அத்தியாயம் 9

கடற்கரை காற்றில் பதியும் 

காலடி தடங்கள் சொல்லும் 

காதலின் வரலாற்றை!!!

யாழி வீட்டுக்கு வந்ததும் அனைவரையும் விசாரிக்க “எல்லாரும் உள்ள தான் டா இருக்காங்க. இதோ கூப்பிடுறேன்”, என்று சொன்ன சவுந்தர்யா “என்னங்க யார் வந்திருக்கான்னு பாருங்க, அப்பா அண்ணி சின்ன அண்ணா எல்லாரும் வாங்க”, என்று அழைத்ததும் இலக்கியா முதற் கொண்டு அனைவரும் ஹாலுக்கு வந்தார்கள்.

இலக்கியா கையில் இருந்த குழந்தையை வாங்கிய யாழியின் கோபம் சிறிது குறைந்தது. “ஹாய்  செல்லக்குட்டி அத்தையை மாதிரியே இருக்கீங்களே. என் பட்டுக்குட்டி டா தங்கம் நீ. உங்க அப்பா உன்னை பாக்க வந்தாரா டி? என்னை மட்டும் கொட்டிக் கொட்டி வைப்பார். இனி அவர் என்னைக் கொட்டினா நான் பதிலுக்கு உன்னைக் கொட்டி உங்க அப்பாவை பயமுறுத்துவேன். நீயும் யாழியா டி? எனக்கு போட்டியா வந்துருக்கியா லட்டு. அத்தை உனக்கு நிறைய டிரஸ், பொம்மை எல்லாம் வாங்கிட்டு வந்துருக்கேன் டா செல்லம்”, என்று குழந்தையை கொஞ்சினாள்.

அங்கு வந்த அனைவரும் அவளிடம் நலம் விசாரித்தாலும் அனைவரின் மனதிலும் அதிபனைப் பற்றி கேட்பாளா? கேட்டால் என்ன சொல்ல என்ற எண்ணம் தான் இருந்தது.

“நீ என்ன இப்ப போல வந்திருக்க? இன்னும் ரெண்டு வாரத்துல பரீட்சை வேற இருக்கு? படிப்பு முக்கியம் இல்லையா? என்னமோ அங்க போய் தான் படிக்கணும்னு வீம்பு பிடிச்சிட்டு போன?”, என்று கேட்டார் சத்யாவதி.

“படிப்பு முக்கியம் தான் பெரியம்மா. ஆனா பாருங்க என் அருமை அக்காவுக்கு இன்னும் ரெண்டு வாரத்துல தான் கல்யாணம் வச்சிருக்கீங்க. அதுக்கு நான் வராம இருந்தா எப்படி? அதான் நான் இப்பவே வந்துட்டேன். பரீட்சை போனா போய்ட்டு போகுது. ஆனாலும் கல்யாணத்துக்கு எதுக்கு நீங்க என்னை கூப்பிடலை?”, என்று கேட்க அனைவரும் எச்சில் விழுங்கிய படி தான் பார்த்தார்கள். சத்யாவதி பதிலே சொல்ல வில்லை. இப்போது யாழி அவரை ஏளனமாக பார்த்தாள்.

“என்ன எல்லாரும் அமைதியாகிடீங்க? ஆமா எங்க கல்யாண பொண்ணு? அந்த அம்மா எங்க போனாங்க?”, என்று கேட்ட படி கண்களை சோழியாக சுழற்றினாள்.

“அவ.. அவளுக்கு நிச்சயம் பண்ணின மாப்பிள்ளையோட ஷாப்பிங்க் போயிருக்கா”, என்று பெருமையாக சொன்னார் சத்யாவதி.

“வாறே வா, செம பெரியம்மா. ஷாப்பிங்கா? யார் எப்படி போனாலும் பரவால்ல. அவளுக்கு அவ சந்தோஷம் தானே முக்கியம்? நல்லது தான்”

“என்ன டி வந்ததுல இருந்து குதற்கமாவே பேசிட்டு இருக்க?”, என்று கேட்டார் சரஸ்வதி.

