அத்தியாயம் 16  

தென்றல் வந்து தீண்டிச் 

செல்லும் நொடிகளில் 

தானாக வருகிறது உன் நினைவுகள்!!!

தாய் தந்தை சென்றதும் தனது அறைக்கு வந்த யாழி உடனே அதிபனை தான் அழைத்தாள். “டேய் மாமா”

“சொல்லு பாப்பு”

“நான் இன்னைக்கு சந்தோஷமா இருக்கேன் டா. ரொம்ப ரொம்ப”

“பாரு டா, என்னை பாக்காம அழுது வடிவன்னு தான் நான் நினைச்சேன்”

“ஹா ஹா அந்த ஃபீலிங்க் இருக்குது தான். ஆனா இது வேற?”

“என் செல்லம்மாவுக்கு எதுக்கு இவ்வளவு சந்தோஷம்னு இந்த மாமன் தெரிஞ்சிக்கலாமா?”, என்று அவன் கேட்டதும் நடந்த அத்தனையையும் தெளிவாக சொன்னாள். 

அனைத்தையும் கேட்டவன் அமைதியாக இருக்க “என்ன மாமா? எதுவும் சொல்லலை?”, என்று கேட்டாள். 

“உண்மைலே மாமா அந்த ஆளை கேள்வி கேட்டது எனக்கு அவ்வளவு சந்தோஷமா இருக்கு டா. எனக்கு எல்லாம் அவரை ரெண்டு வைக்கணும்னு அளவுக்கு ஆத்திரம் வருது. அவர் என்னை அடிச்சதை விட அம்மா அப்பாவை பேசினதை தான் மறக்க முடியலை. என் அம்மா குழந்தை மாதிரி டி. அவங்களை போய் எப்படி அவர் அழ வைக்கலாம்”

“விடு மாமா, எல்லாத்துக்கும் காலம் பதில் சொல்லும்”

“ஆனாலும் என் செல்ல மாமனார் சூப்பர் வேலை பாத்துருக்கார் டி. அதுக்கே அவருக்கு முத்தம் கொடுக்கணும்”

“எதுக்காம்?”

“ஆமா கல்யாணதுக்கு அப்புறம் எப்படி அந்த வீட்டுக்கு மறுவீட்டுக்கு போறதுன்னு நினைச்சேன். இப்ப அப்படி இல்லைல்ல?”

“ஹா ஹா மறுவீட்டுக்கு மட்டும் இல்லை. நம்ம முதலிரவு கூட எங்க வீட்ல தானாம். உங்க அத்தை என்னை கிண்டல் அடிச்சீட்டு போறாங்க?”

“ஹேய் சூப்பர் டி, ஜமாய்ச்சிறலாம்”

“அடேய் மாமா ஒண்ணும் கிடையாது. நான் ரொம்ப சின்ன பொண்ணாக்கும். அதனால கொஞ்ச வருஷம் லவ் பண்ணிட்டு அப்புறம் தான் லவ் மேக்கிங் எல்லாம்”

“எனக்கு நீ அறுபது வயசுலயும் குழந்தை தான் டி. அது வரைக்கும் ஒண்ணும் இல்லாம இருந்துருவோமா?”

“நீ இருப்ப மாமா. கண்டிப்பா இருப்ப”

“ஏய், என்ன டி இப்படி சொல்ற?”

“அதான் அன்னைக்கு பாத்தேனே, ஒரு பொண்ணே இறங்கி வந்து முத்தம் கொடுக்ககுறா, நீ கம்முன்னு நிக்குற. உனக்கு எல்லாம் முதலிரவு வேஸ்ட் தான்.  போடா கிழடு”

“அடியேய் யாருடி கிழடு?”

“நீ தான்”

“கையில சிக்குவல்ல. அப்ப பாத்துக்குறேன்”

“சரி மாமா, நான் அப்புறம் பேசுறேன். ரேவதி மேம் பாக்க போறேன். அவங்க போஸ்டிங் பத்தி பேசணும் வான்னு சொல்லி இருந்தாங்க”

“சரிடாமா பாத்து போ. போஸ்டிங் எங்க வேணும்னாலும் கேட்டுப் பாரு. அடியேன் உன் பின்னாடியே வருவேன். சென்னைல கிடைச்சா நானும் வேலை பாப்பேன். இல்லைன்னா ஹவுஸ் ஹஸ்பன்ட் வேலை தான்”

“அப்படி என்ன வேலை மாமா அது?”

“உன்னை லவ் பண்ணுற வேலை தான்”, என்று சிரிக்க அவளும் சிரித்து விட்டு போனை வைத்தாள். 

யாழி கிளம்பி கீழே வந்ததும் “நான் கூட வரவா டி”, என்று கேட்டான் இனியன். அங்கே இருந்த சரஸ்வதியை பார்த்தவள் “வேண்டாம் டா இனியா. அப்புறம் உன்னை சேர்ந்தவங்க உன்னை நான் ஏதோ வேலைக்காரனா யூஸ் பண்ணுற மாதிரி பேசுவாங்க. என் வேலையை நான் பாத்துக்குறேன். பாய்”, என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். 

