சவுந்தர்யா அத்தான் என்று அழைத்து சாதாரணமாக பேசினாலும் சத்யாவதிக்கு தவறாக தான் பட்டது. சவுந்தர்யாவுக்கு விஷ்ணுவுடன் திருமணம் ஆனதும் திருந்துவாள் என்று தான் சேகர் நினைத்தார்.
சவுந்தர்யா விஷ்ணுவுடன் முதலிரவு அறைக்கு அனுப்ப பட்டிருக்க அந்த நேரத்தில் “என்னங்க?”, என்று அழைத்தாள் சத்யாவதி.
இப்போது நிம்மதியாக இருப்பாள் என்று எண்ணி “சொல்லு மா”, என்றார்.
“உங்களுக்கு கஷ்டமா இல்லையா?”
“எதுக்கு சத்யா?”
“உங்களுக்கு பிடிச்ச ஆள் இன்னொரு ஆள் கூட ..”, என்று சொல்ல வர அடுத்த நொடி அவளை ஓங்கி அரைந்து விட்டார் சேகர்.
அவளை அடித்ததில் அவர் தான் பதறிப் போய் “சாரி மா கோபத்துல கை நீட்டிட்டேன்”, என்று மன்னிப்பு வேண்ட அதை எல்லாம் பெரிதாக எண்ணாமல் “இந்த கோபம் என் மேல வந்தது இல்லைங்க, அவ உங்களுக்கு கிடைக்கலைன்னு தான் கோபமே? அவளுக்கும் உங்களை தாங்க பிடிக்கும். எதுக்கு சொல்றேன்னா அவ புருஷன் கருப்பா இருக்கார்”, என்று சொல்லி வஞ்சமாக புன்னகைக்க மீண்டும் ஒரு முறை செத்துப் போனார் சேகர்.
உண்மையில் சொல்ல போனால் மனதளவில் சத்யாவதி அவரை கொடுமை செய்ய ஆரம்பித்தார்.
தங்களுக்கு என்று வெண்ணிலா பிறந்த பிறகும் அவளிடம் மாற்றமே இல்லை. அதுவும் வெண்ணிலாவுக்கு ஒரு வயதாக இருக்கும் போது “எனக்கு பையன் வேணும்”, என்று அடமாக சத்யாவதி கேட்க “இன்னும் ஒரு வருஷம் போகட்டும் டி. உடனே குழந்தைன்னா என்னை அசிங்கமா பாப்பாங்க டி”, என்றார்.
“நான் கேட்டா இப்படி தான் சொல்லுவீங்க. இதே அவ கேட்டா.. “
“சி”, என்று அருவருத்துப் போனவர் அதன் பின் சத்யாவதி என்ன சொன்னாலும் சரி என்று மட்டும் ஒற்றை வார்த்தையில் நிறுத்திக் கொண்டார்.
சவுந்தர்யாவுக்கு தன்னால் ஒரு நல்ல மனிதர் தினம் தினம் நெருப்பில் வாழ்கிறார் என்று தெரியாமல் தான் போனது.
“டீ கொண்டு வரவா அத்தான்? சாப்பாடு எடுத்து வைக்கவா அத்தான்?”, என்று மரியாதையாக கேட்டு விட்டு நகர்ந்து விடுவாள் சவுந்தர்யா. அவர் மேல் விஷ்ணு உயிரையே வைத்திருந்தார்.
அவர்களின் காதலுக்கு சாட்சியாக யாழி பிறந்ததும் “என்னங்க வாங்க ஆஸ்பத்திரிக்கு போய் தங்கச்சியையும் குழந்தையையும் பாத்துட்டு வருவோம்”, என்று அழைத்தார் சத்யாவதி.
“இன்னைக்கு என்ன வருமோ?”, என்று பயந்து கொண்டு தான் போனார் மனுஷன்.
அன்று இரவு அறைக்குள் வந்ததும் அவர் பயந்தது போலவே “நான் கூட குழந்தை உங்க ஜாடைல இருக்குமோன்னு நினைச்சேங்க. ஆனா அவ அம்மா மாதிரியே இருக்கா. அப்படியே எங்க அம்மா சாயலும் தெரியுது”, என்று பெருமையாக தன் கண்டு பிடிப்பைச் சொல்ல உடனே சாவு வேண்டும் என்று வேண்ட ஆரம்பித்தது சேகரின் உள்ளம்.
“உனக்கு கருணைன்னு ஒண்ணு இருந்தா இந்த மனுஷ வாழ்க்கைல இருந்து எனக்கு விடுதலை கொடு. உனக்கு வருஷம் வருஷம் மாலை போடுறேன்”, என்றவர் பழனிக்கு மாலை போட ஆரம்பித்தார்.
அனைவரும் நன்றாக வாழ வேண்டும் என்று சாமி கும்பிட அவர் மட்டும் மரணத்தை யாசகமாக கேட்டார். ஆனால் கடவுளோ உன் வினைபயன் இன்னும் முடியவில்லை. நீ என்னிடம் வருவதற்கான நேரம் வர வில்லை என்று சொல்லி அவர் வேண்டுதலை கிடப்பில் போட்டார்.
நடப்பது நடக்கட்டும் என்று யாருக்கும் தெரியாமல் அதே வீட்டில் சந்நியாசியாக அவர் வாழ ஆரம்பித்து பல வருடங்கள் ஆகிறது. அது யாருக்கும் தெரியாது என்று தான் நினைத்தார்.
