முதலில் கவனிக்காமல் போனாலும் பின்னால் கவனித்து “என்ன டா ஆபீஸ் போகலை?”, என்று கேட்டார் சத்யாவதி.

            “நீ தானே மா எனக்கு பிடிச்சதை செய்ய சொன்ன? அதான் செஞ்சிட்டு இருக்கேன். வீட்ல படுத்துகிட்டு நேரத்துக்கு சாப்பிட்டுட்டு வெப் சீரீஸ் பாக்குறது எல்லாம் வரம் தெரியுமா? எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. புது ஆபிசோ பழைய ஆபிசோ எல்லாத்தையும் அதிபன் அப்புறம் இனியன் மாமாவே பாத்துக்கட்டும். எங்க அம்மா என்னை எனக்கு பிடிச்சது தான் செய்யச் சொல்லிருக்காங்க”, என்றான்.

அவன் சொன்னதைக் கேட்டு திகைத்துப் போனவர்  “அப்பா சாமி நான் எதுவும் சொல்லலை பா, உனக்காக ஆரம்பிச்ச ஆபீசுக்காவது போ”, என்று விரட்டி விட்டார் சத்யாவதி.

            “அது”, என்று முணுமுணுத்து விட்டு சென்றான் விஷ்வா.

அதற்கு அடுத்த மாற்றம் நடந்தது யாழி வாழ்க்கையில். இப்போது அவள் படித்துக் கொண்டிருந்தாலும் அங்கேயே ஒரு மருத்துவமனையில் உதவி மருத்துவராக பணிபுரியும் வாய்ப்பும் அமைந்தது. அந்த மருத்துவமனையின் உதவியாளர் ஜான் இப்போது யாழியின் நெருங்கிய நண்பன்.

            அவள் என்னவோ அவனை நண்பனாக தான் நினைத்தாள் . ஆனால் அவனோ மனதுக்குள் அவளுக்கான காதல் கோட்டையை வெகு தீவிரமாக கட்டிக் கொண்டிருந்தான்.

வேலை படிப்பு ரிசர்ச் ஜானுடனான நட்பு அதிபனுடனான ஃபோன் உரையாடல் என அவள் வாழ்க்கை சீராக சென்று கொண்டிருந்தது.

இப்படி இருக்க அன்றைய நாள் தான் அதிபனின் வாழ்க்கையில் மோசமான நாளாக அமைந்தது. அன்று காலை உணவின் போது வேணுகோபாலன் அனைவரிடமும் அதிபனின் திருமணத்தைப் பற்றி பேச ஆரம்பித்தார். யாருக்கும் எந்த மாற்றுக் கருத்தும் இல்லாததால் அனைவரும் அமைதியாக இருந்தனர் வெண்ணிலாவைத் தவிர.

            முன்பு திருமண பேச்சு ஆரம்பித்த போது அதிர்ச்சி இருந்தாலும் சாதாரணமாக எதிர் கொண்டவளுக்கு இப்போது வருணின் காதல் அப்படி இருக்க விட வில்லை.

            அனைவரையும் அதிர்வுடன் பார்த்தவளுக்கு வெளியே சொல்லவும் பயமாக இருந்தது. ஆனால்             அவள் ஒரு வார்த்தை உண்மையை சொல்லி இருந்தால் அனைவரும் புரிந்து கொண்டிருப்பார்கள். ஏன் அதிபனே கூட அவள் காதலை நிறைவேற்றி வைத்திருப்பான். இல்லையென்றால் வருணிடம் சொல்லி இருந்தால் கூட அவன் நிச்சயம் ஏதாவது செய்திருப்பான். ஆனால் அவளது மௌனம் மற்றும் பயத்தால் அவள் செய்யப் போகும் செயல் அதிபனின் வாழ்க்கையையே மொத்தமாக புரட்டிப் போட்டது.

