அத்தியாயம்

மனதில் பதிந்த வலியின் 

சுவடுகளுக்கு மருந்து கூட 

இன்னொரு காதல் தானோ?!!!

தாங்கள் பேசியதை யாழி கேட்பாள் என்று விஷ்வா மற்றும் இனியன் இருவரும் எதிர்பார்க்கவே இல்லை. “யாழி”, என்ற படி அவளை இருவரும் நெருங்க “ஏன் டா அப்படி பண்ணினாங்க? அவன் என் அதி மாமா டா. அவனைப் போய் தப்பா சொல்ல எப்படி மனசு வந்துச்சு எல்லாருக்கும்?”, என்று காரமாக கேட்டாள். 

“இல்லைடி அவ மேலயும் நக கீறல் எல்லாம் இருக்காம்.  அதான் எல்லாரும் தப்பா..”, என்று இனியன் இழுக்க தன்னுடைய நகத்தை வைத்து தன் கையை கீறிக் கொண்டாள் யாழி. 

இருவரும் அவள் செய்கையில் அதிர்ந்து நிற்க “இப்ப என் மேலயும் நக கீறல் இருக்கு. நீ என் கிட்ட தப்பா நடந்துகிட்டன்னு நான் சொல்லவா?”, என்று கேட்க இருவரும் அதிர்ந்து போனார்கள். 

“என்ன டி லூசு மாதிரி பண்ணிக்கிட்டு இருக்க. ஏற்கனவே அடி பட்டிருக்கு உனக்கு. உள்ள வா மருந்து போடலாம்”, என்று அழைத்துச் சென்றான் விஷ்வா. இனியன் யோசனையில் ஆழ்ந்தான். 

“யாழி சொல்வதும் சரி தானே?”, என்று எண்ணிய படி அவர்கள் பின்னே சென்றவன் “எனக்கும் யாழி சொல்றது தான் சரின்னு தோணுது. வெண்ணிலா ஏதோ கேம் விளையாடிருக்கா”, என்றான். 

“எதுக்கா இருக்கும்? அவளுக்கு என்ன அவசியம்?”, என்று விஷ்வா கேட்க “அதை கண்டு பிடிக்க வேண்டியது என் பொறுப்பு”, என்ற யாழி மணியைக் கூடப் பார்க்காமல் தன்னுடன் படித்த நண்பன் வினோத்தை அழைத்தாள். 

“ஹலோ யாழி சொல்லு டி எப்படி இருக்க? இப்ப அங்க உனக்கு நைட் தானே? என்ன இந்நேரம் கால் பண்ணிருக்க?”

“எனக்கு ஒரு ஹெல்ப் வேணும் வினோ”

“சொல்லு மா செஞ்சிறலாம்”

“ஒரு ஆளைப் பாலோ பண்ணி விசாரிக்கணும். டிடெக்டிவ் ஏஜென்சி கிட்ட போ”

“ஓகே போட்டோ அனுப்பு. பாக்குறேன். ஆனா டிடெக்டிவ் வச்சு செக் பண்ணுற அளவுக்கு யாரு அந்த வி.ஐ.பி?”

“என் அக்கா தான்”, என்று சொல்ல அதிர்ந்து போனவன் “யாழி”, என்று அழைத்தான். 

“ஆமா அவ தான். நீ சொன்னதை செய்”

“சரி யாழி”, என்று அவன் அழைப்பை துண்டித்தான். 

“மாமா நாம உடனே ஊருக்கு போகணும் டிக்கட் போடு”, என்று யாழி சொல்ல இனியன் பார்த்து விட்டு “பனி அதிகமா இருக்குன்னு பிளைட் எல்லாம் கேன்சல் பண்ணிட்டாங்களாம்”, என்றான். 

அடுத்த இரண்டு நாட்கள் எப்படிச் சென்றது என்று கேட்டால் யாரிடமும் பதில் இல்லை. ஆனால் யாரும் நிம்மதியாக இல்லை என்று மட்டும் உண்மை. 

இந்த விஷயத்தில் முதலில் நிம்மதியாக இருந்தது வெண்ணிலா தான். ஆனால் அவள் சந்தோஷம் அடுத்த நாள் காலையிலே தகர்ந்து விட்டது. 

திருமணம் நின்ற சந்தோஷத்தை சொல்வதற்காக வருணைத் தேடிச் சென்றாள் வெண்ணிலா. அவனோ அங்கிருந்த ஊழியரை கடுமையாக திட்டிக் கொண்டிருந்தான். 

