“யாழி குட்டி கொஞ்சம் கவனி டா தாத்தா முக்கியமான விஷயம் பேசணும்”, என்று அவர் கொஞ்ச வெண்ணிலா முகம் கடுகடுவென்று ஆனது.
போதா குறைக்கு “என்னை மட்டும் திட்டுங்க, அவளை மட்டும் கொஞ்சுங்க”, என்று வெண்ணிலா கொஞ்சம் சத்தமாக முணுமுணுக்க “நீ அவ கிட்ட போட்டி போடுறதை கொஞ்சம் நிறுத்தனும். அது தான் உனக்கு நல்லது நிலா”, என்றார் சேகர்.
தந்தை அப்படி சொன்னதும் வெண்ணிலா முகம் வாட “அவ இப்ப என்ன தப்பா சொல்லிட்டா? எதுக்கு அவளை அரட்டுறீங்க?”, என்று சத்யாவதி கேட்க “உன் வாயை கொஞ்சம் மூடு சத்யா, உன்னால தான் பிள்ளைங்க கெட்டுப் போறாங்க”, என்று சொன்ன சேகரின் முகத்தில் அவ்வளவு வெறுப்பு மண்டிக் கிடந்தது.
“கொஞ்சம் எல்லாரும் அமைதியா இருக்கீங்களா? இப்ப நான் மட்டும் தான் பேசுவேன்”, என்று வேணுகோபாலன் சொன்னதில் அனைவரும் கப் சிப் என்று ஆகி விட்டனர்.
“காலைல சரஸ்வதி சொல்லும் போது தான் இலக்கியாவுக்கு பொங்கல் சீர் கொடுக்குறது பத்தின யோசனை வந்தது. சரஸ்வதி நீ புவனா கூட சேந்து உன் பொண்ணுக்கு என்ன வாங்கணும்னு பாத்து வாங்கு. நம்ம எல்லாரும் போய் கொடுத்துட்டு பொண்ணையும் மாப்பிள்ளையையும் மாட்டுப் பொங்கலுக்கு அழைப்பு கொடுத்துட்டு வருவோம். டிராவல்ஸ் எல்லாம் இனியனோட பொறுப்பு”, என்றார்.
“இவ கூட சேந்து வாங்கணுமா?”, என்று பொருமிய படி சரஸ்வதி அமைதியாக இருக்க “அம்மாவுக்கு அவ்வளவு தெளிவா எது வாங்கணும்னு தெரியாது தாத்தா. நீங்க சித்தி கூட பெரிய அத்தையை பொறுப்பை பாத்துக்க சொல்லுங்க. சத்யா அத்தைக்கு தான் எல்லாம் தெளிவா தெரியும்”, என்றான் அதிபன்.
“பரவால்லயே அவங்க அம்மாவுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு மகனே அசிங்க படுத்துறானே”, என்று சரஸ்வதி மற்றும் சத்யாவதி நினைக்க மற்ற அனைவருக்குமே புரிந்தது அதில் முக்கியமாக அடங்கியிருந்தது அவனுடைய அன்னையின் மன அமைதி மட்டுமே என்பது.
“ஆமாங்க மாமா, நான் வீட்டு பொறுப்பை பாத்துக்குறேன். சரசும் சத்யாவுமே பாத்துக்கட்டும்”, என்று புவனா சொல்ல இரண்டு பெண்களும் முகம் மலர்ந்து போனார்கள்.
“அதுவும் சரி தான், சவுந்து மா, நீ புவனா கூட இருந்து நம்ம வீட்ல பொங்கல் வைக்கிறதுக்கு என்ன பண்ணனும்னு பாத்துக்கோங்க”, என்று சொல்ல “சரிங்கப்பா”, என்றார் சௌந்தர்யா.
“சௌந்தர்யா நம்ம கூட வந்தா நல்லா இருக்குமே?”, என்று சரஸ்வதி எண்ண “அப்பாடி சௌந்தர்யா நம்ம கூட வரல”, என்று எண்ணிக் கொண்டாள் சத்யாவதி.
“அப்றம் இன்னொரு விஷயம் பேசணும்”, என்றார் வேணு கோபாலன்.
“என்ன விஷயம் பா?”, என்று கேட்டார் செழியன்.
“நம்ம அதிபனுக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்”, என்று சொன்னதும் அதிபன் திகைக்க அனைவரும் அதிபனைத் தான் பார்த்தார்கள்.
அவனுடைய திருமணத்திற்கு வயதும் சரியானது என்பதாலும் வீட்டில் அவன் தான் மூத்தவன் என்பதாலும் இதில் யாராலும் மறுப்பு சொல்ல முடியாது. கூடவே அனைவருக்கும் இது சந்தோஷமான விஷயமும் தான் என்று இருக்க அதிபனோ “இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே”, என்று எண்ணினான்.
