அத்தியாயம் 14 

பறந்து பறந்து செல்கிறது 

பட்டாம்பூச்சி, தேனின் 

மீதான காதலால்!!!

ஜானும் யாழியும் பேசிக் கொண்டிருந்த அதே நேரம் வெளியே நின்றிருந்த அதிபன் தன்னுடைய தந்தைக்கு தான் அழைத்தான்.

“சொல்லு அதிபா, இனியன் சொன்னானா?”, என்று கேட்டார் செழியன்.

“ஆமா பா, நைட் கிளம்புறோம்”

“சரி பத்திரமா வாங்க. நான் போய் பாத்தேன். எதுவும் பேசலை டா. சிஸ்டர் மட்டும் தான் அவரை பாத்துக்குறாங்க. வேற யார் என்ன கொடுத்தாலும் சாப்பிடலை. யார்க் கிட்டயும் மனுஷன் பேசவே இல்லை”

“அப்பா”

“சொல்லு அதிபா”

“யாழி ஒரு விஷயம் சொன்னாப்பா”, என்று ஆரம்பித்தவன் அனைத்தையும் சொல்ல அதைக் கேட்டு அதிர்ந்து தான் போனார்.

“இவ்வளவு நடந்திருக்கா? பாவம் டா அந்த மனுஷன்”

“ஆமா பா, எல்லாத்தையும் மனசுக்குள்ள போட்டு புதைச்சு புதைச்சு தான் அவருக்கு நெஞ்சு வலி வந்திருக்கு”

“இனி அப்படி விடக் கூடாது டா”

“கண்டிப்பா பா.  நாம அவரை நம்ம வீட் டுக்கு கூட்டிட்டு வந்துறலாம்”

“சரி டா. ஆனா சவுந்துக்கு மட்டும் இந்த விஷயம் ஒரு நாளும் தெரியவே கூடாது. தெரிஞ்சா பிள்ளை துடிச்சிருவா டா”

“சரிப்பா”

“சரி நீ யாழியை பத்திரமா கூட்டிட்டு வா. இங்க நான் பாத்துக்குறேன்”, என்று சொல்லி அழைப்பை துண்டித்த செழியனுக்கு மனதில் பாரம் ஏறி அமர்ந்து கொண்டது.

“நல்ல மனிதர்களுக்கு மட்டும் தான் நிம்மதியான வாழ்க்கையை கடவுள் கண்ணில் கூட காட்ட மாட்டாரோ?, என்று எண்ணிக் கொண்டவர் தந்தையைக் காணச் சென்றார்.

தந்தையிடம் பேசி விட்டு உள்ள வந்த அதிபனை இறுக்கி அணைத்த ஜான் அவனுக்கு வாழ்த்துக்கள் சொன்னான்.

“உனக்கு வருத்தம் இல்லையா ஜான்?”, என்று உண்மையிலே வேதனையாக தான் கேட்டான்.

“நமக்கு பிடிச்சவங்க எங்க இருந்தாலும் சந்தோஷமா இருந்தாலே நமக்கு போதும் பாஸ். எனக்கு யாழி ஹேப்பினஸ் முக்கியம்”

“எனக்கு ஒரு தங்கச்சி இருந்தா உனக்கே கட்டிக் கொடுத்துருவேன் டா”

“வேண்டாம் பாஸ் ழி எனக்கு பொண்ணு பாத்து வச்சிட்டா”

“அடப்பாவி அஞ்சு நிமிஷம் தானே டா ஃபோன் பேச போனேன்? அதுக்குள்ள எப்படி?”

“ஒருத்தி என்னை உருகி உருகி லவ் பண்ணுறாளாம் பாஸ். இதை விட எனக்கு வேற என்ன வேணும்?”, என்று சிரித்தவனை உண்மையான அன்புடன் அனைத்துக் கொண்ட அதிபன் “நீ உண்மைலே நல்லா இருப்ப டா. அந்த பொண்ணு லக்கி தான். கண்டு பிடிச்சு ஜோடியா போட்டோ அனுப்பு”, என்றான்.

இரவு இருவரையும் பிளைட் ஏற்றி விடும் வரை அவர்களுடன் இருந்த ஜான் அதற்கு பின்னர் தான் தன்னுடைய காதல் கிளியைத் தேடிச் சென்றான். இரவு நேர பணியில் அவன் கண்ணில் எந்த கிளியும் சிக்க வில்லை. காலைல தேடிக்கலாம் என்று எண்ணி விட்டு வீட்டுக்குச் சென்றான் ஜான்.

சென்னை வந்து இறங்கியதும் “பாப்பு நேரா ஆஸ்பத்திரி போகலாமா? இல்லை வீட்டுக்கு போய் ரெஃப்ரெஷ் ஆகுறியா?”, என்று கேட்டான்.

“எனக்கு சேகரப்பாவை தான் முதல்ல பாக்கணும். அங்கயே போகலாம் மாமா”

“சரி வா”, என்று ஒரு கார் பிடித்து அவளை மருத்துவமனைக்கு தான் அழைத்துச் சென்றான்.

அவரைக் காண உள்ளே சென்றவள் “சேகரப்பா”, என்று அழைத்தாள். அவள் குரலில் கண் விழித்தவரின் கண்களில் சிறு ஒளி எழுந்தது. அதிபனைக் கண்டு கண்களால் வரவேற்றவர் யாழி புறம் திரும்பி சோர்வாக “எப்படி பாப்பா இருக்க?”, என்றார்.

