“சொல்றேன் மேடம், எல்லாத்தையும் சொல்றேன்”, என்று ஆரம்பித்தவள் “இதோ இருக்காளே நீங்க மருமகளா தேர்ந்தெடுத்துருக்குற உத்தம புத்திரி அவளுக்கும் எங்க பெரிய மாமா பையன் அதி மாமாவுக்கும் இந்த வருஷம் கல்யாணம் பண்ணப் போறதா வீட்டு பெரியவங்க எல்லாம் ஒரு வருஷத்துக்கு முன்னாடியே முடிவு பண்ணினாங்க. இது உங்களுக்கு தெரியுமா தெரியாதா?”, என்று கேட்டதும் “எனக்கு தெரியாது மா”, என்றார் அதிர்வுடன்.

“உங்க பையனுக்கு தெரியுமா தெரியாதா?”

அனைவரும் அவனைப் பார்க்க தெரியும் என்பதாக தலை அசைத்தான். “என்ன குட்டா சொல்ற உனக்கு தெரியுமா? இன்னொருத்தருக்கு நிச்சயம் பண்ணின பொண்ணையா  நீ லவ் பண்ணின?”, என்று கேட்டார் ரேவதி.

“முதல்ல தெரியாது மா. லவ் பண்ணி ஒரு மாசத்துக்கு அப்புறம் தான் வெண்ணிலா சொன்னா. சரி வீட்ல பேசிக்கலாம்னு விட்டுட்டேன்”, என்று சொன்னவனை முறைத்தவர் “அறிவிருக்கா உனக்கு? ஏற்கனவே நிச்சயம் செஞ்ச பொண்ணை போய்.. உன்னை இப்படியா டா நான் வளத்தேன்?”, என்று கவலை கொண்டார் ரேவதி.

“உங்க பையன் என்ன மேடம் பண்ணுவார்? ஒரு பொண்ணைப்  பிடிச்சிருந்தது. போய்க் காதலைச் சொன்னார். இந்த மேடம் நல்லவளா இருந்திருந்தா எனக்கு வீட்ல கல்யாணம் பேசிட்டாங்க. நீங்க வேற ஆளைப் பாருங்கன்னு சொல்லிருப்பாங்க. இவ தான் யோக்கிய சிந்தாமணி ஆச்சே. பதிலே சொல்லாம உங்க மகனை சுத்தல்ல விட்டுருக்கா. அவர் காதல்ல தீவிரமாக இவளும் நல்லா லவ் பண்ணிட்டு அப்புறம் அவர் கிட்ட அதிபன் மாமா பத்தி சொல்லிருக்கா. உயிருக்கு உயிரா விரும்பின அப்புறம் அவரால எப்படி விட்டுக் கொடுக்க முடியும்?”, என்று அவனுக்கு சப்போர்ட்டாகவே பேசினாள் யாழி.

“யாழி மா என்னல்லாமோ பேசுறீங்களே? எங்களுக்கு ஒண்ணுமே புரியலையே டா. இவங்க விரும்பி பெண் கேட்டதா தான் மருமக சொன்னா. ஆனா இப்ப காதல் அது இதுன்னு பேசுற?”, என்று கேட்டார் வேணுகோபாலன்.

“சொல்றேன் தாத்தா, அன்னைக்கு நம்ம வீட்ல நடந்தது எல்லாமே முழுக்க முழுக்க இந்த மேடம் போட்ட டிராமா”, என்று சொல்ல அனைவரும் அதிர்ந்து போனார்கள்.

“என்ன எல்லாருக்கும் புரியலையா? என் அதி மாமா இவ கிட்ட தப்பா நடந்து கிட்ட மாதிரி செட் பண்ணது எல்லாமே இவ போட்ட டிராமா தான். எல்லாம் செஞ்சிட்டு அதி மாமாவை ரூமுக்கு பேசணும்னு வரச் சொல்லிட்டு உங்க அத்தனை பேர் கிட்டயும் நாடகம் போட்டுருக்கா”, என்று சொல்ல வெண்ணிலா பயத்துடன் தலை குனிந்தாள்.

மற்ற அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். “இப்படி ஒரு கேவலமான பெண் தன்னுடைய பெண்ணா?”, என்று சேகருக்கு அசிங்கமாக இருந்தது.

