யார் சமாதானப் படுத்தியும் அவள் சமாதானம் ஆகவே இல்லை. ராதிகாவுக்கே ஒரு மாதிரி ஆகி விட்டது. ஆனால் அவளுக்கு என்ன தவறு செய்தோம் என்றே புரிய வில்லை.
“அம்மா நான் இவளை வெளிய கூட்டிட்டு போய் சமாதானப் படுத்திட்டு வீட்டுக்கு போறேன். நீங்க இருந்துட்டு வாங்க”, என்று சொன்ன அதிபன் அணைவரிடமும் சொல்லி விட்டுக் கிளம்பி விட்டான்.
கார் வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு தான் யாழிக்கு நிம்மதியாக இருந்தது. அவள் முகத்தை பார்த்து “ஒரு வழியா பொய்யா நடிச்சு நீலிக் கண்ணீர் வடிச்சு என்னை வெளிய கூட்டிட்டு வந்துட்ட போல?”, என்று கேட்டான் அதிபன்.
“என்னோட கண்ணீர் உனக்கு நீலிக் கண்ணீர் மாதிரி தெரியுதா மாமா? அவ முன்னாடியே என்னை திட்டுற? எனக்கு கஷ்டமா இருந்துச்சு. அழுதேன். அதைக் கூட செய்யக் கூடாதா? இனி உன் விஷயத்துல நான் தலையிட மாட்டேன்”, என்று சொன்னவள் மீண்டும் ஏங்கி ஏங்கி அழ ஆரம்பிக்க காரை நிழலில் நிறுத்தி விட்டு அவளை இழுத்து அணைத்தவன் “பைத்தியம் மாதிரி பண்ணாத யாழி. இப்ப எதுக்கு இப்படி அழுற? எனக்கு கஷ்டமா இருக்கு டி”, என்றான்.
அவன் நெஞ்சில் இன்னும் முகம் புதைத்துக் கொண்டவள் “உன் கிட்ட யாரும் குளோசா பேசினா எனக்கு கஷ்டமா இருக்கு மாமா. இன்னைக்கு ராதிகா, அன்னைக்கு வெண்ணிலா”, என்றாள்.
“வெண்ணிலாக்கு என்ன?”
“உன் கூட பேசக் கூடாதுன்னு சொல்றா மாமா”
“வாட்?”
“ஆமா, எனக்கு கஷ்டமா போச்சு மாமா. உனக்கு அவ கூட கல்யாணம் ஆனா என் கிட்ட நீ பேச மாட்டியா மாமா? அவ என் கூட உன்னை பேச விட மாட்டா. நான் உன்னை விட்டு ஒரேடியா ஒதுங்கிரனுமா? எனக்கு பயமா இருக்கு”, என்று சொல்லும் போதே அவள் கண்களில் அருவி பெருகியது.
அவள் முகத்தை தன்னுடைய நெஞ்சில் வைத்து அழுத்தியவன் “யார் என்ன சொன்னாலும் இந்த யாழி என் கூடவே தான் கடைசி வரை இருப்பா. நீ இல்லைன்னா கண்டிப்பா நான் இல்லை டி. ஒரு வேளை நம்மளை பிரிக்கிற மாதிரி யார் இருந்தாலும் அவங்களை ஒதுக்கி வைப்பேனே தவிர உன்னை விட்டு விலகவே மாட்டேன். இனி இப்படி லூசு மாதிரி யோசிச்சு பீல் பண்ணிட்டு இருக்காத. நீ அழுதா எனக்கு கஷ்டமா இருக்கு பாப்பு”, என்றான்.
அவன் பேச்சில் நெகிழ்ந்த மனதை அடக்கியவள் “என்னை அழ வச்சிட்டல்ல. அதுக்கு பனிஸ்மெண்ட் எனக்கு அஞ்சு ஐஸ் கிரீம் வாங்கி தா”, என்று சிரித்த படி சொன்னதும் அவனும் அவளிடம் இருந்து விலகி காரை எடுத்தான்.
அடுத்த வாரத்தில் இலக்கியாவிற்கு பொங்கல் சீர் வரிசை கொண்டு செல்வதற்கென ஏற்பாடுகள் நடந்தது. சரஸ்வதியும் சத்யாவதியும் பார்த்து பார்த்து எல்லாம் வாங்கினார்கள்.
அவர்கள் வாங்காததை புவனா நினைவு படுத்த “நாங்க ஒண்ணும் மறக்கலை அக்கா, நாளைக்கு வாங்கலாம்னு இருக்கோம்”, என்று முகத்தில் அடிப்பது போல சொன்னார் சரஸ்வதி.
அதைக் கேட்ட சரஸ்வதி “என்ன சவுந்து இப்படி இன்சல்ட் பண்ணுற மாதிரி பேசுற?”, என்று கேட்டார்.
“என்ன பன்றது சின்ன அண்ணி. தன்வினை தன்னைச் சுடும்னு சும்மாவா சொல்லிருக்காங்க? நீங்க எது செய்யுறீங்களோ அது தானே உங்களுக்கு கிடைக்கும்?”
“நான் உன் அண்ணி சவுந்து, உனக்கு அது ஞாபகம் இருக்கா?”
“அண்ணியோ நாத்தனாரோ, என்னைப் பொறுத்த வரைக்கும் எல்லாருமே சக மனுசங்களா தான் பாப்பேன்”, என்று சொன்ன சவுந்தர்யா புவனாவை அழைத்துக் கொண்டு அங்கிருந்து சென்றாள்.
