“ஆனாலும் இது ரொம்ப ஓர வஞ்சனை மாமா. எனக்கு குண்டு மணி சைஸ்ல மோதிரமாம். உங்க பொண்ணுக்கு மட்டும் யானை சைஸ்ல நகையா?”, என்று சிறிதும் பொறாமையின்றி சொன்னான் அதிபன்.

“என் பொண்ணு தான் இருக்குறதுலே பெரிய தங்கம், அம்பது கிலோ கூட நான் போட்டது எல்லாமே உனக்கு தான் டா மாப்பிள்ளை சொந்தம்”, என்று சொல்லி சிரித்தார் சேகர். அந்த காட்சியை கீழே இருந்து விஷ்வாவும் வெண்ணிலாவும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பார்த்து முதல் தடவையாக அவர் அப்பா இவ்வளவு அழகாக சிரிக்கிறார்.

என்ன செய்கிறோம் என்று தெரியாமலே அந்த காட்சியையும் அவர் சிரிப்பையும் ஒளிப்படம் எடுத்த விஷ்வா அதை தாய்க்கும் அனுப்பி வைத்தான். தந்தையின் சிரிப்பைக் கண்டு அன்னை வயிறு எரிய வேண்டும் என்று எண்ணி அனுப்பினானா? இல்லை அன்னையின் மனதில் இருந்த ஏக்கத்திற்கு மருந்தாக அதை அனுப்பி வைத்தானா என்று தெரிய வில்லை.

“சரி டா, ரெண்டு பேரும் ஹேப்பியா இருங்க. நான் கீழ இருக்கேன்”, என்றார் சேகர்.

“மாமா கொஞ்சம் ரெஸ்ட் எடுங்க, ரொம்ப இழுத்து போட்டுக்காதீங்க. நீங்க எங்களுக்கு முக்கியம். உங்க உடம்பு இப்ப தான் குணமாகிட்டு வருது”, என்றான் அதிபன்.

“சரி மாப்ள, வரேன் டா பாப்பா”

“அப்பா”

“என்ன டா?”

“இந்த பொண்ணும் உங்களுக்கு ஒரு கிப்ட் வச்சிருக்கா. கீழ போய் பொறுமையா உக்காந்து உங்க வாட்சப்பை பாருங்க”, என்றாள் யாழி.

“சரி மா”, என்றவர் கீழே சென்று அமர்ந்து அதை எடுத்து பார்த்தார். அவருக்கு விவாகரத்து கிடைத்து விட்டதற்கான சட்ட ஆவணம் அதில் ஒளி  நகலாக வந்திருந்தது.

நியாயப் படி பார்த்தால் அது அவருக்கு வலித்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு அதைப் பார்த்து நிம்மதியாக மூச்சு விட்டது போல இருந்தது. தன்னைக் கண்டு கலங்கி நிற்கும் மணமக்களை பார்த்தவர் தான் சந்தோஷமாக இருப்பதாக வெற்றிக் குறியை அவர்களை  நோக்கி காண்பித்தார். அவர்களும் அவரைக் கண்டு சிரித்தார்கள்.

அடுத்து மொத்த குடும்பத்துடன் மேடை ஏறினார் வேணுகோபால். குருப் போட்டோ என்றதும் ஜான் மற்றும் ஜூலியையும் மேடைக்கு வர வைத்தான் அதிபன். அனைவரையும் ஒன்றாக வைத்து போட்டோ எடுக்கப் பட்டது. அவ்வளவு சந்தோஷமாக அதில் சிரித்தார்கள் அனைவரும்.

புகைப்படம் எடுத்ததும் அங்கேயே வைத்து “இது இந்த தாத்தாவோட கிப்ட் டா அதிபா. என் சொத்துல உன் அப்பன் எதுவும் வேண்டாம்னு சொல்லிட்டான். அதனால உனக்கே உனக்குன்னு ஒரு கன்ஸ்ட்ரக்சன் கம்பெனியை ஆரம்பிச்சிருக்கேன். கம்பெனி உனக்காக தான். ஆனா அது என் பேத்தி பேர்ல இருக்கும். யாழி கன்ஸ்ட்ரக்சன். இது உனக்கே உனக்கு மட்டும், சொந்தமானது”, என்றார்.

