“உனக்கு பிடிக்கலைனா நீ செய்யாத. என்னை பேசக் கூடாதுன்னு சொல்லக் கூடாது ஓகே”, என்று சொன்னவன் முகத்தில் அடித்த படி கதவை அடைத்து விட்டான்.
“சரியான முசுடு., இவனை போய் எப்படி கல்யாணம் பண்ண? இதுல இவனை அடக்கி ஆளனுமாம் எங்க அம்மாவுக்கு. எல்லாம் என் தலையெழுத்து”, என்று புலம்பிய படியே சென்றாள் வெண்ணிலா.
“என்ன கல்யாண பொண்ணு தன்னால பேசிட்டு வர. லவ் நோய் உனக்கும் வந்துட்டா?”, என்று கேட்டான் இனியன். அவன் அருகே விஷ்வா நின்றிருந்தான். இருவரும் வாக்கிங் முடித்து நின்றிருந்தார்கள்.
“லவ்வாம் லவ்வு, உங்க அண்ணனைப் பண்ணிட்டாலும். போங்கடா நீங்களும் உங்க கல்யாணமும். காலைலே ஏதாவது என் கிட்ட வாங்கிக் கட்டிக்காத இனியா”, என்றவள் தன்னுடைய தம்பி விஷ்வாவையும் முறைத்து விட்டே அங்கிருந்து சென்றாள்.
“பாவம் டா அதிபன் அண்ணா. உன் கூட பிறந்தவ கூட சிக்கிட்டு பாடு பட போறார் போல?”,
“எனக்கும் அப்படி தான் தோணுது மாமா”, என்றான் விஷ்வா.
அடுத்த நாள் ஜோசியரைப் பார்க்கச் சென்ற வேணுகோபாலன் மற்றும் தண்டாயுதபாணி இருவரும் சோர்ந்த முகத்துடன் தான் வீட்டுக்கு வந்தனர்.
அனைவரும் குழப்பமாக அவரைப் பார்க்க “அதிபனுக்கும் வெண்ணிலாவுக்கும் ஜோடிப் பொருத்தம் ஆறு இருக்கு. அதனால தாராளமா கல்யாணம் பண்ணலாம்னு சொல்லிட்டாங்க. ஆனா..”, என்று அவர் இழுக்க “நல்ல விஷயம் தானே சொல்லிருக்காங்க? இப்ப பத்து பொருத்தம் எல்லாம் இருக்க வேண்டியது இல்லை. அப்புறம் என்ன உங்க முகம் ஒரு மாதிரி இருக்கு பா?”, என்று கேட்டார் சௌந்தர்யா.
“நல்ல விஷயம் தான் சௌந்து கண்ணு. ஆனா கல்யாணம் இப்ப வைக்க வேண்டாம்னு சொல்லிட்டாங்க. அதிபனுக்கு ஏதோ கண்டம் இருக்காம். இப்ப கல்யாணம் வச்சா சரியா இருக்காது. அவனை கவனமா பாத்துகோங்க. ஒரு வருஷம் கழிச்சு எப்ப வேணும்னாலும் கல்யாணம் பண்ணி வைங்கன்னு சொல்லிட்டாங்க”, என்றார்.
“வேற ஜோசியர் பாக்கலாமா மாமா?”, என்று கேட்டார் சரஸ்வதி.
அதிபன் திருமண செய்தி கேட்டு எப்படி இயல்பாக இருந்தானோ அது போலவே திருமணம் தள்ளிப் போன செய்தி கேட்டதும் இயல்பாக இருந்தான். அவனுக்கு மனம் குதூகளிக்கவும் இல்லை, அதே நேரம் சோகமாகவும் இல்லை. எப்படி என்றாலும் திருமணம் என்ற ஒன்று நடக்க வேண்டியது தானே. எப்ப நடந்தா என்ன? எப்படி நடந்தா என்ன? யார் கூட நடந்தா என்ன? என்று முன்பு எண்ணியது போலவே எண்ணிக் கொண்டான்.
“அதி மாமா, உன் கல்யாணம் தள்ளிப் போனதுனால என்னை படிக்க விட மாட்டேன்னு சொல்லிடுவாங்களோ?”, என்று அவன் காதில் முணுமுணுத்தாள் யாழி.
அவளை ஒரு மார்க்கமாக பார்த்தவன் “யாரு எப்படி போனா என்ன? உனக்கு உன் கவலை, என்ன டி?”, என்றான். அவன் என்னவோ விளையாட்டுக்கு தான் சொன்னான். ஆனால் அவளோ அதைக் கேட்டு துடித்துப் போனாள்.
அவள் கண்கள் கலங்க “சாரி மாமா, உனக்கு மேரேஜ் டிலே ஆனதுனால மனசுக்கு கஷ்டமா இருக்கும்ல? நான் பாரேன் அதை யோசிக்காம என் விஷயம் பேசிட்டு இருக்கேன். சாரி மாமா”, என்றாள்.
