அவர்கள் எண்ணியது போல வருண் வெண்ணிலாவை அழைத்துச் சென்றது அந்த மருத்துவ கல்லூரிக்கு தான்.
“ஹே வருண் என்ன இங்க வந்துருக்கோம். அத்தையை இங்க வச்சா பாக்குறது?”
“என்ன மா பண்ணுறது எங்க அம்மா எங்க வீட்ல இருக்குறதை விட இங்க தான் அதிகம் இருக்காங்க. அவங்க இந்த மெடிக்கல் பீல்டை தெய்வமா நினைக்கிறவங்க. அதான் இங்க கூட்டிட்டு வரச் சொன்னாங்க. அப்புறம் கல்யாணத்துக்கு முன்னாடி மருமகளை வீட்டுக்கு கூட்டிட்டு வரக் கூடாதாம்”, என்று சொல்லி கண் சிமிட்ட அவள் முகம் சிவந்து போனது.
“போ வருண்”, என்று அவள் சிணுங்க அவள் அழகில் மயங்கி தான் போனான்.
இருவரும் உள்ளே செல்ல “வாங்க வருண் சார், அம்மாக்கு இப்ப ஒரு ஆபரேஷன் போய்ட்டு இருக்கு. முடியுற நேரம் தான். அவங்க ரூமில் வெயிட் பண்ணுங்க”, என்று சொல்லிச் சென்றார் நர்ஸ்.
இருவரும் அங்கே சென்று அமர்ந்தார்கள். மேசையில் வருணும் ரேவதியும் இருந்த புகைப்படத்தை தவிர அங்கிருந்த மற்ற பொருள்கள் எல்லாமே மெடிக்கல் சம்பந்தப்பட்டது.
ரேவதி கம்பீரமாக சேரில் அமர்ந்திருக்க வருண் பின்னால் நின்று அவர் தோளோடு கட்டி அனைத்த படி இருந்தது அந்த புகைப்படம்.
“இந்த போட்டோ நல்லா இருக்கு வருண்”, என்றாள்.
“அதான் அம்மா பிரேம் பண்ணிருக்காங்க. வீட்லயும் நிறைய போட்டோ இருக்கு. அம்மாவுக்கு நான் தான் உயிர்”
“இப்ப தான் அவங்களுக்கு அவங்க வேலை தான் உயிர்ன்னு சொன்னீங்க?”
“நானும் உயிர் தான் மா. வேணும்னா நானும் வேலையும் அவங்களுக்கு ரெண்டு கண்ணுன்னு சொல்லிக்கலாம்”, என்றான்.
அவள் புன்னகைக்க “உங்க அப்பா இறந்தப்ப உங்க அம்மா ரொம்ப தவிச்சிருப்பாங்கள்ல?”, என்றாள்.
“வாட்? எங்க அப்பா செத்துட்டதா யார் சொன்னா உனக்கு?”
“ஐயோ இல்லையா? சாரி, எனக்கு தெரியாது. நீங்க சொல்லலை”
“நீ கேக்கலைன்னு சொல்லு. நான் கேக்குறேன் தானே? உன்னைப் பத்தி உன் குடும்பத்தைப் பத்தி பிங்கர் டிப்ஸ்ல வச்சிருக்கேன்”, என்று பெருமையாகவும் அதே நேரம் அவள் அப்படி இல்லை என்ற குத்தலாகவும் சொன்னான்.
அவள் முகம் கலை இழக்க “சாரி நான் கேட்டுருக்கணும். இப்ப சொல்லுங்க. மாமா எங்க இருக்காங்க?”, என்று கேட்டாள்.
“அவனை எல்லாம் மாமான்னு கூப்பிடாத. என் அம்மா முன்னாடி அந்த ஆளைப் பத்தி எல்லாம் பேசிறாத. கொந்தளிச்சிருவாங்க”, என்று சொன்னவனின் குரலில் அப்படி ஒரு ஆக்ரோஷம்.
“எதுக்கு இவ்வளவு கோபம்?”
