குடும்பத்தினருக்கு யாழி அங்கே செல்வதில் விருப்பம் இல்லை தான். ஆனால் அனைவருக்கும் அவளைப் பிடித்ததால் அவளது ஆசைக்கே முன்னுரிமை கொடுத்தார்கள்.

            அவளது அரெஞ்ச் மெண்ட்ஸ் எல்லாமே அதிபன் பார்த்துக் கொண்டதால் யாழி எந்த கவலையும் இல்லாமல் குடும்பத்தினருடன் சந்தோஷமாக நேரத்தை செலவிட்டாள். அதிபன் இரண்டு வருடம் அங்கே தான் படித்தான் என்பதால் அவனுக்கு எல்லாம் எளிதாக இருந்தது.

            ஒரு வழியாக யாழி ஊருக்குச் செல்லும் நாளும் வந்தது. அனைவரும் அவளை வழி அனுப்ப ஏர்போர்ட் புறப்பட்டார்கள். அவர்கள் கூட்டத்தைக் கண்டு திணறி தான் போனான் அதிபன். ஒரு வழியாக யாரும் வேண்டாம் நான் மட்டும் உடன் செல்கிறேன் என்று அவன் தான் தடுக்கும் படி ஆனது.

            “யாழி மா, இங்க இருந்து எப்படி போறியோ அப்படியே இந்த அம்மா கிட்ட திரும்பி வரணும். உன்னோட குணம் முதற்கொண்டு அப்படியே இருக்கணும். தினமும் ஒரு தடவையாவது என் கிட்ட பேசிறனும் கண்ணு”, என்று கண் கலங்கிய படி சொன்னார் சவுந்தர்யா.

“சரி மா, மிஸ் யு மா. நான் உன்னோட பொண்ணு. எப்பவும் என் குணம் மாறாது. தினமும் உன் கிட்ட பேசாம என்னாலயும் இருக்க முடியாது மா”, என்று சொல்லி அன்னையைக் கட்டிக் கொண்டவள் புவனாவையும் அனைத்துக் கொண்டாள்.

            சத்யாவதியிடம் “போய்ட்டு வரேன் பெரியம்மா”, என்றதோடு முடித்துக் கொண்டாள். அதற்கு வெறும் தலையசைப்பு மட்டுமே வந்தது சத்யாவதியிடம் இருந்து.

“பாத்து கவனமா இருக்கணும் யாழி மா”, என்று சொன்ன சரஸ்வதி அவளை அணைக்க வர அவளோ தண்டாயுதபாணி புறம் திரும்பி “போய்ட்டு வரேன் சின்ன மாமா”, என்றாள்.

            “சரிமா”, என்று அவர் சொன்னதும் “போய்ட்டு வரேன் மாமா”, என்ற படி செழியனைக் கட்டிக் கொண்டாள் பெண்.

            “நல்லா படிக்கணும் டா செல்லம். என்ன ஹெல்ப் வேணும்னாலும் என் கிட்டயோ, இல்ல உன் அதிபன் மாமா கிட்டயோ எந்த நேரம் வேணும்னாலும் கேளு. நேரம் கிடைக்கிற நேரம் உன் அறிவை நிறைய வளத்துக்கோ. படிப்பு முடிச்சு வந்ததும் இங்க உள்ள நம்ம மக்கள் கிட்ட நல்ல டாக்டர்ன்னு பேர் எடுக்கணும். எனக்கும் பீஸ் இல்லாம அடிக்கடி மெடிக்கல் செக்கப் நீ தான் பண்ணனும்”, என்றவர் அவர் நெற்றியில் இதழ் பதித்தார்.

            “கண்டிப்பா மாமா”, என்றவள் சிறு புன்னகையுடன் அவர் நெஞ்சில் சாய்ந்த படி தாத்தாவைப் பார்த்தாள்.

அவள் பார்த்ததும் வேணுகோபால் முகத்தை திருப்ப அவர் கண்ணீரை அடக்குகிறார் என்று புரிந்தவள் நெகிழ்வுடன் அவர் அருகில் சென்று அவர் கைக்குள் புகுந்து கொண்டாள்.

அவளை அணைத்தவர் அவள் தலையை வருடி விட்டு “கண்டிப்பா போகனுமா டி? இங்க எல்லாம் படிச்சு பெரிய ஆளா உன்னால ஆக முடியாதா?”, என்றார்.

            “ஆகலாம் தாத்தா. இல்லைன்னு சொல்லலை. ஏனோ அங்க படிக்கணும்னு தோணுது. இங்க இல்லாத ஏதோ ஒண்ணு அங்க அதிகமா இருக்கலாம். அதை கண்டு பிடிச்சு இங்கயும் அந்த வாய்ப்பை நம்ம கொண்டு வரலாம்ல?”

            “உன்னை பேச்சுல ஜெயிக்க முடியுமா ஆத்தா? அப்படியே உன் பாட்டி கோமதி தான் போ “

            “உங்களுக்கு எப்படியும் உங்க லவ்வர் பத்தி பேசியாகனும். அதான் இப்படிச் சொல்றீங்க. இல்லைன்னா இப்படி சொல்வீங்களா? நான் எங்க பாட்டி எங்க? பாட்டி அவளோ அழகு தெரியுமா?”

            “இல்லை டா குட்டி உருவத்துல வேற மாதிரி இருந்தாலும் அவளோட குணம் அப்படியே உன் கிட்ட ஒட்டி இருக்கு. அழகுல நீ என் பொண்டாட்டி அளவுக்கு இல்லை தான்”, என்று சொல்லி அவர் சிரிக்க அவரை முறைத்தவள் பின் சிரிப்புடன் மீண்டும் அவரை அனைத்துக் கொண்டாள்.

