“என்ன டி ஆச்சு வீட்ல? எல்லாரும் ஒரு மார்கமா இருக்குற மாதிரியே தெரியுது?”

“கொஞ்சம் பிரச்சனை ஆச்சு டா. யாழி பக்கத்துல இருந்தா இப்ப எதுவும் பேசாதே”, என்று எச்சரித்தாள். அதிபனுக்கு ஒன்று என்றாள் யாழி ஆழியாகி அனைவரையும் ஆட்டி வைத்து விடுவாள் என்று தெரியுமே. இங்கே பிரச்சனை முடியாமல் ஆரம்பகட்டத்திலே தீவிரமாக ஆகி இருக்க அவளை எப்படி சமாளிக்கவாம்.

“சரி  இலக்கியா நீ பாப்பாவ பாரு. நான் அப்புறம் பேசுறேன். நாளைக்கு நைட் நானும் விஷ்வாவும் கிளம்பிருவோம்”, என்று சொல்லி போனை வைத்தான்.

“என்ன ஆச்சு டா இனியா? இலக்கியா என்ன சொன்னா?”, என்று கேட்டாள் யாழி.

“அது வந்து புவி அத்தைக்கு காச்சல் போல யாழி? பெரியப்பாவும் அதி அண்ணனும் கூட ஹாஸ்பிட்டல்  போயிருக்காங்களாம். மேலும் விபரம் கேக்குறதுக்குள்ள பாப்பா அழுறான்னு சொல்லிட்டா”, என்றான்

“அத்தைக்கு காச்சலா? என்ன ஆச்சுன்னு தெரியலையே?  நல்லா தானே இருப்பாங்க?”

“நல்லா தான் டா இருப்பாங்க”

“ம்ம், அத்தைக்கு உடம்பு சரியில்லைன்னு தான் மாமா என் பெர்த்டே மறந்துட்டான் போல? சரிடா இனியா. எனக்கு டின்னர் வேண்டாம். நான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்குறேன்”, என்று சொல்லி விட்டு சென்றாலும் மனதுக்குள் சோர்வு மட்டுமே இருந்தது யாழிக்கு. அதிபன் அழைத்து ஒரு வார்த்தையாவது பேசி இருந்தால் அவள் சோர்வு ஓடியிருக்கும் அதற்கு தான் வழி இல்லாமல் போனதே. கூடவே புவனாவுக்கு என்ன ஆனதோ  என்று பயமாகவும் இருந்தது.

யாழி உள்ளே சென்றதும் “விஷ்வா கொஞ்சம் வெளிய வா, பேசணும்”, என்று அழைத்துச் சென்றான் இனியன்.

வெளியே வந்ததும் “என்ன ஆச்சு மாமா?”, என்று கேட்டான் விஷ்வா.

“வீட்ல ஏதோ பிரச்சனை போல டா. அவ கிட்ட சொன்ன மாதிரி புவனா அம்மாவுக்கு காச்சல் எல்லாம் இல்லை”

“அப்படின்னா””

“இரு கேப்போம், இலக்கியா தான் யாழிக்கு தெரிய வேண்டாம்னு சொன்னா”, என்றவன் இலக்கியாவை அழைத்தான்.

அவள் எடுத்ததும் “கொஞ்சம் இரு டா அண்ணா, உன் மருமக இப்ப தான் தூங்கினா. கொஞ்சம் சத்தம் கேட்டாலும் முழிச்சிக்குவா. நான் வெளிய வந்து பேசுறேன்”, என்றாள்.

“இவ வேற சஸ்பென்ஸ் வைக்கிறாளே”, என்று எண்ணி போனை ஸ்பீக்கரில் போட்டான் இனியன்.

“இனியா சொல்லு டா”

“நான் என்ன சொல்ல? நீ தான் சொல்லணும். அங்க என்ன நடந்துச்சு இலக்கியா?”

“நடந்ததை எப்படி சொல்லன்னு கூட தெரியலை டா. நான் இப்ப சொல்லப் போறது யாழிக்கு தெரிய வேண்டாம்”, என்றாள் இலக்கியா.

“அவ தூங்கப் போயிட்டா, நானும் விஷ்வாவும் தான் இருக்கோம். என்ன ஆச்சுன்னு கொஞ்சம் சீக்கிரம் சொல்லு. எனக்கு பயமா இருக்கு”, என்று இனியன் சொல்லும் போது அவர்களுக்கு பின்னே வந்த யாழி அப்படியே மறைந்து நின்று கொண்டாள்.

