காலையில் இருந்து நடந்த நிகழ்வுகள் அவனை குழப்பத்தில் ஆழ்த்த யாழிக்கு செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து பாருக்கு காரைச் செலுத்தினான். அவன் அதிகமாக குடிக்கும் குடிகாரன் எல்லாம் இல்லை. ஒரு முறை வீட்டுக்கு தெரிந்து பின் நண்பர்களுடன் இரண்டு முறை என தான் குடித்திருக்கிறான்.

            இன்றும் மூக்கு முட்ட என்றளவுக்கு இல்லாமல் ஆனால் கொஞ்சம் அதிகமாகவே சரக்கை குடித்து முடிக்க அங்கே யாழி சென்ற வாகனம் விபத்துக்குள்ளானது. அங்கு காலையில் சீக்கிரம் எழுந்த யாழிக்கு தூக்கமே வரவில்லை. அதிபனுக்கு அழைத்தாள். அவனும் எடுக்க வில்லை. சரி தூங்குவான் என்று எண்ணி இனியன் மற்றும் விஷ்வாவைக் காணச் சென்றாள். அவர்கள் நல்ல உறக்கத்தில் இருக்க அங்கே தூரத்தில் இருக்கும் கோவிலுக்குச் செல்லலாம் என்று எண்ணி கிளம்பி விட்டாள்.

            இங்கே அதிபனுக்கு இருட்டத் துவங்கி இருக்க அவளுக்கோ விடியத் துவங்கி இருந்தது. ஏழு மணிக்கு எல்லாம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு வரும் வழியில் டிரைவர் காரை சரியாக ஓட்டாததால் எதிரில் வந்த கார் மீது மோதி விபத்து நடந்திருந்தது.

            ரத்தம் தெறிக்க மயங்கி விழுந்தவளையும் உயிருக்கு போராடிய டிரைவரையும் அழைத்துக் கொண்டு அருகிலிருந்தவர்கள் ஜானின் மருத்துவமனையில் சேர்த்தார்கள்.

ஜான் தான் இனியன் மற்றும் விஷ்வாவுக்கு தகவல் கொடுத்தான். பிறந்த நாள் அதுவுமாக இப்படி நடக்கும் என்று அவர்கள் எதிர் பார்க்கவே இல்லை. யாழிக்கு  உயிர் போகும் வலி  தான். ரத்தம் அதிகமாக சென்றிருந்தது. ஆனால் ஜானின் மருத்துவக்குழு அவளைக் காப்பாற்றி “உயிருக்கு ஆபத்து எதுவும் இல்லை. கையில மட்டும் பிராக்சர் இருக்கு. அதும் லேசா தான். ரெண்டு மூணு நாள்ல சரி ஆகிரும்”, என்றார் மருத்துவர். அதற்கு பின்னர் தான் இனியன் மற்றும் விஷ்வாவுக்கு நிம்மதியாக இருந்தது. காலை பத்து மணி போல அவள் கண் விழித்ததும் கடிந்து கொண்டார்கள்.

“எனக்கு வாழ்த்து சொல்ல மாமா கால் பண்ணிருப்பான். என் ஃபோன் எங்க?”, என்று கேட்டாள் யாழி.

விஷ்வா அதை அவள் கையில் கொடுக்க அவளது மாமாவிடம் இருந்து அவளுக்கு எந்த அழைப்பும் வரவில்லை. ஆனால் மற்ற அனைவரிடமும் இருந்தும் அழைப்பு வந்திருந்தது.

இனியன் மற்றும் விஷ்வாவிடம் அடி பட்டதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று சொன்னவள் வீட்டில் அனைவருக்கும் அழைத்துப் பேசினாள். ஆனால் அதிபனிடம் இருந்து கால் வராதது அவளுக்கு கஷ்டமாக இருந்தது.

அதே பத்து மணிக்கு அதிகம் குடித்திருந்தாலும் ஓரளவு நிதானத்துடன் தான் வீட்டுக்கு வந்தான் அதிபன். அந்நேரம் அன்னையை தவிர யாரும் இல்லாமல் இருக்க “வெளியே சாப்பிட்டேன் மா நீ போய் தூங்கு”, என்று சொல்லி விட்டு அறைக்கு வந்தான்.

            “ஒரு மாறி இருக்கான், முகம் வேற சரி இல்லை. இன்னும் தலை வலி போகலையோ?”, என்று எண்ணிக் கொண்டு ஒரு இஞ்சி டீயை போட்டு அவனது அறைக்கு கொண்டு சென்ற புவனா “இதைக் குடிச்சிட்டு தூங்கு கண்ணா”, என்று சொல்லி விட்டுச் சென்றார்,

            அப்போது டீ குடிக்க மனதில்லாமல் இருந்தாலும் அன்னைக்காக குடித்தான். ஆனால் அடுத்த நொடி அடித்த சரக்கு எல்லாம் வாந்தியாக வெளியே தள்ளியது.

