இந்த மனம் ஒன்று தான் கெட்ட அழுக்குகளை புதய வைத்திருக்கும் அழகான சாக்கடை என்று தான் அவளுக்கு தோன்றியது.
அன்றில் இருந்து சேகரை அவள் பார்க்கும் கண்ணோட்டமே மாறிப்போனது. சித்தப்பா என்று பாசமாக அவருடன் எப்பவும் ஒட்டிக் கொள்வாள் தான். ஆனால் இப்போதோ சேகரப்பா என்று அழைத்து இன்னும் அதிகமாக அவருடன் ஒட்டிக்கொண்டாள்.
சத்யாவதி அங்கே இல்லை என்றால் போதும் “சேகரப்பா தலை ரொம்ப வலிக்கு. கொஞ்சம் பிடிச்சு விடுறீங்களா?”, என்று கேட்டு அவர் மடியில் படுத்துக் கொள்வாள்.
அவள் அவர் அருகே போனால் போதும் பின்னாடியே அதிபனும் வந்து விடுவான். அவர்களை கண்டு இலக்கியா, இனியன், விஷ்வா அனைவரும் அங்கே இருக்க சேகரின் தனிமை ஓடியே விடும். குழந்தைகள் அரட்டை அடிப்பதை ரசிப்பவர் கடைசி வரை அவள் தலையை பிடித்து விட்ட படி தான் இருப்பார்.
சேகரின் முகம் கொஞ்சம் சோர்ந்த மாதிரி இருந்தாலே போதும் “புவி அத்தை எனக்கும் சேகரப்பாவுக்கும் இஞ்சி டீ போட்டுத் தரீங்களா பிளீஸ்?”, என்று கேட்டு வாங்கி அவரையும் குடிக்க வைப்பாள்.
பெற்றால் தான் பிள்ளையா என்றும் வயதில் மூத்தவர்களாக இருந்தால் தான் தாயாக முடியுமா என்று ஒவ்வொரு நொடியையும் அவருக்கு உணர்த்திக் கொண்டிருந்தாள் யாழி. அவருக்கு மகளா அன்னையா என்று கூட தெரியாமல் அவளுடன் அவருக்கு ஒரு பிணைப்பு இப்போது வரை இருந்து கொண்டே தான் இருக்கிறது. அவரது இருக்கத்தை கரைத்துக் கொண்டிருந்தாள். அவரது தனிமை இருளுக்கு ஒளியாக இருந்தாள் யாழி.
சில நேரம் சத்யாவதி இருப்பதை மறந்து அவரிடம் செல்லம் கொஞ்சுவாள் தான். ஆனால் யார் இருந்தாலும் இல்லை என்றாலும் சேகரின் அன்பு மட்டும் மாறாதது. இரவில் அறையில் சத்யாவிடம் அசிங்கமாக பேச்சு வாங்கினாலும் அமைதியாக இருந்து விடுவார்.
இப்போது வரை பிள்ளைகள் விஷயத்தில் வாய் இருந்தும் ஊமையாகிப் போனார் சேகர். அதனால் தான் மகளுக்கு வந்த வரன் பற்றிக் கூட யாரோ ஒருவனுக்கு தகவல் சொல்வது போல சொன்ன மனைவியை அவரால் ஒன்றும் செய்ய முடிய வில்லை.
இதை எண்ணிய படியே இருந்த சேகர் பாக்கெட்டில் இருந்த மொத்த சிகரட்டும் காலியான பிறகு தான் கீழே சென்றார். பணம் பதவி மரியாதை அந்தஸ்து எல்லாம் இருந்தாலும் அவர் ஒரு அநாதை தான்.