தூங்கச் சென்ற யாழிக்கு மனதே இல்லை. “ஒரு வேளை  நான் தூங்கின அப்புறம் மாமா கூப்பிட்டா என்ன செய்யுறது? மாமா கூப்பிட்டா என்னை எழுப்ப சொல்லி விஷ்வா கிட்ட சொல்லிட்டு தூங்கலாம்”, என்று எண்ணி தான் அவள் வெளிய வந்தது. ஆனால் இலக்கியா அப்படிச் சொன்னதும் அதற்கு இனியன் பேசியதும் அவளை புருவம் உயர்த்த வைத்தது.

தனக்கு தெரியாமல் அப்படி என்ன ரகசியம்? ஒரு வேளை  அதிபன் மாமாவுக்கு அடி எதுவும் பட்டிருக்கோ? அதான் என் கிட்ட இருந்து மறைக்காங்களோ என்று எண்ணி ஒளிந்து கொண்டு அவர்கள் பேசுவதை கேட்க ஆரம்பித்தாள். “என் மாமாவுக்கு ஒண்ணும் ஆகிருக்க கூடாது கடவுளே”, என்று அவள் மனது வேண்ட ஆரம்பித்தது.

“கொஞ்சம் இல்லை, ரொம்ப பெரிய பிரச்சனை ஆகிருச்சு டா இனியா. அதி அண்ணா அப்புறம் அத்தை மாமா மூணு பேரும் வீட்டை விட்டு போயிட்டாங்க?”, என்று இலக்கியா சொன்னதும் மூவரும் பதறிப் போனார்கள்.

அதைக் கேட்ட யாழியோ அப்படியே தளர்ந்து தரையில் அமர்ந்து விட்டாள். அவளால் இந்த அதிர்ச்சியைத் தாங்கவே முடியவில்லை. “அதி மாமாவுக்கு என்ன ஆனதோ?”, என்று அவள் உள்ளம் பதறிப் போனது. அவள் உடல் வலி கூட அவளுக்கு இப்போது பின்னுக்கு போனது.

“இலக்கியா நீ என்ன சொல்ற?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் விஷ்வா.

“ஆமா விஷ்வா நேத்து நைட் ஒரு பதினொரு மணி இருக்கும். பெரிய மாமா அத்தையையும், அதிபன் அண்ணனையும் அழைச்சிட்டு போய்ட்டாங்க. எங்க போனாங்கன்னு கூட தெரியலை. காஞ்சிபுரத்துல அவங்க வீடு ஒண்ணு இருக்குல்ல? அங்க தான் போயிருப்பாங்கன்னு நினைக்கிறேன். சவுந்து அத்தை கால் பண்ணி பாத்தாங்க. யாரும் காலை எடுக்கலை. நானும் அதி அண்ணனுக்கு கூப்பிட்டேன். ஆனா அண்ணா போனை ஆப் பண்ணிருக்காங்க போல?”

“வீட்டை விட்டு போற அளவுக்கு என்ன டி ஆச்சு? அம்மாவும் பெரியத்தையும் ஏதாவது செஞ்சாங்களா?”, என்று கேட்டான் இனியன்.

“ஆமா எங்க அம்மாவுக்கு தான் புவனா அத்தையை கண்டாலே ஆகாது, எதாட்டும் சொல்லிருக்கும்”, என்றான் விஷ்வா.

“இல்லை டா விஷ்வா, இந்த தடவை உங்க அம்மாவும் எங்க அம்மாவும் கூட எதிர் பாக்காதது தான் நடந்துச்சு”

“அப்படி என்ன நடந்துச்சு? இதுக்கெல்லாம் யார் காரணம் இலக்கியா?”

“எல்லாத்துக்கும் காரணம் வெண்ணிலா”

“என்னது வெண்ணிலாவா?”, என்று அதிர்ச்சியாக கேட்டான் இனியன். அனைவருக்கும் இது அதிர்ச்சி தான்.

“ஆமா இனியா, நேத்து நைட் பத்து மணி கிட்ட காப்பாத்துங்க காப்பாத்துங்கன்னு வெண்ணிலா கத்தினா. எல்லாரும் அவ ரூம் குள்ள போய் பாத்தோம்.  அங்க அவ தலை விரி கோலமா உக்காந்துருந்தா. கைல நக கீறல், டிரஸ் கிழிஞ்சு”

“ஐய்யோ அவளுக்கு என்ன ஆச்சு?”, என்று பதறினான் விஷ்வா.

“உன் உடன் பிறப்புக்கு ஒண்ணும் இல்லை விஷ்வா. அவ ஓகே தான். நாங்க போனப்ப அவ இப்படி அழுதுட்டு இருந்தாளா. பக்கத்துல அதிபன் அண்ணா மட்டும் தான் அங்க இருந்தாங்க”

“அப்புறம் என்ன ஆச்சு?”