“இந்த நண்டு என்னை ஜாடை பேசிட்டு போறதை பாத்தியா இனியா? நீ அவளை கூட்டிட்டு போனா நான் எதுவும் சொல்லிருக்கேனா டா இது வரைக்கும்?”, என்று கேட்டார் சரஸ்வதி.

“உங்க நடவடிக்கை அவளை அப்படி பேச வைக்குது மா. நீங்க எல்லாம் எப்ப எப்படி மாறுவீங்கன்னு தெரியாதுல்ல? எல்லாரும் எச்சரிக்கையா இருக்குறது ஏற்கனவே வாங்கின சூட்டை மறுபடியும் வாங்க கூடாதுன்னு தான்”

“நீயும் குத்தி காட்டாத டா. கஷ்டமா இருக்கு. அப்புறம் இந்த வருஷம் தீபாவளி வர போகுது. இலக்கியாவைக் கூப்பிடனும் டா”

“அவ வர மாட்டா மா”

“என்ன டா சொல்ற?”

“நான் ஏற்கனவே பாப்பாவ பாக்கணும் வா ன்னு சொல்லி பாத்துட்டேன். ஆனா அவ வர மாட்டேனு சொல்லிட்டா”

“எதுக்கு டா?”

“மாப்பிள்ளை விட மாட்டேன்னு சொல்லிட்டாறாம்?”

“அதான் எதுக்கு?”

“இங்க குடும்பத்தை பிரிச்சு வேடிக்கை பாக்குறவங்க நிறைய பேர் இருக்காங்களாம். அவ வந்தா அவளையும் கெடுத்துருவோமாம். அப்படின்னு மாப்பிள்ளை சொல்லிட்டாறாம். அவ வேணும்னா நீ வந்து உன் மருமகளை பாரு அண்ணான்னு சொல்லிட்டா”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான். 

கடைசியில் மகளும் தங்களிடம் இருந்து பிரிந்து சென்று விட்டாளா என்று தளர்ந்து போய் அமர்ந்தார் சரஸ்வதி. அப்போது அங்கே வந்த சத்யாவதி “அண்ணி, எனக்கு வெண்ணிலாவை பாக்கணும் போல இருக்கு. என் கூட கொஞ்சம் வரீங்களா?”, என்று கேட்டார். 

“இங்க பாரு சத்யா, நானே இனி என் மகளையும் பேத்தியையும் பாக்க முடியுமோ முடியாதோன்னு வயித்தெரிச்சல்ல இருக்கேன்.  உன் மகளைப் பாக்கணும்னா நீ போ. என்னை கூப்பிடாதே”, என்று முகத்தில் அடித்தது போல சொல்லி விட்டு சென்று விட்டார். 

வேறு வழி இல்லாமல் தான் மட்டும் ஆட்டோ பிடித்து வெண்ணிலாவைக் காணச் சென்றார் சத்யாவதி. வெண்ணிலாவுக்கு அன்று விடுமுறை என்பதால் வீட்டில் இருக்க “அம்மா வா மா, என்ன சொல்லாம வந்துருக்க? அதும் நீ மட்டும் தனியா வந்துருக்க? மா என்ன இது கோலம்?”, என்று கேட்ட படி அவரை அழைத்து அமர வைத்தாள். 

ஏனென்றால் சத்யாவதி வெளியே சென்றால் அதிக மேக்கப் இல்லை என்றாலும் தலை நிறைய மல்லிகைப்பூ கழுத்தில் சில பல நகைகள் விலை உயர்ந்த சேலையில் தான் செல்வாள். அதுவும் மகள் வீட்டுக்கு என்றால் பெரிய அளவில் தான் இருக்கும். அதுவும் கழுத்தில் ஒரு தாலி செயின் மட்டும் அணிந்து காட்டன் புடவையில் இருக்கும் ரேவதியை கண்டு கூட “என்ன டி உன் மாமியார் எப்பவும் சிம்பிளா இருக்குறாங்க? மாசம் பல லட்சம் சம்பளம் வாங்குறவங்க எப்படி பந்தாவா இல்லாம இருக்காங்க?”, என்று கேட்டிருக்கிறார்.

அப்படிபட்ட தாய் தான் இன்று சாதாரணமாக வீட்டில் அணியும் பூனம் சேலையும் சாதாரண கொண்டையும் கழுத்தில் தாலி செயின் மட்டுமே அணிந்து வந்திருந்தார். 

“ஒண்ணும் இல்லை நிலா குட்டி, எனக்கு உன்னைப் பாக்கணும் போல இருந்துச்சு. அதான் உடனே வந்துட்டேன்”, என்று சொல்லும் போதே அவர் கண்கள் காலங்கியது. 