            வெண்ணிலாவிடம் “போய்ட்டு வரேன் நிலா”, என்று மட்டும் சொல்லி விடை பெற்றாள். அதற்கு சிறு தலை அசைப்பை மட்டுமே அவள் கொடுத்தாள்.

அடுத்து இனியன் மற்றும் விஷ்வாவை கட்டி அணைத்தவள் “அதி மாமாவை உங்களை நம்பி தான் டா விட்டுட்டு போறேன். மாமாவை பாத்துக்கோங்க. அப்புறம் நேரம் கிடைச்சா ரெண்டு பேரும் என்னை பாக்க அங்க வாங்க டா”, என்றாள்.

            “ஏது இந்த மூஞ்சியைப் பார்க்க சில ஆயிரங்களை செலவு பண்ணி வர முடியுமா? வேணும்னா அங்க உள்ள அழகான பொண்ணுங்களைப் பாக்க வேணும்னா வறோம்”, என்று இனியன் சொல்ல “ஆமா ஆமா நாங்க கண்டிப்பா வருவோம் என் ஆசை தங்கச்சி”, என்றான் விஷ்வா.

            அவர்களை முறைத்தவள் “அமெரிக்கால காலை வச்சிங்க முதல் டெட் பாடி நீங்க தான் டா. நீங்க வரவே வேண்டாம்”, என்று சொன்னவள் அடுத்து அருகருகே நின்று இருந்த சேகர் மற்றும் விஷ்ணு அருகில் சென்றாள்.

            “நான் உங்களை ரொம்ப மிஸ் பண்ணுவேன் சேகரப்பா”, என்று சொல்லி அவரை அணைத்துக் கொண்டாள் யாழி.

            “நானும் தான் பாப்பா. சண்டே அன்னைக்கு சாயங்காலம் அஞ்சு மணில இருந்து ஆறு மணி வரைக்கும் நீ என் கிட்ட மட்டும் தான் பேசணும், சரியா டா”, என்றார்.

            “கண்டிப்பா சேகரப்பா”, என்றவள் கடைசியாக தன்னுடைய தந்தை விஷ்ணுவை கட்டி அணைத்தாள். அது வரை அவள் அடக்கி வைத்திருந்த கண்ணீர் எல்லாம் மொத்தமாக வெளியேற எதுவும் பேசாமல் அவள் முதுகை வருடிய படி இருந்தார் விஷ்ணு.

            அவள் அழுகை நிற்க வில்லை என்றதும் “என்ன அம்மு இது, இப்படியா சின்ன பிள்ளை மாதிரி அழுவாங்க. என் பொண்ணு வாழ்க்கைல பெருசா சாதிக்க போறதுக்கான முதல் படி எடுத்து வச்சிருக்கான்னு பெருமைல இருக்கேன். நீ என்னடான்னா குழந்தை மாதிரி கண்ணை கசக்கிட்டு இருக்க?”, என்றார் விஷ்ணு.

            “ஐ மிஸ் யு டேடி. நான் இது வரை உங்களையும் அம்மாவையும் விட்டு பிரிஞ்சதே இல்லை. இருந்துருவேனான்னு கவலையா இருக்கு டேடி”

            “உன்னால முடியும் டா. என் பொண்ணு பின்னாடி மாஸ்டர் ஆப் சர்ஜரின்னு வரதை பாத்து நான் சந்தோஷபடனும். உங்க பொண்ணு ஆப்பரேஷன் பண்ணுணதுனால தான் பிழைக்கக்காங்கன்னு எல்லாரும் உன்னை பாராட்டும் போது நான் பெருமை படனும் அம்மு மா. உன் லட்சியத்தை அடைய போற அதே நேரம் கவனமாவும் இருக்கணும் டா அம்மு. இந்த உலகம் நம்ம வீடு மாதிரி இருக்காது. மனுசங்க வித்தியாசமா இருபாங்க. கவனமா இருக்கணும் பாப்பா”, என்று மகளுக்கு அறிவுரை வழங்கினார்.

            “சரிப்பா, கவனமா இருக்கேன்”

“நேரம் கிடைக்கும் போதெல்லாம் அப்பாவுக்கு வீடியோ கால் பேசணும் டா குட்டி”

“கண்டிப்பா பேசுறேன். போய்ட்டு வரேன் பா”, என்று சொல்ல அவர் தலையசைத்தார். அவர் கண்கள் கலங்கியதை அவள் மட்டுமே பார்த்தாள்.

            “நான் போய் அவளை விட்டுட்டு வரேன்”, என்று கிளம்பினான் அதிபன்.

            “நாங்களும் வறோம்“, என்று சொன்ன குடும்பத்தினரிடம் “எதுக்கு அங்கயும் போய் உங்க பாசப் பயிரை வளக்கவா? அவ வேற இன்னைக்கு வெறும் அழுகாச்சி சென்ட்டிமெண்ட்டா  போட்டுட்டு இருக்கா. இதுக்கு மேல தாங்காது சாமி. ஏர்போர்ட்க்கு இப்ப கிளம்பினா தான் சரியா இருக்கும்”, என்றவன் அவளை கிளம்ப வைத்தான்.

            “அம்மா நான் பாப்புவை விட்டுட்டு என்னோட பிரண்டை பாத்துட்டு கொஞ்சம் லேட்டதா தான் வருவேன்”, என்று அன்னையிடம் சொல்லி விட்டு கிளம்பினான் அதிபன். அவனுடன் யாழியும் கிளம்பினாள்.

தொடரும்..