“ஏய் பாப்பு நான் விளையாட்டுக்கு சொன்னேன் டா”
“தெரியும், ஆனா நான் எவ்வளவு சுயநலமா இருக்கேன் பாரேன். அது தப்பு தானே?”,
“இங்க பாரு பாப்பு. என்னை விட என்னைப் பத்தி அதிகம் கவலைப் படுறது நீ தான் டா. நான் சும்மா வடிவேலு மாதிரி உன்னைக் கலாய்க்கலாம்னு நினைச்சேன். நீ என்ன டான்னா இப்படி ஒப்பாரி வைக்கிற? கல்யாணம் தானே தள்ளிப் போயிருக்கு. நிறுத்தி நிதானமா மெதுவா பண்ணிக்கலாம். நீ அடுத்த மாசம் அமெரிக்கா போய்ப் படிக்க போறதுக்கு நான் பொறுப்பு ஓகே வா?”
“அது எல்லாம் ஓகே தான். ஆனா நீ எனக்கு ஒரு பிராமிஸ் பண்ணிக் கொடுக்கணும்”
“ஏது பிராமிசா? இன்னும் என்ன டி பிளான் போடுற?”
“இது வேற மாமா”
“எல்லாத்தையும் ஒரே நேரத்துல சொல்ல மாட்டியா மா நீ? மனுசனை எப்பவும் திகிலாவே இருக்க வைக்கிற. என்னன்னு சொல்லு”, என்றான்.
“இனி ஒவ்வொரு நிமிசமும் நீ கவனமா இருக்கணும் மாமா. ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்த போக கூடாது. பைக்ல போக வேண்டாம். காரும் வேகமா ஓட்டக் கூடாது. வெளி இடத்துல சாப்பிடக் கூடாது. பிஸினஸ் சம்பந்தமா யார் கிட்டயும் சண்டைக்கு போகக் கூடாது. பிரண்ட்ஸ் ஏதாவது கூல் டிரிங்க்ஸ்ன்னு கொடுத்தாலும் அதை குடிக்க கூடாது. அப்புறம்..”
“அம்மா தாயே சத்தியமா நீ சொல்றது எல்லாம் செய்றேன் போதுமா. என் உயிர் எனக்கும் வெள்ளக் கட்டி தான். பத்திரமா பாத்துக்குறேன். ஆனாலும் விதியை நம்ம எதுவும் செய்ய முடியாது டா. தாத்தா சொல்ற மாதிரி நல்லதே நடக்கும்னு நம்புவோம்”, என்றான்.
அவன் கையைப் பற்றிக் கொண்டவள் “எந்த விதியா இருந்தாலும் உனக்கும் அதுக்கும் நடுவுல நான் இருப்பேன் மாமா”, என்று சொன்னவளை நெகிழ்ந்து போய் பார்த்தான் அதிபன்.
அந்த வார சன்டே அன்று செழியன் தன்னுடைய மனைவி மகனுடன் மச்சினன் வீட்டுக்கு சென்றார். கூடவே ஒட்டுபுல் போல சென்றாள் யாழி.
இவள் அங்கே வந்து என்ன கூத்து செய்து வைக்கப் போகிறாளோ என்ற பயத்திலே வந்தான் அதிபன். முதலில் வரவேற்பு எல்லாம் நல்ல படியாக தான் சென்றது.
உணவு முடிந்து அனைவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அதிபன் வெண்ணிலா திருமண விஷயம் பற்றி புவனா சொல்ல “எங்களுக்கு ராதுவை அதிபனுக்கு கொடுக்கணும்னு ஆசை இருந்துச்சு. ஆனா இப்ப நடக்காது போல? யாருக்கு யாருன்னு அந்த கடவுள் தான் முடிவு பண்ணனும் போல”, என்றார் புவனாவின் அண்ணன்.
அப்போது “மாமா என் ரூமுக்கு வாங்க, நாங்க காலேஜ்ல இருந்து டூர் போன போட்டோஸ் எல்லாம் உங்களுக்கு காட்டுறேன்”, என்று ராதிகா ஆர்வமாக சொன்னதும் தான் பிரச்சனை ஆரம்பித்தது.
“ஏன் என்னோட மாமா டூருக்கே போனது இல்லையா? என்னமோ நீ தான் போயிருக்க மாதிரி சீன போடுற?”, என்று கேட்டாள் யாழி.
“யாழி இப்ப எதுக்கு அவளை இன்சல்ட் பண்ணுற மாதிரி பேசுற?”, என்று ஒரு வார்த்தை அதிபன் கேட்டதும் எங்கிருந்து தான் வருகிறது என்று தெரியாமலே குடம் குடமாக அழ ஆரம்பித்தாள் யாழி.