“அம்மா அழுறியா?”, என்று அதிர்வாக கேட்டாள் மகள். ஏனென்றால் இது வரை சத்யாவதி அழுது அவள் பார்த்ததே இல்லை. அதனாலேயே அவளுக்கு தந்தையை பிடிக்கும். அவரிடம் பாசமாக ஒட்டியது இல்லை என்றாலும் எங்க அப்பா எங்க அம்மாவை நல்லா பாத்துக்குறார் என்பது தான் அவளது எண்ணம். 

“என்ன ஆச்சு மா? எதுக்கு இப்படி இருக்க? அழ வேற செய்யுற. யாரும் எதுவும் சொன்னாங்களா மா?”

“ஒண்ணும் இல்லை டா”

“ஏதோ நடந்திருக்கு. என்ன ஆச்சுன்னு சொல்லு மா”

“வயித்துல பிள்ளையை வச்சிருக்க. நான் இப்ப வந்துருக்கவே கூடாது”

“பயம் காட்டாத மா. என் வயித்துல இருக்குறது தி கிரேட் ரேவதி மேடத்தோட வாரிசு. அத்தைக்கு ரெண்டு மடங்கா வரும். டாக்டரம்மா என்னை இன்னும் பச்சை புல்லை மட்டும் தான் சாப்பிட வைக்கலை. அதனால் நீ பயப்படாம சொல்லு. என்ன ஆச்சு? உனக்கும் சொன்னா மனபாரம் குறையும். சொல்லு மா. வீட்ல ஏதாவது பிரச்சனையா?”

“உன் கிட்டயாவது சொல்லி அழனும் போல இருக்கு டி. ஆனா எல்லாற மாதிரி நீயும் என்னை வெறுத்துடுவியான்னு எனக்கு பயமா இருக்கு?”

“நான் உன் பொண்ணு மா. அதுவும் இப்ப நானும் கொஞ்ச நாள்ல அம்மா ஆகப் போறேன். நீ கொலையே செஞ்சாலும் நான் உன் பக்கம் தான் நிப்பேன். சொல்லு என்ன ஆச்சு?”

“கிட்டத்தட்ட நான் செஞ்சதும் கொலைக்கு சமம் தான் நிலா”

“என்ன மா சொல்ற?”

“ஆமா டி, நான் இது வரை உங்க அப்பாவை நிம்மதியா இருக்க விட்டதே இல்லை. இப்ப ரெண்டு பேருக்கும் விவாகரத்து நடக்க போகுது”

“அம்மா”, என்று அதிர்வாக கேட்க நடந்த அனைத்தையும் மகளிடம் சொல்லி விட்டார். 

“நீயா மா இப்படி? நாங்க அப்பா அப்பான்னு உருகலைனாலும் அப்படி ஒரு நல்ல மனுசனை பாக்கவே முடியாது மா. அவரை போய் எப்படி மா?”

“எனக்கும் அவரை பிடிக்கும் டி. ஆனா என் புத்தி, உன் சித்தி காரி மேல இருந்த பொறாமை என்னை இப்படி ஆக்கி வச்சிருக்கு”

“ஏமா, என் புருஷன் கூட தான் என் மேல கோபப்பட்டு யாழியை கல்யாணம் பண்ணிக்க என் முன்னாடியே சம்மதம் சொன்னார். அதையே நான் பேசிக்கிட்டு இருந்தா என் வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்?”

“தப்பு தான் டி. இப்ப இத்தனை பேர் செருப்பால அடிச்ச மாதிரி பேசும் போது தான் தெரியுது. ஆனா அதுக்கு அவர் என்னை விட்டு ஒரேடியா பிரிஞ்சிடுவாரா?”, என்று கதறி அழுதார். 

“சரி விடு ஆழாத, எனக்கு உன்னைப் இப்படி பாக்க கஷ்டமா இருக்கு. கொஞ்ச நாள் அமைதியா இரு மா. எல்லாம் மாறும். அப்பாவும் உன்னை மன்னிப்பாங்க”, என்று ஆறுதல் சொன்னாள். இருந்தாலும் தந்தையை, அவரது சகிப்பு தன்மையை எண்ணும் போது வெண்ணிலாவுக்கு புல்லரித்தது. 

எப்படியோ எதையோ பேசி சமாதானபடுத்தி சாப்பிட வைத்து அன்னையை அனுப்பி வைத்த வெண்ணிலா குடும்பத்தை எண்ணி கவலையில் ஆழ்ந்தாள். அவளால் கவலைப் பட மட்டுமே முடியும் என்பது தான் உண்மை. 

ரேவதியை காணச் சென்ற யாழியை பிடித்துக் கொண்ட ரேவதி வெகு நேரம் அவளிடம் பேசிக் கொண்டிருந்து விட்டு “நீ ரெஸ்ட் எடுத்தது போதும் உங்க சேவை எங்களுக்கு தேவை மேடம். அதனால நாளைக்கே இங்க வந்து டியூட்டில ஜாயின் பண்ணிரு”, என்றார்.