முன்பு போல கோபத்தில் முகம் திருப்பாமல் அவனது தாயுடன் ஓரளவுக்கு நன்றாகவே பேசத் துவங்கி இருந்தான். சத்யாவதியின் மாற்றம் அந்த அளவுக்கு இருந்தது.
எல்லாம் வெறுத்து ஒரு வித தவக்கோலத்தில் தான் அவர் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால் அதைப் பற்றி யாருமே சேகரிடம் பேசத் தயாராக இல்லை.
சேகரும் இப்போது வேலைக்கு விருப்ப ஓய்வு கொடுத்து விட்டு செழியனுடன் சேர்ந்து தோப்பு ஆரம்பித்து அதற்கான வேலையில் மூழ்கி இருந்தார்கள்.
தண்டாயுதபாணி தன்னுடைய மனைவியுடன் சேர்ந்து ஒதுங்கியே இருந்தார். அவர்கள் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க கூட தகுதி இல்லை என்று அவரே நினைத்து கொண்டார்.
ஒரு வேளை மன்னிப்பு கேட்டிருந்தாலும் தம்பி என்று செழியன் மன்னித்தாலும் தாய் தந்தையை தவறாக பேசிய அவரை அதிபன் மன்னிப்பானா என்பது சந்தேகமே.
அடுத்து வெண்ணிலாவுக்கு வளைகாப்பு வைத்தார்கள். அங்கே சென்றால் சத்யாவதியை பார்க்க வேண்டி வருமே என்றும் பெற்ற மகளின் நிகழ்வுக்கு போக வேண்டுமே என்று இரு மனதாக தவித்தார் சேகர்.
“சேகரப்பா இன்னைக்கு எனக்கு செக்கப் இருக்கு. உங்க மாப்பிள்ளை வர மாட்டேன்னு சொல்லிட்டான். நீங்க என் கூட வரீங்களா? இல்லைன்னா நான் தனியா தான் போகணும்”, என்று யாழி சொல்ல அவர் தன்னுடைய செல்ல மகளை தனியாக விடுவாரா என்ன? உடனே அவளுடன் கிளம்பி விட்டார்.
வெண்ணிலா வளைக்காப்புக்கு செழியன் மற்றும் புவனா தான் சென்றார்கள். யாழியோ அதிபனோ செல்ல வில்லை. அவர்களுக்கு செல்ல மனதும் இல்லை.
சேகர் வருவாரா என்று ஆசையாக எதிர் பார்த்தார் சத்யாவதி. ஆனால் அவர் வரவே இல்லை. வெண்ணிலாவுக்கு தந்தை வாராதது கஷ்டமாக தான் இருந்தது. ஆனால் அவர் நிலைமையும் யாருக்கும் புரியாமல் இல்லையே.
“என்னங்க இது? பொண்டாட்டி கூட தான் சண்டை சரி. அதுக்காக மகளை பாக்க கூட வராம இருந்தா எப்படி? இந்த அத்தான் எதுக்கு இப்படி பண்ணுறாங்க? நான் சத்தம் போடப் போறேன்”, என்றார் சவுந்தர்யா.
“அவர் இங்க வந்து அவருக்கு மறுபடியும் உடம்பு முடியாம போனா உனக்கு சந்தோஷமா சவுந்து?”, என்று கேட்டார் விஷ்ணு.
“ஐயோ அப்படி எல்லாம் இல்லைங்க. அத்தான் வரலைனா பரவால்ல, அதான் நாம இருக்கோமே”, என்று அந்த பேச்சை தவிர்த்து விட்டார் சவுந்தர்யா.
சேகர் சத்யாவதி வாழ்க்கை எப்போதும் இப்படி தான் இருக்கும் என்று அனைவருக்கும் புரிந்தே இருந்தது. என் கூட இல்லைன்னாலும் அவர் நல்லா இருக்கட்டும் என்ற புரிதலுக்கு வந்து விட்டார் சத்யாவதி.
வெண்ணிலவுக்கு பிரசவ வழி எடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டிருக்க அவளுக்கு பிரசவம் பார்த்தது யாழி தான். ரேவதி வேறு ஒரு ஆபரேஷனில் மாட்டி இருக்க அந்த கேஸ் யாழிக்கு தான் வந்தது.
நல்ல படியாக பிரசவம் பார்த்தாள் யாழி. தன்னுடைய மகளை அப்படியே ரத்தமும் சதையுமாக தன்னுடைய கையில் யாழி கொடுக்கும் போது தன்னுடைய கசடுகள் அனைத்தும் அழிந்து புதிதாக பிறந்தது போன்ற உணர்வை அடைந்த வெண்ணிலா “தேங்க்ஸ் யாழி. அப்புறம் என்னை மன்னிச்சிரு”, என்றாள்.
“குழந்தையை பாரு, உன்னை மாதிரியே இருக்கா. சிஸ்டர் பாத்துக்கோங்க”, என்று சொல்லி விட்டு சென்று விட்டாள் யாழி. தன்னை ஏதாவது செய்திருந்தால் மன்னித்திருப்பாள். ஆனால் அவள் அசிங்கப் படுத்தியது அதிபனை அல்லவா. அனைவரும் அவனை நம்பியதால் சரியாக போச்சு. ஒருவேளை ஒருவரும் அவனை நம்ப வில்லை என்றால் அந்த நேரத்தில் அதிபன் தவறான முடிவு எடுத்திருந்தால் யார் என்ன செய்திருக்க முடியும்?
இதோ இப்போது அவள் கேட்கும் மன்னிப்பு அதை சரி செய்யுமா என்று எண்ணியே அந்த பேச்சை தவிர்த்து விட்டு வந்து விட்டாள். அதே நேரம் பிள்ளை பெத்த பெண்ணிடம் பிரச்சனையைப் பற்றி பேசவும் அவள் விரும்ப வில்லை. சில விஷயங்களை சில உறவுகளை அப்படியே கடந்து செல்வது தான் சரியான முடிவாக இருக்கும்.
