அத்தியாயம்

நீந்திச் செல்லும் 

வண்ண மீன்கள் கூட 

காதலை தான் தேடுகிறதோ!!!

         அடுத்த நாள் ஏதோ குழப்பத்தில் அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. “என்ன டா ஒரு மாதிரி இருக்க? அதையே நினைச்சிட்டு இருக்கியா?”, என்று கேட்டார் சத்யாவதி.

         “இது தான் சரியான நேரம்”, என்று எண்ணியவள் “இல்லை மா வேற ஒரு விஷயம் யோசிச்சிட்டு இருந்தேன்”, என்றாள்.

         “என்ன விஷயம் டா”

         “என கூட வேலை பாக்குற வருண் என்னை விரும்புறேன்னு சொன்னாங்க. அதான்”

         “என்ன சொல்ற நீ? அதுக்கு நீ என்ன பதில் சொன்ன?”

         “நான் முடியாது என் மனசுல அப்படி எதுவும் இல்லைன்னு சொல்லிட்டு வந்துட்டேன். என்னால இப்ப யாரையும் நம்ப முடியலை மா. எனக்கு கல்யாணமே வேண்டாம். இப்படியே இங்கயே இருந்துறேன்”, என்று ஏற்ற இறக்கத்தோடு பேச தாய் உள்ளம் தவித்துப் போனது.

         எங்கே நடந்த விஷயத்தால் தன்னுடைய மகள் திருமண வாழ்க்கையே வெறுத்து விடுவாளோ என்று எண்ணி “அந்த வருண் தம்பி பத்தி கொஞ்சம் சொல்லுமா”, என்றார்.

         “இது தானே எதிர் பார்த்தேன்”, என்று எண்ணிக் கொண்டு வரிசையாக எடுத்து சொன்னாள். சத்யாவதிக்கு திருப்தியாக இருக்க “அந்த வருண் தம்பி நம்பர் சொல்லு மா. நான் பேசிக்கிறேன். அந்த பையன் காதலிச்சது எல்லாம் நம்ம வீட்டுக்கு தெரிய வேண்டாம்”, என்று சொன்ன சத்யாவதி தன்னுடைய எண்ணில் இருந்து வருணை அழைத்தாள்.

         “ஹலோ யாருங்க?”, என்றான் வருண்.

         “ஹலோ தம்பி நான் வெண்ணிலா அம்மா பேசுறேன்”

         “ஆண்ட்டி நீங்களா?”

         “ஆமா பா, வெண்ணிலா இப்ப தான் உங்க லவ் பத்தி சொன்னா”, என்று அவர் ஆரம்பிக்க “பரவால்லயே மேடம் எங்க லவ் பத்தி சொல்லிட்டாளே”, என்று பூரித்துப் போனவன் “ஆமா ஆண்ட்டி எனக்கு அவளை எப்பவும் விட்டுக் கொடுக்க முடியாது”, என்றான்.

         “உங்க அம்மா நம்பர் அனுப்பி வைக்கிறீங்களா தம்பி, நான் பேசிக்கிறேன். இப்ப வீடு இருக்குற நிலைமைல காதல் அப்படின்னு எல்லாம் சொல்ல முடியாது. வெண்ணிலாவை பிடிச்சு பொண்ணு கேக்குறீங்கன்னு சமாளிச்சிக்கிறேன்”

         “இதோ அனுப்பி வைக்கிறேன் ஆண்ட்டி”, என்றவன் சந்தோஷமாக அனுப்பி வைத்தவன் அன்னையை அழைத்தும் சொல்லி விட்டான்.

         சத்யாவதி அழைத்ததும் உடனே எல்லாம் ரேவதி எடுக்க வில்லை. வேலை எல்லாம் முடிந்த பிறகு தான் “சாரிங்க ஒரு ஆபரேஷன் இருந்துச்சு. அதான் உங்க போனை எடுக்க முடியலை”, என்றார்.

“பரவால்லைங்க, தம்பி போட்டோ பாத்தேன். எனக்கு பிடிச்சிருக்கு. நாளைக்கு பொண்ணு பாக்குற மாதிரி வாங்களேன்? இல்லைன்னா இன்னைக்கு சண்டே தானே? இன்னைக்கு சாயங்காலம் தம்பியை அழைச்சிட்டு வாங்களேன்?”

         “ஓகே வறோம்”, என்று உடனே ஒத்துக் கொண்டார் ரேவதி. வேலை முக்கியம் என்றாலும் மகனின் எதிர்காலம் அல்லவா?

         சத்யாவதிக்கு கை கால் ஓட வில்லை. உடனடியாக கணவனிடம் போய்ச் சொல்ல அவரோ திகைப்பாக பார்த்தார்.

         “என்ன விளையாடுறியா சத்யா? திடீர்னு வந்து நம்ம பொண்ணை இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்கன்னு சொல்ற? கொஞ்சம் பொறுமையா இரு. இருக்குற பிரச்சனை கொஞ்சம் அடங்கட்டும். பையனைப் பத்தி நானும் விசாரிக்கிறேன்”, என்றார் சேகர்.

         “நீங்க இப்படி தான் சொல்லுவீங்கன்னு எனக்குத் தெரியும்? இதுவே அவ மகளுக்குனா முன்ன நின்னு எல்லாம் பண்ணியிருப்பீங்க? இப்ப கூட அவ தான் உங்க மகளோ..”, என்று ஆரம்பிக்க “சத்யா..”, என்று அரட்டியவர் “யார் வேணா பொண்ணு பாக்க வரட்டும். கடமைக்கு வந்து நிக்குறேன். இனி எதுக்கும் மறுப்பு சொல்ல மாட்டேன்”, என்றவர் விரக்தியாக அந்த அறையில் இருந்து சென்றார்.