இவர்களிடம் போட்டி போட்டாலும் குறை இல்லாமல் அனைத்து பொருள்களையும் வாங்கி விட்டார்கள் சரஸ்வதியும் சத்யாவும். ஆனால் கடைசி வரை புவனா சொன்ன சில பொருள்களை வாங்க அவர்கள் மறந்திருக்க வேணுகோபாலனிடம் நன்றாக திட்டும் வாங்கினார்கள். கடைசியில் அன்னையை அழைத்துச் சென்று அதிபன் தான் அவற்றை வாங்கி வந்தான்.
அதற்கு சவுந்தர்யா ஒரு பார்வை மட்டுமே பார்த்தார். ஆனால் அதற்கு பதில் பார்வையை சரஸ்வதியால் பார்க்க முடிய வில்லை.
பொங்கலுக்கு இன்னும் ஒரு நாள் இருக்க குடும்பத்தில் இருந்த அனைவரும் புதுச்சேரிக்கு கிளம்பிச் சென்றார்கள். இனியன் எல்லாவற்றையும் பொறுப்பாக பார்த்துக் கொண்டான். ஆனால் எப்படி செய்ய வேண்டும் என்று அதிபனிடம் கேட்டு செய்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கியா வீட்டில் அவர்களுக்கு நல்ல மரியாதை கிடைத்தது. தனசேகர் வீட்டுக்கு ஒரே பையன் என்பதால் அவனது பெற்றோர் இலக்கியாவை மகள் போல தான் பார்த்தார்கள்.
தங்கள் வீட்டுப் பெண் நிறைவான வாழ்க்கை வாழ்கிறாள் என்பதே அவர்களுக்கு திருப்தியாக இருந்தது. பொங்கல் வாழ்த்து சொன்னவர்கள் இலக்கியாவிற்கு இது தலைப்பொங்கல் என்பதால் அவளை அவர்கள் வீட்டில் பொங்கல் கொண்டாடி விட்டு மாட்டுப் பொங்கல் அன்று ஊருக்கு வரும் படி அழைப்பு விடுத்து விருந்தை உண்டு விட்டு ஊருக்கு கிளம்பினார்கள்.
பொங்கல் நல்ல படியாக சென்றது. அடுத்த பொங்கல் உனக்கும் தலை பொங்கல் தான் என்று வெண்ணிலாவை சொல்லி சொல்லியே எல்லா வற்றையும் செய்ய வைத்தார்கள்.
அதிபன் அவளை வருங்கால மனைவியாக எல்லாம் பார்க்க வில்லை. எப்பவும் வெண்ணிலாவை எப்படி பார்ப்பானோ அதே போல தான் இப்போதும் இருந்தான். அது மட்டும் இல்லாமல் வெண்ணிலா யாழியிடம் அப்படி பேசியதற்கு அவளை உண்டு இல்லை என்று ஆக்கி விட்டான். அதில் வெண்ணிலாவுக்கு தான் இவன் தனக்கு சரியாக வருவானா என்ற கேள்வி எழுந்தது.
“ஆசையா ஒரு பார்வை பாக்குறானா, இல்லை லேசா சிரிக்கிறானா? இவனை எல்லாம் எப்படி தான் கல்யாணம் பண்ணுறதோ? இதுல அவளுக்காக என்னை வேற திட்டுறான்”, என்று அவளுக்கு கடுப்பாக இருந்தது.
அவளை தவிர மற்ற இளவட்டங்கள் எல்லாம் பொங்கலை சந்தோஷமாக கொண்டாடிக் கொண்டிருந்தார்கள். தனசேகர் கூட அவர்களுடன் கலகலப்பாக உரையாடினான். கூடவே பிறந்த வீட்டுக்கு வந்ததும் தன்னுடைய மனைவி தன்னுடைய அண்ணன்களிடம் உரிமையாக சிறு பிள்ளை போல இருப்பதையும் அவர்களும் அவளை தாங்குவதையும் கண்டு அவளை கலாய்த்து கொண்டிருந்தான்.
“லயா பேபி அடுத்த வருஷம் உன்னோட ஜெராக்சும் இங்க வந்து பொங்கல் கொண்டாடும். அப்பவும் இப்படி தான் ஆட்டம் போடுவியா? ஆனா உன்னை இவ்வளவு சந்தோஷமா பாக்கும் போது ரூமுக்கு தூக்கிட்டு போகணும் போல இருக்கு டி”, என்று தனா காதலுடன் சொல்ல இலக்கியா முகம் வெட்கத்தால் சிவந்தது.
“அண்ணா நீங்க சூப்பர் தெரியுமா எங்க ரவுடி பேபி இலக்கியாவையே வெக்கப் பட வச்சிட்டீங்கலே”, என்று சொல்லி அவனிடம் ஒரு கொட்டு வாங்கினாள் யாழி. அந்த அளவுக்கு அனைவரும் சந்தோஷமாக இருந்தார்கள்.
எல்லாம் நல்ல படியாக நடந்து முடிந்தது. அடுத்த இரண்டு நாட்கள் பிறந்த வீட்டில் சீராடி விட்டு கணவனுடன் தனது ஊருக்கு பயணமானாள் இலக்கியா.
அடுத்து வந்த நாள்களில் யாழி பாரின் போவதற்கும் அங்கே தங்கி படிப்பதற்கும் என எல்லா வேலைகளையும் தன்னுடைய நண்பனின் உதவியால் முடித்தான் அதிபன்.