“நீங்க எவ்வளவு பெரிய வேலை பாத்துருக்கீங்க தெரியுமா? ஒருத்தங்க செஞ்ச வேலையை நீங்க தான் செஞ்சேன்னு சொல்லி புரோமோசன் வரைக்கும் வாங்கிருக்கீங்க? எவ்வளவு பெரிய பொய்? அவருக்கு போக வேண்டிய புரோமோசனும் சம்பள உயர்வும் உங்களுக்கு வந்துருக்கு. இதை நான் அப்படியே விட்டுருவேன்னு நினைக்கிறீங்களா? என்னைப் பொறுத்த வரைக்கும் நேர்மையா இருக்கணும். பொய்  சொல்லக் கூடாது. அடுத்தவங்களை தப்பா சொல்லக் கூடாது, அவங்க உழைப்பை திருடக் கூடாது. இதை தான் எங்க வீட்ல சொல்லிக் கொடுத்துருக்காங்க. என்ன நடந்தாலும் நீங்க பேஸ் பண்ணித் தான் ஆகணும்”, என்று வருண் சொன்னதைக் கேட்டு செருப்பால் அடித்தது போல துடித்து நிமிர்ந்தாள் வெண்ணிலா. 

“சார் இந்த ஒரு தடவை என்னை மன்னிச்சிருங்க. இதை அவரே கண்டுக்காம விட்டுட்டார். நீங்க வெளிய சொன்னா எல்லாரும் என்ன ஏதுன்னு ஆராய்ச்சி செய்வாங்க. என்னோட மரியாதை போயிரும். தொடர்ந்து என்னால இந்த ஆபீஸ்ல வேலை  செய்ய முடியாம போயிரும்”, என்று கெஞ்சினார் அவர். 

“வேலை செய்ய முடியலைனா ரிசைன் பண்ணிட்டு போங்க. எவ்வளவு அசால்ட்டா அவரே கண்டுக்கலைன்னு சொல்றீங்க? வேற வழி இல்லாம அவர் அமைதியா இருக்கார். ஆனா அவர் மனசுல இருக்குற வலியை அவர் பிரண்ட் தான்  வந்து என் கிட்ட சொன்னார். அந்த கஷ்டம் உங்களுக்கு எப்படி சார் புரியும்”

“சார் எதுவும் பண்ணாதீங்க சார். விட்டுடுங்க சார்”

“சரி ஓகே ஒண்ணு பண்ணலாம். நான் எதுவும் வெளிய சொல்லலை. அவருக்கு மூணு லட்ச ரூபாய் கடன் இருக்கு. அதை மட்டும் நீங்க அடைச்சிடுங்க”

“அது எப்படி சார் அவர் கடனை நான் அடைக்க முடியும்?”

“எப்படி எப்படி கடன்னா மட்டும் அது அவரோடதா? ஏன் இந்த உழைப்பும் அவரோடது தானே? அதை மட்டும் எடுக்க தோணுமா உங்களுக்கு?”, என்று கேட்க அவரால் பதில் சொல்ல முடியவில்லை. 

“நான் இப்பவே மெயில் அனுப்பிருவேன் சார். என்னை தப்பா நினைக்காதீங்க. இது என்னோட வேலை. என் விஷயத்துல நான் சரியா இருக்கணும். என்னைச் சுத்தி இருக்கவங்களும் சரியா இருக்கணும். இதை தான் எங்க அம்மா எனக்கு சொல்லிக் கொடுத்துருக்காங்க. உங்களுக்கு டிபுரோமோசன் ஆர்டர் கண்டிப்பா வரும். ஆனா உங்களை வேலையை விட்டு தூக்க விரும்பலை. பழைய வேலைலே பாக்குறதா இருந்தா பாருங்க. இல்லைன்னா ரிலிவ் ஆகிக்கோங்க.  அது உங்க விருப்பம். இப்ப நீங்க போகலாம்”, என்று சொல்லி முடித்ததும் தான் கவனித்தான் வெண்ணிலா அங்கே இருப்பதை. 

அவர் சென்றதும் “ஹேய் நிலா குட்டி என்ன காலைலே அத்தானைத் தேடி வந்துருக்க?”, என்று ஆர்வமாக கேட்டான். 

“அது அது வந்து .. நேத்து உங்களுக்கு கால் பண்ணினேன். நீங்க எதுக்கு எடுக்கலை?”

“காலைல லேட்டா தான் மா எழுந்தேன். உன் மிஸ்டு கால் பாத்தேன். நேரம் ஆகிட்டுன்னு சரி நேர்ல பேசிக்கலாம்னு வந்துட்டேன். இங்க வந்தா ஒரே டென்ஷன். சரி சொல்லு எதுக்கு கால் பண்ணின?”

“அது வந்து.. வீட்ல நிச்சயம் பண்ணின கல்யாணம் நின்னுருச்சு”

“வாவ், எவ்வளவு சந்தோஷமான விஷயம் சொல்லிருக்க? எப்படி டி இது சாத்தியம்? என்னால நம்பவே முடியலை. நான் ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதிபன் அண்ணா தான் இந்த ஹெல்ப் பண்ணினாங்களா? எவ்வளவு  நல்லவர்ல?”, என்று அவன் கேட்க அவளுக்கு திருடனுக்கு தேள்  கொட்டிய உணர்வு தான். 

அவனுக்காக தான் எல்லாம் செய்தாள். ஆனால் அதை அவளால் அவனிடம் கூட சொல்ல முடிய வில்லை. 

“அதிபன் மாமா வேண்டாம்னு சொல்லிருப்பாங்க போல? அதான் வேண்டாம்னு நிறுத்திட்டாங்க”, என்று மட்டும் சொல்லி நிறுத்திக் கொண்டாள். 

