அப்போதும் தண்டாயுதபாணி அடங்காமல் “நான் இல்லாததையா சொன்னேன்? உன் அப்பன் உன் அம்மா காரியை திருட்டுத் தனமா இழுத்துட்டுப் போனான், உன் அம்மா உன் அப்பா கூட ஓடி போய் கல்யாணம் பண்ணிக்கிட்டா. அவங்க ரத்தத்துல பிறந்த நீ எப்படி இருப்ப?”, என்று கேட்க அவரை அடிக்க மீண்டும் கை ஓங்கி இருந்தான் அதிபன்.
“அதிபன் அமைதியா இரு”, என்று சொன்ன செழியன் “தம்பின்னு இப்பவும் நினைக்கிறதுனால தான் உன் மேல கையை வைக்காம இருக்கேன். இல்லைனா நீ பேசுறதுக்கும் என் பையனை அடிச்சதுக்கும் உன் குடலை உருவி மாலையா போட்டிருப்பேன். நான் உண்மையா என் பொண்டாட்டியை காதலிச்சேன். அப்பா அம்மா கிட்ட சொன்னேன். அவங்க ஜாதி மதம்னு பேசினாங்க. அப்புறம் தான் அவளை கூட்டிட்டு போய் கல்யாணமும் பண்ணிக்கிட்டேன். என் பொண்டாட்டி எதுக்கும் ஆசைப்படாம என்னை மட்டும் நம்பி கல்யாணம் பண்ணிக்கிட்டா. இதுல உண்மையான காதலை தவிர வேற என்ன தப்பு இருக்கு? என் மகன் உண்மையான காதலுக்கு பிறந்தவன். அவனை வளத்தது புவனாவும் என் தங்கச்சி சவுந்தர்யாவும். அவன் பிறப்புலயும் தப்பு இல்லை. வளர்ப்புலயும் தப்பு இல்லை. அந்த கடவுள்னு ஒருத்தன் இருந்தா யார் பிறப்புலயும் யார் வளர்ப்புலயும் தப்பு இருக்குனு காட்டுவார்”, என்றார்.
பின் வேணுகோபால் புறம் திரும்பியவர் “அவன் அவ்வளவு பேசுறான் நீங்க அமைதியா வேடிக்கை பாத்துட்டு இருக்கீங்க இல்லைப்பா? நல்லா இருக்கு, ரொம்ப நல்லா இருக்கு. நாங்க காதல் கல்யாணம் பண்ணிட்டு வாழ வக்கில்லைன்னு உங்க கிட்ட வரலை. நீங்க தான் எங்களை தேடி வந்தீங்க. அதனால தான் இந்த வீட்டுக்கு வந்தோம். என் பொண்டாட்டி பிள்ளைகளை வளக்க எனக்கு அப்பவும் தெம்பு இருக்கு. இப்பவும் இருக்கு. அதிபன் என்னோட மகன். நான் எப்படி உத்தமனோ அது போல தான் அவனும். எந்த கோயில்ல அடிச்சு வேணும்னாலும் சத்தியம் பண்ணுவேன். என் மகன் முகத்துல எனக்கு தப்பு இருக்குறதா தெரியலை. அவன் இப்படி ஒரு மகா பாதகத்தை செஞ்சிருக்க மாட்டான். அவன் என்ன பேச வாரானு கூட யாருக்கும் கேக்க மனசு இல்லைல. இனி அவன் நல்லவன் தான்னு யாருக்கும் நிரூபிக்க தேவை இல்லை. உங்களை பொறுத்த வரைக்கும் அதி தப்பு பன்னிட்டான். அதுக்கு எங்க வளப்பு தான் காரணம் அப்படி தானே. அப்படியே இருக்கட்டும்”, என்றவன் மகன் தலையை வருடி “யார் நம்பினாலும் நம்பலைனாலும் இந்த அப்பா உன்னை நம்புறேன் டா கண்ணா”, என்றதும் அதிபன் தலை தன்னால் உயர்ந்தது.