இன்றைய நாள் அவன் வாழ்க்கையை அடியோடு மாற்றி அமைக்க போகிறது என்பதை அறிந்து கொள்ளாமல் எப்போதும் போல காலையில் எழுந்தான் அதிபன். அடுத்த கால் மணி நேரத்தில் அவனுக்கு பாலை எடுத்து வந்து கொடுத்தாள்  புவனா.

            “தேங்க்ஸ் மா”

            “அம்மாவுக்கு தேங்க்ஸ் சொல்லுவியா கண்ணா? சரி யாழி ஃபோன் பண்ணினாளா?”

            “மேடம் இப்ப நல்ல மொக்கிக்கிட்டு தான் இருப்பா. இப்ப அவளுக்கு நைட் தான். இரு கால் பன்றேன்”, என்றவன் அவளை வீடியோ காலில் அழைத்தான்.

            உண்மையிலே இப்போது அவள் எதையோ உண்டு கொண்டிருந்தாள். வாயில் உணவை அடைத்த படி “ஹாய்  மாமா. புவி அத்தை குட் மார்னிங்”, என்றவளின் சிரிப்பு இவர்களையும் தொற்றிக் கொண்டது.

            “எப்படி இருக்க யாழி மா?”

            “நல்லா இருக்கேன் அத்தை. ஆனா உங்க சமையலை தான் ரொம்ப மிஸ் பன்றேன்”, என்றாள்.

            “அம்மா அவ பொய்  சொல்றா. அவளை பாத்தா ஒழுங்கா சாப்பிடாத மாதிரியா இருக்கு?”, என்று அதிபன் கிண்டல் செய்ய அவர்களுக்குள் காலையிலே செல்ல சண்டை உருவானது.

            அவளிடம் பேசி விட்டு பாதியிலே புவனா கிளம்பிச் செல்ல இவன் அவளை வம்பு இழுத்துக் கொண்டிருந்தான். சிறிது நேரம் அவனுடன் பேசி விட்டு “சரி மாமா நீ ஆபீஸ் கிளம்பு”, என்றாள்.

            “நான் கிளம்புறது இருக்கட்டும். நீ முதல்ல வாசல்ல போய் பாரு”

            “எதுக்கு மாமா?”

            “நாளைக்கு உனக்கு பெர்த் டே. அதனால அட்வான்ஸ் வாழ்த்துக்கள். அப்புறம் என் செல்ல பாப்புக்கு என்னால முடிஞ்ச ஒரு சின்ன சர்பிரைஸ். நீ என்னன்னு பாரு”, என்றவன் அழகாக புன்னகைக்க அப்படியே போனை தூக்கி கொண்டு வெளியே சென்றாள். ஏதோ கிப்ட் அனுப்பியிருக்கிறான் என்று மட்டும் புரிந்தது.

            உண்மையிலே அதிபன் பரிசை தான் அனுப்பி இருந்தான். ஆனால் அதை கொண்டு வந்தவர்களைக் கண்டு தான் அவ்வளவு திகைத்து போனாள்.

ஏனென்றால் அவள் கதவை திறந்ததும் அங்கே நின்றிருந்தது இனியன் மற்றும் விஷ்வா தான். அவளது சந்தோஷத்தை வீடியோ வழியாக பார்த்துக் கொண்டிருந்த அதிபனின் மனதும் நிறைந்து போனது.

            “ஹே வாங்க டா, எனக்கு ரொம்ப சர்பிரைசா இருக்கு”, என்றவள் இருவரையும் அனைத்துக் கொண்டாள். அவளது சந்தோஷத்தை ஃபோன் வழியாக பார்த்துக் கொண்டிருந்தவன் அவர்களை தொந்தரவு செய்யாமல் அழைப்பை துண்டித்து விட்டு அலுவலகம் கிளம்ப ஆரம்பித்தான்.

