அத்தியாயம் 3

காத்திருப்புகள் எப்போதும் 

அழகான சுமை தான் சுவைத்துப் 

பார்க்கும் காதலர்களுக்கு!!!

வேணுகோபால் தகவல் சொல்லி முடித்து அங்கிருந்து அனைவரும் போனதும் யாழி மட்டும் ஹாலில் இருந்த சோபாவிலே அமர்ந்து எதையோ யோசித்துக் கொண்டிருக்க “என்ன டா பாப்பா தூங்கலையா?”, என்று கேட்ட படி அவர் தலையை வருடினார் சேகர்.

“அது ஒண்ணும் இல்லை சேகரப்பா. ஒரு சின்ன குழப்பம் அதான் யோசிச்சிட்டு இருக்கேன்”

“அடடே இந்த குட்டி மூளைக்குள்ள யோசனை எல்லாம் வருதா என் பொண்ணுக்கு?”, என்று அவர் சிரிக்க “இருங்க சுகர் ஊசி போடும் போது  இன்னும் நாலு ஊசி சேத்து போடுறேன். நான் இன்னும் ரெண்டு நாள்ல டாக்டராக்கும்”, என்றாள்.

“சரிங்க டாக்டர் மேடம், என்ன தீவிரமா யோசிச்சிட்டு இருக்கீங்க? சொல்லுங்க கேப்போம்”

“அதி மாமா எனக்காக கல்யாணத்துக்கு சம்மதம் சொன்னானோன்னு  யோசனையா இருக்கு. ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு பா”

“அப்படி இல்ல டா குட்டி மா, அவன் உனக்காக இந்த சந்தர்ப்பத்த யூஸ் பண்ணிக்கிட்டான் அவ்வளவு தான். அவன் இது வரைக்கும் கல்யாணம் பத்தி யோசிச்சிருக்க மாட்டான். என் பொண்ணு வெண்ணிலாவை சொன்னதும் கொஞ்சம் ஷாக் ஆகிட்டான்  அவ்வளவு தான். இன்னும் குழப்பமா இருந்தா நேரா அவனையே போய் பாரு. அவன் கிட்டயே பேசிரு. எதுக்கு தனியா உக்காந்து குழம்பிக்கிட்டு இருக்க?”

“நல்ல ஐடியா சேகரப்பா. இதோ போறேன். ஆமா அது என்ன என் பொண்ணு வெண்ணிலா. அப்ப நான் யாராம்?”, என்று சிணுங்கலாக கேட்டாள்.

“நீயும் என் பொண்ணு தான் டா, அதுவும் என் செல்ல பொண்ணு”, என்று அவர் சொன்னதும் அவர் அன்பில் நெகிழ்ந்து போனவள் “சேகரப்பா”, என்று தடுமாற்றமாக அழைத்தாள்.

“என்ன டா பாப்பா?”

“நீங்க சந்தோஷமா இருக்கீங்களா?”, என்று அவள் கேட்டதும் திடுக்கிட்டு போனவர் முகத்தை இயல்பாக்கி “ரொம்ப சந்தோஷமா இருக்கேன். அதுவும் உன்னை மாதிரி ஒரு செல்ல குட்டி கூட இருக்கும் போது  சந்தோஷத்துக்கு என்ன குறையாம்? சரி சரி நீ போய் அவன் கிட்ட பேசிட்டு சீக்கிரம் தூங்கு. ஆனாலும் உன்னை ரெண்டு வருஷம் எப்படி பிரிஞ்சு இருக்க போறோம்னு தெரியலை”, என்று சொல்லி விட்டுச் சென்றார்.

போகும் அவரையே பார்த்த படி இருந்தவளின் எதிரே வந்து அமர்ந்தார் அவளது தந்தை விஷ்ணு.

“அப்பா”, என்ற படி அவர் அருகே சென்றவள் அவர் மடியில் தலையை சாய்த்து படுத்து கொண்டாள்.

அவள் தலையை வருடி விட்டவர் “இன்னொரு தடவை அந்த கேள்வியை உன் சேகரப்பா கிட்ட நீ கேக்க கூடாது அம்மு”, என்றார்.

அவள் அவரை பார்க்க “பதில் தெரிஞ்ச கேள்வியை திருப்பி திருப்பி கேட்டா அவர் பதில் சொல்றதுக்கு கஷ்ட படுவார். பாவம் விட்டுடேன். அவருக்கு ஏதோ பிரச்சனைன்னு மட்டும் தெரியுது. என்னன்னு தெரியலை. நீயும் கேக்காத”, என்றார்.

அவர் சொல்வது புரிய “ஏன் பா இப்படி?”, என்றாள் மகள்.

“எல்லார் வாழ்க்கையும் சந்தோஷத்துல அமையாது அம்மு மா”, என்றவர் ஏதோ யோசிக்க “என்ன பா யோசிக்கிறீங்க?”, என்றாள்.

“என்ன தான் வெண்ணிலா நல்ல பொண்ணுனாலும் சேகர் அண்ணா வாழ்க்கை மாதிரி அதிபன் வாழ்க்கை ஆகிருமோனு பயமா இருக்கு. சேகர் அண்ணனுக்கு தன்னோட வாழ்க்கை மாதிரி வெண்ணிலா வாழ்க்கை ஆகிற கூடாதுன்னு இருக்கு. அதிபன் எல்லாம் நல்லா பாத்துக்குவானு அவர் நம்புறார். ஆனா அதிபன்.. நீ அவன் கிட்ட போய் கொஞ்சம் பேசு அம்மு. அப்புறமா போய் தூங்கு”, என்று சொல்ல “சரிப்பா”, என்ற படி தன்னுடைய செல்ல மாமாவின் அறைக்குள் சென்றாள்.