“சரி விடுங்க, இதை பெருசு பண்ணாதீங்க? அவ அந்த கல்யாணத்தை நிப்பாட்ட இப்படி செஞ்சிட்டா”, என்று மகளுக்காக சத்யாவதி சப்போர்ட் செய்ய “உங்களுக்கு இப்படி பேச வெக்கமா இல்லையா?”, என்றாள் யாழி.

“யாழி”, என்று அவர் கத்த “இந்த கத்துற வேலை எல்லாம் என் கிட்ட வச்சிக்காதீங்க? ஒரு வேளை  நீங்களும் உங்க பொண்ணு செஞ்ச வேலைக்கு கூட்டா?”, என்றாள்.

“அம்மாவுக்கு எதுவும் தெரியாது. நான் தான் அதிபன் மாமா கூட கல்யாணம் நடக்க கூடாதுன்னு அவர் மேல பழி போட்டேன்”, என்று தலை குனிந்து கொண்டே சொன்னாள் வெண்ணிலா.

“நீயெல்லாம் ஒரு பொண்ணா டி? உன் சுயநலத்துக்காக ஒருத்தன் மனசை உயிரோட கொன்னு ஒரு குடும்பத்தையே வீட்டை விட்டு விரட்டி அடிச்சு உனக்கு எல்லாம் நெஞ்சுல ஈரம் இல்லை? ஒரு வார்த்தை உங்களை பிடிக்கலைன்னு சொல்லிருந்தா மாமாவே இந்த கல்யாணத்தை நிறுத்திருப்பான் டி. அவனைப் போய் ரேபிஸ்ட் ரேஞ்சுக்கு பேச வச்சிட்டல்ல. நீயெல்லாம் ஒரு பொம்பளை து”, என்று துப்பியவள் ரேவதி புறம் திரும்பி “இப்படி ஒரு கிரிமினல் உங்க வீட்டுக்கு மருமகளா வரணுமா மேடம்”, என்றாள்.

“சத்தியமா வேண்டாம் மா. வேண்டவே வேண்டாம். இப்பவே இவ்வளவு அயோக்கியதனமா யோசிக்கிறவ நாளைக்கு என் தலைல கல்லை போட்டுக் கூட கொன்னுருவா போல”, என்று ரேவதி சொல்ல வருணோ அவளை வெறுப்பான பார்வை பார்த்தான்.

அந்த பார்வையை தாங்க முடியாமல் “சாரி வருண்”, என்றாள்.

“மன்னிக்க கூடிய தப்பை நீ பண்ணலை வெண்ணிலா”, என்று வருண் இருக்கத்துடன் சொல்ல வெண்ணிலா கண்கள் கண்ணீரை சொறிந்தது. அவள் கண்ணீர் கொஞ்சம் நிம்மதியை தந்தாலும் அது யாழிக்கு போத வில்லை போல?

“இவளுக்கு இது பத்தாது யாழி எதாட்டும் யோசி, அதி மாமாவுக்கு கொடுத்ததை விட பெரிய வலியை அவளுக்கு கொடுக்கணும்”, என்ற வெறி மட்டுமே யாழியின் மனதில் இருக்க “சாரிங்க இந்த பொண்ணு எங்க வீட்டுக்கு வேண்டாம். எங்க வீட்டுக்கு பணக்கார பொண்ணு வேணும்னு நான் எதிர் பாக்கலை. பண்பான பொண்ணு வேணும்னு தான் எதிர் பாத்தேன். இப்படி ஒரு பொண்ணு எங்க வீட்டுக்கு மருமகளா வந்தா எங்க நிம்மதி போயிரும்”, என்றார் ரேவதி.

“அதை உங்க பையன் சொல்லட்டும். அவருக்கு என்னை மட்டும் தான் பிடிக்கும். பிளீஸ் வருண் சாரி. இந்த ஒரு தடவை மட்டும் மன்னிச்சிருங்க”, என்றாள் வெண்ணிலா.

“எங்க அம்மா சொன்னா நான் கேப்பேன் டி. இப்பவே இவ்வளவு திருட்டுத் தனம் உன் கிட்ட இருக்கு. அது என்ன உங்க பையன் சொல்லட்டும்ன்னு சொல்ற? அவங்க தான் சொல்லணும்?”, என்று வருண் சொன்னதும் அவள் காதல் மொத்தமாக அங்கே அடி வாங்கியது.

