“என்னை விடு விடு, காப்பாத்துங்க”, என்றும் மேலும் கத்த அதிபன் அதிர்ந்து விழிக்கையிலே ஒவ்வொருவராக பதட்டத்துடன் அந்த அறைக்கு வந்தனர். வெண்ணிலா இருந்த கோலமும் அவள் கண்ணீரும் என்னை விடு விடு என்று அதிபனிடம் அவள் போராடிக் கொண்டிருந்ததும் நடந்ததை வேறு மாதிரி அவர்களுக்கு சொல்ல அதிபனை அனைவரும் குழப்பமாக பார்த்தனர்.
ஓடிச் சென்று அதிபனை தள்ளி நிறுத்திய சத்யாவதி மகளை அணைத்துக் கொண்டார். அவளும் அன்னையின் தோளில் முகம் புதைத்து ஏங்கி ஏங்கி அழுதாள்.
அனைவரும் அதிபனைப் பார்க்கும் போது தான் அதிபனுக்கு பொறி தட்டியது. “இவ என்ன செய்ய டிரை பண்ணுறா”, என்று அதிபன் யோசிக்கையிலே “நிலா என்ன ஆச்சு மா? ஏன் இப்படி இருக்க? யார் உன்னை இப்படி பண்ணினது?”, என்று கேட்ட படி அவள் மேல் ஒரு போர்வையைச் சுற்றி அனைத்துக் கொண்டாள் சத்யாவதி.
“அதிபன் மாமா என்னை என்னை..”, என்று திக்கி தினறிய படி வெண்ணிலா ஒப்பாரி வைக்க அது வரை குழப்பத்தில் இருந்த அனைவரும் கொஞ்சம் கொஞ்சமாக அதிபன் மேல் சந்தேகப் பார்வையாக விழுந்தது.
“அதிபா நீயா இப்படி பண்ணின? என்ன காரியம் டா பண்ணிருக்க?”, என்று கேட்டார் வேணு கோபால். அவர் அப்படிக் கேட்டதும் முற்றிலும் உடைந்து போனவன் தன்னுடைய நிலை தனக்கு எதிராக இருக்கிறது என்பதை புரிந்து “தாத்தா… நான்.. ஒரு நிமிஷம் நான் சொல்றதைக் கேளுங்க”, என்று சொல்ல வந்தான். ஏனென்றால் இப்போது இருக்கும் நிலைமையில் அனைவரும் அவனைத் தவறாக நினைக்க தான் வாய்ப்பு இருக்கிறது என்று அவனுக்கு புரிந்தது.
ஆனால் அவன் சொல்ல வருவதைக் கூட கேட்காமல் வேணுகோபாலன் “சீ”, என்று முகம் சுழிக்க “எந்த குடும்பத்துல பிறந்துட்டு என்ன வேலை டா பாக்குற?”, என்று கேட்ட படி அவன் கன்னத்தில் மாறி மாறி அடிக்க ஆரம்பித்தார் தண்டாயுதபாணி.
சேகர், விஷ்ணு, சவுந்தர்யா, சரஸ்வதி அனைவருக்குமே அதிபனா இப்படி செய்தது என்ற கேள்வியும் கண்டிப்பா அதிபன் இதை பண்ணிருக்க மாட்டானே என்ற கேள்வியும் மாதிரி மாதிரி வந்தது.
தண்டாயுதபாணி அடிக்க அடிக்க அவனுக்கு கோபமும் அவமானமும் ஒருங்கே வந்தது. “நான் சொல்றதைக் கேளுங்க”, என்று சொன்னதை யாருமே கேட்க வில்லை.
அதிபனை அனைவராலும் சந்தேகப் பட முடிய வில்லை. அதே நேரம் வெண்ணிலாவின் கோலம் அவனுக்கு எதிராக தான் இருந்தது.
தண்டாயுதபாணி அவனை அடித்துக் கொண்டிருக்க “அப்பா எங்க பையன் அப்படிச் செஞ்சிருக்க மாட்டான். தம்பியை அடிக்க வேண்டாம்னு சொல்லுங்க. அதி கிட்ட என்ன நடந்ததுன்னு கேக்கலாம்”, என்றார் செழியன்.
“ஆமாங்க மாமா, எங்க பையன் அப்படி பண்ண மாட்டான். அவன் ஏதோ பேச வாரான். அவனைப் பேச விடுங்க”, என்று சொன்ன புவனா ஓடிச் சென்று தன்னுடைய மகனை தன் பக்கம் இழுத்துக் கொண்டார்.
தண்டாயுதபாணி மேலும் அவனை அடிக்கச் செல்ல “சின்னவனே அவனை அடிக்காதே விடு”, என்று வேணுகோபால் சொன்னதும் தண்டாயுதபாணி ஒதுங்கி நின்றார். ஆனாலும் அவனை முறைத்துக் கொண்டே இருந்தார்.
“இவனை எல்லாம் கொன்னு போடணும் பா. நம்ம வீட்ல பிறந்துட்டு எப்படி ஒரு காரியம் பண்ணியிருக்கான் பாருங்க. எல்லாரும் சேந்து கொடுத்த இடம் தான் இப்படி வந்து நிக்குது”, என்றார் தண்டாயுதபாணி.