“கலக்குற போ”, என்று அவன் காதில் யாழி முணுமுணுக்க “எதாட்டும் பண்ணு டி. எனக்கு இப்ப கல்யாணம் வேண்டாம். அதுக்கெல்லாம் மைண்டு செட் பண்ணல”, என்றான் அதிபன்.
“வயசு அதிகமாகி அங்கிளா ஆகிருவ டா மாமா. இப்பவே சட்டு புட்டுன்னு தாலியைக் கட்டிட்டு பிள்ளை குட்டிகளை படிக்க வைக்கிற வழியைப் பார்”, என்று அவள் சொல்ல முறைத்து பார்த்தவன் தாத்தாவைப் பார்த்தான்.
“செழியன் புவனா உங்க விருப்பம் என்ன?”, என்று கேட்டார் வேணுகோபால்.
“சந்தோஷம் தான் பா”, என்று செழியன் சொல்ல “ஆமா மாமா எங்களுக்கு சந்தோஷம் தான்”, என்றார் புவனா.
“பொண்ணு பாக்கணும்ல பா, எப்படி எங்க இருந்து ஆரம்பிக்க?”, என்று சௌந்தர்யா கேட்க “பொண்ணு தான் வீட்லயே இருக்கே மா”, என்றார் வேணுகோபால்.
அனைவரும் திகைக்க “நான் சுத்தி வளைச்சு பேச விரும்பல. நேரடியா விசயத்துக்கு வரேன், நம்ம வெண்ணிலாவை அதிபனுக்கு கட்டி வைக்கலாம்னு நினைக்கிறேன்”, என்று சொல்ல வெண்ணிலா அதிர்ச்சியாக விழிக்க அதிபனோ யாழியை பாவமாக பார்த்தான்.
அவளோ நமட்டு சிரிப்பு சிரித்த படி “இப்படியா டா சிக்குவ? பேசாம என் கூட அமெரிக்காவுக்கு ஓடி வந்துறியா”, என்று சீரியசாகவே கேட்டாள். ஆனால் அவன் அவள் குரலில் இருந்த உள் அர்த்தத்தை பெரிதாக எடுத்துக் கொள்ள வில்லை.
“பேசாம இவ சொல்ற மாதிரியே செய்யலாமா?”, என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க அனைவரின் குழப்பத்துக்கும் முடிவாக “எங்களுக்கு பரிபூரண சம்மதம் மாமா”, என்று சொல்லி இருந்தார் சேகர்.
சத்யாவதி ஏதோ சொல்ல வர அவளை பார்வையால் அடக்கினார் வேணுகோபாலன். சத்யாவதிக்கு வெண்ணிலாவை இனியனுக்கு திருமணம் செய்து வைக்க ஆசை இருந்தது. இப்ப என்ன செய்ய என்று விழிக்க அவளுக்கு ஆப்படிக்கும் விதமாய் “ரொம்ப நல்ல விஷயம் பண்ணிருக்கீங்க மாமா”, என்று சொன்னாள் சரஸ்வதி.
சரஸ்வதிக்கு இனி இனியனுக்கும் யாழிக்கும் திருமணம் செய்து வைத்து விடலாம் என்று சந்தோஷமாக இருந்தது.
தன்னுடைய அண்ணியை முறைத்த சத்யாவதி மகளைப் பார்க்க அவளோ திகைத்து அதிர்ந்து அமர்ந்திருந்தாள். இவளை வேற மாலை இறக்கணுமே என்று எண்ணிக் கொண்டிருக்க “நாளைக்கு ஜோசியர் கிட்ட முடிவு பண்ணிட்டு டேட் பிக்ஸ் பண்ணிறலாம். இப்ப எல்லாரும் தூங்க போங்க”, என்றார் வேணுகோபாலன்.
அப்போது “தாத்தா ஒரு நிமிஷம்”, என்று அழைத்தான் அதிபன்.
“என்னப்பா கல்யாணம் வேண்டாம்னு சொல்லப் போறியா?”
“இல்லை தாத்தா, நான் இந்த கல்யாணம் பண்ணிக்கணும்னா எனக்கு ஒரு கண்டிஷன் இருக்கு”
“கண்டிஷனா என்ன?”, என்று அவர் கேட்க வெண்ணிலாவுமே அவனை ஆர்வமாக பார்த்தாள் அப்படி என்ன கேட்க போகிறான் என்று.