“அவன் செஞ்சது அப்படி? நான் டென்த் படிக்கும் போது ஒரு நாள் அம்மா வேலைல இருந்து மதியமே வீட்டுக்கு வந்திருக்காங்க. அப்ப அந்த ஆள் ஒரு பொம்பளை கூட .. அதுவும் சொந்த வீட்ல அம்மா படுக்குற பெட்ல.. அம்மாவுக்கு எப்படி இருக்கும். அந்த நிமிஷமே செருப்பை கழட்டி அடிச்சே ரெண்டையும் வீட்டை விட்டு விரட்டிட்டாங்க. அன்னைக்கு ஓடிப் போனவன் தான். எங்க இருக்கான்னு தெரியாது. ஆனா இருப்பான்”
“அத்தை அவங்களை தேடலையா?”
“அந்த அயோக்கியனை எதுக்கு தேட போறாங்க? இன்னொரு தடவை நேர்ல பார்த்தா கொல்ல வேணா செய்வாங்க. எங்க அம்மா அப்பவே தைரியமானவங்க. இப்ப அவங்க கிட்ட இருக்குற தைரியம் இன்னும் கூடி தான் போயிருக்கு. எங்க அம்மாவுக்கு ஏமாத்த கூடாது, பொய் சொல்லக் கூடாது, திருடக் கூடாது. முடிஞ்ச அளவுக்கு மத்தவங்களை காயப் படுத்த கூடாது. நிறைய ஹெல்ப் பண்ணுவாங்க. அவங்களுக்கு சொந்தமா ஒரு மருத்துவமனை கட்டி சேவை செய்யணும்னு ஆசை. நான் டாக்டரா இருந்தா கண்டிப்பா கட்டியிருப்பாங்க. என் கிட்ட டாக்டர்க்கு படிக்கிரியான்னு கேட்டாங்க. எனக்கு மருந்து பேரைக் கண்டாலே புரியாது. அதனால முடியாதுன்னு சொன்னேன். அவங்களும் என்னைக் கட்டாயப் படுத்தலை. நான் இன்ஜினியரிங் எடுத்ததும் அவங்களும் மருத்துவமனை கட்டுற கனவை விட்டுட்டாங்க”, என்று வருண் சொல்வதை கேட்க கேட்க ரேவதியை எண்ணி பிரமிப்பாக இருந்தாலும் வெண்ணிலாவுக்கு பயமாகவே இருந்தது.
ஏனோ தான் அதிபனுக்கு செய்தது தெரிந்தால் அம்மாவும் மகனும் தன்னை மன்னிக்க மாட்டார்களோ என்ற கவலையில் இருந்தாள்.
ஆபரேஷன் கவுனைக் கழட்டிய படியே அந்த அறைக்குள் வந்தார் ரேவதி. தன்னுடைய அன்னை போன்ற தோற்றத்தில் ஒருவரை அவள் எதிர்பார்க்க ரேவதியோ இளமையாக இருந்தார்.
வருணுக்கு மூன்று அக்காக்கள் இருந்தால் அதில் மூத்த அக்கா போன்ற தோற்றத்தில் கண்ணில் கண்ணாடியுடன் அழகாக அதே நேரம் கம்பீரமாக இருந்த பெண்மணியைக் கண்டதும் உள்ளுக்குள் படபடப்பாக தான் இருந்தது வெண்ணிலாவுக்கு.
“ஆபரேசன் சக்சசா மா?”, என்று கேட்டான் வருண். அவனை எப்போதும் குட்டா என்று தான் அழைப்பார்.
“ஆமா டா குட்டா, நார்மல் டெலிவரி தான். பொண்ணு ஒண்ணு பையன் ஒண்ணு டுவின்ஸ். அதான் பேஷண்ட் கொஞ்சம் நெர்வசா இருந்தாங்க. அவங்களை சமாளிக்க தான் கஷ்டமா போச்சு டா குட்டா”, என்றவர் வெண்ணிலா புறம் திரும்பினார்.
