“அதி கண்ணா, உனக்கு அடி எதுவும் படலை தானே?”, என்ற படி அங்கே வந்த புவனாவின் கண்கள் அவனை தலை முதல் கால் வரை வருடியது.

தவிப்புடன் இருக்கும் தாயையும் தந்தையையும் கண்டவன் “இப்படி பயந்துருவீங்கன்னு தான் நான் எதுவும் சொல்லலை. ரொம்ப பெரிய விபத்துப்பா. யாழி ஞாபகம் மட்டும் வரலைனா இந்நேரம் நான் உங்க முன்னாடி இல்லை. அத்தனை பேரும் கருகிப் போய்ட்டாங்க பா. தீயை அணைக்க கூட முடியலை. திருப்பி திருப்பி வெடிச்சிட்டு இருக்கு.  எதிர்ல வந்த லாரில வேற பொருள் இருந்தா கூட பரவால்ல, அதுவும் காஞ்ச மரம். என்னால அந்த நிகழ்வுல இருந்து வெளிய வர முடியலை. அப்ப தான் மதியம் வீட்டுக்கு வந்துட்டு இருந்தேன். வரும் போது தான்”, என்று ஆரம்பித்து வெண்ணிலா பற்றி அனைத்தையும் சொன்னவன் கடைசியாக அவள் அழைத்ததையும் சேர்த்து சொன்னான்.

“ஆக அந்த பொண்ணு அவ மேல இருக்குற தப்புக்காக தான் இப்படி என் பிள்ளை மேல பழி போட்டுருக்காங்க. அவளை சும்மா விடக் கூடாது”, என்றாள் புவனா.

“ஆமா புவி, இந்த கல்யாணம் வேண்டாம்னு சொன்னா நிறுத்திருக்க போறோம். அதுக்கு நம்ம பிள்ளைக்கு கெட்ட பேர் உண்டாக்குவாளா? நாளைக்கு இருக்கு அவளுக்கு”, என்றார் செழியன்.

“வேண்டாம் பா, எதுவும் பேச வேண்டாம்.  இதை இப்படியே விட்டுறலாம்”, என்றான் அதிபன்.

“ஏன் அதி?”

“அவளைப் பத்தி அங்க இருக்குறவங்களுக்கு புரிய வச்சி என்னப்பா செய்ய? அவங்க என்னை நல்லவன்னு நினைக்கணுமா? அவங்க உறவு எனக்கு தேவைன்னு  நினைக்கும் போது தானே பா அவங்க கிட்ட தன்னிலை விளக்கம் கொடுக்கணும். எப்ப நான் சொல்ல வரதை கூட கேக்காம, இல்லை விசாரிக்க கூட செய்யாம தண்டனை கொடுத்தாங்களோ அவங்க கிட்ட நான் நல்லவனு சொல்ல எனக்கு எந்த விருப்பமும் இல்லை”

“அதி சொல்றது சரி தாங்க, எனக்கும் ஒரு விஷயம் சொல்லணும்”, என்றார் புவனா.

“சொல்லு புவி”

“அந்த வீட்ல இருக்குற யாரையும் நான் குறை சொல்ல நினைக்கல. ஆனா எனக்கு என்னவோ அங்க நான் என் நிம்மதியை தொலைச்சிட்ட மாதிரி பீல் ஆகுதுங்க. ஏதோ சரசும் சத்யாவும் என்னை கண்காணிச்சிக்கிட்டே இருக்குற மாதிரியும் அவங்க சந்தோஷத்தை கெடுக்க வந்தவ மாதிரி அவங்க நடந்துக்குறதையும் என்னால அட்ஜஸ்ட் பண்ண முடியலை. உங்க சந்தோசத்துக்காக நான் இதை வெளிய சொல்லாம இருந்தேன்? ஆனா என் நிம்மதி ரொம்ப நாளா என் கிட்ட இல்லை. என்ன முடிவு எடுத்தாலும் எனக்கு சம்மதம் தான். ஆனா என் மகன் நிம்மதி தான் எனக்கு முக்கியம். அங்க திருப்பி எப்பவும் போக வேண்டாங்க”, என்றவர் “அதி நீ போய் தூங்கு”, என்றார்.

“இனி இது தான் மா நம்ம வீடு. அதுவும் உன்னோட உனக்கு சொந்தமான வீடு. இங்க தான் நீ உயிர்ப்போட இருப்பேனா நாம எப்பவும் இங்கயே இருக்கலாம். பின்னாடி அப்பா வீட்ல உள்ளவங்க உண்மை தெரிஞ்சு மன்னிப்பு கேட்டாலும் அவங்க இங்க நம்மளை தேடி வந்து பாத்துட்டு போகணும். நாம அங்க போக தேவை இல்லை. சரி தானே பா?”

“உங்க ரெண்டு பேரை விட எனக்கு வேற என்ன முக்கியமா தெரிய போகுது அதி? நீ சரியா தான் சொன்ன. இந்த வீடு தான் என்னோட அரண்மனை. உன் அம்மா தான் என்னோட மகாராணி. நீ என்னோட செல்ல இளவரசன் போதுமா?”, என்று சிரிப்புடன் கேட்டவர் இருவரையும் அனைத்துக் கொள்ள “நான் மட்டும் தூங்க போறது இல்லை. அந்த ரூம்லே மூணு பேரும் தூங்கிக்கலாம். காலைல மத்த வேலைய பாக்கலாம்”, என்று சொன்ன அதிபன் அவர்களை தன்னுடனே அழைத்துச் சென்றான். அன்றைய நாள் அப்படியே கழிந்தது. ஆனால் கடைசி வரை யாழிக்கு வாழ்த்துச் சொல்லவே மறந்திருந்தான். அவளும் அடி பட்ட கையுடன் வீட்டுக்கு வந்தாள்.

