அதிபன் “மாமா வீட்டுக்கு போகலாம்”, என்று சொன்னதைக் கேட்டு புவனா கொஞ்சம் சமாதானம் ஆக “யாழி குட்டியை அவன் சமாளிச்சிக்குவான் புவி. உன் பையன் உன் ஆசையையும் நிறைவேத்துவான். உன்னை யாருகிட்டயும் விட்டுக் கொடுக்க மாட்டான். சரி அவன் கிளம்பட்டும். நீ வா, நாம போகலாம்”, என்று மனைவியை அழைத்துச் சென்றார் செழியன்.
போகும் பெற்றோரைக் கண்டு புன்னகைத்தவன் யாழியை நினைத்த படி கிளம்ப ஆரம்பித்தான். காலையிலே இவ்வளவு ஆர்ப்பாட்டமாக இந்த நாள் ஆரம்பிக்க, இதே நாள் முடியும் நேரம் அவனுக்கு இவ்வளவு சந்தோஷம் இருக்குமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
அப்போது அவனது மொபைல் சத்தம் கொடுக்க எடுத்துப் பார்த்தான். யாழி தான் மெசேஜ் போட்டிருந்தாள்.
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும் அதி மாமா”, என்று மெசேஜ் வந்திருந்தது.
அதைக் கண்டு அவன் புருவம் உயர்ந்தது, ஆக அவள் ஏதோ பேச தான் தனது அறைக்கு வந்திருக்கிறாள். அவனது பெற்றோர் இருக்கவும் சொல்லாமல் சென்றிருக்கிறாள் என்று எண்ணியவன் “ஈவினிங் வெளிய போகலாமா பாப்பு?”, என்று அனுப்பி வைத்தான். அவனுக்கும் சன்டே மாமா வீட்டுக்கு போவதற்கு அவளை தாஜா செய்ய வேண்டுமே? அதனால் உடனே சம்மதித்தான்.
“போகலாம், நம்ம ரெண்டு பேர் மட்டும்”, என்று பதில் வந்ததும் “இனியன் விஷ்வாவுக்கு தெரியாம அப்படி என்ன பேச போறா”, என்று எண்ணிக் கொண்டே கீழே வந்தான்.
“அப்பா உங்க பெரிய பேரன் வந்தாச்சு, வாங்க சாப்படலாம்”, என்று சிரித்த படி சொன்னாலும் சத்யாவதி குரலில் நிச்சயம் எரிச்சல் இருந்தது. அதே எரிச்சல் சித்தப்பா தண்டாயுதபாணி மற்றும் சித்தி சரஸ்வதி முகத்திலும் இருந்ததைக் கண்டான் அதிபன்.
ஆனால் அதை எல்லாம் பெரிதாக கண்டு கொள்ளாமல் நேராக தாத்தா வேணுகோபால் மற்றும் இரண்டு மாமாக்கள் சேகர் மற்றும் விஷ்ணுவுடன் அமர்ந்து பேசிய படியே உணவை உண்ண ஆரம்பித்தான் அதிபன். அவனுக்கு பார்த்து பார்த்து பரிமாறினாள் சௌந்தர்யா. அவன் வந்த பிறகு தான் வேணுகோபாலும் உண்ண ஆரம்பித்தார்.
சவுந்தர்யா மேலும் ஒரு தோசை வைக்க “போதும் அத்தை அம்மா இப்ப தான் பால் கொடுத்தாங்க”, என்றான் அதிபன்.
“இன்னும் ஒரு தோசை போட்டுக்கோ அதிகண்ணா”, என்று சொன்னவரின் அன்பை அவனால் தட்ட முடிய வில்லை.
அவர்கள் பாதி சாப்பாட்டில் இருக்கும் போது தான் யாழி, விஷ்வா, இனியன் மூவரும் சாப்பிட வந்தார்கள். இவ்வளவு விஷயம் தன்னைச் சுற்றி இருக்கிறது என்ற எண்ணமே இல்லாமல் உண்டு கொண்டிருந்தாள் வெண்ணிலா.