“அப்பாடி நம்ம ரூட் கிளியர் ஆகிருச்சு. சரி சொல்லு எப்ப எங்க அம்மாவை விட்டு உங்க வீட்ல பேசச் சொல்லலாம்”

“எப்பனாலும்?”

“யார் கிட்ட பேச? உங்க அம்மா அப்பா கிட்டயா? இல்லை உங்க தாத்தா கிட்டயா?”

“யார் கிட்டனாலும் பேசுங்க. ஆனா நம்ம லவ் பண்ணுறது மட்டும் தெரியாத மாதிரி பாத்துக்கிட்டா நல்லா இருக்கும்”

“எனக்கு புரியுது டி, நான் பாத்துக்குறேன். இப்ப போய் வேலையை பாரு. ஈவீனிங் எங்க அம்மாவைப் பாக்க போகலாம்”, என்று சொல்ல அவள் முகம் மலர்ந்தது. 

“நிஜமாவா அத்தையை பாக்க போறோமா? ஆனா என் டிரஸ் நல்லா இருக்கா? முன்னாடியே நீங்க போனை எடுத்திருந்தா நான் வேற டிரெஸ் போட்டுட்டு வந்திருப்பேன்”

“உன் அழகு டிரஸ்ல இல்லை டா நிலா. உன் குணத்துல இருக்கு. உன் நல்ல மனசு படி பாத்தா நீ அவ்வளவு அழகு”, என்றான். 

இதே வார்த்தையை அவன் முன்பு சொல்லிலிருந்தால் றெக்கை இல்லாமல் வானில் பறந்திருப்பாள். இப்போதோ குற்ற உணர்வு மட்டுமே வந்தது. 

ஆனாலும் மனதை மறைத்து புன்னகைத்தவள் அன்று மாலையில் காணப் போகும் அவனது அன்னையை எண்ணிய படியே வேலையை கவனிக்கச் சென்றாள். 

மாலை ஆறு மணிக்கு அலுவலகம் விட்டு வெளியே வந்தார்கள் இருவரும். “உன் வண்டி இங்கயே இருக்கட்டும். அம்மாவை பாத்துட்டு திரும்பி வரும் போது  எடுத்துக்கலாம் நிலா பேபி. எப்படியும் உன் வீட்டுக்கு இப்படி தான் போகணும்”, என்று வருண் சொன்னதும் சரி என்று சொல்லி அவனுடன் வண்டியில் எறினாள் வெண்ணிலா. 

இருவரும் சென்று கொண்டிருக்க அவர்களை போட்டோ எடுத்து வினோத்துக்கு அனுப்பி விட்டு அவர்களை பாலோ செய்து சென்றார் டிடெக்டிவ் ஏஜென்சி ஆள். 

வினோத்தும் அந்த புகைப்படங்களை யாழிக்கு அனுப்பியவன் “யாழி உன் அக்கா கூட இருக்குறவங்களுக்கும் உன் அக்காவுக்கும் லவ்வான்னு தெரியாது. இப்போதைக்கு இது மட்டும் தான் கிடைச்சிருக்கு”, என்றான். 

ஆனால் யாழிக்கு தெளிவாக தெரிந்தது அவர்கள் இருவரும் காதலர்கள் என்று. அவர்கள் அமர்ந்திருந்த நெருக்கம் அவ்வாறு தான் சொல்லியது. 

“ஏன் டி உன் சந்தோஷத்துக்கு என் மாமாவை  காயப்படுத்துறியா? உனக்கு வலினா என்னன்னு காட்டுறேன்”, என்று எண்ணியவள் உடனே வினோத்தை அழைத்தாள். 

“சொல்லு யாழி”

“வெண்ணிலா கூட போற பையன் யாருன்னு உனக்கு தெரியலையா வினோ”

“போட்டோல சரியா தெரியலை டி. அது யாரு? உனக்கு அந்த பையனைத் தெரியுமா?”

“உனக்கும் தெரியும் வினோ”

“என்னடி சொல்ற?”

“அவர் நம்ம ரேவதி மேம் பையன்”

“வாட், இரு பாக்குறேன்”, என்றவன் மீண்டும் போட்டோவை பார்த்து விட்டு “ஹே ஆமாடி, வருண் அண்ணா தான். இவங்க எப்படி உங்க அக்கா கூட?”, என்றான். 

“மக்கு ஒரே ஆபீஸ்ல தானே வேலை பாக்குறாங்க’

“ஆமால்ல, சரி இப்ப என்ன பண்ண?”

“காதலர்கள் எங்க போறாங்க, என்ன பண்ணுறாங்கன்னு அவரைப் பாக்க சொல்லு. போட்டோ மட்டும் தெளிவா எடுத்து அனுப்ப சொல்லு. வெண்ணிலா முகம் நல்லா தெரியனும்”

“ரைட் விடு, நான் பாத்துக்குறேன்”, என்று சொன்னவன் ரேவதி பற்றிய தகவலையும் அந்த டிடெக்டிவிடம் சொல்லி விட்டு வைத்தான்.