அவன் வாங்க தயங்க “என் மேல மதிப்பும் மரியாதையும் இருந்தா நீ வாங்கித்தான் டா ஆகணும். செழியா சொல்லு டா”, என்றார் தாத்தா.

செழியன் சரி என்று சொன்னதும் அதிபன் வாங்கிக் கொண்டான். “நான் புள்ளி தான் வச்சிருக்கேன். உன் திறமையால தான் நீ இதை நிலை நிறுத்தி மேல கொண்டு வரணும். எனக்கு நம்பிக்கை இருக்கு. நீ பெருசா வருவ. வேற யாருக் கிட்டயும் போய் நீ வேலை செய்யணும்னு அவசியம் இல்லை. அதுக்கு என் பேத்தி உனக்கு துணையா இருப்பா. ஹனிமூன் போய்ட்டு வந்து லீகல் பார்மாலிட்டீஸ் எல்லாம் பாத்துக்கலாம்”, என்றார்.

“ஏன்  தாத்தா என் பேர்ல தானே கம்பெனி இருக்கு? அப்ப நானும் பார்ட்னர் தானே ?”, என்று கேட்டாள் யாழி.

“ஆமா ஆமா டாக்டர் எப்ப கல்லு உடைச்சு பில்டிங் கட்டப் போறீங்க? நீ கட்டுனா  நீயும் பார்ட்னர் தான்”, என்று சிரித்தான் இனியன்,

“நான் ஏன்டா கல்லு உடைக்கணும். அதை என் புருஷன் பாத்துக்குவான். ஆனா புராபிட்ல மட்டும் சேர் தந்தா போதும்”, என்று சொன்னதும் “வாயாடி, வாயை குறை டி”, என்று அவள் காதை திருகினார் சவுந்தர்யா.

“ஹேலோ மேடம் பாசோட லைப் பாட்னரே நீ தான் ழி”, என்றான் ஜான்.

“அது என்ன ழி?”, என்று கேட்டார் விஷ்ணு.

“மாமா அது உங்களுக்கு தெரியாதுல்ல. என் பொண்டாட்டிக்கு இவன் வச்சிருக்க பேர் ழி, அவ இவனுக்கு வச்ச பேர் ஜா. சோ இவங்க ரெண்டு பேரும் ஜாலி கேங்காம்”, என்றான் அதிபன்.

அனைவரும் சிரிக்க ஜானும் யாழியும் அசடு வழிந்தார்கள். “நம்ம நட்பு இவங்களுக்கு புரியலை ழி”, என்றான் ஜான்.

“ஆமா ஜா, அதுக்கெல்லாம் ஏழாம் அறிவு தேவை”, என்று சிரித்தாள் யாழி.

பின் பாட்டியின் நகையை யாழிக்கு கொடுத்தார் வேணுகோபாலன். “வேண்டாம் தாத்தா”, என்றாள் அவள்.

“ஏற்கனவே இலக்கியாவுக்கும் வெண்ணிலாவுக்கும் ஒரு பங்கு கொடுத்து போக தான் உனக்கு கொடுக்குறேன். அவங்களை விட கொஞ்சம் கூடவும் இருக்கும். ஏன்னா அதிபன் கூட பிறந்தது பொண்ணுங்க இல்லை. அதனால அதுவும் அவனுக்கு பதிலா உனக்கு தான். இது உனக்கு சேர வேண்டியது தான் டி. வச்சிக்கோ”, என்றதும் வாங்கிக் கொண்டாள்.

நகையைப் பார்த்த அதிபன் “மேடம் இப்ப நீங்க தான் பணக்காரியா இருக்கீங்க? இந்த மாமனை அப்ப அப்ப கவனிச்சிக்கோங்க”, என்று சொல்ல அவளும் சிரித்தாள்.

அடுத்து மணமக்கள் உணவு அருந்த செல்ல கல்யாண மண்டபம் கொஞ்சம் வெறிச்சோடியது. வீட்டு ஆட்களும் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே அங்கு இருந்தனர்.

