அவளை மொத்த குடும்பமும் வாசல் வரை வந்து வழி அனுப்பியது. அதிபனுடன் கிளம்பிச் சென்றாள் யாழி. அதுவரை அமைதியாக இருந்த சவுந்தர்யா இப்போது சத்தமாக அழுது வைக்க அவளை சமாதானப் படுத்தினார்கள். “என்ன டி இது, இப்ப நீ சின்ன குழந்தை மாதிரி பண்ணுற?”, என்று அனைத்த படியே தங்களின் அறைக்கு சவுந்தர்யாவை அழைத்துச் சென்றார் விஷ்ணு.
கார் வீட்டை விட்டு சிறிது தூரம் சென்று கொண்டிருந்தது. அப்போது தான் யாழி அமைதியாக இருப்பதை அதிபன் உணர்ந்தான். அவன் இது வரை அவளை பிரிந்தது இல்லை. அதனால் அவனுமே தாங்க முடியாத உணர்வுகளுக்குள் போராடி கொண்டு தான் இருந்தான்.
அவள் மௌனம் அவனை பாதிக்க “பாப்பு”, என்று அழைத்தான்.
“ம்ம்”
“என்ன டா அமைதியா வர?”
“பேச பிடிக்கலை, அதான் அமைதியா இருக்கேன்”, என்று சொன்னதும் சடன் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தினான்.
“ஏன் டி?”
“பிரண்ட்ஸ் பாக்க வெளிய போக கூடாதுன்னு சொல்லியும் நீ போற தானே?”
“இதுக்கு தானா? பிரண்டுனு தான் சொன்னேன். எந்த பிரண்டுனு சொன்னேனா டி?”
“அப்படின்னா?”
“அப்படின்னா நான் பாக்க போற பிரண்டு நம்ம வீட்டு பக்கத்துல இருக்குற அருணாசலேஸ்வரர் தான்”
“சிவன் கோவிலுக்கா மாமா?”
“மம் ஆமா”
“இன்னைக்கு என்ன திடீர்னு கோவிலுக்கு. வெள்ளிக்கிழமை கூட இல்லையே? ஒரு வேளை நான் நல்ல படியா ஊருக்கு போகணும்னு வேண்டிக்க போறியா?”
“அதுவும் தான், அது கூட இன்னொன்னும் கேக்கணும்”
“என்ன மாமா?”
“என் பாப்புவை பிரிஞ்சு இருக்கப் போற இந்த தனிமையை தாங்குறதுக்கு தெம்பு கொடுன்னு அந்த கடவுள் கிட்ட வேண்டனும்”, என்று சொன்னவன் தலையை திருப்ப அவள் கண்கள் கலங்கிப் போனது. அவன் நாடியை பிடித்து தன்னைப் பார்க்க வைக்க அவளைக் காணும் போது அவன் கண்களும் கலங்கி சிவந்திருந்தது.
“என்ன மாமா இது?”
“கஷ்டமா இருக்கு டி, உன்னைப் பிரிஞ்சு எப்படி இருப்பேன்னு தெரியலை. இத்தனை நாள் பூனை குட்டி மாதிரி கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் இருந்தியா? இப்ப நீ இல்லாத அந்த வீடு எனக்கு என்னவோ போல இருக்கும் பாப்பு”
“எனக்கும் கஷ்டமா தான் இருக்கும். நான் வேணும்னா போகாம இருந்துறவா மாமா?”, என்றாள். ஏனென்றால் அவன் கண்ணீரை தாங்கும் வலு எல்லாம் அவளுக்கு இல்லை.
அவள் அப்படிக் கேட்டதும் “பாப்பு”, என்றான் அதிர்வாக.
“உன்னை விட படிப்பு எனக்கு பெருசு இல்லை மாமா. இங்க டெல்லில கூட படிச்சிக்கிறேனே?”, என்றதும் அவள் அன்பைக் கண்டு எப்போதும் போல வியந்தவன் தன்னை சமாளித்துக் கொண்டு “நீ ரொம்ப மோசம் பாப்பு”, என்றான்.
அவள் குழப்பமாக அவனைப் பார்க்க “என்னைக் கூட ஆழ வச்சிட்ட பாரேன்”, என்றான்.
அவள் லேசாக சிரிக்க “இப்படியே சிரிச்சிக்கிட்டே போ. அங்க எதாட்டும் அழகான பொண்ணு இருந்தா இங்க அனுப்பி விடு டி”, என்றான்.
“ஏது பொண்ணா? உனக்கு என் அக்கா இருக்கா ஞாபகம் இருக்கா?”
“சும்மா சொன்னேன் டி”
“தெரியும் மாமா. ஆனா நான் உண்மையா தான் சொன்னேன். நான் டிரிப்ப கேன்சல் பண்ணிறவா?”
“பிச்சிருவேன் பாத்துகோ. இப்ப இருக்குற டெக்னாலஜிக்கு நம்ம கண்டிப்பா பிரிஞ்சு எல்லாம் இருக்க மாட்டோம். டெய்லி பேசிக்க போறோம். விடு டா. நான் தான் கொஞ்சம் எமோஷனல் ஆகிட்டேன் யாழி பாப்பா. ரெண்டு நாள் ஒரு மாதிரி இருக்கும். அப்புறம் பழகிரும் டி”
“அப்படின்னா என்னை மறந்துருவன்னு சொல்ல வரியா மாமா?”
