கோவிலுக்குச் சென்ற சவுந்தர்யா மற்றும் அவரின் கணவர் விஷ்ணு இருவரும் சேகருக்காக வேண்டிக் கொண்டு மருத்துவமனைக்குச் சென்றனர். அங்கே இருந்த யாழி மற்றும் அதிபனைக் கண்டு இருவரும் முகம் மலர்ந்தனர்.
அங்கே ஒரு பாசப் பரிமாற்றம் நடந்து கொண்டிருக்க சேகர் இருக்கும் அறைக்குள் அனைவரும் சென்றனர். “உங்களுக்கு ஒண்ணும் ஆகாது சேகர் அண்ணா. நாங்க இருக்கோம்”, என்று ஆறுதலாக பேசினார் விஷ்ணு.
“ஆமா அத்தான். நீங்க சீக்கிரம் பழைய படி மாறணும்னு நான் சாமியை வேண்டிக்கிட்டு வந்தேன்”, என்று சொன்ன சவுந்தர்யா அவர் நெற்றியில் விபூதியை வைத்து விட சேகர் கண்கள் கலங்கியது. அதைக் கண்டு விஷ்ணுவைத் தவிர மற்ற அனைவரின் கண்களும் கலங்கியது.
அவரை டிஸ்சார்ஜ் செய்யலாம் என்று சொன்னதும் அனைவரும் காஞ்சிபுரத்தை நோக்கி பயணம் செய்தார்கள். “நம்ம வீட்டுக்கு போகலையாப்பா? அண்ணா வீட்டுக்கா போறோம்?”, என்று புரியாமல் கேட்டார் சவுந்தர்யா.
“ஆமா மா சேகர் மாப்பிள்ளைக்கு கொஞ்சம் மாற்றம் தேவை. அதான் உன் அண்ணன் வீட்ல இருக்க போறார்”
“சரிப்பா, நாம அடிக்கடி போய்ப் பாத்துக்கலாம்”, என்றார் சவுந்தர்யா.
அவர்கள் அனைவரும் வருவதைச் சொன்னதால் அனைவருக்கும் உணவு வகைகளை செய்து தயாராக வைத்திருந்தார் புவனா. அதுவும் சேகருக்கு என தனியாக சமையல் சத்தாக செய்து வைத்திருந்தார். யாழியும் அங்கேயே குளித்து உடை மாற்றி விட்டு அனைவருடன் சேர்ந்து உண்டாள்.
உணவு முடிந்த பின்னர் “சரிப்பா நாம போகலாமா?”, என்று கேட்டார் சவுந்தர்யா.
“இல்லை சவுந்து மா, நீ மாப்பிள்ளையையும் யாழியையும் அழைச்சிட்டு போ. நான் இனி இங்க தான் இருக்க போறேன்”, என்றார் வேணு கோபாலன்.
“என்னப்பா சொல்றீங்க? நீங்களுமா?”
“ஆமா மா, மாப்பிள்ளைக்கு துணைக்கு இங்கயே இருக்கேன்”, என்று சொல்ல குழப்பம் வந்தாலும் வேறு எதுவும் சவுந்தர்யாவால் பேச முடிய வில்லை.
“சரிப்பா, உங்க விருப்பம். நாங்க கிளம்பட்டுமா?”
“கொஞ்சம் இரு மா. உன் கிட்டயும் சின்ன மாப்பிள்ளை கிட்டயும் நான் ஒரு முக்கியமான விஷயம் பேசணும். செழியா புவனா நீங்களும் வாங்க. சேகர் மாப்பிள்ளை நீங்களும் இங்க வாங்க”, என்றார்.
“என்னப்பா விஷயம்?”, என்று செழியன் கேட்க “யாழி படிப்பை முடிச்சிட்டா. யாழிக்கும் அதிபனுக்கும் கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு நினைக்கிறேன்”, என்று அவர் சொல்ல அனைவரின் முகமும் மலர்ந்து போனது.
“டேய் மாமா என்ன டா இது? நாம இன்னும் லவ்வே பண்ண ஆரம்பிக்கலை? அதுக்குள்ள கல்யாணமா?”, என்று அதிபனின் காதில் முணுமுணுத்தாள் யாழி.
“அதெல்லாம் ஆரம்பிச்சாச்சு. அதான் முத்தம் எல்லாம் கொடுத்தியே? இனி டேரக்ட்டா கல்யாணம் பண்ணிட்டு லவ் பண்ணலாம். அப்ப தான் பயம் இல்லாம இருக்கும்”, என்று கிசுகிசுத்தான் அதிபன்.
“எதுக்கு பயம்?”
“அப்புறம் சொல்றேன் . நீ அங்க கவனி”, என்றான்.
“இப்பவே சொல்லு மாமா”
“வெறும் முத்தம் மட்டும் கொடுத்துட்டு நிறுத்த முடியலை டி போதுமா?”, என்று சொல்ல முகம் சிவந்தவள் வாயை மூடிக் கொண்டு பெரியவர்கள் பேச்சைக் கவனித்தாள். அவனும் சிறு சிரிப்புடன் அமைதியாகி விட்டான்.
“எங்களுக்கு சந்தோஷம் தான் பா. நம்ம யாழி எங்க வீட்டுக்கு மருமகளா வர நாங்க கொடுத்து வச்சிருக்கணும்”, என்றார் செழியன்.
“எங்களுக்கும் சம்மதம் தாங்க மாமா. அதிபன் மாதிரி ஒரு மாப்பிள்ளையை நாங்க எங்க தேடினாலும் கிடைக்காது”, என்றார் விஷ்ணு.
“எல்லாரும் சம்மதம் சொல்லிட்டாங்க. பொண்ணு மாப்பிள்ளை இன்னும் ஒண்ணும் சொல்லலையே?”