“வணக்கம் ஆண்ட்டி”, என்று கரம் குவித்தாள்.
“வணக்கம் மா, நீ நான் எதிர் பாத்த மாதிரி நல்லா அழகாவே இருக்க. யாழியோட அக்காவாச்சே”, என்று சொல்ல அதிர்ந்து போய் அவரைப் பார்த்தாள்.
அவள் அதிர்ச்சியைத் தவறாக புரிந்து கொண்டவர் “அவ என்னோட பெஸ்ட் ஸ்டூடன்ட். நீ என் பையனுக்கு ஏத்த துணை தான். ஆனா..”, என்று அவர் இழுக்க அவளுக்கோ பக்கு பக்கு என்று இருந்தது.
“ஆனா என்ன ஆண்ட்டி..”
“நீ எங்க வீட்டுக்கு மருமகளா வறதுக்கு எனக்கு ஒண்ணும் மறுப்பு இல்லை. ஏன்னா நீ என் பையனோட செலக்சன். அது அவனோட பர்சனல். உங்க வாழ்க்கையை நீங்க சந்தோஷமா வாழலாம். அதுல என்னோட இடைஞ்சல் எப்பவும் இருக்காது. ஆனா என் மருமக என் குடும்பத்துக்கு ஏத்தவளா இருக்கணும். பணத்துக்கு பஞ்சம் இல்லை தான். அதுக்காக பொறுப்பில்லாம செலவு பண்ணக் கூடாது. உனக்கு பிடிச்சதை வாங்க வேண்டாம்னு சொல்லலை. வீண் செலவு வேண்டாம்னு தான் சொல்றேன். எல்லாத்துலயும் நேர்மையா இருக்க பழகிக்கோ. அப்புறம் நான் சொல்றது செய்றது உனக்கு பிடிக்கலைனா என் கிட்ட டேரக்ட்டா நீ சொல்லீறலாம். அது போல தான் நானும். இதை விட்டுட்டு உங்க அம்மா இப்படின்னு நார்மல் பொண்ணுங்க மாதிரி அம்மா பையனுக்கு நடுவுல கழகம் மூட்டக் கூடாது. ஏன்னா என் குட்டாவுக்காக என்ன வேணும்னாலும் விட்டுக் கொடுப்பேன். அவனையே விட்டுக் கொடுப்பேன். ஆனா அவன் சந்தோஷம் குறைஞ்சதுன்னா பார பட்சமே பாக்காம அவனுக்கு இடைஞ்சல் கொடுக்குற எதையும் அவனை அண்ட விட மாட்டேன். நான் நல்ல மாமியாரா இருக்குறதும் கெட்ட மாமியாரா மாறுறதும் நீ நடந்துக்குறதுல தான் இருக்கு”, என்றார்.
“உங்களுக்கு பிடிச்ச மாதிரி இருப்பேன் ஆண்ட்டி”, என்றாள் தடுமாற்றமாக.
“இது தான் தப்புன்னு சொல்றேன். உனக்கு பிடிச்ச மாதிரி நீ இரு. ஆனா அவனுக்கு தப்புன்னு தோனுறதை செய்யாத. அவன் சந்தோஷம் தான் முக்கியம். என்னோட கண்டிஷன் ஒண்ணே ஒண்ணு தான். பணம் மட்டும். ஏன்னா நீ செலவழிக்கிற ஒரு ரூபாய் மத்தவங்களுக்கு ஏதாவது ஒரு விதத்துல உதவலாம். மத்த படி நீ நீயா இரு அது போதும். உங்க வீட்ல எப்ப வந்து பேசணும்னு சொல்லு. நான் பிளான் பண்ணிட்டு வரேன். இப்ப கிளம்புங்க”, என்றவர் “குட்டா அவளை சாப்பிட வச்சு வீட்ல பத்திரமா விட்டுட்டு நம்ம வீட்டுக்கு போயிரு”, என்றார்.
“சரி மா, நாங்க கிளம்புறோம்”, என்று வருண் சொல்ல அவளும் “வரேன் ஆண்ட்டி”, என்றாள்.