அப்போது “அம்மா, வெண்ணிலா நம்ம கிளம்பலாமா?”, என்று கேட்டான் வருண்.

“எனக்கு அப்பா கிட்ட பேசணும்,. பேசிட்டு வரேன்”, என்றாள் வெண்ணிலா.

“உன்னை பேச வேண்டாம்னு சொல்ல மாட்டேன். அவரை ஏதும் காயப் படுத்திறாத”, என்று ரேவதி எச்சரிக்கை செய்ய சரி என்று தலையசைத்து விட்டு தந்தையை நோக்கிச் சென்றாள். அக்கா வருவதைக் கண்டு விஷ்வாவும் தந்தையை நெருங்கி சென்றான்.

தன்னுடைய பிள்ளைகள் இருவரும் தன் முன் நிற்பதைக் கண்டு திகைத்தாலும் “சாப்பிட்டீங்களா ரெண்டு பேரும்?”, என்று அன்பாக கேட்டார் சேகர்.

அவர் அன்பில் நெகிழ்ந்து “எங்களை உங்களுக்கு பிடிக்குமாப்பா?”, என்று கேட்டாள் வெண்ணிலா.

“எங்களை வெறுத்துட மாட்டீங்க தானே?”, என்று கேட்டான் விஷ்வா.  மூவரின் கண்களுமே அந்த நிமிடம் கலங்கிப் போனது.

“நீங்க ரெண்டு பேரும் என் பிள்ளைங்க டா, என்னோட ரத்தம். உங்களை பிடிக்காம இருக்குமா? உங்களை எப்பவுமே எனக்கு பிடிக்கும். ஆனா அதை நீங்க ரெண்டு பேருமே சொல்ல விட்டது இல்லை. எதுக்கும் கலங்க கூடாது. தைரியமா இருக்கணும். எங்க விஷயத்தை எல்லாம் மனசுல வச்சிக்காதீங்க. ஒரு அப்பாவா நான் எப்பவும் உங்களுக்கு உருதுணையா இருப்பேன்”, என்று சொன்னவரை இருவரும் கட்டிக் கொண்டார்கள். அவரும் அவர்களை அணைத்துக் கொண்டார்.

“மாமா அங்க பாரேன்”, என்று அதிபனிடம் அந்த காட்சியைக் காண்பித்தாள்  யாழி.

இனியனிடம் ஏதோ பேசிக கொண்டிருந்த அதிபன் “டேய் இனியா அதை வீடியோ எடுத்து விஷ்வாவுக்கு அனுப்பு டா”, என்றான்.

இனியன் அண்ணன் சொன்னதை அப்படியே செய்தான். தந்தையிடம் சொல்லி விட்டு வெண்ணிலா கிளம்ப விஷ்வாவும் தந்தையை அமர வைத்து விட்டு போனை பார்த்தான். அதில் இனியன் அனுப்பிய வீடியோ வந்திருக்க “நிச்சயம் இது பொக்கிஷம் தான் மாமா”, என்று ரிப்ளை செய்து விட்டு அந்த வீடியோவையும் அன்னைக்கு அனுப்பி விட்டு திருமண வேலைகள் பார்க்கச் சென்று விட்டான்.

இங்கே வீட்டில் அமர்ந்திருந்த சத்யாவதி மகன் அனுப்பிய புகைப்படங்களை நிறைவாக பார்த்தவர் கடைசியாக இருந்த இரண்டு வீடியோக்களையும் பார்த்து விட்டு “நிச்சயம் என்னோட சொர்க்கம் என்னை விட்டுட்டு போய்ட்டு”, என்று எண்ணி கண்ணீர் வடித்தார்.

அப்போது கோர்ட்டில் இருந்து டைவர்ஸ் காப்பியை லாயர் அனுப்பி இருக்க அவர் அழுகை இன்னும் அதிகமானது. சில உறவுகள் கடைசி வரை ஓட்டவே செய்யாது. அதற்கு நம்முடைய பிழையே கூட காரணமாக இருக்கலாம். அதனால் நிரந்தரமில்லாத இவ்வுலகில் கவனமாக இருப்பதே சிறந்தது.

தொடரும்……