“என் இதயம் துடிக்கிற நேரம் வரைக்கும் உன்னோட நினைப்பு எனக்குள்ள இருக்கும் பாப்பு”, என்று தன்னை மீறி சொல்லி இருந்தான். ஏன் சொன்னோம் எதற்கு சொன்னோம் என்றெல்லாம் அவன் ஆராய வில்லை.
“ரொம்ப எமோஷனலா பேசாத மாமா, கஷ்டமா இருக்கு”
“சரி டி பேசலை. அப்புறம் என்ன தேவைனாலும் என்னை கூப்பிட மறக்காத. இப்ப கிளம்பலாமா?”, என்று கேட்டான். அவள் சரி என்று சொன்னதும் காரைக் கிளப்பினான்.
இன்னும் ஐந்து நிமிடத்தில் ஏர்போர்ட் வந்து விடும் என்பதால் அவனுடன் இருக்கும் நேரத்தை அதிகரிக்க “மாமா எனக்கு இளநீர் குடிக்கணும்”, என்றாள்.
“நல்ல வேளை நீ காரப் பொறி கேப்பியோன்னு நினைச்சேன்”, என்றவன் காரை நிறுத்தி ஒரு இளநீரை வாங்கி அவள் கையில் கொடுத்து விட்டு காரைக் கிளப்பினான்.
“கீழ இறங்கினா நீயும் குடிச்சிருக்கலாம்ல?
“இன்னும் நேரம் ஆனா பிளைட்டை மிஸ் பன்னிருவோம் யாழி”, என்றவன் “உன் மனசுக்குள்ள என்ன திரிஷானு நினைப்பா?”, என்றான்.
“நான் திரிஷானா நீ விஜயாக்கும்?”, என்று புன்னகையுடன் கேட்டாள்.
தன்னை விஜயாகவும் அவளை திரிசாவாகவும் ஒரு நொடி எண்ணிப் பார்த்தவன் முகத்தில் தன்னால் புன்னகை மலர்ந்தது.
பின் அவளை பத்திரமாக ஏர்போர்ட் அழைத்து வந்து விட்டவன் அவள் கிளம்பும் நொடி “யாழி”, என்று அழைத்து அவளை இழுத்து இறுக்கி அனைத்து அவள் தலையில் முத்தத்தை பதித்திருந்தான்.
அவளும் அவன் நெஞ்சில் முகத்தை புதைத்து வாகாக நின்றிருந்தாள். அவள் அப்படியே இருக்கவும் “பாப்பு நீ உள்ள போகனும் டி, கூப்பிடுறாங்க”, என்றான்.
“என் அம்மாவோட கருவறை எப்படி இருக்கும்னு தெரியாது மாமா. செத்ததுக்கு அப்புறம் கல்லறை எப்படி இருக்கும்னு தெரியாது மாமா. ஆனா உன் நெஞ்சுல சாஞ்சு இப்படி இருக்கும் போது அதுவும் இது போல தான் பாதுகாப்பா இருந்துருக்கும்னு இப்ப தோணுது”, என்றவள் மீண்டும் அவன் நெஞ்சிலே முகம் புதைக்க ஒரு மாதிரி உடல் எல்லாம் சிலிர்த்தது அவனுக்கு.
கை காலில் எல்லாம் முடி சிலிர்த்துக் கொண்டு அவன் அசையாமல் நின்றிருக்க “உள்ள கூப்பிட்டாங்க. நான் போய்ட்டு வரேன் மாமா. ஒரு தடவையாவது வந்து பாக்க வா மாமா. கண்டிப்பா நீ வரணும்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். அவனோ அவள் அங்கிருந்து சென்ற பின்னரும் சிலையாக நின்றிருந்தான்.
ஏனோ அந்த இடத்தில் இருந்து அசையவே தோன்ற வில்லை அவனுக்கு. அப்படி ஒரு சிலிர்ப்பு. தன்னுடைய உடல் சிலிர்ப்பதைக் கண்டவன் அவள் வார்த்தைக்கு இவ்வளவு பவரா என்று எண்ணிக் கொண்டான்.
அங்கிருந்த சேரில் தளர்ந்து போய் அமர்ந்தவன் அவள் விமானம் கிளம்பி விட்டது என்று தெரிந்த பின்னர் தான் அங்கிருந்து கிளம்பினான்.
பின் அவளிடம் சொன்னது போல சிவன் கோவிலுக்கு வந்தவன் ஆட்கள் அதிகம் வராத ஒரு இடத்தில் அமர்ந்து அந்த சிவனையே பார்த்துக் கொண்டிருந்தான்.
உருவம் இல்லாமல் லிங்கத்துடன் அழகாக அம்சமாக காட்சியளித்துக் கொண்டிருந்தார் அருணாச்சலஈஸ்வரர்.
வெகு நேரம் அங்கேயே அமர்ந்திருந்தான். நடை சாத்தவும் தான் வீட்டுக்கு வந்தான். உணவு உண்ண பிடிக்க வில்லை. “வெளில சாப்பிட்டேன் மா”, என்று சொல்லி விட்டு அறைக்கு போகும் போது “எவ்வளவு நேரம் தான் அழுதுகிட்டே இருப்ப சவுந்து? படிக்க தானே போறா? இதுக்கே நீ இப்படி பண்ணினா இன்னும் கல்யாணம் கட்டி கொடுத்து அனுப்ப வேண்டியது இருக்கு. இப்பவாது நம்ம மகளா மட்டும் திரும்பி வருவா. அப்ப வேற ஒருத்தனுக்கு சொந்தமா ஆகிருவா. அப்ப என்ன பண்ணுவ?”, என்று விஷ்ணு அரட்டல் சத்தமும் கேட்டது.