“மாமா சொன்னது சரி தானே? யாழியை பிரிய வேண்டும் என்பது இயல்பான விஷயம். இலக்கியா போல யாழியும் திருமணம் ஆகி ஒரு நாள் வேறு வீட்டிற்குச் செல்ல தான் போகிறாள். அனைத்தையும் ஏற்றுக் கொண்டு தான் ஆக வேண்டும்”, என்று தனக்கு தானே சமாதானம் செய்து கொண்டாலும் அவனால் இயல்பாக மாற முடிய வில்லை. அவள் அவனுக்கு செல்ல பொம்மை மாதிரி தான். தன்னுடைய பொம்மையை எப்படி பொத்தி பாதுகாப்போமோ அது போல தான் அவளை பார்த்துக் கொள்வான்.

            கடைசியில் அவனது அறையில் இருந்த பொருள்களில் அவளது நினைவுகளை தேடிய படியே உறங்க ஆரம்பித்தான்.  பிளைட்டில் அமர்ந்திருந்த யாழிக்கும் நினைவுகள் அனைத்தும் அவள் குடும்பம் குடும்பம் மட்டுமே. கூடுதலாக அவளது ஆசை அதி மாமனின் நினைவுகள்.

அவள் அமெரிக்கா சென்று சேர்ந்ததும் அதிபன் ஏற்பாடு செய்திருந்த அதிபனின் நண்பன் வந்து அவளை அழைத்துச் சென்று அவளுக்காக ஏற்பாடு செய்திருந்த வீட்டில் விட்டு விட்டான். அந்த இடமே அழகாக இருந்தது. தனியாக இல்லாமல் அருகருகே வீடுகளும் இருந்தது. அருகில் குடும்பமாக இருப்பதால் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லாமல் இருந்தது. அந்த இடத்தை ரசித்த படியே வீட்டைச் சுற்றி பார்த்தவள் அடுத்த நொடி அழைத்தது அதிபனை தான்.

            இருவரும் வீடியோ காலில் நேருக்கு நேராக பார்த்த பிறகு தான் இதுவரை இருந்த தவிப்பு தகர்ந்தது இருவருக்கும்.

            “அடியேய் செல்ல பட்டாசு, தயவு செஞ்சு தினமும் ஒரு தடவையாவது வீடியோ கால் பண்ணிரு டி. சத்தியமா உன்னைப் பாக்காம இருக்க முடியலை”, என்றவன் “லைன்லே இரு, கீழ போறேன். எல்லாரையும் ஒரு தடவை பாத்துரு. அப்ப தான் நீயும் இயல்பா இருப்ப. அத்தையும் அழுதுட்டே இருக்காங்க போல”, என்றான்.

            சரி என்றவளுக்கும் முதலில் குடும்பத்தின் பிரிவை எண்ணி கஷ்டமாக இருந்தாலும் அடுத்து சந்தோஷமாக அனைவரிடமும் பேச ஆரம்பித்தாள்.

இப்படியே நாட்கள் அழகாக நகர்ந்தது. ஒரு வருடமும் முடிவடைந்தது. இந்த இடைப்பட்ட நாட்களில் தான் அனைவரின் வாழ்க்கையிலும் பல மாற்றங்கள் நடந்தது.

முதல் மாற்றமாக இலக்கியாவிற்கு பெண் குழந்தை பிறந்து அம்மா வீட்டில் ரெஸ்ட் எடுத்துக் கொண்டிருந்தாள். அவளையும் புவனா தான் பார்த்துக் கொண்டாள்.

அந்த வீட்டில் யாழிக்கு போட்டியாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்தாள் சின்னக்குட்டி யாழிசை. இந்த பெயரை வைத்த ஆளைச்  சொல்லவும் வேண்டுமா என்ன?

“யாழி தான் இந்த வீட்டோட சந்தோஷமே. அவ இல்லாத இடத்தை நிரப்ப வந்தவ தான் இந்த தேவதை. அதனால இவ பேரு யாழிசை தான்”, என்று சொன்னான் அதிபன்.

            யாழியும் அந்த குட்டி இளவரசியை வீடியோக் காலில் பார்த்து மகிழ்ந்து தான் போனாள். தனக்கு போட்டியாக வந்த புது இளவரசியை தூக்கி வைத்து கொஞ்ச முடிய வில்லையே என்று புலம்பியவளை அதிபன் தான் தேற்றினான்.

            அடுத்த மாற்றமாக வெண்ணிலாவின் காதல். ஆம் அவளும் அதிபனை தான் அடுத்த வருடம் திருமணம் செய்ய போகிறோம் என்ற நினைப்பில் தான் இருந்தாள்.

            ஆனாலும் கடமை என்ற உணர்வு மட்டும் தான் அதில் இருந்தது. அதில் காதலோ ஈர்ப்போ எதுவுமே அவளுக்குள் இல்லை. அதிபன் அவளிடம் நெருங்கினால் அவளுக்கும் ஏதாவது நிறைவு இருந்திருக்குமோ என்னவோ? அவனோ யாழியுடன் நெருக்கமாக இருந்த அளவு வெண்ணிலாவுடன் இல்லை.

            சிறு வயதில் இருந்தே வெண்ணிலா தனியே தானே இருப்பாள். அதனால் அதிபனும் அப்படியே விட்டுவிட்டான். இந்த திருமணம் சரி தானா? அதிபன் தனக்கு பொருத்தமாக இருப்பானா என்று வெண்ணிலாவுக்குள் ஒரு தேடல் இருந்து கொண்டே இருந்தது.