            “உன்னை நேர்ல பாத்து இந்த கிப்ட்டை கொடுத்தே ஆகணும்னு அதிபன் அண்ணன் டார்சல் பன்னிருச்சு. எனக்கும் விஷ்வாவுக்கும் டிக்கட் போட்டது கூட அண்ணா தான்”, என்றான் இனியன்.

            அதைக் கேட்டு கடுப்பானவளின் மனது “இவ்வளவு பண்ணிட்டு மாமாவும் இவங்க கூட வந்திருக்கலாம்ல?”, என்று எண்ணி சிணுங்கிப் போனது. இந்த மனித மனம் அப்படி தானே? ஒன்று இல்லை என்றால் அதற்கு தானே ஆசைப் படும்.

            அவள் கையில் பரிசை கொடுத்தவர்கள் “நாளைக்கு தான் இதை நீ ஓபன் பண்ணனும். அதனால காலைல தான் தருவோம்”, என்றவர்கள் அவளுடன் மற்ற விஷயங்களைப் பேசிக் கொண்டிருந்தனர்.

பின் அவர்களை ரெஃப்ரெஷ் செய்ய அனுப்பி விட்டு அதிபனுக்கு அழைத்தவள் அவன் எடுத்ததும் “அவங்க ரெண்டு பேரையும் அனுப்ப தெரியுது. கிப்டும் கொடுக்க தெரியுது. ஆனா நீ வரணும்னு தெரியாதா? நீ ஏன்  மாமா வரலை. உனக்கு என்னை விட உன் வேலை முக்கியமா போச்சா?  வேலையை ரெண்டு மாமா கூட பாத்துருப்பாங்க. நான் உனக்கு முக்கியம் இல்லாம போய்ட்டேன்ல. என் கிட்ட பேசாத”, என்று சொல்லும் போதே அவள் கண்கள் கலங்கி போனது.

            “பாப்பு”, என்று அழைத்து அவன் சமாதானமம் செய்ய முனைய அதை கேட்க அவள் பேச வேண்டுமே. போனை அனைத்து தூக்கிப் போட்டிருந்தாள்.

            மீண்டும் மீண்டும் அழைத்தவன் அவளை பிறகு சமாளித்துக் கொள்ளலாம் என்று எண்ணினாலும் ஏதோ ஒரு பாரம் அவனை ஆட்கொண்டது. நாமளும் அவங்க கூட போய் அவளைப் பாத்துட்டு வந்துருக்கலாமோ என்று தாமதமாக எண்ணினான்.

            அதே மன நிலையுடன் காலை உணவுக்கு வந்தவனிடம் தான் வேணுகோபாலன் திருமணம் பற்றி பேசினார். அமைதியாக அவர் சொன்னதை கேட்டுக் கொண்டவன் எதுவும் சொல்லாமல் கிளம்பி விட்டான்.

            ஏனோ மனதுக்குள் இப்ப இந்த கல்யாணம் தேவையா என்றே அவன் மனதில் ஓடியது. கூடவே ஏதேதோ எண்ணங்கள் அவனை அலைக்கழித்தது. முன்பு திருமணம் பேசிய போது கூட அவன் மனதில் இவ்வளவு குழப்பம் இல்லை. கூடவே அவனுக்கு கண்டம்  எதுவுமே வந்த மாதிரியும் இல்லை.

            “ஜாதகம் ஜோசியம் எல்லாம் கூட போய் தானோ? ஏதோ கண்டம் எல்லாம் சொன்னாங்க. அப்படி ஒண்ணும் நடக்கலை. நடக்காதது நல்லது தான். ஆனா சொன்னவங்க இந்த கல்யாணத்தை அப்படியே நிறுத்தச் சொல்லிருக்கலாம்”, என்று எண்ணியவனுக்கு யாழியிடம் பேச வேண்டும் போல இருந்தது.

            உடனே வண்டியை ஓரம் கட்டி அவளுக்கு அழைக்க அடுத்த நிமிடம் அவனுக்கு எதிரே அந்த பெரிய விபத்து நடந்திருந்தது.

தொடரும்..