மாப்பிள்ளை வீட்டு பக்கம் தண்டாயுதபாணி மற்றும் சத்யாவதிக்கு அழைப்பு இல்லாமல் சென்றாலும் பெண் வீட்டுப் பக்கம் சவுந்தர்யா அவர்களை அழைக்க தான் செய்தார். விஷ்ணுவிற்கு விருப்பம் இல்லை தான். ஆனாலும் மனைவிக்காக அமைதியாக உடன் நின்றார். அழைக்க வில்லை என்றால் சவுந்தர்யாவிற்கு சந்தேகம் வரும் என்பதால் அவர் உடன் சென்றார்.
“இல்லை சவுந்து நான் வரலை. எனக்கு இப்ப இருக்குற மனநிலைல யாரையும் எதிர் கொள்ள முடியாது. என்னை பாத்து உன் அத்தானுக்கு ஏதாவது ஆச்சுன்னா, வேண்டாம் கொஞ்ச நாள் ஆறப் போடலாம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டார் சத்யாவதி.
தண்டாயுதபாணியும் “தப்பா எடுத்துக்காத சவுந்து, நான் அப்படி நடந்துகிட்ட அப்புறம் அங்க வரது சரியா இருக்காது. அதுவும் அண்ணனே அழைக்காதப்ப எனக்கு அங்க வர மனசு இல்லை. இந்தா இது யாழிக்கு இந்த தாய் மாமனோட பரிசு. கொடுத்துரு”, என்று சொல்லி யாழிக்காக வாங்கிய நகையை அப்போதே கொடுத்து விட்டார்.
அதைக் கூட இனியனிடம் கொடுத்து தான் கொடுக்க சொன்னார். அவனோ “அது நீங்க வாங்கினது நீங்களே கொடுத்துடுங்க”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான்.
அண்ணனும் அக்காவும் தன்னுடைய ஒரே மகளின் திருமணத்திற்கு வர மாட்டோம் என்று சொன்னது சவுந்தர்யாவுக்கு மனது கஷ்டமாக இருந்தது. தன்னுடைய குடும்பம் பிளந்து நிற்பதை கண்டு அவர் வருந்த “காலம் எல்லாத்தையும் சரி பண்ணும் மா. நீ வா”, என்று மனைவியை தேற்றினார் விஷ்ணு.
ஒரு வழியாக திருமண நாளும் வந்தது. அம்மா அப்பாவை அழைக்காத இடத்துக்கு போகனுமா வேண்டாமா என்று குழப்பத்தில் தான் இருந்தான் இனியன். ஆனால் அவர்கள் அழைக்க வில்லையே என்ற கோபம் இல்லை என்றாலும் ஒரு உருத்தல் இருந்தது.
அவனையும் விஸ்வாவையும் வேணுகோபாலன், செழியன், புவனா, அதிபன், யாழி, சவுந்தர்யா, விஷ்ணு அனைவரும் தனித் தனியே போனிலும் நேரிலும் அழைத்திருந்தார்கள்.
அதே குழப்பம் வெண்ணிலாவுக்கும் இருந்தது. ஆனால் தன்னைக் கிளம்பச் சொன்ன கணவனையும் மாமியாரையும் மறுக்க அவளால் முடியாதே. கூடவே அவளுக்கு தந்தையை பார்க்க வேண்டும் போல இருந்தது. அதனால் கிளம்பி விட்டாள்.
இலக்கியாவும் முந்தைய நாளே கணவன் மற்றும் குழந்தையுடன் வந்து விட்டாள். ஜானும் திருமணத்திற்காகவே வந்திருந்தான். கூடவே அவனது காதலியையும் அழைத்து வந்திருக்க “தேங்க்ஸ் யாழி, நீங்க சொல்லலைனா இவருக்கு பல்ப் எறிஞ்சிருக்காது. என்னை கண்டே பிடிச்சிருக்க மாட்டார்”, என்றாள் டாக்டர் ஜூலி.
“நான் எதுவும் செய்யலை ஜூலி. உங்க உண்மையான காதல் தான் இதுல ஜெயிச்சிருக்கு. என் பிரண்ட் ரொம்ப நல்ல பையன். அவனை நீங்க கண் கலங்காம வச்சிக்கணும்”, என்றாள் யாழி.
“ஆமா நல்ல பையன் தான். ஆனா கொஞ்சம் பேசியே கொல்லுவான். காதுல இருந்து ரத்தம் வந்தாலும் பரவால்ல துடைச்சிட்டு என் தம்பியை கண் கலங்காம வச்சிக்கோங்க”, என்றான் அதிபன்.
அவன் சொன்னதைக் கேட்டு அனைவரும் வெடித்து சிரித்தார்கள். “டேய் ஜான் இப்ப நீயும் உன் ஆளும் சேந்து உண்மையிலே ஜாலி தான் டா. பாத்தியா அந்த லி கூட சரியா தான் ஜோடி சேந்திருக்கு”, என்றான் அதிபன்.
“ஆமா பாஸ், நானே இப்ப தான் அதை யோசிக்கிறேன். என்னோட லி என் ஜூலி தான். எங்க லைப்ல இனி ஜாலி தான்”, என்று சிரித்தான் ஜான்.
ஒரு வழியாக திருமண நேரமும் வந்தது. மணமக்கள் இருவரும் பூரண அலங்காரங்களுடன் மேடையில் அமர்ந்திருந்தார்கள்.