அந்த தேடலுக்கு விடையாக வந்தவன் தான் வருண். அவளது புராஜெக்ட் மேனேஜர். முதலில் வேலை விஷயமாக தொடர்ந்த நட்பு கடைசியில் காதலில் தான் வந்து முடிந்தது.

            ஒரு பெண் ஆணிடம் எதிர் பார்க்கும் அனைத்து விஷயத்தையும் செய்து கொடுத்து முதலில் அவள் மனதில் சலனத்தை விளைய வைத்தான். ஒரு மாதம் அவள் மேல் காதல் பித்து பிடித்து தான் திரிந்தான் வருண். அது தெரிந்தும் எதுவும் பேசாமல் அவன் காதலை ரசித்துக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. அவன் தன்னை ஆர்வமாக பார்க்கும் அன்றே அவள் தனக்கு நிச்சயிக்கப் பட்டிருப்பதை சொல்லி இருந்தால் அவன் விலகி இருப்பானோ என்னவோ?

ஒரு மாதத்திற்கு பின் அவன் மேல் எழுந்த சலனம் கண்டு பயந்தவள் அதற்கு மேல் தொடர பயமாக இருந்ததால் தனக்கு வீட்டில் திருமணம் பேசி விட்டார்கள் என்று சொல்லி விட்டாள். அதைக் கேட்டு அவனுக்கு திகைப்பு தான்.

“முன்னாடியே சொல்லி இருக்கலாம்ல? சாரி”, என்று வலியோடு சொன்னவன் அங்கிருந்து சென்று விட்டான். இரண்டு நாள் அவள் முகத்தைக் கூடப் பார்க்காமல் அமைதியாக நடமாடியவன் மூன்றாம் நாள் “இங்க பாரு வெண்ணிலா, எனக்கு இந்த விஷயம் முன்னாடியே தெரிஞ்சிருந்தா நான் உன்னை தொல்லை பண்ணிருக்கவே மாட்டேன். ஆனா இப்ப என்னால உன்னை அவ்வளவு ஈஸியா விட முடியலை. எனக்கு தெரிய வேண்டியது ஒண்ணு தான். உன் மனசுல நான் இருக்கேனான்னு மட்டும் சொல்லு. மத்தது எல்லாம் நான் பாத்துக்குறேன்”, என்று அவளுக்கு தைரியம் கொடுத்து அவனுடைய காதலை தீவிரமாகவே காட்ட மொத்தமாக அவன் காதலில் விழுந்தாள் வெண்ணிலா.

காதல் வந்தால் கள்ளமும் வருமே என்பது போல வீட்டில் இந்த விஷயத்தை மறைத்தவள் நல்ல படியாக காதல் பயிரை வளர்த்தாள். அது வேர் விட்டு நீ இல்லை என்றால் நான் இல்லை என்ற அளவுக்கு செழித்து வளர்ந்திருந்தது. வெட்டினால் உயிர் மொத்தமாக போய் விடும் என்ற நிலைமை மட்டும் தான்.

ஆனாலும் வீட்டை நினைத்து அவள் பயமாக இருக்கிறது என்று சொல்ல “எப்பவும் உன் கூட நான் இருப்பேன் நிலா குட்டி. என்ன நடந்தாலும் நம்ம சேந்து சமாளிப்போம்”, என்று சொல்லி சொல்லியே அவளின் காதலுக்கு உரமிட்டுக்  கொண்டிருந்தான் வருண்.

அப்படி காதல் செய்தவன் பின்னாளில் அவள் வேண்டாம் என்று முடிவும் எடுப்பான் என்று அவள் அப்போது அறிய வில்லை. வாழ்க்கை என்பது அழகிய புதிரே தானே தவிர வேறு இல்லை.

அடுத்து அதிபனின் மாற்றம் அவன் தொழிலில் தான் இருந்தது. புதுபுது யுக்திகளைக் கடைபிடித்து தொழில் முன்னேறிக் கொண்டிருந்தான். இனியன் மற்றும் விஷ்வாவையும் அதில் ஈடுபடுத்தி அவர்களையும் கம்பேனியையும் முன்னேற்றிக் கொண்டிருந்தான் என்று சொல்லலாம்.

            இனியன் மற்றும் விஷ்வா இருவரும் குடும்பத் தொழிலில் இருந்தாலும் விஷ்வாவுக்கு கேமிங் கம்பெனியும் இனியனுக்கு ஒரு சாப்ட்வேர் கம்பெனியும் சின்னதாக என்றாலும் தனியாக ஆரம்பித்துக் கொடுத்தான்.

அதற்கும் “புது தொழிலை நம்ம பசங்களுக்கு கொடுத்துட்டு குடும்ப தொழிலை அவனே வச்சிக்கிட்டான்”, என்று பேசினார்கள்  தண்டாயுதபாணி, சரஸ்வதி மற்றும் சத்யாவதி மூவரும்.

ஆனால் இனியன் மற்றும் விஷ்வா இருவரும் சந்தோஷமாக வேலை செய்வதுடன் அதிபனின் புகழையும் பாட அவர்களால் என்ன சொல்லி விட முடியும்.

அதையும் மீறி சத்யாவதி விஷ்வாவிடம் “அவன் செய்ய சொல்றதை எதுக்கு டா செய்யுற? உனக்கு பிடிச்சதை செய்ய வேண்டியது தானே?”, என்று சொல்ல அடுத்த இரண்டு நாட்கள் ஆபீஸ் போகாமல் விஷ்வா வீட்டிலே இருந்தான்.