“ஏதோ கட்டிக்க போற பொண்ணுன்னு நினைப்புல இப்படி பண்ணிட்டான் போல? இதை பெருசு பண்ணாதீங்க”, என்று எரியும் தீயில் எண்ணையை ஊற்றினார் சரஸ்வதி.
“அண்ணி என்ன பேசுறீங்க? இன்னும் கல்யாணம் முடியலை. அது மட்டும் இல்லாம விருப்பம் இல்லாத பொண்ணை இப்படி பண்ணலாமா? என்ன வளப்போ?”, என்றார் சத்யாவதி.
“முதல்ல அதிபன் என்ன சொல்றான்னு கேப்போம் மாமா”, என்றார் விஷ்ணு.
“ஆமங்கப்பா, அவனையும் பேச விடணும்ல?”, என்றார் சவுந்தர்யா. சேகரோ மகள் நிலையைக் கண்டு திக் பிரம்மைப் பிடித்து நின்றிருந்தார். ஆனால் அவராலும் அதிபனை தவறாக நினைக்க முடியவில்லை. அவனும் அந்த வீட்டின் பிள்ளை தானே?
குழந்தையை தூங்க வைத்துக் கொண்டிருந்த இலக்கியா கூட நடப்பதை அதிர்வுடன் தான் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கும் அதிபன் அண்ணா அப்படி செய்திருக்க மாட்டான் என்ற எண்ணம் தான் வந்தது.
“ஆள் ஆளுக்கு அவனை விசாரிக்கிறீங்க? கண்டிப்பா அவன் தான் செஞ்சிருக்கான். அதான் என் பொண்ணு சொல்றால்ல? அவனை நம்புவீங்க. என் பொண்ணை நம்ப மாட்டீங்களா?”, என்று கேட்டார் சத்யாவதி.
“இல்லை சத்யாக்கா. அதிபனும் இந்த வீட்டுப் பிள்ளை தான். அவனையும் பேச விடணும்ல?”
“இங்க பாரு சவுந்து, இதுல நீ தலையீடாத. இப்படி அநியாயம் நடந்தது என் பொண்ணுக்கு”, என்று சத்யாவதி சொன்னதும் அதற்கு மேல் சவுந்தர்யா எதுவுமே பேச வில்லை.
“இவ்வளவு பண்ணிட்டு அப்படி என்ன பா பேசுவான் இவன். தெரியாம பண்ணிட்டேன் மன்னிச்சிடுங்கன்னு சொல்லுவானா?”, என்ற தண்டாயுதபாணி அதிபனை நன்கு பார்த்து “அப்பா இவன் நல்லா குடிச்சிட்டு வந்துருக்கான் பா. குடிச்சிட்டு இப்படி எல்லாம் பண்ணலாமா?”,. என்று கேட்டார்.
அதற்கு மேல் அதிபன் எதுவுமே பேச வில்லை. தலை குனிந்து அப்படியே நின்றிருந்தான். “சாரி டி பாப்பு, நீ குடிக்காதேன்னு சொன்ன. அதையும் மீறி பண்ணிட்டேன். என்னை மன்னிச்சிடு”, என்று மனதுக்குள் யாழியிடம் பேச்சு வார்த்தை நடத்தினான் அதிபன்.
“சேசே இப்படி ஒருத்தனுக்கா என் பொண்ணைக் கட்டிக் கொடுக்கணும்னு ஆசைப்பட்டேன். நல்லதா போச்சு, அந்த ஜோசியர் சொன்னதுனால என் பொண்ணு வாழ்க்கை தப்பிச்சது. இவனோட கேவலமான குணம் தெரியுறது தான் அந்த கண்டம் போல?”, என்றார் சத்யாவதி.
“அப்பா இவனை எல்லாம் வைக்க வேண்டிய இடத்துல வச்சிருக்கணும். மூத்த பேரன்னு தலையில தூக்கி வச்சி ஆடுனீங்கள்ல? அதான் இப்படி கழுத்தை அறுத்துட்டான். இவ பெத்தவங்க எப்படி இருந்தாங்களோ அப்படி தானே இவனும் இருப்பான். அவங்க ரத்தம் தானே இவனுக்கு ஓடுது”, என்று சரியான நேரம் பார்த்து வன்மத்தைக் கக்கினார் தண்டாயுதபாணி.
அடுத்த நொடி “ஏய்”, என்ற படி அவரை அடிக்க வந்திருந்தான் அதிபன்.
தண்டாயுதபாணி ஒரு நொடியில் அவனுடைய ஆளுமையில் நடுங்கிப் போய் நின்றார். “வேண்டாம் கண்ணா விட்டுடு”, என்று செழியன் சொன்னதும் கையை இறக்கியவன் “என்னை என்ன வேணும்னாலும் சொல்லுங்க. என் அம்மா அப்பா பத்தி பேசுனீங்க சித்தப்பானு.. இல்லை இல்லை.. எங்க அப்பா கூட பிறந்த தம்பின்னு கூட பாக்க மாட்டேன். நான் தப்பு பண்ணினதாவே இருக்கட்டும். இனி உங்க யாருக்கும் விளக்கம் கொடுக்கணும்னு எனக்கு எந்த அவசியமும் இல்லை. உங்க பொண்ணு யாருக்கு வேணும்? நான் ஒண்ணும் இவளைக் கல்யாணம் பண்ணி வைங்கன்னு கேக்கலை”, என்று சொன்ன அதிபன் குரலில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள்.