         நேராக மொட்டை மாடிக்குச் சென்றவர் ஒரு சிகரெட்டை ஊதிய படியே பழைய விஷயங்களை எண்ணிப் பார்த்தார். சேகருக்கும் சத்யாவுக்கும்    திருமணம் நடந்த இரவு ஆசையாக முதலிரவுக்கு தயாராகி சென்றவர் தான். முதலில் இருவரும் சாதாரணமாக தான் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது சத்யா “நான் ஸ்கூல் படிக்கும் போது ஒரு பையன் என்னையே துரத்தி துரத்தி லவ் பண்ணாங்க”, என்று சொல்லி சிரிக்க அவருமே சிரிக்க தான் செய்தார்.

         “உங்களுக்கு இப்படி ஏதாவது இண்ட்ரஸ்ட்டிங் சீக்ரெட் இருக்கா?”, என்று கேட்க வெகுளியான மனிதரும் “அப்படி பெருசா ஒண்ணும் இல்லை. பொண்ணு பாக்க வந்த அன்னிக்கு உன் தங்கச்சிய தான் முதல்ல பொண்ணுன்னு நினைச்சிக்கிட்டேன்”, என்று சொல்லி அசடு வழிய சத்யாவதி முகம் விகாரமானது.

         அன்று பிடித்தது சேகருக்கு சனியன். மொத்த வாழ்க்கையுமே ஒற்றை வரியில் சூனியமாக்கி கொண்டார். ஏற்கனவே தங்கை மேல் காழ்ப்புணர்ச்சியில் இருந்த சத்யாவதி கணவரின் இந்த வார்த்தையை கேட்டதும் வெகுண்டு போனார். ஒரு வேளை  அவர் வேறு யாரையும் சொல்லி இருந்தால்  இந்த அளவுக்கு ஆகியிருக்குமோ என்னவோ?

         “அப்படின்னா நீங்க அவளுக்காக தான் என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டிங்களா?”, என்று கேட்டவளின் கேள்வியில் அதிர்ந்து பார்த்தவர் “சத்யா நான் விளையாட்டுக்கு தான் சொன்னேன்”, என்றார்.

         “விளையாட்டு இல்லைங்க, என்னை விட அழகா இருக்கா, கலரா இருக்கா, முடி நிறைய இருக்கு. அப்படின்னா கண்டிப்பா அவளை தான் உங்களுக்கு பிடிச்சிருக்கும்”

         “அப்படி எல்லாம் இல்லை மா”

         “ஒரு வேளை  அவ இதே வீட்ல இருக்குறான்னு தான் வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிச்சீங்களா? அவளையும் தினமும் பாக்கலாம்ல?”

         “என்ன உளறிகிட்டு இருக்க சத்யா. இப்ப நீ என் மனைவி. அவ உன்னோட தங்கச்சி அவ்வளவு தான், அசிங்கமா பேசாத. நான் இந்த வீட்டோட மாப்பிள்ளையா இருக்க சம்மதிச்சதுக்கு காரணம் எனக்குன்னு யாரும் இல்லை. இன்னொரு விஷயம் உங்க அப்பா என் கிட்ட கெஞ்சி கேட்டதுனால தான்”

         “இதை நம்பவா முடியும்?”

         “சத்யா புரிஞ்சிக்கடி நான் சொன்னது ஒரு இயல்பான விஷயம். அதை விளையாட்டா எடுக்காம எதுக்கு இவ்வளவு சீரியஸா யோசிக்கற? இது தப்பு மா. நம்ம நாளைக்கே வேணும்னா எங்க வீட்டுக்கு போயிறலாம். இல்லைன்னா குவாட்ரஸ்க்கு கூட போயிறலாம்”

         “நாம எதுக்கு போகணும். இது தான் என் வீடு. இங்க தான் இருக்கணும். அதையும் அவளை நீங்க பாக்குறீங்களா இல்லையான்னு நான் பாத்துட்டே இருப்பேன்”, என்று சொல்ல அவருக்கு வாழ்க்கையே வெறுத்துப் போனது.

         “இதுக்கு மேல சொல்றதுக்கு இல்லை. நல்லா யோசிச்சுப் பாரு. உனக்கே நீ நினைக்கிறது முட்டாள் தனமா தெரியும். எனக்கு தூக்கம் வருது”, என்று கண்களை மூடிக் கொள்ள “நான் நினைச்சேன், அவளை நினைச்சிட்டு தான் நீங்க என்னை தொடாம இருப்பீங்கன்னு”, என்று சொன்னதைக் கேட்டு அவருக்கு விழி பிதுங்கியது.

         “அப்படி எல்லாம் இல்லை டி, அதுக்கெல்லாம் நல்ல மைண்ட் வர வேண்டாமா? சண்டை போட்டா எப்படி வரும்?”, என்று வருத்தமாக கேட்க “அவளைப் பாத்தா உங்களுக்கு உடனே ஆசை வந்துரும்ல?”, என்றார் சத்யாவதி.

         “இப்ப என்ன உன் கூட ப.. ? அதானே வா”, என்றவர் சத்யாவதியுடன் வேண்டா வெறுப்பாக வாழ்க்கையை ஆரம்பிக்க அவர்களின் காதல் அல்லாமல் காமத்துக்கு மட்டும் குழந்தையாக பிறந்தவள் தான் வெண்ணிலா.

சேகரின் வாழ்க்கை நாளுக்கு நாள் இப்படியே சீரழிந்து தான் போனது. எதற்க்கெடுத்தாலும் சவுந்தர்யாவுடன் அவரை சேர்த்து வைத்து பேசிக் கொண்டே தான் இருந்தாள்.