இனியன் மற்றும் யாழியை ஒன்றாக கண்ட சரஸ்வதிக்கு தன்னுடைய மகன் இனியனுக்கு யாழியை திருமணம் செய்து வைக்க மலையளவு ஆசை இருந்தது. ஆனால் அவர் ஆசைப் பட்டால் மட்டும் பயன் இல்லையே. யாருக்கு யாரென்று அந்த கடவுள் அல்லவா முடிவு செய்ய வேண்டும்.
உணவு முடிந்ததும் “இன்னைக்கு நைட் உங்க எல்லார் கிட்டயும் நான் கொஞ்சம் முக்கியமா பேசணும்”, என்றார் வேணுகோபாலன்.
“என்ன விஷயம் அப்பா?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.
“இலக்கியாவுக்கு பொங்கல் சீர் கொண்டு போகணும்ல? அது பத்தியா மாமா?”, என்று கேட்டாள் சரஸ்வதி.
“அதான் நைட் பேசுறேன்னு சொல்லிட்டேனே? இப்ப எல்லாரும் அவரவர் வேலையைப் பாருங்க. அம்மாடி புவனா கொஞ்சம் வெண்ணியும் மாத்திரையும் கொண்டு வா மா”, என்று சொல்லி விட்டு அவரது அறைக்குச் சென்றார்.
“ஆமா இவருக்கு இவ மட்டும் தான் மருமக”, என்று பொருமல் வந்தாலும் “நல்லதா போச்சு நம்மளை கூப்பிடலை”, என்று எண்ணிக் கொண்டார் சரஸ்வதி. அனைவரின் மனதிலும் அப்படி என்ன விஷயம் தாத்தா பேசப் போறாங்க என்று குழப்பம் வந்தாலும் அவரவர் வேலையைப் பார்க்க கிளம்பினார்கள்.
“யாழி என் கூட வரியா? நான் உன்னை உன் காலேஜ்ல டிராப் பன்றேன்”, என்று கேட்டான் அதிபன். யாழி அப்போது எம். பி. பி. எஸ் கடைசி வருடத்தின் கடைசி வாரத்தில் இருந்தாள்.
அவள் மறுக்கும் முன் “நான் அந்த வழியா தான் ஒரு கிளைண்டை பார்க்க போறேன் அண்ணா. நான் அவளைக் கூட்டிட்டு போறேன்”, என்றான் இனியன்.
ஒரு தோள் குளுக்களோடு அதிபன் கிளம்பிச் செல்ல “ஒரு ரெண்டு நிமிஷம் வெயிட் பண்ணு இனியா. இப்ப வந்துருவேன்”, என்றாள் யாழி.
“நான் காரை ஸ்டார்ட் பண்ணி வைக்கிறேன். நீ வா யாழி மா”, என்று விட்டு அவன் கிளம்ப “சூப்பர் டா இனியா, அப்படியே யாழியை கரெக்ட் பண்ணிடு”, என்றாள் சரஸ்வதி.
“நீயெல்லாம் ஒரு அம்மா”, என்ற எண்ணத்தை கண்ணில் தேக்கி பார்த்தவன் காலையில் அவரிடம் ஏதாவது பேசினால் தன்னுடைய தலை வலி தான் உயரும் என்று எண்ணிக் கொண்டு கிளம்பி விட்டான்.
இங்கே இவ்வளவு விஷயம் நடந்தாலும் எதையும் கண்டு கொள்ளாமல் உணவை பொறுமையாக உண்டு முடித்து எழுந்த வெண்ணிலா அன்னையிடம் மட்டும் சொல்லிக் கொண்டு வேலைக்கு கிளம்பினாள்.
அன்று மாலை நான்கு மணிக்கு அதிபன் அந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பு தன்னுடைய காரில் சாய்ந்து நின்று கொண்டிருந்தான். ஐந்து நிமிடங்கள் கடந்ததும் தன்னுடைய போனை எடுத்து யாழிக்கு அழைத்தான்.