“நான் தான் உங்களைக் கேக்கணும். நான் உங்களை தனியா விட்டுருக்க கூடாதுப்பா”

“அதான் வந்துட்டியே? இனி என்னை நல்லா பாத்துக்கோ. இனி நீ தான் எனக்கு வைத்தியம் பாக்கணும்”

“அது என் கடமையும் பா. நான் உங்களை நல்லா பாத்துக்குவேன். பிளீஸ் நீங்க இனி கவலைப்படக் கூடாது. மனசை நிம்மதியா வச்சிக்கணும். எனக்காக”

“அது நடக்குற காரியமா”, என்று எண்ணியவருக்கு கடைசியாக சத்யாவதியிடம் பேசியது நினைவில் வந்தது.

வெண்ணிலா திருமணம் ஆகி சென்ற பிறகு சத்யாவதியிடம் சேகர் அதிகம் பேசுவதில்லை. ஏதாவது சொல்ல வேண்டும் என்றால் விஷ்வாவிடம் சொல்லி சொல்லச் சொல்வார் அவ்வளவே. இதற்கிடையில் வெண்ணிலா மாசமாக இருக்கும் தகவல் வந்தது.

மகிழ்ந்து போன சத்யாவதி “என்னங்க வாங்க மகளை பாத்துட்டு வருவோம்”, என்றார்.

“சரி”, என்று அவரும் கிளம்ப தான் செய்தார்.

“போற வழில பூ, பழம், புடவை அப்புறம் ஒரு செயின் வாங்கிட்டு போகலாமாங்க?”

“செயினை தவிர மற்றது எல்லாம் வாங்கலாம் சத்யா? வளைகாப்பு வைக்கும் போது என்ன தேவையோ பெருசா வாங்கிக்கலாம். அடுத்து குழந்தைக்கும் வாங்கலாம். இப்ப சம்பந்தம் இல்லாம எதுக்கு செயின்?”, என்று எதார்த்தமாக தான் அவருக்கு தோன்றியதைச் சொன்னார்.

சொன்ன பிறகு தான் சத்யாவதி பார்த்த பார்வையில் உள்ளுக்குள் நடுங்கியவர் உன் விருப்பம் என்று சொல்ல வருவதற்குள் “அன்னைக்கு என்னமோ அந்த யாழிக்கு செயின் வாங்கிட்டு வந்தீங்க? அவளுக்கு மட்டும் வாங்க உடனே ஆசை வந்துரும். எனக்கு என்னமோ இப்பவும் அவ உங்க மக தானோன்னு தோணுது”, என்று சொன்னதும் விரக்தியாக சிரித்தவருக்கு நெஞ்சுக்குள் சுருக்கென்று இருந்தது.

“செயின் வாங்கிட்டே போகலாம். எனக்கு கொஞ்சம் டயர்டா இருக்கு. விஷ்வாவை கூட்டிட்டு போய் வாங்கிட்டு வா. அப்புறமா நம்ம வெண்ணிலா வீட்டுக்கு போகலாம்”, என்றவர் அவர் பதில் சொல்லும் முன் வெளியேறி விட்டார்.

நேராக மொட்டை மாடிக்குச் சென்றவருக்கு வந்திருப்பது நெஞ்சுவலி என்று புரிந்து போனது. முகமெல்லாம் வியர்த்து விட்டது. நெஞ்சை நீவி விட்டு அங்கிருந்த டேங்கில் இருந்த தண்ணீரை குடித்து முகத்தில் அடித்து சமாளித்துக் கொண்டார். அவருக்கு உண்மையிலே இந்த வலி சந்தோஷத்தை தான் கொடுத்தது.

ஆனால் அவருக்கு சிறிது நேரத்தில் சரியாகி விட்டது. மாலை சொன்னது போல மகளைக் காண மனைவியுடன் கிளம்பி விட்டார். வெண்ணிலாவின் முகப் பொழிவு அவள் சந்தோஷமாக இருப்பதைக் காட்டியது. இப்போதும் அவளுக்கு ரேவதியைக் கண்டால் கொஞ்சம் பயம் தான். ஆனால் சந்தோஷமாகவே இருந்தாள். வருண் அவளை நன்றாக வைத்திருந்தான்.

அனைவரும் பேசிக் கொண்டிருக்க சிறிது நேரம் கழித்து “சரிங்க நாங்க கிளம்புறோம்”, என்று சொன்னார் சத்யாவதி.

“இருங்க டீ குடிச்சீட்டு போங்க”, என்று சொல்லி உள்ளே சென்றார் ரேவதி. வருணுக்கும் ஒரு ஃபோன் வரவே அவனும் சென்று விட்டான்.

இவர்கள் மூவரும் மட்டும் அமர்ந்திருக்க “உங்க அத்தை பரவால்ல டி, தப்பான புருஷனா இருந்தாலும் அடிச்சு விரட்டிட்டு கெத்தா சந்தோஷமா வாழுறாங்க.  சில பேர் திருந்தாம இன்னும் கள்ளக் காதலோட தான் வாழ்ந்துக்கிட்டு இருக்காங்க”, என்று சாதாரணமாக சொல்வதைப் போல சேகரை குத்திக் காட்டி பேசினாள் சத்யாவதி.

“ஆமா மா அத்தை கிரேட் தான்”, என்று சொன்ன வெண்ணிலா வேறு எதுவும் யோசிக்க வில்லை.

ஆனால் சேகர் அந்த இடத்தில் மொத்தமாக மறித்து தான் போனார். இதற்கு மேல் அவருக்கு என்ன இருக்கிறது? பெற்ற பெண்ணிடம் கூட தன்னை தரம் தாழ்த்தி பேச வேண்டுமா என்றவருக்கு நெஞ்சு வலி இருந்து கொண்டே இருந்தது. அதைப் பற்றிச் சொல்ல கூட சத்யாவதியிடம் பேச பிடிக்காமல் வலியோடே வீட்டுக்கு வந்தவர் அப்படியே மயங்கி சரிந்தார்.