“சரி நேரடியாவே கேக்குறேன் அத்தை? எங்க பெரிய மாமா பெரியத்தை அதி மாமா யாரையும் காணும்? எங்க அவங்க?”

“தெரிஞ்சிக்கிட்டு தானே வந்துருக்க அப்புறம் என்ன?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.

“வாங்க சின்னமாமா உங்க கிட்ட ஒண்ணு கேக்கணுமே? நீங்க தான் நம்ம வீட்டு நாட்டாமையா? யார் என்ன தப்பு பண்ணினாலும் சும்மா லெஃப்ட் அண்ட் ரைட் வாங்குவீங்களாமே? அப்படியா?”, என்றாள் நக்கலாக.

“தப்பு செஞ்சா அடிக்க தான் செய்வாங்க”, என்று யாவரும் நக்கலாக சொல்ல “ஹா  ஹா சரி தான். நீங்களும் செமையா வாங்கினீங்க போல?”, என்று யாழி பதிலுக்கு கேட்க அவர் முகம் கருத்துப் போனது.

அவள் பேச்சு கொஞ்சம் ஒரு மாதிரி இருக்க “பாப்பா என்ன டா கொஞ்சம் பொறுமையா இரு”, என்றார் சேகர்.

“நீங்க எதுவுமே பேச வேண்டாம் சேகரப்பா. இந்த வீட்ல உங்களுக்கோ உங்க உணர்வுகளுக்கோ எந்த மதிப்பும் இல்லைன்னு எனக்கு நல்லாவே தெரியும்”, என்றதும் அவர் அமைதியாகி விட்டார். அவள் அவருடைய நிலைமையை கவலையாக தான் சொன்னாள். ஆனால் விவரம் தெரியாதவர்கள் அவள் சேகரை மரியாதை இல்லாம பேசுவது போல இருக்க “அம்மு என்ன மா மரியாதை இல்லாம பேசுற?”, என்றார் விஷ்ணு.

“அப்பா பிளீஸ் யாரும் இந்த சமாதான படுத்துற வேலையை எல்லாம் செய்யாதீங்க. எனக்கு எரிச்சலா வருது”, என்றாள் கடுப்புடன்.

“இங்க பாரு யாழி உனக்கு உன் மாமன் உசத்தி தான். அதுக்குன்னு அவன் பன்றது எல்லாம் சரின்னு ஆகிறாது. அவன் ஒரு அயோக்கியன். அவனால பாதிக்கப்பட்டது என் பொண்ணு தான்”, என்றார் சத்யாவதி.

“இன்னொரு தடவை என் மாமாவை அயோக்கியன்னு சொன்னா மரியாத கெட்டுரும் பெரியம்மா. அதி மாமா அயோக்கியன்னா உங்க செல்ல மக பொறுக்கியிலயும் கேடு கெட்ட பொறுக்கி. சுயநல பிசாசு”, என்றாள்.

சரியாக அந்த நேரம் உள்ளே வந்தனர் வெண்ணிலாவும் வருணும். அவர்களை கண்டு அனைவரும் அமைதியாக இருக்க யாழியைக் கண்ட வெண்ணிலாவோ அதிர்ந்து போனாள். அதுவும் கூடவே இருக்கும் வருணைக் கண்டு இன்னும் பயமாக இருந்தது.

அவளது கெட்ட நேரமோ என்னமோ அவர்களுக்கு பின்னே வந்து நின்ற ரேவதி “உள்ள வரலாமா?”, என்று கேட்டார். ரேவதி வருகிறார் என்று அவளுக்கு தெரியும் தான். ஆனால் இப்போது அவர் யாழியை சந்தித்தால்.. என்ன ஆக போகிறதோ என்று நடுங்கிப் போய் நின்றாள்.

“வாங்க சம்பந்தி வாங்க வாங்க, மாப்பிள்ளை உள்ள வாங்க”, என்று சத்தமாக அழைத்த சத்யாவதி “யாழி எதுனாலும் நாம அப்புறம் பேசிக்கலாம்”, என்று அடி குரலில் அவளை எச்சரித்தார்.

