“ரொம்ப இறங்கிப் போறியே. இது சரியில்லையே. ஒரு வேளை பெரிய விஷயம் எதுவும் என்னால ஆகணுமோ”

“ஆமா, ரொம்ப பெரிய விஷயம்”

            “அடியேய் வீட்ல உள்ள யாருக் கிட்டயும் என்னைக் கோத்து விடாத. ஏற்கனவே நீ இனியா, விஷ்வா கூட சேந்து பண்ணுற எல்லா சேட்டைக்கும் என் தலை தான் உருளுது”

            “கவலைப்படாதே மாமா, சேதாரம் கொஞ்சம் கம்மியா தான் ஆகும்னு  நினைக்கிறேன்”

            “யாருக்கு எதிரா செயல் படணும்னு முதல்ல சொல்லு. அப்ப தான் அதுக்கு ஏத்தாப்ல காய் நகத்த முடியும்”

            “நீ இப்ப அமைதியா வா, அங்க போய் சொல்றேன்”, என்றவள் முகம் கொஞ்சம் யோசனைக்கு போக இவனுக்கும் என்ன இழுத்து வைக்கப் போறாளோ என்று இருந்தது.

            அவன் எண்ணியது போல அந்த ஹோட்டல் உள்ளே நுழைந்ததும் அவள் மெனுகார்டை பார்த்து ஆர்டர் பண்ணிக் கொண்டிருக்க “அடியேய், இதுக்கா வந்த?”, என்றான்.

            “ஹோட்டல் வந்துட்டு சாப்பிடாம போனா நல்லாவா இருக்கும்? பில் கட்ட கார்டு வச்சிருக்க தானே?”, என்றவள் உணவை உள்ள தள்ள இவனுக்கு தான் வயிற்றில் புளியைக் கரைத்தது.

அவள் முக்கால் வாசி உணவை உண்ட  பிறகு “இப்பவாது என்ன விஷயம்னு சொல்லு பாப்பு”, என்றான் அதிபன்.

            “வீட்ல எனக்காக நீ ஒரு விஷயத்துக்கு பர்மிஷன் வாங்கித் தரணும்”, என்றாள் அமைதியாக.

            “அவ்வளவு தானே தந்துட்டா போச்சு. ஆனா எதுக்கு? பிரண்ட்ஸ் கூட டூர்  எங்கயாவது போறியா? அத்தை மாமா சரினு சொல்லிருவாங்க. தாத்தாவைத் தான் கொஞ்சம் ஐஸ்  வைக்கணும்”

            “டூர் மாதிரி தான். ஆனா கொஞ்சம் லாங் டூர்”, என்று அவள் சொல்ல அவளை புரியாமல் பார்த்தவன் “ஆன்மீக சுற்றுலாவா பாப்பு? எத்தனை நாள்?”, என்று சிரிப்புடன் கேட்டான்.

            “ரெண்டு வருஷம்”

            “எதே? ரெண்டு வருஷமா?”

            “ம்ம்”

            “பாப்பு விளையாடாத, சீரியசா ஏதாவது இருந்தா சொல்லு. இல்லைன்னா பேசாம சாப்பிட்டு வா , போகலாம்”

            “அதி மாமா பிளீஸ்”

            “நடக்காதது யோசிக்க கூடாது பாப்பு”

            “அதுக்கு தானே நீ இருக்க? எனக்கு அமெரிக்கா போகணும் எம்.எஸ் படிக்க. யூனிவர்சிட்டி எல்லாம் கேட்டு வச்சிட்டேன்”

            “சும்மா விளையாட்டுக்கு பாரின்  போய் எம்.எஸ் படிக்க போறேன்னு சொல்றேன்னு நினைச்சேன். இப்ப உண்மையா சொல்லிக்கிட்டு இருக்க? கண்டிப்பா நீ அங்க போக முடியாது பாப்பு. இங்கயே படி. ஏன்  டெல்லில கூட உனக்கு அரெஞ்ச் பன்றேன். பாரின் வேண்டாம்”, என்று சொன்னதும் முகம் வாடி “ஏன்  மாமா?”, என்று கேட்டாள்.

