“என்ன விஷயம் பண்ணிட்டு இருக்க யாழி?”, என்று அதட்டினார் வேணுகோபாலன்.

“இங்க இருக்குற யாருக்கும் என்னைக் கேள்வி கேக்க உரிமை இல்லை. இவ என் மாமா மேல அபாண்டமா பழி போடுவா. இந்த ஆள் என் மாமா அத்தையை தப்பா பேசுவார். இதை எல்லாம் நீங்க வேடிக்கை பாப்பீங்கன்னா இப்பவும் வேடிக்கை மட்டும் பாருங்க”, என்று சொன்னவளின் குரலில் அவ்வளவு ஆக்ரோஷம்.

“நாம பயந்த மாதிரியே செஞ்சிட்டா டா”, என்ற பார்வையை பரிமாறிக் கொண்டார்கள் இனியனும் விஷ்வாவும்.

“உன் மாமாவுக்கு நாங்க செஞ்சது தப்பு தான் டா. எங்க மனசுலயும் அதிபன் அப்படி செஞ்சிருக்க மாட்டான்னு தோணுச்சு. நாளைக்கே பெரிய மச்சான் கிட்ட பேசி மன்னிப்பு கேட்டு இங்க கூட்டிட்டு வறோம். அதுக்காக உன் வாழ்க்கையை நீ ரிஸ்க் எடுக்க கூடாது டா. என்ன இருந்தாலும் வெண்ணிலா உன் அக்கா. அவ வாழ்க்கையை நீ தட்டிப் பறிக்க கூடாது”, என்றார் விஷ்ணு.

“இவ எனக்கு அக்காவும் இல்லை, நான் இவளுக்கு தங்கச்சியும் இல்லை. இவ வாழ்க்கையை நான் தட்டிப் பறிக்கலை பா. இவளுக்கு அந்த வாழ்க்கை வாழ தகுதியே இல்லை. அதான் அது என்னைத் தேடி வந்துருக்கு. அப்புறம் என்ன சொன்னீங்க? போய் மன்னிப்பு கேட்டு கூட்டிட்டு வரப் போறீங்களா? ஹா ஹா இன்னுமா அவங்க இங்க வருவாங்கன்னு நினைக்கிறீங்க? நீங்க அவங்களை  ஒதுக்கலை. அவங்க உங்களை ஒதுக்கிட்டாங்க. நீங்க தலை கீழா நின்னு தண்ணி குடிச்சாலும் அவங்க இங்க வர மாட்டாங்க. நல்ல மனுசங்களுக்கு எப்பவும் ஒரு சொல் தான் பா. அப்புறம் தாத்தா, உங்களுக்கு தலைபிள்ளை கொல்லி போடணும்னா மூத்த பேரன் காரியம் பண்ணணும்னா இப்பவே அவங்க கூட போய் ஒட்டிக்கோங்க. இல்லைன்னா இங்க இருக்குற சில பணப் பேய்ங்க உங்களை அநாதை பிணமா விட்டுருவாங்க. எப்படியோ இதையெல்லாம் பாக்காம என் பாட்டி போய் சேந்துருச்சு. சரி நான் ரூமுக்கு போறேன். அம்மா எனக்கு இன்னைக்கு கல்யாணம் முடிவாகிருக்கு. பிரியாணி செஞ்சு வை”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

கீழே அமர்ந்து வெண்ணிலா அழுது கொண்டே இருக்க “இப்ப அழுது என்ன பயன் வெண்ணிலா. முன்னாடியே என் கிட்ட சொல்லியிருந்தா நான் எதாட்டும் செஞ்சிருப்பேன்ல?”, என்றார் சத்யாவதி.

“அம்மா நான் தோத்துப் போய்ட்டேன் மா. அதுவும் இவ கிட்ட போய் தோத்துப் போய்ட்டேன். இத்தனை வருஷம் அவ கிட்ட இருந்து எல்லாத்தையும் பிடுங்கின அப்ப அவ்வளவு சந்தோசப்படுவேன். அதுக்கெல்லாம் சேத்து வச்சு என்னை ஒரேடியா அழ வச்சிட்டா மா. வருண் எனக்கு வேணும் மா. அவன் என்னோட வருண் மா”, என்றாள்.

“எல்லாம் பேசிக்கலாம். நீ முதல்ல ரூமுக்கு வா”, என்று சொல்லி அழைத்துச் சென்றார்.

