நாற்காலியில் அமர்ந்தபடி சூரிய அஸ்தமனத்தைக் கண் இமைக்காமல் பார்த்தாள். அப்போது அவள் போன் “நான் குடிக்கப் போறேன் என் கப்புல கற்பனை கோட்டுது மச்சான்“ என சத்தம் போட சலிப்பாகத் தலையை ஆட்டி யார் என்று பார்க்காமல் போனை அட்டென்ட் செய்து காதில் வைத்து “சொல்லுடா ஜெய்…..” என்று சலித்துக்கொண்டு பேச போனில் ஜெய் “எங்க இருக்க மயூரி? டைம் ஆச்சு பாரு மீட்டிங்குக்கு“ என்று கத்த அதற்கு மயூர் பொறுமையாக அவள் பிஸ்கேட்டைச் சாப்பிட்டபடி

“மீட்டிங்குக்கு டைம் ஆச்சுன்னா போய் அட்டென்ட் பண்ணுடா. அதை விட்டுட்டு என் கூட கடலை வறுத்துட்டு இருக்க“ என்று போனை ஸ்பீக்கரில் போட்டுவிட்டு பாலை அருந்தினால் மயூரி அதைக் கேட்டு டென்ஷன் ஆன ஜெய் “ஏ குரங்கு! மீட்டிங்குக்கு உன்னையும் வரச் சொன்னேன் தானே? மறந்திட்டியா நீ இப்போ எங்க இருக்க? இன்னும் வீட்டுலதான் இருக்கன்னு சொல்லிறாதடி!“ என்று அவன் பதற

மயூரி பதற்றம் இல்லாமல் கூல்லாக “ என் நண்பன்னு நிரூபிக்கிற பாத்தியா? அப்படியே கரெக்ட்டா சொல்லிட்டயேடா! நான் எங்க இருப்பான்னு “ என்று சிரிக்க கடுப்பான ஜெய் “எருமை எருமை! எங்கேயாவது கம்பெனி ஓனர் மாதிரி பேசுறியாடி?“

 “ஹலோ! நான் பார்ட்னர் மட்டும்தான். நீதான் ஓனர்.“

“எந்த ஊரில் டி பார்ட்னர் ஓனர் விட அதிக பர்சன்ட் ஷேர் வச்சிருப்பான் “ அதைக் கேட்டு ஒரு அசட்டு சிரிப்புடன் மயூர

“ இதைப் பாரு ஜெய் நான் எப்பவும் சொல்றது தான் மீட்டிங்ன்னு என்னைக் கூப்பிடாத நான் வர மாட்டேன் என் வேலை கேம்க்கு அனிமேஷன் பண்ணித் தர்றது மட்டும்தான் இந்த பார்ட்னர்ஷிப் மார்க்கெட்டிங் இது எல்லாம் உன் வேலை அதில என்னை இழுக்காத அண்ட் என் ஷிப்ட்க்கு டைம் இன்னும் இருக்கு அதற்கு முன்னாடி என்னைத் டிஸ்டர்ப் பண்ணாதீங்க பாஸ்…. ஷிப்ட் அப்போ பார்க்கலாம் பாய்….” என்று கட் செய்துவிட்டாள்.

பின் பொறுமையாக பால் குடித்துவிட்டு எழுந்து கிச்சன் சென்று மீதம் இருந்த பிஸ்கட்டை எடுத்து ஒரு டப்பாவில் அடைத்துவிட்டு குளிக்க சென்றாள். குளித்து  உடை அணிந்து தலையைத் தூக்கி போனிடெயில் ஒன்று போட்டுக்கொண்டு பையை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்தாள். மயூரி இருப்பது தற்போதுதான் கட்டி முடித்த புதிய அப்பார்ட்மெண்ட் அதனால் நிறைய ப்ளாட் காலியாகவே இருந்தது இவள் இருக்கும் ஃப்ளோர் ஏழு அதில் இரண்டு வீடுகள் உள்ளன அதில் ஒன்றில் இவளும் மற்றொன்று காலியாகவும் இருக்க அந்த வீட்டைப் பார்த்தபடி

 “ பேசாம ஜெய்யை இந்த அப்பார்ட்மெண்ட்ட வாங்கச் சொல்லிரலாமா “ என்று யோசித்தவள் பின் தலையை உலுக்கியபடி “நோ நோ இங்கு வந்துட்டா நம்ம பின்னாடியே வால் பிடிச்ச மாதிரி சுத்த ஆரம்பிச்சுருவான் அந்த தாட்டை மறந்துவிடு மயூரி “ என்று லிப்டில் இறங்கி அவள் காரில் ஏறி ரேடியோ ஆன் செய்து பாட்டு கேட்டுக்கொண்டே அலுவலகத்தை நோக்கிச் சென்றாள்.

இங்கு ஜெய்யோ தலையைப் பிய்த்துக்கொள்ளாத நிலையில் மீட்டிங்கில் ஏதேதோ சொல்லி ஒரு வழியாக அந்த ப்ராஜெக்ட்டை ஓகே செய்துவிட்டான். அவன் இப்போது எடுத்திருப்பது பெரிய ப்ராஜெக்ட். இதை நல்லபடியாக முடித்தால், இப்போது இருப்பதைவிட அவன் கம்பெனி இன்னும் நல்ல நிலைக்குச் செல்லும்.

 “இதைத்தான் மயூரி புரிந்துகொள்ள மாட்டேன் என்கிறாளே!” என்று பெருமூச்சுவிட்டபடி தன் ரோலக்ஸ் வாட்சைத் திருப்பி நேரம் பார்த்தான். மணி 8 எனக் காட்ட, அவன் உதட்டில் சிறு முறுவல் அரும்ப, “டைம் ஆச்சு!” என்று சொல்லியபடி எழுந்து பாத்ரூம் சென்று, அவன் கலைத்துவிட்ட முடியைக் கோதி சரிசெய்து, பர்ஃபியூம் லைட்டாக அடித்துக்கொண்டு, அவன் பிம்பத்தைக் கண்ணாடியில் பார்த்தான்.

ஜெய் நல்ல உயரம், நல்ல நிறமும் கூட. அவன் நீல விழியில் மயங்காத ஆள் இல்லை. டிரிம் செய்த தாடி மீசை என்று நேர்த்தியான உடை அணிந்திருப்பவனைப் புதிதாக யாராவது பார்த்தால், வெளிநாட்டவன் என்றுதான் நினைப்பர். ஃபிரென்ச் அன்னை மற்றும் இந்தியத் தந்தைக்குப் பிறந்ததால், இவனின் சாயல் அயல்நாட்டு மனிதன் போல இருக்கும். கண்ணாடியில் அவனை ஒரு முறை சுற்றிப் பார்த்துவிட்டு, அவன் சீட்டில் வந்து அமர்ந்தபடி சிசிடிவி கேமரா வழியே அவள் வரவுக்காகக் காத்துக்கொண்டிருந்தான் இலன் ஜெயன் என்கின்ற ஜெய்.