            அவள் கேட்பது அனைத்தையும் நிறைவேற்றுபவன் “வீட்ல விட மாட்டாங்க டா. அதுவும் ரெண்டு வருஷம். வாய்ப்பே இல்லை”, என்றான் பாவமாக.

            “யாரு விட மாட்டா?”

            “யாருமே விட மாட்டாங்க”

            “பொண்ணுங்க பாரின் போய் படிக்க கூடாதா? நீயும் தானே போய் படிச்ச?”, என்று கேட்டவளின் முகம் சிறுத்துப் போனது.

            “இங்க ஆணா பெண்ணாங்குறது முக்கியம் இல்லை பாப்பு. வீட்டை விட்டு போக போறது யாழி. அது தான் இங்கே பிரச்சனை. நீ இல்லைனா வீட்ல உயிர்ப்பு இருக்காது. உன்னை ஒருத்தருமே அனுப்ப சம்மதிக்க மாட்டாங்க. எல்லாத்துக்கும் முரண்டு பிடிக்கிற சரஸ்வதி சித்தி கூட உன்னை அனுப்ப விட மாட்டாங்க. அதும் தாத்தா வாய்ப்பே இல்லை. எங்க அப்பா, உங்க அப்பா, எங்க அம்மா, உங்க அம்மா யாருமே விட மாட்டாங்க. சேகர் மாமா கூட விட மாட்டாங்க டி புரிஞ்சிக்கோ”

            “எனக்கு உதவி செய்ய மாட்டியா மாமா? நீ தானே எதுனாலும் என் கிட்ட கேளுனு சொல்லிருக்க? நீ பேசினா தாத்தா கவுந்துருவார். தாத்தா சரின்னு சொல்லிட்டா எல்லாரையும் அசால்ட்டா ஓகே சொல்ல வச்சிறலாம். பிளீஸ் மாமா”, என்று அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கெஞ்சினாள்.

அவள் சும்மா பார்த்தாலே அதை வாங்கிக் கொடுத்து விடுபவன் இப்போது மட்டும் ஏமாற்றுவானா என்ன? ஆனால் அவனுக்கே அவளை விட்டு இரண்டு வருடம் எப்படி இருப்போம் என்று மலைப்பாக இருந்தது.

            “சரி நான் வீட்ல பேசுறேன். எல்லாரையும் சம்மதிக்க வைக்கிறேன்”

            “சூப்பர் மாமா, என் அதி மாமானா மாமா தான்”, என்ற படி உண்ண ஆரம்பித்தாள்.

            “நான் உனக்கு உதவி பண்றது எல்லாம் சரி. அதுக்கு முன்னாடி நீ எனக்கு ஒரு விஷயம் பண்ணணுமே?”, என்று கொக்கிப் போட்டு நிறுத்தினான்.

            “என்ன?”

            “இந்த வாரம் சன்டே அம்மா அப்பா கூட மாமா வீட்டுக்கு போக மேடம் அனுமதி தந்தா நான் உனக்காக தாத்தா கிட்ட பேசுறேன்”

            “ஏய் இதெல்லாம் போங்காட்டம். இதுக்கும் அதுக்கும் என்ன சம்பந்தம் மாமா?”

            “நீ சொல்றது எவ்வளவு பெரிய விஷயம், நான் கேக்குறது சிம்பிள் விஷயம் தானே பாப்பு?”

            “சிம்பிள்  தான். ஆனா அங்க அந்த ராதிகா இருப்பாளே. அவளைப் பாத்தாலே எனக்கு கடுப்பா வருது. மாமா மாமான்னு உன் பின்னாடியே திரிவா. எனக்கு எரிச்சலா வரும் மாமா”

            “அவளுக்கும் நான் மாமா தானே டி?”

            “இல்லை இல்லை, நீ எனக்கு மட்டும் தான் மாமா. என்னோட அதி மாமா”, என்று அவள் குரல் உறுதியாக ஒலிக்க  அவனுக்குள் நெகிழ்ந்து போனது.

            “அம்மா பாவம் டி. ரொம்ப ஆசை அவங்களுக்கு”

            “அப்ப காலைல அங்க போக மாட்டேன்னு சொன்ன?”