அன்றைய இரவில் தனது அறையில் இருந்த யாழி அதிபனை அழைக்க அவள் அழைப்பை பார்த்தாலும் அவன் எடுக்க வில்லை. இங்கே நடந்தது அவனுக்கு தெரியாது என்பதால் அவனும் அவளிடம் பேச பிரிய பட வில்லை. பிரியம் இல்லை என்று சொல்வதை விட எங்கே அவளிடம் பேசினால் அவளும் தன்னை சந்தேகப் பட்டு  விடுவாள் என்று பயந்தே போனை எடுக்காமல் இருந்தான்.

யாழி அவன் போனை எடுக்காத கடுப்பில் அமர்ந்திருக்க அப்போது வெண்ணிலா உள்ளே வந்தாள். “ஏய் எதுக்கு நீ இப்ப என் ரூமுக்கு வந்த? உன்னைப் பாத்தாலே எனக்கு அருவருப்பா இருக்கு”, என்று எரிச்சலுடன் முகம் சுழித்தாள் யாழி.

“என்னை என்ன வேணும்னாலும் சொல்லிக்கோ யாழி, பிளீஸ் என் வருணை மட்டும் எனக்கு கொடுத்துரு. அவன் தான் என்னோட உயிர். அவன் எனக்கு கிடைக்கணும்னு தான் நான் இப்படி எல்லாம் செஞ்சேன். உன் கால்ல கூட விழுறேன். தயவு செஞ்சு என் வாழ்க்கையை பிடுங்கிக்காத. வலிக்குது டி. வருண் எனக்கு இல்லைனா செத்துருவேன் டி. நான் அதி மாமா கிட்ட மன்னிப்பு வேணும்னாலும் கேக்குறேன் டி. இப்ப என்னோட திமிர் ஈகோ எல்லாமே என்னை விட்டு போயிருச்சு. என் வருண் இல்லைன்னா எனக்கு வாழ்க்கையே இல்லை யாழி”

“அப்படின்னா போய்ச் சாவு, நீ இல்லைன்னா யாருக்கு நஷ்டம்? நாளைக்கு எனக்கும் வருனுக்கும் நிச்சயதார்த்தம் நடக்க தான் போகுது. அதை பாத்து பாத்து நீ சாகனும் டி. அப்ப தான் கொதிக்கிற என் மனசு எனக்கு குளிரும்”, என்றாள் யாழி.

அதற்கு மேல் அவளிடம் என்ன பேச என்று தெரியாமல் அழுத படியே அறைக்குச் சென்றாள் வெண்ணிலா.

அதே நேரம் “அப்பா நான் என் பிரண்ட் கம்பெனிக்கு நாளைல இருந்து வேலைக்கு போகலாம்னு இருக்கேன். அவனும் வான்னு சொல்லிட்டான்”, என்றான் அதிபன்.

வேலை தேடும் மகனைக் கண்டு மனம் வலித்தாலும் இது தான் எதார்த்தம் என்று உணர்ந்தவர் “சரி கண்ணா உன் விருப்ப படி செய்”, என்றார்.

மூவரும் பேசிய படியே இரவு உணவை உண்டார்கள். “அந்த வீட்ல இருந்து ஃபோன் பண்ணிட்டே இருக்காங்க பா”, என்றார் புவனா.

“ஆமா மா, எனக்கும் வந்துச்சு. எனக்கு தான் பேச பிடிக்கலை”, என்றான்.

“வேணும்னா உங்க ரெண்டு பேருக்கும் புது சிம் வாங்கித் தரவா?”, என்று கேட்ட தந்தையை நெகிழ்ந்து போய் பார்த்தான்.

அடுத்த நாள் காலையில் வேணுகோபாலன், சவுந்தர்யா, விஷ்ணு, சேகர், இனியன் மற்றும் விஷ்வா அனைவரும் இவர்கள் வீட்டுக்கு முன்பு நின்றார்கள். அவர்களைக் கண்டதும் திகைத்த புவனா உடனே வீட்டுத் தலைவியாக “வாங்க மாமா, வாங்க அண்ணா, பசங்களா வாங்க டா. எல்லாரும் உள்ள வாங்க”, என்று அழைத்தாள்.

என்ன தான் அவர்கள் மீது கோபம் இருந்தாலும் வீடு தேடி வந்தவர்களை ஒன்றும் சொல்ல முடியாதே. “எல்லாரும் உக்காருங்க. நான் டீ எடுத்துட்டு வரேன்”, என்றார் புவனா.

“நாங்க குடிச்சிட்டு தான் மா வந்தோம். எங்க செழியனையும் அதிபனையும் காணும். கூப்பிடு மா, உங்க மூணு பேர் கிட்டயும் நாங்க மன்னிப்பு கேக்கணும்”

“என்ன மாமா பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க. இருங்க அவங்களை கூப்பிடுறேன்”, என்றவர் செழியனை அழைத்து வந்தார்.