அடுத்து அவர்கள் பெண் பார்க்க வரும் விஷயம், வேணுகோபாலுக்கு தெரிய வர அவருக்கோ பல குழப்பம். அதை அவர் மறுக்கும் முன்னே “இந்த வீட்ல என் பொண்ணுக்கு பெரிய அநியாயம் நடந்திருக்கு பா. இனி என் பொண்ணை உங்க பெரிய பேரனுக்கு கட்டிக் கொடுக்க எல்லாம் நினைக்காதீங்க. கல்யாணமே வேண்டாம்னு சொன்ன என் பொண்ணைக் கஷ்ட பட்டு சம்மதிக்க வச்சிருக்கேன். இதுல நீங்க தலையீடாதீங்க”, என்று நேரடியாக சத்யாவதி சொல்லி விட அதற்கு அமைதியாக இருந்த சேகரைப் பார்த்தவர் “உங்க பொண்ணு, உங்க உன் விருப்பம் போல பண்ணிக்கோங்க மா”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார். மூத்த மகன் குடும்பத்துடன் வெளியே சென்றதுமே அந்த பெரிய மனிதர் தளர்ந்து தான் போனார்.
வீட்டில் இருந்த அனைவருக்கும் வெண்ணிலாவை பெண் பார்க்க வரும் விஷயம் சற்று அதிர்ச்சி தான்.
“என்னங்க அதி விஷயத்துல ஒரு முடிவு வராம இப்பவே இப்படி பண்ணுறது எனக்கு சரியா படலைங்க”, என்றார் சவுந்தர்யா.
“நாம என்ன பண்ண முடியும் சவுந்து மா? உங்க அப்பா சொல்லியே கேக்கலை. அவங்க பொண்ணு வாழ்க்கை நம்ம தலையிடக் கூடாது டா”, என்று சொல்லி விட்டார் விஷ்ணு.
மாலை ரேவதியும் வருணும் வரும் போது அனைவரும் சந்தோஷமாக வரவேற்றார்கள். அதுவும் ஜம்மென்று தயாராகி இருந்த வெண்ணிலாவின் முகத்தில் இருந்த மலர்ச்சி இலக்கியாவுக்கு சந்தேகத்தை கிளப்பியது. தனா அவளை பெண் பார்க்க வரும் போது அவள் முகத்தில் இருந்த அதே உணர்வுகள் இப்போது வெண்ணிலாவிடமும் இருந்தது. அப்படி என்றால் இவ்வளவு நாள் அதிபன் அண்ணா தான் மாப்பிள்ளை என்றது ஒரே நாளில் மாறிப் போய் விடுமா என்று எண்ணிக் கொண்டாள்.
“என்னோட பேர் ரேவதிங்க. நான் யாழி படிச்ச காலேஜ்ல தான் வேலை பாக்குறேன். கவர்ன்மென்ட் டாக்டரும் கூட. என் பையன் வருண் இன்ஜினியர். நாம இனி சொந்தக்காரங்களா ஆகப் போறோம். அதனால ஒளிச்சு மறைக்க எதுவும் இல்லை”, என்று ஆரம்பித்தவர் தன்னைப் பற்றி, அவரது கணவன் பற்றி, மகனுக்கு என்னவெல்லாம் சொத்தாக வாங்கி வைத்திருக்கிறார் என்பது வரை அனைத்தையும் சொல்லி விட்டார்.
அவருடையே நேர்மை அங்கே இருந்த அனைவருக்குமே பிடித்து தான் போனது. வேணுகோபாலும் சகஜமாக பேச ஆரம்பித்தார். “இனி உனக்கு உன் பையன் மட்டும் இல்லை மா. இந்த மாமாவும் இருக்கேன். இனி நீயும் என் குடும்பத்து பொண்ணு தான்”, என்றார் வேணுகோபால். ரேவதியும் நெகிழ்ந்து போனார்.
அப்போது “ஆமா கேக்கணும்னு நினைச்சேன். எல்லாரும் இருக்கீங்க? அதிபன் அண்ணா எங்க?”, என்று கேட்டது சாட்சாத் மாப்பிள்ளை வருணே தான்.
அனைவரும் என்ன சொல்ல என்று திகைக்க “என் மருமகளோட அண்ணா வீட்டுக்கு குடும்பமா போயிருக்காங்க தம்பி”, என்றார் வேணு கோபால்.