“எங்களுக்கும் சம்மதம் தான் தாத்தா”, என்று அதிபன் சொல்ல “எனக்கும் டபுள் சந்தோஷம் தான்”, என்றாள் யாழி.
அனைவரும் அவர்களை வியப்பாக தான் பார்த்தார்கள். அதிபன் வெண்ணிலா திருமணம் பற்றி பேசும் போது கூட இவ்வளவு பூரிப்பாக இல்லையே என்ற எண்ணம் தான் அனைவருக்கும் வந்தது. அவர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள் என்று தான் வேணுகோபாலன் நினைத்தார்.
பின் அவர்களே “யாழியை சிறு வயதில் இருந்து அவனுக்கு பிடிக்குமே. அதான் இந்த சந்தோஷம்”, என்று எண்ணிக் கொண்டார்கள்.
“அப்படின்னா கல்யாணத்துக்கு அப்புறம் யாழி குட்டியும் என் கூட இங்க தான் இருப்பாளா?”, என்று சந்தோஷமாக கேட்டார் சேகர். அவர் முகத்தில் இருந்த உண்மையான சந்தோஷத்தை அனைவரும் நெகிழ்ந்து போய் பார்த்தார்கள்.
கிளம்பும் போது சேகர் அருகில் சென்ற விஷ்வா அவரை இறுக்கி அனைத்துக் கொண்டு “ஐ லவ் யு பா. நான் தினமும் வந்து உங்களைப் பாக்குறேன்”, என்றான்.
“ஐ லவ் யு டூ கண்ணா, தினமும் என்னைப் பாக்க இங்க வரைக்கும் வந்தா உன் உடம்பு என்னத்துக்கு ஆகும்? வாரத்துக்கு ஒரு நாளைக்கு வா. தினமும் ஃபோன் மட்டும் பண்ணு”, என்று புரிதலுடன் சொன்ன தந்தையை மீண்டும் ஒரு முறை இறுக்கி அணைத்தவன் லேசான கண்ணீருடன் விடை பெற்றான்.
அவர்கள் சென்றதும் தன்னுடைய அறையை தாத்தாவுக்கு கொடுத்த அதிபன் மற்றொரு அறையை சேகருக்கு கொடுத்து விட்டு மாடி அறையை அவனுக்கு என்று எடுத்துக் கொண்டான்.
இங்கே அனைவரும் வீட்டுக்கு வரும் போது வீடே மயான அமைதியில் இருந்தது. சத்யாவதி எந்த இடத்தில் அப்போது அமர்ந்திருந்தாளோ அதே இடத்தில் சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தாள்.
“ஐயோ அக்கா., என்ன ஆச்சு உனக்கு? எதுக்கு இப்படி தரைல உக்காந்துருக்க?”, என்று பதறி போய் விசாரித்தார் சவுந்தர்யா.
அதைக் கேட்டு சத்யாவதி கண்ணீர் இன்னும் அதிகமானது. தங்கையை நிமிர்ந்து பார்க்கவே அவமானமாக இருந்தது.
“அத்தானுக்கு ஒண்ணும் இல்லைக்கா. இப்ப நல்லா இருக்காங்க. அண்ணன் அண்ணி வீட்ல தான் விட்டுட்டு வந்துருக்கோம். அண்ணி அவரை நல்லா பாத்துக்குவாங்க. நீ வருத்தப்படாத”, என்றார்.
“அவர் நல்லா தான் இருப்பார் சவுந்து. நல்லா இருக்கட்டும்”, என்ற படி கண்ணீர் வடிக்க “அப்புறம் எதுக்கு அழுவுற?”, என்று கேட்டார்.
“உன் அத்தான் கூட சண்டை டி. எனக்கும் அவருக்கும் முன்னாடி இருந்தே ஒத்துப் போகலை. அதனால் அவர் கிட்ட டைவர்ஸ் கேட்டுருக்கேன். அவரும் சைன் போட்டுட்டார்”, என்று சொல்ல விஷ்ணு மற்றும் சவுந்தர்யா இருவரும் அதிர்ந்து பார்த்தார்கள்.
“உங்களுக்கு என்ன பைத்தியமா? ஒருத்தொருக்கொருத்தர் ஆறுதல் சொல்ல வேண்டிய வயசுல டைவர்ஸ்னு பேசிக்கிட்டு. அப்படி எல்லாம் நான் நடக்க விட மாட்டேன்”
“அது நடந்தா தான் எல்லாருக்கும் நிம்மதி சவுந்து. இந்த விஷயத்துல நீ தலையிடாத”, என்று சொல்லி விட்டு அறைக்கு செல்லும் அவரை அனைவரும் பார்த்த படி இருந்தார்கள்.
தண்டாயுதபாணியைக் கண்ட சவுந்தர்யா “என்னங்கண்ணா இது? நீங்களாவது சொல்லக் கூடாதா?”, என்று கேட்டார்.
“நாங்க சொல்லிப் பாத்தோம், அப்பாவும் பேசினாங்க. ஆனா அவ கேக்கலை. விடு இது தான் நடக்கணும்னா நடந்து தான் ஆகும்”, என்று சொல்லி நழுவிக் கொண்டார் தண்டாயுதபாணி.
“விஷ்வா என்ன டா இது உன் அம்மாவும் அப்பாவும் பிரிய கூடாது டா”
“எனக்கும் அந்த ஆசை இருக்கு சித்தி. ஆனா அப்பா உடம்பு இருக்குற கண்டிஷன்க்கு அவர் போக்குல போறது தான் நல்லது. எனக்கு என் அப்பா உயிரோட வேணும்”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அனைவரின் பொய்யை சவுந்தர்யா நம்பினாலும் விஷ்ணு நம்ப வில்லை.