            அனைத்தையும் வாந்தி  எடுத்து முடித்தவன் முகம் கழுவிய படி படுக்கையில் அமர்ந்து போனை எடுத்தான். அப்போது யாழிக்கு வாழ்த்து சொல்ல வேண்டும் என்ற எண்ணம் வந்ததும் அவளுக்கு அழைக்க போனான். அப்போது அவனது மொபைல் ஒலித்தது. அதில் புது எண்ணில் இருந்து அழைப்பு வந்திருக்க யாரா இருக்கும் என்று எண்ணி குழப்பமாக அதை எடுத்தான்.

            அவன் எடுத்ததும் “மாமா நான் வெண்ணிலா பேசுறேன். இது என்னோட இன்னொரு நம்பர் தான். அதுல பேலன்ஸ் முடிஞ்சிருச்சு”, என்றாள் படபடப்பாக.

            “சரி சொல்லு வெண்ணிலா, என்ன விஷயம்? அதுவும் இந்நேரத்துல கூப்பிட்டுருக்க? தூங்கலையா?”

            “நான் உங்க கிட்ட கொஞ்சம் பேசணும் மாமா. அதுவும் இப்பவே”

            “இப்ப பேசுற மைனட் செட் எனக்கு இல்லை வெண்ணிலா. நாளைக்கு பேசலாமா?”

            “இல்லை இன்னைக்கே பேசணும்”

            “சரி என்னன்னு சொல்லு”

“நேர்ல பேசணும்”

“சரி வெளிய வரேன், தோட்டத்துக்கு போகலாம். இல்லைன்னா மொட்டை மாடிக்கு போகலாம் வா”, என்றான். இதே யாழியா இருந்திருந்தால் எந்த குழப்பமும் இல்லாமல் “ரூமுக்கு வா டி”, என்று அழைத்திருப்பான். ஆனால் வெண்ணிலாவை அப்படி அழைக்க அவனுக்கு மனதில்லை.

            “இல்லை தாத்தா இப்ப தான் மாடிக்கு போனாங்க. அங்க போக முடியாது. தோட்டத்துக்கும் போக முடியாது. நீங்க என்னோட ரூமுக்கு வாங்க”, என்றாள்.

            அவள் சொன்னதில் லேசாக புருவம் சுழித்தாலும் இதில் எந்த தவறும் இருப்பதாக அவனுக்கு தெரியாததால் அவனும் கிளம்பினான். கூடவே அவனுக்கும் அவளிடம் மதியம் நடந்ததைப் பற்றி பேசி ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்றும் அவளுக்கு விருப்பம் இல்லை என்றால் இந்த திருமணத்தை நிறுத்தி விட வேண்டும் என்றும் எண்ணி இந்நேரம் ஒரு பெண்ணின் அறைக்குள் செல்கிறோமே என்றெல்லாம் யோசிக்காமல் அங்கே சென்றான்.

இது வரை யாழியின் அறைக்கு அவன் எப்போது வேண்டும் என்றாலும் செல்வான். ஆனால் வெண்ணிலா அறையை அவன் எட்டிக் கூட பார்த்ததில்லை என்பதால் மனதுக்கு கொஞ்சம் ஒரு மாதிரி தான் இருந்தது. அதாவது நமக்கு பிடிக்காத விஷயத்தைச் செய்யும் போது ஒரு ஒவ்வாமை வருமே. அது போல தான் அவனுக்கும் இருந்தது.

            ஆனால் அவளிடம் பேசியே ஆக வேண்டும் என்ற கட்டாயம் இருப்பதால் அவளது அறைக் கதவை திறந்து உள்ளே சென்றவன் அடுத்த நொடி வெண்ணிலா இருந்த கோலத்தைக் கண்டு அதிர்ந்து போனான்.

            தலை முடி கலைந்து இரவு ஆடை லேசாக உள்ளாடை தெரிவது போல கிழித்து இருந்தது. அவளது கையிலும் கழுத்திலும் நக கீறலும் இருந்தது. அவள் நிலையைக் கண்டு பதறிப் போனவன் “ஐயோ வெண்ணிலா என்ன ஆச்சு உனக்கு? இது என்ன கோலம்? யார் உன்னை இப்படிச் செஞ்சது?”, என்ற படி அவளை நெருங்கி அவள் தோளில்  கை வைத்துக் கேட்டான்.

சிறு வயதில் இருந்து கூடவே இருக்கும் ஒரு பெண்ணின் நிலை அவனுக்கும் மனிதாபிமானத்தைக் கொண்டு வர  அந்த அடிப்படையில் தான் விசாரித்தான். ஆனால் அவளோ அவனுக்கு எந்த பதிலும் சொல்லாமல் அவனை நிமிர்ந்து கூட பார்க்காமல் “என்னைக் காப்பாத்துங்க, யாராவது வாங்க. ஐயோ வாங்க”, என்று கத்தி அனைவரையும் அந்த அறைக்கு அழைத்திருந்தாள்.

“வெண்ணிலா என்ன ஆச்சு மா? எதுக்கு இப்ப பயபடுற? நான் தானே இருக்கேன்.  உன்னை யார் இப்படி பண்ணினான்னு சொல்லு. உங்க அம்மா எதுவும் அடிச்சாங்களா?”, என்று அப்போதும் குழப்பத்தில் தான் கேட்டான்.