அடுத்து சில மாதங்களில் அதிபனின் காதலும் அக்கறையும் இன்னும் அதிகமாக தான் ஆனது. கூடவே அவள் வயிற்றில் இருப்பது இரட்டை என்பதால் அனைவரும் கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தார்கள். பிரசவம் நெருங்க நெருங்க ஜான் மருத்துவமனையில் இருக்கும் மருத்துவர்களுக்கு எடுக்கும் ஸ்பெஷல் வகுப்பில் இருந்து மட்டும் விடுப்பு பெற்றிருந்தாள் யாழி. அவளால் அதிக வேலைப் பழுவை செய்ய முடிய வில்லை.
சரியாக ஒன்பதாவது மாதம் யாழிக்கு வளைகாப்பு வைத்தனர். நல்ல படியாக மிகச் சிறப்பாகவே அது நடந்தது. வெளி ஆட்கள் யாருக்குமே சொல்ல வில்லை. இரு வீட்டின் பெரியவர்களும் அவளுக்கு பார்த்து பார்த்து செய்தனர். அத்தனை பேரின் அன்புக்கும் சொந்தகாரி அவ்வளவு சந்தோஷமாக அதே நேரம் டாக்டர் என்பதால் தைரியமாகவும் இருந்தாள். அவளுக்கு பதில் அதிபன் தான் பயந்து நடுங்கினான்.
எந்நேரமும் அவளுடனே தான் இருந்தான். அவளை விட்டு அங்கே இங்கே நகர வில்லை. ஒரு வழியாக பிரசவ தேதியும் வந்தது. நார்மல் டெலிவரி தான். ரேவதி தான் அவளுக்கு பிரசவம் பார்த்தார். அவர் மட்டுமே பார்க்க வேண்டும் என்பது தான் யாழியின் ஆசையும் கூட.
ஆண் ஒன்று பெண் ஒன்றாக இரண்டு குழந்தைகள் பிறந்திருக்க இரண்டு குழந்தையையும் நர்ஸ் வந்து கொடுக்க முதலில் மகளைக் கை நீட்டி வாங்கிக் கொண்டார் சேகர். அவருக்கு அப்படி ஒரு நெகிழ்வு. ஏதோ யாழியே மகளாக வந்து பிறந்திருப்பது போல இருந்தது அவருக்கு. குட்டி யாழியும் அப்போதே அவர் விரலை இறுக்கிப் பிடித்துக் கொள்ள அவருக்கு அவளை திருப்பி கொடுக்கவே மனதில்லை.
அதே போல தன்னையே உரித்து பிறந்திருக்கும் மகனை கையில் வைத்திருந்த அதிபன் “அப்பா அம்மா இங்க பாருங்களேன், உங்க பேரன் ஏன் இவ்வளவு குட்டியா இருக்கான்? கீழே போட்டுருவேனோன்னு எனக்கு பயமா இருக்கு”, என்று சொல்லிய படியே மகனுக்கு மென்மையாக முத்தமிட்டான்.
பின் இரண்டு குழந்தைகளையும் நர்ஸ் வாங்கிச் செல்ல மனைவியைக் காணச் சென்றான் அந்த காதல் கணவன். சோர்வாக இருந்தாலும் அந்த நேரத்திலும் அவன் கண்களுக்கு அவள் அழகாக தான் தெரிந்தாள். “பத்திரமா நீங்க மூணு பேரும் என் கிட்ட வந்ததுக்கு ரொம்ப தேங்க்ஸ் டி”, என்றவன் அவள் நெற்றியில் இதழ் பதித்தான்.
அனைவரின் வாழ்க்கையும் அப்படியே நகர்ந்தது. இனி குழந்தைகளின் பெயர் சூட்டு விழா, இனியனின் திருமணம், விஷ்வாவின் திருமணம் என பல விழாக்கள் அந்த வீட்டில் வரத் தான் போகிறது. அப்போது உள்ள மனநிலையில் யார் எப்படி இருப்பார்கள் என்று யாரும் சொல்ல முடியாதே. அப்படியே அனைவரின் வாழ்க்கையும் கடந்து தான் போகும்.
குழந்தைகளின் பெயர் சூட்டு விழாவில் பிள்ளைகளுக்கு இருவரின் பெயர்கள் வருமாறு ஆதித்யா மற்றும் யாழினி என்று பெயர் சூட்டி மகிழ்ந்தார்கள்.
எப்படி யாழி அந்த வீட்டை உயிர்ப்போடு வைத்திருந்தாளோ இப்போது அவள் பிள்ளைகள் அந்த வீட்டின் உயிர் ஆகினர். பெரியவர்களுக்கு இரண்டு குழந்தைகளையும் கவனிப்பதே முழு வேலையாக இருந்தது.
சேகரோ குழந்தைகளை கையை விட்டு இறக்குவதே இல்லை. அந்த அளவுக்கு குழந்தைகளும் அவரிடம் ஒட்டிக் கொண்டன. அடுத்து அதிபன் மற்றும் யாழிக்கு எப்போதும் போல வாழ்க்கை நகர்ந்தது.
அன்றைய இரவில் தங்களின் அறையில் உறக்கத்தில் அன்னையிடம் யாழினி அமுதுண்டு கொண்டிருக்க மகனை தோளில் போட்ட படி பால்கனியில் நடந்து கொண்டிருந்தான் அதிபன்.
இந்த நிறைவான குடும்பத்தில் யாழி மற்றும் அதிபன் இருவரின் மனமும் இறகு வைத்த பறவை போல தான் இருந்தது.