உண்மையிலே அது யாருக்கும் தெரியாது தான். அவருடைய பிள்ளைகளுக்கு கூட அவர்களின் சண்டை தெரியாது. ஆனால் இதை முதலும் கடைசியுமாக அறிந்து கொண்டது யாழி மட்டுமே. அதை அவளும் வெளியே சொல்ல வில்லை. அவளுடைய அதிபன் மாமாவிடம் கூட சொல்ல வில்லை.
ஒரு நாள் அவர்கள் வீட்டுத் தோட்டத்தில் வைத்து வெண்ணிலாவுக்கு பிறந்த நாள் கொண்டாடப் பட்டுக் கொண்டிருந்தது. அப்போது யாழி பத்தாவது படித்துக் கொண்டிருந்தாள்.
பிறந்த நாள் அன்று அதிபனை செழியன் தான் ஏதோ வாங்க வேண்டும் என்று கடைக்கு அனுப்பி இருந்தார். அது தெரியாத யாழி அதிபனை தேடி வீட்டுக்குள் வந்தாள். அதிபன் அறைக்கு அவள் சென்று கொண்டிருக்கும் போது தான் “இப்ப எதுக்கு என் பொண்ணுக்கு மாதிரியே அவளுக்கும் செயின் வாங்கி இருக்கீங்க?”, என்று காட்டு கத்தலாக கத்தும் தன் பெரியம்மா குரலில் நடுங்கி போய் அசையாமல் நின்றாள்.
தன்னுடைய பெரியம்மா இவ்வளவு ஆங்காரமாக சத்தம் போடுவாரா என்று அவளுக்கு அவ்வளவு அதிர்ச்சியாக இருந்தது.
“இப்ப எதுக்கு சத்யா கத்துற? யாழியும் நம்ம வீட்டு பொண்ணு தானே டி? அதுவும் குழந்தை டி. நம்ம வெண்ணிலாவுக்கு போடும் போது அவளுக்கும் போட்டா சந்தோஷப் படுவா தானே? போன வாரம் இலக்கியாவுக்கும் வாங்க தானே செஞ்சேன்?”, என்று பவ்வியமாக பயந்து பதட்டத்துடன் பேசும் சேகரின் குரலில் யாழிக்குள் பெரும் தாக்கம். ஏதோ அவரின் குரலில் இருந்த தவிப்பு அவளை அப்படி அசைத்து பார்த்தது.
பசியில் அழும் குழந்தையின் குரலை கேட்கும் தாயின் மனத்தை ஒத்திருந்தது அவரது குரலை கேட்கும் யாழியின் மனது. அவ்வளவு பரிதவிப்பு அவளிடம்.
“எனக்கு அதெல்லாம் தெரியாது. நீங்க அவளுக்கு செய்யக்கூடாது, இதை கொடுக்கவும் கூடாது. எனக்கு என்னமோ அவளும் உங்க பொண்ணா இருப்பாளோன்னு தான் சந்தேகமா இருக்கு. இன்னும் நீங்க என் தங்கச்சியை தான் மனசுல நினைச்சிட்டு இருக்கீங்களா? என்னை பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு அவளை பொண்ணுன்னு நினைச்சேன்னு சொன்ன ஆள் தானே நீங்க?”, என்று கேட்க “அது சாதாரணமா நடந்த ஒரு நிகழ்வு சத்யா. அதுக்கப்புறம் அவ உன் தங்கச்சின்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் அவ எனக்கும் தங்கச்சி தான். இப்ப என்ன இந்த செயினை யாழிக்கு போடக் கூடாது. அப்படி தானே? நான் யாருக்கும் செயின் போடலை. இந்தா இதையும் வெண்ணிலாவுக்கே போடு”, என்று விரக்தியாக சொல்லி விட்டு வெளியே வந்தார்.
அங்கே யாழி நிற்பதை பார்த்தவர் “வா டா குட்டி, நம்ம பங்க்சனுக்கு போகலாம்”, என்று அழைத்துச் சென்றார்.
அவள் எல்லாவற்றையும் கேட்டிருப்பாள் என்றெல்லாம் அவர் நினைக்க வில்லை. அவர் எப்போதும் போல சந்தோஷமான முகமூடியை போட்டு வலியை மறைத்துக் கொண்டார். சூதுவாது தெரியாத யாழியால் அதை அவ்வளவு எளிதில் கடந்து வர முடிய வில்லை.
தன்னால் தன்னுடைய அன்னையால் சேகர் அப்பாவின் வாழ்க்கை எந்த அளவுக்கு பாதிப்படைந்திருக்கிறது என்று அவள் உணர்ந்த தருணம். இதில் தங்கள் மேல் தவறு இல்லை என்ற புரிதல் இருந்தாலும் சேகரின் மனதை எண்ணி கண்ணீர் விட்டவள் நைசாக அதிபனின் அறைக்கு சென்று விட்டாள்.
இந்நேரம் அவன் அங்கே இருந்திருந்தால் அனைத்தையும் அவனிடம் கொட்டி இருப்பாள். இப்போது அவன் இல்லை என்றதும் அவள் கண்களில் இருந்து கண்ணீர் கொட்டியது. அழுத படியே அங்கேயே தூங்கிப்போனாள்.
அவளைத் தேடியவர்கள் அவள் தூங்கவும் கண்டு கொள்ளாமல் விட்டுவிட்டார்கள். அடுத்த நாள் எழுந்தவளுக்கு நேற்று இருந்த மனநிலை இல்லாததால் அதையும் மனதுக்குள் புதைத்துக் கொண்டாள்.