முகூர்த்த நேரத்தில் வேணுகோபாலன் தாலி எடுத்துக் கொடுக்க அனைவரின் உண்மையான ஆசீர்வாதங்களுடன் தன்னுடைய மனம் கவர்ந்தவளின் கழுத்தில் தாலியைக் கட்டி அவளை தனக்கு மட்டுமே சொந்தமாக்கி கொண்டான் அதிபன்.
அவளும் தான் மாமனின் கையால் தாலி வாங்கிக் கொண்டு நிறைவாக சிரித்தாள். அத்தனை பேரும் அவர்களை வாழ்த்தினார்கள். தன்னுடைய மகள் கல்யாணத்தில் உடல் சோர்வை மறந்து சந்தோஷமாக உலாவிக் கொண்டிருந்தார் சேகர். பெற்றால் தான் மகள் என்று சொல்ல வேண்டுமா என்ன?
திருமணச் சடங்குகள் முடிந்து ரிசப்ஷனில் மணமக்கள் இருவரும் மேடையில் பூரிப்புடன் நின்றிருந்தார்கள். ஒவ்வொருவராக மேடையேறி வாழத்தையும் பரிசையும் கொடுத்து மணமக்களை வாழ்த்திச் சென்றார்கள்.
கணவன் மற்றும் மாமியாருடன் மேடையேறிய வெண்ணிலா “வாழ்த்துக்கள் யாழி, வாழ்த்துக்கள் மாமா”, என்று மட்டும் சொல்லி கொண்டு ஒதுங்கிக் கொண்டாள்.
ரேவதி தான் இருவருக்கும் விலை உயர்ந்த கடிகாரத்தை பரிசளித்தார். யாழி கையில் கட்டும் போது “ஆபரேஷன் பண்ணும் போது யார் வயித்துலயவாது வச்சு தச்சிறாத டி”, என்றார் ரேவதி.
“நீங்க அப்படி செஞ்சிருக்கீங்களா மா? ஏன் கேக்குறேன்னா? என்னோட குரு எவ்வழியோ நானும் அவ்வழியே”, என்றாள் யாழி.
“உன்னை பேச்சுல ஜெயிக்க முடியுமா? பாவம் என் மகன். இந்த ராட்சசி கிட்ட கவனமா இருப்பா”, என்றார் அதிபனிடம்.
“பின்ன உங்க ஸ்டூடண்ட் பத்தி நான் உங்களுக்கு சொல்ல வேண்டியது இல்லை. உங்களுக்கு தெரியாதா?”, என்று சொல்லி அவன் சிரிக்க அவனை முறைத்த படியே யாழியும் சிரித்தாள்.
“இப்படியே எலியும் பூனையுமா காதலிச்சிட்டு சந்தோஷமா இருங்க”, என்று வாழ்த்தி விட்டுச் சென்றார் ரேவதி. அவரை ஒரு ஜோடி கண்கள் வெறித்துப் பார்த்தது.
“யோவ் வேலைக்கு வந்துட்டு அங்க என்ன பராக்கு பாத்துட்டு இருக்க? ஒரு பந்தி முடிஞ்சிட்டு. எச்சிலை எல்லாம் யார் எடுப்பா. போய் வேலையைப் பாரு”, என்ற முதலாளியின் குரலைக் கேட்டு எச்சிலை எடுக்கச் சென்றார் ரேவதியின் முன்னால் கணவர்.
மகன் மருமகள் உடன் சந்தோஷமாக மேடையில் இருந்து இறங்கி வரும் மனைவியை கண்டவரின் கண்கள் கலங்கியது. எப்படி பட்ட வாழ்வை தன்னுடைய தரம் கெட்ட புத்தியினால் இழந்திருக்கிறோம் என்று புரிந்து முதல் இலையை எடுக்க இப்போது அவர் மனதுக்குள் எந்த அருவருப்பும் இல்லை.
சில தவறுகள் காலம் கடந்தும் ஏன் சாகும் வரை கூட மன்னிக்கப் பட போவதில்லை.
அடுத்து கணவன் மற்றும் குழந்தையுடன் மேடைக்கு வந்தாள் இலக்கியா. “ஏய் குட்டி யாழி”, என்றபடி யாழிசையை தூக்கிக் கொண்டான் அதிபன்.
குழந்தையும் அவனைக் கண்டு சிரிக்க “நீ பெருசா இருந்திருந்தா உன் அத்தையை விட்டுட்டு உன்னையே கல்யாணம் பண்ணியிருப்பேன் டி லட்டு”, என்று அவன் குழந்தையின் கன்னத்தில் முத்தமிட இலக்கியாவும் தனசேகரும் சிரித்தார்கள். யாழியோ அவனை முறைத்தாள்.
“பாப்பாவை வச்சிட்டு கடைக்கு போக முடியலை யாழி, அண்ணா நீயும் மன்னிச்சிரு. பொருளா வங்கலை. பணமா தான் இருக்கு. உங்க ஆசைப்படி வாங்கிக்கோங்க”, என்று இலக்கியா சொன்னதும் தனசேகர் பணக்கட்டை ஒரு கவருக்குள் வைத்து இருவரிடம் கொடுத்தான்.
“இதை கொடுத்து தான் உன் அன்பை நீ நிரூபிக்கணுமா டா? நீ எப்பவுமே என்னோட செல்ல தங்கச்சி தான்”, என்றான் அதிபன்.
“அப்படின்னா தங்கச்சி உரிமையா செய்யுற சீரையும் இந்த அண்ணன் ஏத்துக்க தானே செய்யணும்?”, என்று கேட்டான் தனசேகர்.