அதற்கெல்லாம் அசறுபவள் யாழி இல்லையே. வெண்ணிலா காலை எடுத்து உள்ளே வைக்க வர “ஏய் அங்கயே இரு டி. உள்ள காலை எடுத்து வச்ச வெட்டிருவேன் பாத்துக்கோ”, என்று கோபமாக கத்திய படியே வெண்ணிலா அருகே சென்றாள் யாழி.

உண்மை அனைவருக்கும் தெரிந்து விடுமோ என்ற பயத்தில் நடுங்கிப் போய் அசையாமல் இருந்தாள்  வெண்ணிலா.

“யாழி என்ன மா இது? எதுக்கு இவ்வளவு கோபமா இருக்க?”, என்று குழப்பமாக கேட்டார் ரேவதி.

“சாரி மேம், உங்க முன்னாடி இப்படி பேசுறது தப்பு தான். ஆனா இதுல நீங்களும் சம்பந்தப்பட்டதுனால நான் பேசுறதை நீங்க கேட்டு தான் ஆகணும்”, என்றாள்.

“முதல்ல அவங்களை உள்ள கூப்பிடு யாழி மா”, என்று சொன்னார் வேணுகோபாலன்.

அனைவரும் உள்ளே வந்ததும் “எப்ப அமெரிக்கால இருந்து வந்த யாழி? படிப்பு எல்லாம் எப்படி போகுது? உங்க அக்கா கல்யாணத்துக்கு வந்தியா?”, என்று உண்மையான அன்புடன் கேட்டார் ரேவதி.

“எங்க யாழியை உங்களுக்கு தெரியுமா?”, என்று கேட்டார் சவுந்தர்யா.

“ஏன்  தெரியாம அவ என்னோட செல்ல மாணவி. எந்த அளவுக்கு செல்லம்னா என் வீட்டுக்கு மருமகளா இவ வரக் கூடாதான்னு நினைக்கிற அளவுக்கு செல்லம்”, என்று சொன்ன ரேவதி முகத்தில் உண்மையான அன்பு தான் இருந்தது. அதைக் கண்டு சத்யாவதி மற்றும் வெண்ணிலா முகம் கருத்தது.

“நான் உங்க கிட்ட ஒரு விஷயம் கேக்கலாமா மேடம்?”, என்று கேட்டாள் யாழி.

“கேளு டா உனக்கு இல்லாத உரிமையா? இப்ப சொந்தமா வேற ஆகப் போறோம்?”

“ஏன் மேடம் உங்க பையனுக்கு வேற நல்ல பொண்ணே கிடைக்கலையா? இவளை மாதிரி ஒரு கேடு கெட்ட கிரிமினல் தான் கிடைச்சாளா?”, என்று கேட்டாள். அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள்.

“ஏய். என்ன வார்த்தை பேசுற யாழி? அடி பிச்சிருவேன் பாத்துக்கோ”, என்று அவளை அதட்டினார் சவுந்தர்யா.

“என்னை அடிக்கப் போறியா மா? அடி தாராளமா அடி? ஆனா இன்னைக்கு பொங்கிக்கிட்டு வர நீ அன்னைக்கு எதுக்கு சும்மா இருந்த? இவளைச் சொன்னதும் பொத்துகிட்டு வர? இந்த நாய் என் மாமாவை கேவலமான பழி போட்டு வீட்டை விட்டு அனுப்பும் போது உன் கோபம் எங்க மா போச்சு?”, என்று கேட்டதும் சவுந்தர்யா அமைதியாக இருந்து விட்டார். அவள் கேட்பது சரி தானே? அன்று அனைவரும் அமைதியாக தானே இருந்தார்கள்.

“என்ன ஆச்சு மா? என்ன தான் நடந்துச்சு? நீ இவ்வளவு கோப படுற ஆள் இல்லையே? உன் சிரிச்ச முகத்தை மட்டும் தான் டா நான் பாத்துருக்கேன்”, என்றார் ரேவதி. வருண் கூட குழப்பத்திலே நின்றிருந்தான். எதற்கு யாழி வெண்ணிலாவை திட்ட வேண்டும் என்று கேள்வி வந்தது அவனுக்கு.