உடனே அதை எடுத்தவள் “கோர்ட் கழட்டிட்டேன் மாமா. டு மினிட்ஸ்ல அங்க வந்துருவேன்”, என்ற படியே போனை வைத்தவள் அடுத்த ஐந்து நிமிடம் கழித்து தான் அவன் முன் வந்தாள்.
“என்ன மேடம் உங்களுக்கு ரெண்டு நிமிஷம் இப்ப தான் முடியுது போல? பல ரெண்டு நிமிஷம் போச்சு டி”, என்றான் அதிபன்.
“அதுக்கென்ன, இந்த யாழிக்காக காத்துட்டு இருக்க மாட்டியா என்ன?”, என்றாள் நக்கலாக.
“ஏன் யாழினா பெரிய இவளா?”, என்று அவனும் அதே நக்கலில் கேட்டான்.
“பின்ன இருக்காதா? யாழினாலே பெருசு தான். யார் இல்லைன்னு சொல்லுவா. அதுக்கு தானே எனக்கு இந்த பேர் வச்ச?”
“அப்பா பேர்ல இருக்குற ழி என்ற எழுத்து எனக்கு ரொம்ப பிடிக்கும் டி. அந்த எழுத்து வர மாதிரி உனக்கு பேர் வைக்கணும்னு தோணுச்சு. யாழிசை, யாழினின்னு எல்லாரும் வைப்பாங்க. அதான் யாழி ன்னு மட்டும் வச்சேன். ஆனா அப்புறம் ஒரு வீடியோ பாத்தேன். அதுல சூப்பரா ஒண்ணு சொல்லிருப்பாங்க”
“என்னவாம்?”
“யா னா உண்மையிலே பெரியன்னு தான் அர்த்தமாம்”
“புரியலை”
“இப்ப ஆணைன்னு சொன்னா நமக்கு பெருசா தெரியாது. அதே யானைன்னு சொன்னா ஒரு கம்பீரம் வரும். அது மாறி தான். யானைனா பெரிய யானைன்னு அர்த்தம். யா ன்னு தொடங்குற எல்லாமே உருவத்துல பெருசா தான் இருக்கும். யாழ், யாழி உருவத்துல பெருசா இருக்கும். யாகம், யாத்திரை எல்லாமே நீளமான அப்படிங்ககுற அர்த்தத்தை குறிக்கும். சோ நீ எனக்கு எப்பவும் ஸ்பெஷல் தான்”
“இப்படி எல்லாம் பெருமையா பேசுறதைக் கேட்டா எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா? அப்படியே புல்லரிக்குது மாமா”
“பாத்து டி, மாடு மேஞ்சிறப் போகுது. ஆனா உனக்கு எதுக்கு சந்தோஷம் வரணும்? நான் பெருமையா பேசுறது யாழி என்ற வார்த்தையை தான். உன்னை இல்ல”
“அட பாவி, நான் உனக்கு பெருசு இல்லையாக்கும்?”
“கண்டிப்பா பெருசு தான்”
“அப்படி வா வழிக்கு”
“நீயும் உருவத்துல பெருசா தான் இருக்க பாப்பு”, என்று சொல்ல அவனை தீயாக முறைத்தவள் அவன் தொடையில் நறுக்கென்று கிள்ளி வைத்தாள்.
பின் விளையாட்டைக் கை விட்டுவிட்டு “சரி பாப்பு, என்ன விஷயமா என் கிட்ட பேசணும்னு சொன்ன?”, என்று சீரியசாக கேட்டான்.
“ரெஸ்டாரெண்ட் போய் பேசலாமா?”
“அங்க போனா உன் மைண்ட் சப்பாடுல மட்டும் தானே பாப்பு போகும்?”
“மாமா எனக்கு உதவ உன்னால மட்டும் தான் முடியும்னு தான் நீ போடுற மொக்கையை எல்லாம் தாங்கிக்கிறேன். இல்லைன்னு வையேன்”
“இல்லைன்னா என்ன டி பண்ணுவ?”
“ஒண்ணும் இல்லை சாமி, ஒண்ணுமே இல்லை”, என்று இறங்கி வந்தாள்.