பழைய விஷயங்கள் காதல் எல்லாம் சொல்லாமலே அவர்களின் திருமணம் இன்னும் இரண்டு வாரத்தில் என முடிவு செய்யப் பட்டது. வெண்ணிலாவுக்கு சந்தோஷம் தாங்க முடிய வில்லை.
“சரிங்க மாமா நாங்க கிளம்புறோம்”, என்று சொன்ன ரேவதி வேணுகோபாலனிடம் ஆசீர்வாதம் வாங்கி விட்டே சென்றார். “நல்ல குடும்பம்”, என்று எண்ணிக் கொண்ட வேணுகோபாலனுக்கு மூத்த மகனின் குடும்பம் மனதில் வந்து அவரை அலைக்கழித்தது. நிம்மதி இல்லாமல் தவித்தார்.
அவர்கள் சென்றதும் உடனே தன்னுடைய அறைக்கு வந்த இலக்கியா இனியனை அழைத்து “அண்ணா உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும். யாழி இருந்தா கொஞ்சம் தனியா வாயேன்”, என்றாள்.
“அவளுக்கு எல்லாம் தெரியும் டி. அதும் அன்னைக்கே நீ பேசினதைக் கேட்டுட்டா”
“ஐயோ”, என்று அவள் பதற “அத விடு. இப்ப அவ ஓகே தான். சரி நீ என்ன சொல்ல வந்த?”, என்றான்.
“இன்னைக்கு இங்க ஒரு விஷயம் நடந்துச்சு. எனக்கு ரொம்ப அதிர்ச்சியா இருக்கு டா. வெண்ணிலாவை அவ கூட வேலை பாக்குற வருணுக்கு பொண்ணு கேட்டு வந்தாங்க. கல்யாணமும் ரெண்டு வாரத்துல பிக்ஸ் ஆகிருச்சு”
“அவ ஏன் கவலைப் பட போறா? அவ நினைச்சது தான் நடந்துட்டே. நாங்க நாளைக்கு ஊருக்கு கிளம்புறோம். நீ பாப்பாவ பாத்துக்கோ”, என்று சொல்லி அவளைக் குழப்பி விட்டு போனை வைத்தவன் யாழி மற்றும் விஷ்வாவிடம் அனைத்தையும் சொன்னான்.
இருவரும் ஏற்கனவே இதை அனைத்தையும் எதிர் பார்த்து தான் இருந்தார்கள். இதை எல்லாம் யோசித்த படி பிளைட்டில் அமர்ந்திருந்தாள் யாழி. அவளுக்கு இப்போது பல தெளிவு வந்திருந்தது. கை காயமும் லேசாக ஆறி இருந்தது.
இனியன் மற்றும் விஷ்வாவுடன் பிளைட்டில் அமர்ந்திருந்த யாழி இது வரை நடந்ததையும் அடுத்து நடக்க போறதையும் தெளிவாக திட்டமிட்டாள். அவளது அமைதி மற்ற இருவருக்கும் தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.
தாங்கள் அறிந்த வகையில் அதிபனுக்கு ஒன்று என்றால் யாழி எந்த எல்லைக்குமே செல்வாள் என்பதால் வெண்ணிலாவை எண்ணி கவலை தான் வந்தது. கூடவே எது நடந்தாலும் அது அவளுக்கு தேவை தான் என்ற எண்ணமும் வந்தது.
அவர்கள் அனைவரும் வீட்டுக்கு வந்த போது வீடே அமைதியாக இருந்தது. மூவரையும் முதலில் கண்ட சவுந்தர்யா “ஹே யாழி மா நீ வறேன்னு சொல்லவே இல்லை”, என்று சந்தோஷமாக அழைத்தாள்.
“திடீர்னு கிளம்புனதுனால சொல்லலை மா. எங்க எல்லாரையும்?”, என்று அமைதியாக கேட்டாள்.
அவளின் எல்லையில்லா அமைதி பேராபத்துக்கு முன்னால் வரும் அமைதி என்று விஷ்வா மற்றும் இனியனுக்கு புரிந்தது.