அவன் அப்போது தான் கையில்லாத பனியன் மற்றும் சார்ட்ஸ் அணிந்து படுக்கையில் படுத்திருந்தவன் அவள் வருவதைக் கண்டு தடுமாறி போனான். “லூசு லூசு பொசுக்கு பொசுக்குன்னு உள்ள வந்துருவா”, என்று எண்ணி தன்னுடைய தடுமாற்றத்தை மறைத்துக் கொண்டு அதே நேரம் தடுமாறாத படி ஒரு போர்வையை எடுத்து கழுத்து வரை மூடிக் கொண்டவன் “ஓய்  என்ன டி நீ தூங்கலையா?”, என்றான்.

            “தூக்கம் வரலை மாமா”, என்ற படி அவன் அருகே அமர்ந்தாள். போர்வையை சரியாக மூடிக் கொண்டவன் அவள் கையை மற்றும் பற்றிக் கொண்டு “இப்ப என்ன பிரச்சனை உனக்கு? அதான் தாத்தா உன்னை படிக்க போகச் சொல்லிட்டாங்க தானே? அப்புறம் என்ன டா பாப்பு?”, என்றான்.

            “எனக்காக தானே அவளைக் கல்யாணம் பண்ண சம்மதிச்ச?”

            “இல்லையே, ஏன் அப்படி கேக்குற?”

            “நீ சொன்னது அப்படி தான் இருந்துச்சு”

            “அந்த நேரத்துல உன் விஷயத்தை எப்படி பேசன்னு தெரியல. சோ அதை சரியா யூஸ் பண்ணிக்கிட்டேன்”

            “வெண்ணிலாவை உனக்கு பிடிக்குமா?”, என்று கேள்வி கேட்டவளின் மனதோ அவளைப் பிடிக்கலைன்னு சொல்லு என்று வேண்டிக் கொண்டது.

            “அவ நம்ம வீட்டு பொண்ணு. பிடிக்கிறதுக்கு வேற என்ன வேணும்? எனக்கும் கல்யாண வயசு வந்தாச்சு. வேற என்ன சொல்லி நிப்பாட்ட முடியும்? அதுக்கு ரீஸன் இல்ல பாப்பு. சோ மனசு அக்ஸப்ட் பண்ணிக்கிச்சு. உடனே உன் வேலையும் முடிச்சிக்கிட்டேன். ஒரு கல்லுல ரெண்டு மாங்கா. எப்படி என் பிளான்”, என்றான்.

அவன் சொன்னதும் சிறு தெளிவு பிறந்தாலும் ஏதோ ஒரு உறுத்தல் இருந்தது அவளுக்கு. அவன் தான் வேறு பேசி அவளை திசை திருப்பினான். அவளது அமெரிக்கா பயணம் யூனிவர்சிட்டி பத்தி பேசிய படியே அவனது அறையிலே அவன் அருகிலே படுத்து தூங்கியிருந்தாள் யாழி. அவனும் அவள் கையைப் பற்றிய படியே உறங்கி விட்டான்.

            காலையில் கண் விழித்தவள் தூங்கும் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள். அவளுக்கு அவனை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல தான் இருந்தது. சிறு சிரிப்புடன் அவனையே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு நேற்று நடந்தது அனைத்தும் நினைவுக்கு வர “உன் அழகுக்கு என் அக்காகாரி அவ்வளவு செட் ஆகல மாமா. ஆனா உன் விதி இப்படி ஆகிருச்சே?”, என்று எண்ணிக் கொண்டு அவன் தூக்கம் களையாதவாறு அங்கிருந்து எழுந்தாள் .

உறக்கத்தில் கூட இறுக்கமாக தன்னுடைய கையைப் பற்றி இருந்தவனின் கையை பிடித்து விலக்கி விட்டு அங்கிருந்து வர மொட்டை மாடியில் இருந்து இறங்கி வந்து கொண்டிருந்த வெண்ணிலா அவளைப் பார்த்து விட்டாள்.

            வெண்ணிலாவைக் கண்டதும் யாழியின் மனம் “இவ என் மாமாவுக்கு செட் ஆவாளா?”, என்று எண்ணிக் கொண்டிருக்க “ஏய் காலைலே எதுக்கு டி அதிபன் மாமா ரூமுக்கு போன?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

            “நான் எங்க காலைலே போனேன்?  நேத்து நைட் பேசிட்டு இருந்தோம். அப்படியே தூங்கிட்டோம் போல?”

            “என்னது நைட் முழுக்கவா?”

            “ஆமா, இப்ப எதுக்கு இப்படி குறுக்கு கேள்வி கேக்குற?”

            “இங்க பாரு யாழி, இவ்வளவு நாள் மாமா கூட குளோசா இருந்த சரி. இனி அதிபன் மாமா எனக்கு மட்டும் தான். இனி அவரை விட்டு தள்ளியே நில்லு சொல்லிட்டேன்”, என்று வெண்ணிலா சொல்ல யோசனையாக தலையசைத்த படி சென்றாள் யாழி.