“பத்திரமா போய்ட்டு வாங்க”, என்று அனுப்பி வைத்தவர் வேலையில் ஆழ்ந்தார்.
அவளை நேராக பார்க்கிங் அழைத்து சென்றவன் “நீ யாழியோட அக்கான்னு சொல்லவே இல்லை பாத்தியா? அம்மாவுக்கு அவளை ரொம்ப பிடிக்கும். நானும் ஒரு டைம் பேசிருக்கேன். எங்க வீட்டுக்கு வந்திருக்கா. நல்ல பொண்ணு. எனக்கு கூட யாழி உன் சிஸ்டர்ன்னு தெரியாது. அம்மா விசாரிச்சிருக்காங்க. அம்மான்னா அம்மா தான்”, என்று சொல்ல அவள் பி. பி எகிறியது யாழியை நினைத்து.
தான் செய்து வைத்திருக்கும் வேலை தெரிந்தால் அவள் என்ன செய்வாளோ என்று ஒரு பக்கம் உதறியது என்றால் மகன் விரும்பும் பெண்ணைப் பற்றி இவ்வளவு தெளிவாக விசாரித்திருக்கிறாரே என்று ரேவதியை எண்ணியும் பயமாக தான் இருந்தது.
“எனக்கு வீட்டுக்கு போகணும் வருண். வாங்க போகலாம்”, என்றாள் வெண்ணிலா.
“அம்மா சொன்னதைக் கேட்ட தானே? சாப்பிட வச்சு தான் கூட்டிட்டு போகனுமாம்? அவங்க சொன்னா சரியா இருக்கும். நீ வா”, என்றவன் வண்டியை எடுத்துக் கொண்டு ஒரு ரெஸ்டாரண்ட்க்கு அழைத்துச் சென்றான். அவர்கள் ஜோடியாக இருக்கும் புகைப்படம் வரிசையாக யாழிக்கு சென்று கொண்டு தான் இருந்தது.
அவளிடம் கேட்டு வருணே உணவை வரவைத்தான். அவள் அமைதியாக இருக்கவும் “என்ன நிலா அமைதியா இருக்க?”, என்றான்.
“எங்க வீட்டுக்கு வந்துட்டா உனக்கே அவங்களைப் பிடிச்சிரும்”, என்று சொன்னவன் நிம்மதியாக உண்ண ஆரம்பித்தான். அவளுக்கு தான் தொண்டைக் குழியில் ஏதோ சிக்கிய உணர்வு.
உணவு உண்டதும் ஆபீஸ் சென்றவர்கள் அவளது வண்டியை எடுத்துக் கொண்டு வீட்டுக்கு கிளம்பினார்கள். அவளுடைய வீட்டின் தெருமுனை வரை உடன் வந்தவன் “உங்க வீட்ல வந்து எப்ப பேசணும்னு சொல்லு வறோம். பத்திரமா போ. நான் வரேன்”, என்று சொல்லி விட்டுச் சென்றதும் அவளும் வீட்டுக்குச் சென்றாள்.
அதே நேரம் அவர்கள் ரெஸ்டாரண்டில் ஜோடியாக இருக்கும் புகைப்படத்தை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் யாழி. அவளுக்கு இப்போது அதிபனிடம் பேச வேண்டும் போல இருந்தது. அவன் போனோ இப்போதும் அனைத்து தான் இருந்தது.
ஆனால் அவனோ சொந்த பந்தங்கள் அனைவரையும் மறந்து சிறு பிள்ளை போல தாய் தந்தையுடன் பேசி சிரித்து சமைத்து என்று நிம்மதியாக இருந்தான்.
அவனுக்கும் யாழியின் நினைவு வரும் தான். ஆனால் ஏதாவது பேசி அவளை காயப் படுத்தவும் மனதில்லை. அவள் ஏதாவது சொன்னால் தன்னால் காயப் படவும் முடியாது என்பதால் போனை தூக்கி போட்டான்.