அத்தியாயம் 6

நிலாக்கால நினைவுகள் எப்போதும் 

மனதுக்கு நெருக்கமானவை தான் 

அதில் சுகம் மிக இருப்பதால்!!!

இங்கே நடந்த விஷயம் எதுவும் இனியன், விஷ்வா  மற்றும் யாழிக்கு தெரிய வில்லை. சொல்லவும் யாரும் தயாராக இல்லை என்பதால் அங்கே யாழிக்கு அடி பட்டு மருத்துவமனையில் இருப்பதும் இங்கே யாருக்கும் தெரியாமல் போனது. அதிபன் சரியாக இருந்திருந்தால் அவன் அழைத்திருப்பான். இப்போது அவன் அவளைக் கூட நினைக்க முடியாத நிலையில் இருந்தான்.

அனைவரும் தன்னுடைய அறையை விட்டுச் சென்றதும் எழுந்த வெண்ணிலா கதவை பூட்டி தாள் போட்டாள். அதிபனுக்கு அழைத்த சிம்மை ஏற்கனவே கழட்டி வைத்திருந்தாள். அதை உடைத்து டாய்லெட்டில் போட்டு பிளஷ் செய்தவள் கண்ணாடியில் தன் முகத்தை பார்த்தாள்.

கலைந்திருந்த முடியை எடுத்து ஒரு கிளிப்பில் அடக்கியவள் தானே கீறிய கைகளில் மருந்தைப் போட்டாள். பின் கட்டிலில் அமர்ந்தவள் “அப்பாடி இந்த கல்யாணத்தை நல்ல படியா நிறுத்தட்டேன். ஆனா சாரி அதிபன் மாமா, நீங்க வீட்டை விட்டு போகணும்னு எல்லாம் நான் எதிர் பாக்கல. ஆனா நடந்துருச்சு. இனி நான் சொன்னது மட்டும் தான் உண்மையா இருக்கணும்னா நீங்க இனி இந்த வீட்டுக்கு வரக் கூடாது. நான் வருணைக் கல்யாணம் பண்ணின பிறகு வேணும்னா நீங்க இங்க வந்துக்கோங்க”, என்று தனக்கு தானே பேசியவள் இனி தான் கொஞ்சம் கவனமாக இருக்க வேண்டும். இன்று நடித்த நடிப்பை தொடர வேண்டும் என்று எண்ணிக் கொண்டாள்.

பின் திருமணம் நின்ற விஷயத்தை சொல்வதற்காக வருணுக்கு அழைத்தாள். ஆனால் அவன் சீக்கிரமே தூங்கி இருக்க அவளது அழைப்பை எடுக்க வில்லை. அவனிடம் இந்த விஷயத்தை சொல்லி சந்தோஷப் பட முடியவில்லையே என்று இருந்தது அவளுக்கு. பின் காலையில் சொல்லிக் கொள்ளலாம் என்று எண்ணி நிம்மதியாக உறங்க ஆரம்பித்தாள்.

ஒருவனுடைய சுயமரியாதையை கீறி அவன் மீது களங்கம் சுமத்தி உயிரோடு கொன்று விட்டோம் என்ற குற்ற உணர்ச்சி அவளுக்கு சிறிதும் இல்லை. ஒரு குடும்பமே பிரிந்து வீட்டை விட்டுச் சென்று விட்டதே என்ற பரிதாபமும் இல்லை. அவ்வளவு சுயநலவாதியாக இருக்கும் அவளுக்கு எதையோ ஜெயித்த நிம்மதி இருந்தாலும் வல்லவனுக்கு வல்லவன் வையத்தில் உண்டு என்ற பழமொழி மறந்து விட்டது போலும். தான் செய்ததற்கான வினை பயன் திருப்பி தன்னை நோக்கி கூடிய விரைவில் வரும் என்று அவள் எதிர் பார்க்க வில்லை.

காரில் சென்று கொண்டிருந்த செழியன் குடும்பத்தினர்  மனதுக்குள் பல குழப்பங்கள் இருந்தாலும் இப்போது மகனின் மன நிலையே பெரியதாக இருந்தது அவனைப் பெற்றவர்களுக்கு.

முன் சீட்டில் டிரைவரும் செழியனும் அமர்ந்திருக்க பின்னால் புவனாவின் தோளில் சாய்ந்த படி அமர்ந்திருந்தான் அதிபன். அவன் கண்கள் அவன் மனது போல இறுகி மூடி இருந்தது.

“இப்ப எங்கங்க போறோம்? எங்க அண்ணா வீட்டுக்கு வேணா போவோமா?”, என்று கேட்டார் புவனா.

“அங்க வேண்டாம். உங்க அண்ணாவை நான் குறை சொல்றதா நினைக்காத புவி. என் மகனை அங்க கொண்டு போய் நிறுத்தி இப்படி நடந்துருச்சுன்னு தன்னிலை விளக்கம் சொல்ல எனக்கு விருப்பம் இல்லை. இப்ப அவனுக்கு தேவை தனிமையும் நிம்மதியும் அமைதியும் தான். ஒரு நல்ல அப்பாவா அதை தான் நான் என் மகனுக்கு கொடுக்கணும். நம்ம வீட்டுக்கே போகலாம்”, என்றார்.

“அங்க போய் ஒரு வருஷம் ஆகிருச்சேங்கே. கிளீன் பண்ணவே இல்லையே?”