“எங்க அம்மா மட்டும் இல்லை டி, நானே சொல்றேன். எனக்கு நீ வேண்டாம். காதல்னா உண்மை இருக்கணும். என்னோட காதலுக்காக நீ இதைச் செஞ்சிருந்தா கூட இத்தனை நாள்ல நீ என் கிட்ட இதைச் சொல்லியிருக்கணும். எனக்கு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அதிபன் அண்ணா கால்ல விழுந்து கூட மன்னிப்பு கேட்டுருப்பேன் உனக்காக. உன் மனசுல இப்பவே இவ்வளவு வன்மம் இருக்கும்னு எனக்கு தெரியாது. அம்மா வாங்க போகலாம்”, என்றான் வருண்.

“நாங்க கிளம்புரோம்”, என்று ரேவதி சொல்ல “மேடம் ஒரு நிமிஷம்”, என்றாள் யாழி.

அனைவரும் அவளைப் பார்க்க “என்னை உங்க மருமகளா ஏத்துக்குறீங்களா?”, என்று கேட்டாள் யாழி. அவள் கேள்வியில் அனைவரும் அதிர்ந்து நிற்க வெண்ணிலாவுக்கோ இதயமே வெடித்தது போல இருந்தது. கடைசியில் அவ்வளவு தானா? மொத்தமாக தன்  வாழ்க்கை முடிந்து விட்டதா என்று பதறிப் போனாள்.

வருனுக்கும் அதிர்ச்சி தான் என்றாலும் அன்னையிடம் அவள் பேசும் போது என்ன சொல்ல என்று தெரியாமல் அவன் அமைதியாக இருக்க ரேவதிக்கும் என்ன சொல்ல என்று தெரிய வில்லை.

அனைவரும் அமைதியாக இருக்க “நான் முழு மனசா தான் சொல்றேன் மேம். எனக்கு உங்களையும் வருணையும் பிடிச்சிருக்கு. உங்களுக்கு ஓகேனா வர முகூர்த்தத்துல எனக்கும் வருணுக்கும் கல்யாணம் நடக்கும்”, என்றாள் தெளிவாக. யாருடைய முகத்திலும் ஈ ஆட வில்லை.

“உன்னை மாதிரி ஒரு பொண்ணை மிஸ் பண்ண நான் பைத்தியமா யாழி? எனக்கு சம்மதம்”, என்றார் ரேவதி.

“அம்மா”, என்றான் வருண்.

“நீ தேர்ந்தெடுத்த பொண்ணு தப்பான பொண்ணா இருந்தா நான் தேர்ந்தெடுக்குற பொண்ணை நீ கட்டிக்க தான் செய்யணும் குட்டா”, என்று சொல்லி அவன் வாயை அடைத்தார்.

அரை உயிராக நின்ற வெண்ணிலா கண்ணில் தவிப்புடன் வருணைப் பார்க்க “எங்க அம்மாவுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் யாழி. நம்ம கல்யாணம் பண்ணிக்கலாம். எல்லாருமே லவ் பண்ணவங்களை தான் கல்யாணம் செஞ்சுக்கணும்னு இல்லையே”, என்று அவன் சொல்ல வெண்ணிலா உள்ளுக்குள் செத்தே போனாள்.

வருண் அப்படிச் சொன்னதை அவளால் நம்பவே முடிய வில்லை. “எனக்கும் நீ மருமகளா வந்தா சந்தோஷம் யாழி மா.  இன்னைக்கு எதுவும் பேச வேண்டாம். நாளைக்கு வந்து உங்க அம்மா அப்பா கிட்ட கல்யாணம் பத்தி பேசுறோம்”, என்று சொல்லி விட்டு ரேவதி மற்றும் வருண் கிளம்பி விட்டனர்.

அவர்கள் சென்றதும் மழை அடித்து ஓய்ந்தது போல இருந்தது வீடு. வெண்ணிலா தரையில் தளர்ந்து போய் அமர்ந்து அழுது கொண்டிருக்க அதை அவ்வளவு திருப்தியாக பார்த்தாள் யாழி.