“தாத்தா உன்னை யார் இப்படி பண்ணினான்னு கேட்டதுக்கு அதிபன் அண்ணாவை கைய காமிச்சிட்டா  டா விஷ்வா”

“என்னது?”, என்று அதிர்ந்து போய்க் கேட்டான் இனியன்.

“ஆமா அண்ணா தான் அவ கிட்ட அத்து மீறினாங்கன்னு சொல்லிட்டா. நம்ம அப்பா அண்ணாவை அடிச்சிட்டார்”

“என்ன டி சொல்ற? நம்ம அண்ணா எப்படி? அதுவும் வெண்ணிலா கிட்ட?”

“எங்களுக்கும் அந்த குழப்பம் தான். அவ அழுதுட்டு இருக்கா. அண்ணனை பேச விடாம அப்பா அடிச்சாங்க. அப்பா கிட்ட செழியன் பெரியப்பா என் பையனை எப்படி அடிக்க போச்சுன்னு ஒரே சண்டை. நம்ம அப்பா அவங்க லவ்  மேரேஜ் பண்ணினதை வச்சு அண்ணனை தப்பா பேச எப்பவும் பேசாத பெரியப்பா ரொம்ப சத்தம் போட்டு பேசி அப்பாவை ஒரு அடி அடிச்சிட்டாங்க”

“என்னன்னவோ சொல்லுறியே இலக்கியா? இதெல்லாம் நம்ம வீட்டுலயா நடந்துச்சு?”

“ஆமா டா, எது உண்மைன்னு நாங்க குழப்பத்துல இருக்கும் போதே எல்லாம் நடந்து முடிஞ்சிருச்சு, வெண்ணிலா எதுக்கு பொய் சொல்லணும். அவ பொய் சொன்னான்னு  வச்சிக்கிட்டாலும் அவ கைல நக கீறல் இருந்துச்சு டா. அது மட்டுமில்லாம அதிபன் அண்ணா குடிச்சிருந்தாங்க டா”

“வாட்?”, என்று இருவரும் அதிர்ந்து போய் ஒரே நேரத்தில் கேட்டார்கள்.

“ஆமா டா, அதான் எல்லாருமே கொஞ்சம் அமைதியா இருந்துட்டோம். ஆனா பெரியம்மாவும் பெரியப்பாவும் எங்க பையன் மேல நம்பிக்கை இருக்கு. இனி உங்களுக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டு நைட்டே கிளம்பிட்டாங்க. இனி ஆபீஸ்க்கு கூட வர மாட்டாங்களாம். சொத்துக்கும் கூட சம்பந்தம் இல்லைன்னு சொல்லிட்டாங்க”

“அதைச் சொன்னதும் நம்ம அப்பா அம்மாவுக்கு குளுகுளுன்னு இருக்குமே?”, என்று எரிச்சலுடன் கேட்டான் இனியன்.

“அப்படி தான் தோணுது”

“வெண்ணிலா கிட்ட பேசி பாத்தியா இலக்கியா? அவ எதாட்டும் சொன்னாளா?”, என்று கேட்டான் விஷ்வா.

“இல்லை டா, அவ இன்னைக்கு சாப்பிடவும் கீழ வரலை. உங்க அம்மா தான் அவ ரூமுக்கு எடுத்துட்டு போனாங்க. அப்புறம் வேலைக்கு கிளம்பிட்டா. யாழி கிட்ட சொல்லாதீங்க டா. இருக்குற பிரச்சனைல அவளுக்கு தெரிஞ்சா என்ன ஆகும்ன்னு யோசிக்க கூட பயமா இருக்கு”

“சரி இலக்கியா, நாங்க நாளைக்கு கிளம்பி வரப் பாக்குறோம். டிக்கட் இருக்கான்னு பாக்குறேன்”, என்றவன் அழைப்பை துண்டித்தான்.

“நாம உடனே அங்க போகணும் டா”, என்றான் இனியன்.

“நாம போனா மட்டும் என்ன செய்ய முடியும்னு நினைக்கிற? அவங்களை மாதிரி தான் நாமளும் முழிச்சிட்டு இருப்போம். பாப்போம் என்ன தான் நடக்குதுன்னு. ஆனா அதிபன் மாமா அப்படி பண்ணியிருக்க மாட்டாங்க மாமா”

“அப்படின்னா உன் அக்கா பொய் சொல்லிருப்பான்னு நினைக்கிறியா?”

“அதுவும் தெரியலையே. அவ எதுக்கு பொய்ச் சொல்லணும்? ஒண்ணுமே புரியலையே?”

“எனக்கும் அதே குழப்பம் தான். சரி உள்ள வா படுப்போம்.  மீதியை நாளைக்கு பேசிக்கலாம்”, என்று சொல்லி விட்டு திரும்ப அங்கே அதிர்ந்து போய் அமர்ந்திருந்தாள் யாழி.

தொடரும்..