கேஸ் சிலிண்டர் ஏற்றி வந்த லாரியும் மரப்பலகை கொண்டு சென்ற லாரியும் ஒன்றுடன் ஒன்று மோதி மிகப் பெரிய அளவில் சத்தம் மற்றும் நெருப்புடன் வெடித்திருந்தது. அதன் அருகில் இருந்த இரண்டு கார் கூட தீ பற்றி எரிந்து கொண்டிருந்தது. அனைவருமே உடல் கருகி தான் போனார்கள்.
இவன் மட்டும் காரை நிறுத்த வில்லை என்றால் அதிபனும் இப்போது இல்லை. அந்த தீக்கு அவனும் இரையாகி இருப்பான். அங்கே இருப்பவர்களுக்கு உதவி செய்ய போக கூட அவனால் முடிய வில்லை. ஏனென்றால் சிலிண்டர்கள் சிதறி சிதறி வெடித்துக் கொண்டிருந்தது. இன்னும் கொஞ்சம் பின்னாடி தள்ளி வந்து காரை நிறுத்தினான். அவன் மனது வேறு படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது.
இன்னும் நிறைய பேர் அங்கே இருக்க அனைவருமே பயத்தில் உறைந்து போய் இருந்தனர். “நல்லதா போச்சு தம்பி நீ பிழைச்ச. யார் செஞ்ச புண்ணியமோ”, என்று ஒரு பாட்டி அவனிடம் சொல்ல அவன் மனம் அதிர்ந்தது.
எப்படி ஒரு விபத்தில் இருந்து தப்பியிருக்கிறோம் என்று புரிந்து அவன் நிம்மதி பெருமூச்சை வெளியிட அப்போது அவனை அழைத்தாள் யாழி.
அவள் அழைப்பைக் கண்டதும் மனம் கொஞ்சம் சமாதானம் அடைய அதை எடுத்து காதில் வைத்தவன் குரலில் இருந்த நடுக்கத்தை மறைத்து “சொல்லு பாப்பு”, என்றான்.
“நீ எங்க இருக்க மாமா? ஆபீஸ் போய்ட்டியா ? உன் மேல கோபமா தான் இருக்கேன். ஆனா பேசணும்னு தான் தோணுச்சு”, என்றாள் சிறுபிள்ளையாக.
அவளிடம் நடந்ததை சொன்னால் பதட்ட படுவாள் என்று எண்ணியவன் “கோபத்தை மறந்து பேசினதுக்கு தேங்க்ஸ் பாப்பு. நான் அப்புறம் கூப்பிடுறேன்”, என்று சொல்லி போனை வைத்தான். அதற்கு மேல் பேசினால் அவள் நிச்சயம் கண்டு பிடித்து விடுவாள். மேலும் அங்கே போலீஸ் தீயணைப்பு துறை அனைவரும் வந்ததும் தன்னிடமும் கேட்பார்கள் என்று தான் போனை வைத்தான்.
“நானே கோபத்தை விட்டுட்டு பேசுறேன். இவன் போனை வைக்கிறான். போடா மாமா, நான் இனி பேச மாட்டேன் போ“, என்றவள் தன்னுடைய வேலையை கவனிக்கச் சென்றாள்.
சிறிது நேரம் அதிபன் அதே இடத்தில் தான் அவர்களுடன் இருந்தான். தீயணைப்பு துறை, போலீஸ், பிரஸ் என அந்த இடமே பரபரப்பாக அதற்கு மேல் அங்கே இருக்க வேண்டாம் என்று எண்ணியவன் அப்படியே ரிவர்ஸ் எடுத்து கிளம்பி இருந்தான்.
அலுவலகம் வந்தவனுக்கு நடந்த விபத்தை எண்ணி ஒரு மாதிரி படபடப்பாகவே இருந்தது. எவ்வளவோ முயற்சி செய்தும் மதியம் வரை வேலையில் அவனால் கவனம் செலுத்த முடியவே இல்லை. மனமே வேலை நிறுத்தம் செய்திருக்க ஒரு வேலையுமே ஓட வில்லை.
இப்படியே இருந்தால் சரியாக வராது என்று எண்ணி தன்னுடைய மேனேஜரை அழைத்தவன் “சுரேஷ் நீங்க கொஞ்சம் வேலையைப் பாத்துக்கோங்க. நான் வீட்டுக்கு கிளம்புறேன். ஏதாவது அர்ஜன்ட்னா கால் பண்ணுங்க”, என்றவன் கிளம்பி விட்டான்.
அவன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்த அப்போது தான் அவன் கண்ணில் பட்டாள் வெண்ணிலா. அதுவும் அவள் அவளுடைய வண்டியில் செல்லாமல் வேறு ஒரு ஆடவனுடன் சென்றாள்.
“இவ என்ன ஆபீஸ் கட் அடிச்சிட்டு இந்த நேரம் எங்கயோ போறா? அதுவும் முன்னாடி இருக்குறது யாரு?”, என்ற கேள்விகள் மண்டையை குடைய அவள் பின்னாடியே காரை செலுத்திக் கொண்டிருந்தவன் அவளுக்கு அழைத்தான்.
