இனியன் தான் உடனே மருத்துவமனைக்கு கொண்டு சென்றான். சிகிச்சைக்கு பிறகு கண் விழித்தாலும் யாரிடமும் பேச வில்லை. அனைவரிடமும் பேசினால் சத்யாவதியிடமும் பேச வேண்டி வரும். அவரைக் கவனித்துக் கொள்ள அவள் தான் வருவாள் என்பதால் அனைவரையுமே தவிர்த்து விட்டார்.
இதை எல்லாம் எண்ணிக் கலங்கிய படியே யாழியைப் பார்த்தார் சேகர். அப்போது உள்ளே வந்தார் செழியன். அவர் பின்னே வேணுகோபால் வர சத்யாவதியும் வந்து விடுவாளோ என்று பதறிப்போனார் சேகர். அதைக் கண்ட யாழி அவர் கைகளை இறுக்கி பற்றிய படி “அவங்க இங்க வர மாட்டாங்க பா”, என்றாள்.
“மாப்பிள்ளை, இதுல ஒரு கையெழுத்து போடுங்க”, என்ற செழியன் ஒரு பத்திரத்தை சேகரிடம் நீட்டினார்.
“என்ன மச்சான் இது?”, என்று தட்டு தடுமாறிக் கேட்டார்.
“இன்னைல இருந்து உங்களுக்கு விடுதலை மாப்பிள்ளை. அதுக்கான ஆரம்பம் தான் இது. தைரியமா அதுல கையெழுத்து போடுங்க”, என்றார் வேணு கோபாலன்.
“சைன் போடுங்க மாமா. இது டைவர்ஸ் பேப்பர்ஸ் தான். உங்களுக்குள்ள என்ன நடந்துச்சுன்னு எல்லாம் நாங்க கேக்க மாட்டோம். ஆனா இனி உங்களுக்கும் உங்க மனைவிக்கும் எந்த சம்பந்தமும் இருக்காது. அதுக்கான டைவர்ஸ் பேப்பர்ஸ் தான் இது. இனி நீங்க சுதந்திர பறவை. இனி நீங்க எங்க வீட்ல தான் இருக்கப் போறீங்க. அவங்களைப் பாக்க கூட மாட்டீங்க. உங்க பிள்ளைகள் உங்களைப் பாக்க நம்ம வீட்டுக்கு தான் வருவாங்க’, என்றான் அதிபன்.
திகைப்பாகவும் இதெல்லாம் நடக்குமா என்று கண்களில் சிறு ஒளியுடனும் பார்த்தார் சேகர். அப்போதும் “இந்த விஷயம் வெளிய தெரிஞ்சா சவுந்து..”, என்று ஆரம்பித்தார்.
“சவுந்துக்கு எந்த விஷயமும் தெரியாது. இனிமேலும் தெரிய வராது மாப்பிள்ளை. எங்களுக்கு நீங்க உயிரோட வேணும். உங்க கழுத்தை சுத்தி இருந்த விச செடியை நாங்களே பிச்சு எரிச்சிறுவோம். இனி நிம்மதியா இருங்க. நீங்க கோர்ட்க்கு கூட வர வேண்டாம். எல்லாம் நாங்க பாத்துக்குறோம்”, என்று வேணு கோபாலன் சொன்னதும் சந்தோஷமாக கையெழுத்தை போட்டார். அவர் கை நடுங்கியது தான். ஆனால் அவர் விரல் பேனாவை இறுக்கிப் பிடித்திருந்தது.
“இனி நீங்க சந்தோஷமா இருக்கணும் மாப்ள”, என்று சொன்ன செழியன் அப்பா மற்றும் தன்னுடைய மகனையும் அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். யாழியும் சேகரும் மிக மெதுவாக கதை பேச ஆரம்பிக்க அவள் பேசிய பேச்சில் அவர் முகம் மலர்ந்தே இருந்தது.
வேணு கோபாலன் தளர்ந்த மனதுடன் வீட்டுக்கு வந்தார். அப்போது “மாப்பிள்ளைக்கு இப்ப எப்படி இருக்கு?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.
“அவ்வளவு அக்கறை இருக்குறவன் கூட இருந்து பாக்க வேண்டியது தானே? வந்துட்டான் கேள்வி கேக்குறதுக்கு. எல்லாம் நீ ஆரம்பிச்சு வச்சது தான் டா. நிம்மதியா இருந்த குடும்பம் இப்படி சிதறிப் போய் கிடக்கு”, என்று கத்தி விட்டார்.
அவர் சத்தம் போட்டதில் அனைவரும் அங்கே குழுமி விட்டார்கள். “நான் என்ன செஞ்சேன்? என் கிட்ட எதுக்கு பா எறிஞ்சு விழுறீங்க? நான் என்ன அவரை பாக்க மாட்டேன்னா சொன்னேன்? கட்டுன பொண்டாட்டியை கூட அவர் பாக்க விடியலை. இதுல என் கிட்ட எகுறீங்க? இதுல என் தப்பு என்ன இருக்கு?”, என்று தண்டாயுதபாணியும் கோபமாக கேட்டார்.
“இப்ப உன் மேல எந்த தப்பும் இல்லை தான். ஆனா அன்னைக்கு எதுக்கு டா என் பேரன் மேல கை வச்ச? அவனை அடிக்க உனக்கு என்ன உரிமை இருக்கு?”
“அது அவன் தப்பு செஞ்சான்னு..”