அங்கே சத்தம் கேட்டு அதிபனும் வந்து விட்டான். அவன் வந்ததும் அங்கே அமைதியான சூழ்நிலை நிலவியது. யார் என்ன பேச என்று ஒருவருக்கும் ஒன்றும் புரிய வில்லை.

“அதிபா இந்த தாத்தாவை மன்னிச்சிரு  டா. அன்னைக்கு நான் உன் பக்கம் நின்னு உன் சார்பா பேசிருகக்கணும். என்னை மன்னிச்சிரு  டா”, என்று வேணுகோபாலன் கண் கலங்க அவன் கோபமெல்லாம் எங்கோ சென்றது.

“என்ன தாத்தா மன்னிப்பெல்லாம் கேட்டுகிட்டு. விடுங்க. நான் எதுவும் நினைக்கலை“, என்றவனுக்கு எப்படி இந்த மாற்றம்? வெண்ணிலா உண்மையை சொல்லி இருப்பாளா என்று தான் கேள்வி எழுந்தது.

“நேத்து யாழி மட்டும் உண்மையைச் சொல்லலைனா எங்களுக்கு உண்மை தெரியாமலே போயிருக்கும்”, என்று தாத்தா சொன்னதும் “யாழியா? அங்க இருக்குறவளுக்கு எப்படி உண்மை தெரியும்? அப்ப அவ என்னை நம்புறாளா? எனக்காக எல்லார்க் கிட்டயும் பேசினாளா?”, என்று எண்ணி அவன் அகமும் புறமும் மலர்ந்தது.

செழியன் தந்தையிடம் முருக்கிக் கொண்டு அமைதியாக இருக்க “செழியா நீயும் என்னை மன்னிச்சிரு  டா. அந்த நேரம் சூழ்நிலைக் கைதியா நின்னோமே தவிர அதிபன் அப்படி செஞ்சிருப்பான்னு நாங்க நம்பலை. எனக்கு அவன் குடிச்சது கோபம். தப்பா நினைக்காதப்பா”, என்றார்.

“சரி விடுங்க. இன்னும் பழசை பேசிக்கிட்டு”, என்றவருக்கும் மீண்டும் மகனைப் பற்றிய அலசலை அவர் விரும்ப வில்லை. உண்மை தெரிந்ததே போதும் அது எப்படி தெரிந்தால் என்பது தான் அவரது எண்ணம்.

“எல்லாருக்கும் இங்க தான் காலை சாப்பாடு. புவனா போய் ரெடி பண்ணு. சவுந்து மா உங்க அண்ணிக்கு ஹெல்ப் பண்ணு”, என்று செழியன் சொல்ல “சரிங்க அண்ணா”, என்று சொல்லி சென்றார் சவுந்தர்யா.

“சாப்பிட்டு நம்ம வீட்டுக்கு போகலாம் கண்ணு”, என்று வேணு கோபாலன் ஆரம்பிக்க “உங்க பேச்சை தட்டி பேசுறதா நினைக்க வேண்டாம் பா.  அங்க வரதை பத்தி எந்த பேச்சும் வேண்டாம். என் பொண்டாட்டி பிள்ளையோட நிம்மதி எனக்கு முக்கியம். அதே நேரம் நீங்களும் எனக்கு முக்கியம் தான். என்னைப் பாக்கணும்னா இங்க வந்துட்டு போங்க”, என்று முடித்துக் கொண்டார் செழியன்.

அப்போது இனியன் போனுக்கு சரஸ்வதியிடம் இருந்து அழைப்பு வந்தது.

அதை எடுத்து “என்ன மா?”, என்றான்.

“டேய் இனியா எங்க டா இருக்க?”

“பெரியப்பா வீட்டுக்கு வரதா சொல்லிட்டு தானே வந்தேன்”

“நீ உடனே கிளம்பி வா டா”

“எதுக்கு மா?”

“டேய் இங்க ஒரு பெரிய பிரச்சனை டா”

“ஏற்கனவே நடக்குறது பத்தாதா? அடுத்து என்ன?”, என்று அவன் எரிச்சலுடன் கேட்க அனைவரின் கவனமும் அவன் பக்கம் சென்றது.

“நாங்க எல்லாரும் இப்ப ஆஸ்பத்திரில இருக்கோம் டா”

“என்னது ஆஸ்பத்திரியா? எதுக்கு?”, என்று அவன் சத்தமாக கேட்க அனைவரும் அவனை தான் பார்த்தார்கள்.

தொடரும்..