            “அங்க வச்சு உன் கிட்ட விவாதம் பண்ணா உன் முகம் வாடக் கூடாதுன்னு அம்மாவே விட்டுக் கொடுத்துருப்பாங்க, அதான்”

            “அத்தையும் பாவம் தான். ஆனா ”

            “கொஞ்சம் இறங்கி வா பாப்பு பிளீஸ்”

            “சரி சரி பர்மிஷன் தரேன், போய்ட்டு வா”

            “தேங்க்ஸ் பாப்பு”

            “அதுக்கு பதிலா நீ எனக்கு ஒண்ணு பண்ணனும்”

            “நீ அமேரிக்கா போறது பத்தி தானே? நான் பேசுறேன் டீல்”

            “அது இல்ல. அதை நீ முடிச்சிருவேன்னு எனக்கு தெரியும். இது வேற”

            “இன்னும் என்ன டி?”

            “உன் மாமா வீட்டுக்கு போகும் போது நீ என்னையும் கூட்டிட்டு போகணும்”, என்று சொல்ல அவன் பேய் முழி முழித்தான்.

            “இவளை வச்சிக்கிட்டு”, என்று மனம் அலுத்துக் கொண்டாலும் “சரி சரி, நீயும் வா”, என்றவனுக்கு வரப் போகும் சன்டே மற்றும் சண்டையை நினைத்து இப்போதே மூச்சு முட்டியது.

            ஆனா இதுக்கே வா இன்னும் இந்த நாள் இவ்வளவு மோசமா முடியாது என்று அவனைப் பார்த்து சிரித்தது விதி.

            எதிர் பாராத நிகழ்வுகள் ரசிக்கும் படியாகவும் ரகளைக்குள்ளாகியும் நடப்பது தானே வாழ்க்கை. என்ன நடந்தாலும் அனுபவிக்க மட்டுமே நமக்கு உரிமை உண்டு. மாற்றி அமைக்க அல்ல.

இரவு உணவை உண்டு விட்டு அனைவரும் வீட்டு ஹாலில் அமர்ந்திருந்தார்கள்.

வேணுகோபாலன் நடுநாயகமாக அமர்ந்திருக்க “இங்க வா செழியா”, என்று அழைத்தவர் மூத்த மகனை தனது அருகில் அமர வைக்க தந்தைக்கு மறுபுறம் தானாகவே போய் அமர்ந்து கொண்டார் தண்டாயுதபாணி. தாத்தாவுக்கு இருபுறமும் இரண்டு மகன்கள் அமர்ந்திருந்தார்கள். அதைக் கண்டு சிறு சிரிப்புடன் ஒற்றை சோபாவில் அமர்ந்தான் அதிபன்.

அவன் அமர்ந்திருந்த சோபாவின் கைபிடியில் ஒரு புறம் யாழியும் மறுபுறம் விஷ்வாவும் அமர இரண்டு அத்தைகளுக்கு நடுவில் சென்று தரையில் காலை நீட்டி அமர்ந்தான் இனியன்.

புவனா மாடிப்படியில் அமர சரஸ்வதி தனியாக இருந்த மற்றொரு சோபாவில் அமர்ந்தார். விஷ்ணுவும் சேகரும் இரண்டு சேர் போட்டு  அமர்ந்திருந்தார்கள்.

அதற்கு எதிர் புறமாக யாருக்கு வந்த விருந்தோ என்று எண்ணி தன்னுடைய போனை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள் வெண்ணிலா.

“எல்லாரும் கொஞ்சம் இங்க கவனிங்க. முக்கியமான விஷயம் பேச போறேன்”, என்று ஆரம்பித்தார் வேணுகோபாலன்.

வெண்ணிலா அப்போதும் போனையே பார்த்துக் கொண்டிருக்க “நிலா நான் சொல்றது கேக்குதா இல்லையா?”, என்று ஒரு அரட்டல் போட்டார்.

“ஆமா என்னை மட்டும் அரட்டுவாங்க, இதுவே அவ பண்ணிருந்தா இங்க கொஞ்சம் கவனி யாழி குட்டின்னு சொல்லிருப்பாங்க”, என்று அவள் எண்ணிக் கொண்டிருக்க அதே நேரம் “இப்பவே பேசிடு மாமா எல்லாரும் இருக்காங்க”, என்று அவன் காதில் முணுமுணுத்தாள் யாழி.