“சரி அதுக்கப்புறமா அவன் தப்பு செய்யலைன்னு தெரிஞ்சது தானே? எதுக்கு மன்னிப்பு கேக்கலை?”
“அது..”
“எதுவும் பேசாத பேராசை பிடிச்சவனே. உன்னால என் குடும்பமே சிதைஞ்சு சின்னா பின்னமா போச்சு. நான் இப்ப சில முக்கியமான முடிவுகளை எல்லாம் எடுக்க போறேன்”, என்றார்.
அந்த அறையில் இருந்த தண்டாயுதபாணி, சரஸ்வதி, சத்யாவதி, இனியன், விஷ்வா அனைவரையும் ஒரு பார்வை பார்த்த வேணு கோபாலன் சரஸ்வதியிடம் “சவுந்தர்யாவும் அவ வீட்டுக்காரரும் எங்க?”, என்று கேட்டார்.
“சவுந்து மனசு சரி இல்லைன்னு கோவிலுக்கு போயிருக்கா. தம்பியும் கூட தான் போயிருக்கு மாமா”
“நல்லது. உங்க கிட்ட தான் நான் முக்கியமா பேசணும். அதுவும் நான் பேச போற விஷயம் எந்த காலத்துலயும் சின்னவளுக்கும் அவ வீட்டுக்காரருக்கும் தெரியவே கூடாது”, என்று ஆரம்பித்தார் பெரியவர்.
“அப்படி என்ன பெரிய விஷயம் தாத்தா. சித்தியும் சித்தப்பாவும் இந்த வீட்ல ஒருத்தங்க தானே?”, என்று கேட்டான் விஷ்வா.
“இந்த வீட்ல ஒருத்தங்க தான் டா. ஆனா நமக்கு எல்லாம் நிம்மதியே இருக்க கூடாதுன்னு விதிச்சிருக்கு. ஆனா அவங்க ரெண்டு பேரும் இதைக் கேட்டா துடிச்சி போயிருவாங்க”, என்றவர் “சத்யா இங்க வா”, என்றார்.
“என்னப்பா?”
“இதுல ஒரு கையெழுத்து போடு”
“என்னதுப்பா இது?”
“என்னன்னு தெரியலையா? இது டைவர்ஸ் பேப்பர்ஸ்”, என்று சொல்ல அனைவரும் அதிர்ந்து தான் போனார்கள். சத்யாவதி கண்களோ கலங்கிப் போனது.
“அப்பா உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு?”, என்று கேட்டார் தண்டாயுதபாணி.
“எனக்கு பைத்தியம் பிடிக்கலை. இங்க இருக்காளே இவளுக்கு தான் பேய் பிடிச்சிருக்கு. அதுவும் இருபத்தி ஆறு வருஷமா. சாதாரண பேய் இல்லை சந்தேக பேய், இனியும் நான் பொறுமையா இருந்தா இந்த வீட்ல சாவு தான் விழும்”
“மாமா என்ன பேசுறீங்க?”, என்று அதட்டினாள் சரஸ்வதி.
“தாத்தா இது தப்பு. அம்மா பாருங்க அழுறாங்க”, என்றான் விஷ்வா.
“உன் அம்மா அழுவுறது உனக்கு தெரியுது. உன் அப்பன் அங்க சாக கிடக்குறான் டா. அதுவும் இவளால. இருபத்தி ஆறு வருஷமா நமக்கு தெரியாம அழுதுகிட்டு இருந்துருக்கான் டா அந்த மனுஷன். இப்ப அதையும் தாங்க முடியாம தான் நெஞ்ச பிடிச்சிக்கிட்டு விழுந்துட்டான்”, என்று சொன்னவரின் கண்கள் கண்ணீரைச் சிந்தியது.
சத்யாவதிக்கு பயமாக இருந்தது. அனைவருக்கும் இந்த உண்மை தெரிந்தால் என்ன ஆகுமோ என்ற பயத்தில் “அப்பா”, என்று அழைத்தாள்.
“ச்சி என்னை அப்படி கூப்பிடாதே. அவளும் உன் கூட ஒரே வயித்துல பிறந்தவ தானே? எவ்வளவு கேவலமா இருந்துருக்க நீ? உண்மையிலே நீ எனக்கு பிறந்தவதானான்னு இருக்கு”
“அப்பா இப்படி பேசதீங்க பா. கஷ்டமா இருக்கு”
“உனக்கு எதுக்கு மா கஷ்டம்? இப்படி எல்லாம் ஒரு விஷச்செடி எனக்கு மகளா இருக்குறது எனக்கு தான் கஷ்டம். இதைப் பாக்க கூடாதுன்னு தான் என் பொண்டாட்டி உத்தமி போய் சேந்துட்டா போல?”
“தாத்தா என்ன தாத்தா, ஏன் இப்படி எல்லாம் பேசுறீங்க? அம்மா என்ன தான் செஞ்சாங்க? அப்பாக்கு எதுக்கு நெஞ்சு வலி வந்துச்சு?”, என்று குழப்பமாக கேட்டான் விஷ்வா.
“இந்த தறுதலை உன் அப்பனை உன் சித்தி கூட சேத்து வச்சி பேசிட்டு இருக்கா டா. அதுவும் அவங்க கல்யாண முடிஞ்ச நாள்ல இருந்து, அதுவும் யாழியை இவ உங்க அப்பாவுக்கு..”, என்று அவர் சொல்லி முடிப்பதற்குள் விஷயம் புரிந்து “தாத்தா”, என்று கத்தி இருந்தான் விஷ்வா.