“புவி, இங்க வா”, என்று மனைவியை அழைத்தார்.
அதிபனின் கையை ஆறுதலாக பற்றிய படி அழுது கொண்டிருந்த புவனா “என்னங்க”, என்றாள்.
“என்னை நம்பி வந்த உன்னையும் நம்ம மகனையும் இந்த வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நான் ரொம்ப கஷ்ட படுத்திட்டேன் மா. இவங்க எல்லாம் உன்னை நிறைய தடவை அவமானப் படுத்தி வேலைக்காரி மாதிரி நடத்தினப்பவே நான் முடிவு எடுத்துருக்கணும். தப்பு பண்ணிட்டேன். இனி நமக்கு எந்த உறவும் வேண்டாம். கூட பிறந்தவங்க மனசுல இவ்வளவு வன்மம் வச்சிருக்காங்கன்னு தெரியாம போச்சு. நம்ம மகனை கூட்டிட்டு மேல போ. உனக்கு கால் மணி நேரம் தான் டைம். நம்ம சம்பாத்தியத்துல வாங்கின முக்கியமான பொருளை மட்டும் ரெண்டு பேரும் எடுத்துட்டு வாங்க. நாம இனி இங்க இருக்க தேவை இல்லை”, என்றார்.
அதற்கு எந்த எதிர்வினையும் புரியாமல் “சரிங்க”, என்று சொன்ன புவனா “எங்களுக்கு உன்னை பத்தி தெரியும் அதிகண்ணா. யாருக்கும் நீ நிரூபிக்கணும்னு அவசியம் இல்லை. வா நம்ம போகலாம்”, என்று சொல்லி அவனை அழைத்துச் சென்றார்.
“மச்சான்”, என்று சேகர் ஏதோ சொல்ல வர “உங்க பொண்ணுக்கு என்ன நடந்துச்சுன்னு தெளிவா விசாரிங்க. கண்டிப்பா இதுக்கு என் மகன் பொறுப்பு இல்லை. அவளுக்கு நல்ல மாப்பிள்ளையா பாருங்க மாப் .. சேகர்”, என்று சொன்னவர் தன்னுடைய போனை எடுத்து கேப் புக் செய்ய ஆரம்பித்தார்.
“செழியா”, என்று வேணுகோபால் அழைக்க “இனி நமக்குள்ள எதுவும் இல்லைப்பா. பிஸ்னஸ்ல இருந்து நானும் அதியும் ஒரேடியா விலகிக்கிறோம். இந்த வீட்டுக்கோ உங்களுக்கோ உங்க சொத்துக்கோ இனி எங்களுக்கோ எந்த சம்பந்தமும் இல்லை. மத்தவங்க மனசுல எவ்வளவு வக்கிரம் இருக்குன்னு இன்னைக்கு தானே தெரிஞ்சிருக்கு. ஒரு வாரம் கழிச்சு லீகலா வந்து கையெழுத்தை போட்டு தரேன்”, என்றார்.
“யார் மனசுல வக்கிரம்? எனக்கா? எல்லாம் உன் மகன்..”, என்று தண்டாயுதபாணி மீண்டும் ஆரம்பிக்க அடுத்த நொடி அவர் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார் செழியன்.
தண்டாயுதபாணி கன்னத்தில் கை வைத்த படி அதிர்ந்து நிற்க “இன்னொரு வாட்டி என் மகனைப் பத்தி பேசுன உயிரோட விட மாட்டேன். கொன்னு புதைச்சிருவேன் பாத்துக்கோ. பொறுத்து போனா ஓவரா ஆடுவியா? இப்ப என்ன டா இந்த சொத்து தானே உன் கண்ணை மறைக்குது. அதை நானும் என் குடும்பமும் உனக்கு பிச்சையா போடுறோம். இன்னொரு தடவை என் மகனைப் பத்தி ஒரு வார்த்தை வந்துச்சு உன் வாய்ல நாக்கு இருக்காது”, என்ற செழியனைக் கண்டு அனைவருமே அதிர்ந்து தான் போனார்கள்.