“நூலாம்படையும் ஓட்டடையும் தூசியும் தானே இருக்கும்? நிம்மதியை கெடுக்குற மனுசங்க இருக்க மாட்டாங்கள்ல? பத்து நிமிஷத்துல கிளீன் பண்ணிறலாம். என் பையன் அங்க மட்டும் தான் நிம்மதியா இருப்பான்”, என்றார்.

தனக்காக யோசிக்கும் தந்தையை கண்டு பெருமையாக இருந்தது அதிபனுக்கு. அன்னையும் தந்தையும் தன்னை நம்ப வில்லை என்றால், தான் இன்னும் உருக்குலைந்து போயிப்போம் என்று புரிந்தது. இன்றைய நாள் இதை விட மோசமாக முடியாது என்று எண்ணியவன் அன்னையின் மடியில் படுத்துக் கொண்டான்.

புவனாவின் கை விரல்கள் அவன் தலையை வருட நிம்மதியாக உறக்கத்தை தழுவினான்.

அதிபன் பிறந்த போது தான் காஞ்சிபுரத்தில் இந்த வீட்டை வாங்கினார் செழியன், அதையும் மனைவி பெயரில் தான் வாங்கினார்.

புவனா இல்லம் என்ற பெயர் பலகையைத் தாங்கி இருந்தது அந்த வீடு. கீழே நான்கு அறைகள் ஒரு கிட்சன், பூஜை அறை, ஹால் மற்றும் மாடியில் ஒரு அறை என கொஞ்சம் பெரியதாகவே இருந்தது.

“அதி கண்ணா வீடு வந்துருச்சு டா”, என்று எழுப்பினார்  புவனா.

நிர்மலமான மனதுடன் எழுந்து உள்ளே சென்றான் அதிபன். யாருக்குமே புது இடத்துக்கு வந்த ஒரு உணர்வு வரவே இல்லை.

செழியனுக்கு தன்னுடைய முதல் சம்பாத்தியத்தில் வாங்கியதொறு நிறைவும் புவனாவுக்கு அவர்களின் காதல் வாழ்க்கையும் நினைவில் வந்தது. அதிபனுக்கோ தன்னிடம் வந்து சேர்ந்த நிம்மதி வந்தது. மொத்தத்தில் மூவருமே நிம்மதியாக தான் உள்ளே நுழைந்தார்கள்.

“கொஞ்ச நேரம் இங்க உக்காருங்க, நான் வரேன்”, என்று சொல்லி விட்டு கதவை திறந்து உள்ளே சென்ற புவனா முதலில் அதிபனுக்காக ஒரு அறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தார்.

வெளியே தந்தையும் மகனும் அமர்ந்திருந்தார்கள். சோர்ந்து போய் இருந்த மகனை ஒரு பார்வை பார்த்தவர் “நீ என் பையன் அதி. நீ பிறந்தப்ப எவ்வளவு பூரிச்சு போனேனோ இப்ப வரைக்கும் உன்னோட ஒவ்வொரு வெற்றி அப்பவும் பூரிச்சு போய் தான் இருக்கேன். நான் எந்த அளவுக்கு உனக்கு நல்லா அப்பாவா இருக்கேனோ அதே மாதிரி நீயும் எனக்கு நல்ல பிள்ளைன்னு பெருமை எனக்கு இருக்கு டா. யாரு என்ன சொன்னாலும் என் மகன் தப்பு பண்ண மாட்டானு நான் அடிச்சு சொல்லுவேன். ஆனா எனக்கு ரெண்டு கேள்விக்கு பதில் வேணும். நான் உன்னை சந்தேகப் பட்டு கேக்கலை அதி”, என்றார்.

“இருக்குற நிலைமை எனக்கு எதிரா இருந்தாலும் நீங்களும் அம்மாவும் என்னை நம்புனதே எனக்கு ஆயிரம் யானையோட பலத்தை தருதுப்பா. என்ன கேக்கணுமோ கேளுங்க. உங்களுக்கு பதில் சொல்ல நான் கடமை பட்டிருக்கேன்”, என்றான்.

இருவரும் பேசுவது உள்ளே சுத்தம் செய்து கொண்டிருந்த புவனாவின் காதிலும் விழுந்தது.

“இது வரைக்கும் நீ ஒரு முறை தான் குடிச்சிருக்க அதி. அதுவும் உன்னோட பிரண்ட் இறந்து போனதை மறக்க முடியாம தான். அதுக்கப்புறம் நீ குடிச்சது இல்லை. எதுக்காக இன்னைக்கு குடிச்ச? அப்படி என்ன வலி உனக்கு? இன்னொரு கேள்வி இது வரைக்கும் நீ யாழி ரூமுக்கு போயிருக்க. ஆனா வெண்ணிலா ரூமுக்குள்ள நீ போனதே இல்லை. எதுக்கு அங்க போன? அவ சத்தம் கேட்டு தான் நீ போனியா?”, என்றார்.

தன் மேல் தந்தைக்கு இருந்த நம்பிக்கை ஒரு உத்வேகத்தை கொடுக்க “இன்னைக்கு முழுக்க கொஞ்சம் டிப்ரஷன் பா. அதிக மன அழுத்தத்தை தாங்க முடியாம தான் குடிச்சேன். காலைல யாழி கூட சண்டை, அப்புறம்”, என்று ஆரம்பித்தவன் நடந்த விபத்தைப் பற்றிச் சொல்ல பதறிப் போனார் செழியன்.