சந்தேகம் என்றெல்லாம் இல்லை. ஒரு அக்கறையில் தான் அழைத்து விட்டான். இந்த இடத்தில் இலக்கியா, யாழி, ஏன் இனியன், விஷ்வாக இருந்தால் கூட “இந்நேரத்துல இங்க என்ன டா பண்ணுற?”, என்று அழைத்துக் கேட்டிருப்பான். இப்போதும் அதையே செய்ய தான் அழைத்தான்.
ஹேன்ட் பேகில் இருந்து மொபைலை எடுப்பதும் அதை கண்டு பதறி முன்னால் அமர்ந்திருந்தவனிடம் பயத்துடன் ஏதோ சொல்லுவதும் புரிந்தது. அப்போது தான் அதிபனுக்கு குழப்பமே வந்தது. மேலும் டிராபிக்கில் வண்டியாக இருந்ததால் அவளும் அதிபனின் காரைக் கவனிக்க வில்லை.
அவள் போனை எடுக்க அவன் காத்திருக்க போனை எடுத்து காதில் வைத்தவள் “சொல்லுங்க மாமா”, என்றாள்.
அதற்கு மேல் அவளை தோண்டி துருவ மனதில்லாமல் “தெரியாம கால் வந்திருக்கும் நிலா”, என்று சொல்லி விட்டு வைத்து விடத் தான் நினைத்தான்.
“ஓகே ஓகே மாமா”, என்று அவள் நிம்மதியடைய அப்போது தான் அவனுக்கு சந்தேகம் வழுத்தது. “சாப்பிட்டியா? ஆபீஸ்ல தானே இருக்க?”, என்று போட்டு வாங்கினான்.
“ஆபீஸ்ல தான் மாமா இருக்கேன், கேன்டீன்ல போய் சாப்பிடத் தான் கிளம்பிட்டு இருக்கேன். வைக்கட்டா?”, என்று அவள் கேட்டதும் சரி என்று போனை வைத்தவன் வேறு வழியில் காரைத் திருப்பி தனது வீட்டுக்குச் சென்றான். அவள் பொய்ச் சொல்கிறாள் என்று தெரிந்த பிறகு அவளை பாலோ செய்து என்ன செய்யப் போகிறானாம்? ஆனாலும் அவன் மனதில் எழுந்த குழப்பம் அவனை விட்டுச் செல்ல வில்லை.
அந்த நேரம் வீட்டுக்கு வந்ததும் அனைவரும் அவன் முகத்தை கேள்வியாக பார்க்க “தலை வலிக்கு மா, அதான் சீக்கிரம் வந்தேன். கொஞ்ச நேரம் தூங்குறேன்”, என்று புவனாவிடம் சமாளித்து அறைக்கு வந்ததான்.
நடந்த அனைத்தையும் சொல்லி மற்றவர்களையும் பதட்ட மடைய செய்ய அவனுக்கு மனதில்லை. கூடவே மனதில் பல குழப்பங்கள் அழுத்தங்கள் என அவன் மனதே நிம்மதி இல்லாமல் அலைக்கழிக்க யாழிக்கு அழைத்தான். அவளைத் தவிர அவனுக்கு நிம்மதியை யார் தருவார்களாம்.
ஆனால் அவன் கெட்ட நேரம் அவள் நல்ல உறக்கத்தில் இருந்தாள். அதிபன் மேல் உள்ள கோபத்தால் அவன் நடுராத்திரியில் அவளுக்கு வாழ்த்துச் சொல்லக் கூடாது என்ற கோபத்தில் போனை சைலெண்ட்டில் போட்டிருந்தாள்.
அதிபனும் எதை எதையோ யோசித்த படி அப்படியே கண்ணயர்ந்து விட்டான். அவன் கண் விழிக்கும் போது மாலை ஆறு ஆகியது. இதற்கு மேல் ரூமுக்குள்ளேயே இருந்தால் சரி வராது என்று எண்ணியவன் அன்னையிடம் டீ வாங்கி குடித்து விட்டு காரை கிளப்பிக் கொண்டு வெளியே சென்றான்.
அவன் வீட்டைக் கடந்து வெளியே செல்லும் போது வெண்ணிலா வண்டி வீட்டுக்குள் நுழைவதும் அந்த தெரு முனையில் ஹெல்மெட் அணிந்த ஒரு நபர் தன்னுடைய வண்டியை எடுத்து கொண்டு செல்வதும் அவன் கண்ணில் பட்டது.
அந்த நபர் தான் மதியம் வெண்ணிலாவுடன் சென்ற நபர் என்றும் வெண்ணிலாவுக்கு துணையாக வீடு வரை இப்போது வந்திருக்கிறான் என்றும் அதிபனுக்கு புரிந்தது. வருண் ஹெல்மெட் அணிந்திருந்ததால் அவனை அதிபன் பார்க்க வில்லை.
“இது எந்த மாதிரியான உறவாக இருக்கும்? நட்பு என்றால் தெரு வரைக்கும் வருவானேன்? நேரடியாக வீட்டுக்கே அழைத்து வரலாமே? ஏன் எங்க பிரண்ட்ஸ் எல்லாருமே வீட்டுக்கு வந்துருக்காங்களே. இதில் இவ்வளவு மறைக்க வேண்டும் என்று இல்லையே. மதியம் நான் எங்க இருக்க என்று கேட்ட போது கூட என் பிரண்ட் கூட வெளிய வந்திருக்கேன் என்று சொல்லியிருக்கலாமே?”, என்று எண்ணிய அதிபனுக்கு ஏதோ தவறாக பட்டது.