இத்தனை நாள் குடும்பத்துக்கு மூத்த மகனாக அமைதியின் சொரூபமாக இருந்த செழியனா இந்த அளவுக்கு கோபப் படுவது என்று அதிர்ந்து தான் பார்த்தார்கள்.
மனைவிக்காகவும் மகனுக்காகவும் தன்னையே எதிர்த்து பேசும் செழியனை பார்த்து அதிர்ந்து நின்றார் வேணுகோபால்.
தன்னைச் சுற்றி இவ்வளவு நடந்த போதும் முழங்காலில் தலையை புதைத்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. அவள் நினைத்தது பொய்ச் சொன்னால் இந்த திருமணம் நிற்கும் என்பது தான். ஆனால் இரண்டு மாமாவுக்கும் சண்டை வரும் என்றோ அவர்கள் வீட்டை விட்டுச் செல்வார்கள் என்றோ அவள் எதிர் பார்க்க வில்லை.
இப்போதும் அங்கிருந்த அனைவருக்கும் அதிபன் இதை பண்ணியிருக்க மாட்டானோ என்ற எண்ணமும் ஆனா வெண்ணிலா இப்படி இருப்பதற்கு யார் காரணம் என்று தான் தோன்றியது.
அறைக்குச் சென்ற அதிபன் தன் மேல் விழுந்த பழியில் தளர்ந்து போய் இருக்க அவனுக்கு பதிலாக புவனா தான் அவனுக்கு தேவையான உடைகளையும் அவனது சர்டிபிக்கேட் முதலியவற்றையும் ஒரு பையில் எடுத்து வைத்தாள்.
டேக்சி வந்ததும் செழியன் கீழே இருந்தே அழைக்க “அப்பா கூப்பிடுறாங்க, வா அதி கிளம்பலாம்”, என்று அவனை எழுப்பினார் புவனா.
அவன் அமைதியாக கிளம்ப மகனின் மன நிலை அந்த பெற்றோருக்கு தெளிவாகவே புரிந்தது. மூவரும் வீட்டை விட்டுக் கிளம்பினார்கள்.
சவுந்தர்யா வந்து புவனாவின் கைகளை பற்றிக் கொள்ள “எனக்கு எந்த வருத்தமும் இல்லை சவுந்து, நல்லா இருங்க”, என்று மட்டும் சொல்லி விட்டு மகனின் கைகளை பற்றி அழைத்துக் கொண்டு சென்று விட்டார்.
வேணுகோபால் நிலைமை இந்த அளவுக்கு போகும் என்று எதிர் பார்க்க வில்லை. வீட்டில் இருந்த அனைவருமே ஒரு மாதிரியான மன நிலையில் தான் இருந்தார்கள். வெண்ணிலா இருக்கும் நிலையில் அவளிடம் மேலும் விசாரிக்கவும் யாருக்கும் மனதில்லை.
நடந்த கலவரத்தில் நிம்மதியாக இருந்தது தண்டாயுதபாணி மற்றும் சரஸ்வதி தான்.
இந்த நிலைமையிலும் “என்னங்க இனி நம்ம இனியன் தானே இங்க எல்லாமே?”, என்று கண்கள் மின்னக் கேட்டார் சரஸ்வதி.
“மம் ஆமா, இது அவனுக்கு வந்த அழகான வாய்ப்பு. அவன் சரியா பயன்படுத்திக்கனும்”, என்றார் தண்டாயுதபாணி எந்த குற்ற உணர்வும் இல்லாமல். ஆனால் அவர்கள் நினைப்புக்கு எல்லாம் அப்பாற்பட்டவன் இனியன் என்பதை அவர்கள் அறிய வில்லை.