“யாழிக்கு ரெண்டு நாள்ல காலேஜ் முடியுது. அவ அடுத்த மாசம் அமெரிக்கா போய் எம்.எஸ் படிக்கணும்னு ஆசைப் படுறா. இதுக்கு எல்லாரும் சம்மதிச்சா நான் இந்த கல்யாணம் பண்ணிக்கிறேன். இல்லைன்னா எனக்கு இப்ப இந்த கல்யாணம் வேண்டாம். நீங்க வெண்ணிலாவுக்கு வெளியில வேற மாப்பிள்ளை பாருங்க. இல்லைன்னா இனியனுக்கு ..”, என்று அவன் சொல்லி முடிப்பதற்குள் “உனக்கு முதல்ல முடிச்சிட்டு தான் அடுத்தவனுக்கு பண்ணனும். யாழி போய் படிக்கட்டும். கல்யாணமும் நடக்கும்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார்.
அதிபன் நிம்மதியாக மூச்சு விட யாழிக்கு கஷ்டமாக இருந்தது. கூடவே குற்ற உணர்ச்சியாக இருந்தது. தனக்காக தான் சரி என்று சொன்னானா, இல்லை என்றால் ஏதாவது சொல்லி தடுத்திருப்பானோ என்ற எண்ணம் வந்தது.
“போயும் போயும் இவ படிக்கிறதுக்காக என்னை கல்யாணம் செஞ்சிப்பானா இவன்? நான் அவ்வளவு கேவலமா போய்ட்டேனா”, என்று எண்ணிக் கொண்ட வெண்ணிலா அங்கிருந்து விருவிருவென்று தன்னறைக்கு சென்றாள்.
அனைவரும் அவரவர் அறைக்கு செல்ல தனது அறையில் கோபமாக அமர்ந்திருந்தாள் வெண்ணிலா. மகளைக் காண வந்த சத்யாவதி “நிலா”, என்று அழைத்தாள்.
“மா செம கடுப்புல இருக்கேன், பேசாம போயிரு”
“இப்ப எதுக்கு கோபம் உனக்கு?”
“அவர் திடீர்னு கல்யாணம்னு சொல்றார். அது கூட பரவால்ல. ஆனா அவன் அவளுக்காக கல்யாணத்துக்கு ஒத்துக்குறான். என் கிட்ட பேருக்கு கூட யாரும் சம்மதம் கேக்கலை. அப்பா உடனே ஓகே சொல்றார். அப்ப இங்க நான் யாரு? நீயும் மண்ணு மாதிரி அமைதியா இருக்க?”, என்று பொறிந்து தள்ளினாள்.
“எனக்கும் முதல்ல இந்த விஷயம் பிடிக்கலை நிலா. அப்பறம் தான் இது சரியா வரும்னு யோசிச்சேன்”
“என்னன்னு?”
“இந்த வீட்ல அதிபனுக்கு தான் முக்கியத்துவம் அதிகம். எல்லாமே அவன் கண்ட்ரோல்ல இருக்கு”
“ஆமா அதுக்கு என்ன?”
“அப்ப அவனையே கண்ட்ரோல் பண்ணுற இடத்துல நீ இருந்தா?”
“என்ன மா சொல்ற?”
“அவனுக்கு நீ பொண்டாட்டியா ஆனா அவனையே உன்னால கண்ட்ரோல்ல வைக்க முடியும். அப்புறம் நம்ம ராஜியம் தான்”
“அம்மா உனக்கு என்ன பைத்தியமா? நான் பேசுறது என்னோட கல்யாணத்தைப் பத்தி. அவன் என் கிட்ட மூஞ்சி கொடுத்து கூட பேச மாட்டான். அவன் கூட சிரிச்சு பேசி குடும்பம் நடத்தி வாய்ப்பே இல்ல. எனக்கு இது வேண்டாம். பணம் வேணும் தான், அதுக்காக என் வாழ்க்கையை கெடுத்துக்க முடியாது”
“சரி நான் சொல்லுறதை சொல்லிட்டேன். அப்புறம் உன் இஷ்டம். உனக்கு விருப்பம் இல்லைன்னா உன் அப்பா கிட்டயோ தாத்தா கிட்டயோ இல்லைன்னா உன் வருங்கால புருஷன் கிட்டயோ பேசிக்கோ”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டார்.
தன்னிடம் என்ன வாய் பேசினாலும் அவள் மற்றவர்களிடம் அவ்வளவு தைரியமாக பேச மாட்டாள் என்று எண்ணிக் கொண்டு தனக்குள் சிரித்துக் கொண்டார் சத்யாவதி.
“அவங்க கிட்ட பேசுறதுக்கு சும்மா இருக்கலாம். ஒரு யூசும் இல்லை”, என்று எண்ணிக் கொண்டு கடுப்புடன் படுக்கையில் விழுந்தாள் வெண்ணிலா.