கையில் வலி இருந்தாலும் அவள் அதிகம் யோசித்தது அதிபனைப் பற்றி தான். இத்தனை வருடத்தில் முதல் வாழ்த்தும் அவனிடம் தான் ஆரம்பிக்கும், கடைசி வாழ்த்தும் அவனிடம் தான் முடியும். அப்படி இருக்க இன்று அவன் ஒரு குறுஞ்செய்தி கூட அனுப்ப வில்லை என்பது அவளை அதிகம் பாதித்தது.

கோபமாகவும் வந்தது. அதே நேரம் அவனுக்கு எதுவுமா என்று பயமாகவும் இருந்தது.  கொஞ்சம் கொஞ்சமாக அவளது ரத்த அழுத்தம் எகிற துவங்கியது.

கையில் வேறு அடி பட்டிருக்க அதை சொல்லி புலம்பி அவனிடம் செல்லம் கொஞ்சி அவனது கொஞ்சல் மொழியைக் கேட்காமலும் அவளால் இருக்க முடிய வில்லை. அவன் அழைப்பை எதிர் பார்த்து ஏமார்ந்து போனாள். மான அவமானம் பார்க்காமல் அவளே அவனுக்கு அழைத்து பார்க்கும் போதும் அவனது மொபைல் ஸ்விட்ச் ஆப் ஆகி இருந்தது.

அடுத்த நாளும் இதே கதை தான். ஸ்விட்ச் ஆப் ஆகிருந்த போனை அதிபன் கண்டு கொள்ளவே இல்லை. நேற்றைய நினைவுகள் மனதில் அணிவகுக்க வேண்டாம் எதையும் யோசிக்க வேண்டாம் என்று எண்ணியவன் அன்னையுடன் சேர்ந்து வீட்டை கிளீன் செய்ய ஆரம்பித்தான்.

“நீ ரெஸ்ட் எடு டா”, என்றார் புவனா.

“பரவால்ல மா, அப்பா எங்க?”

“தேவையான பொருள் எல்லாம் வாங்க கடைக்கு போயிருக்காங்க. நீ ஓகே தானே டா?”

“இவ்வளவு அழகான குவீன் என் கூட இருக்கும் போது எனக்கு என்ன கவலையாம்?”. என்று கேட்டவனுக்கு உண்மையிலே யாழியின் பிறந்த நாள் மறந்து தான் போயிருந்தது.

அதே நேரம் “என்ன யாழி பேபி யோசனை பண்ணிட்டு இருக்க? உன் ஓனர் பிரண்ட் அதான் அந்த ஜான் உனக்கு ரெஸ்ட் எடுக்க லீவ் கொடுத்துருக்கான். இது தான் சாக்குன்னு  தூங்காம யோசிச்சிக்கிட்டு இருக்க?”, என்று கேட்டான் இனியன்.

“இவ வேலைக்கு போறதே ரெஸ்ட் எடுக்க தான் மாமா. இதுல தனியா ரெஸ்ட் வேணுமா என்ன? அப்படி தானே யாழி?”, என்றான் விஷ்வா.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை டா, அதி மாமா இப்ப வரைக்கும் கால் பண்ணவே இல்லை. இது வரை என் பெர்த் டேக்கு விஷ் பண்ணாம இருந்ததே இல்லை. கிப்ட் கொடுத்துட்டாங்க தான். ஆனா கால் பண்ணவே இல்லை. அவங்களா தூங்கி எந்திச்சு பண்ணுவாங்கன்னு பாத்தேன், ஆனா பண்ணலை. நானும் பண்ணி பாத்தேன் ஃபோன் ஆப்ல இருக்கு. எனக்கு கடுப்பா வருது. இப்ப அங்க விடிஞ்சு ரொம்ப நேரம் ஆகிருக்கும் தானே?”, என்றாள் வருத்தமாக.

“அண்ணன் எடுக்கலைனா வேற யாருக்காட்டும் கூப்பிட வேண்டியது தானே?”, என்று கேட்டதும் “ப்ச், எனக்கு இது தோணலை இனியா? மாமா எடுக்கலைனதும் எனக்கு மைண்ட் ஆபாகிருச்சு”, என்றாள்.

“இரு நான் புவனாம்மாக்கு கூப்பிடுறேன்”, என்றவன் அழைக்க அவர் அழைப்பை எடுக்கவே இல்லை. செழியனும் எடுக்க வில்லை என்றதும் தான் குழப்பம் வந்தது மூவருக்கும்.

தன்னுடைய அன்னை தந்தைக்கு அழைக்க அவர்கள் அவனை பேசவே விடாமல் உடனே ஊருக்கு வா என்று மட்டும் சொல்லி விட்டு வைத்தார்கள்.

வேறு வழி இல்லாமல் இலக்கியாவை தான் அழைத்தான் இனியன். “சொல்லு அண்ணா”, என்றாள்.