அவள் முகச்சிவப்பு இன்னும் அவனை போதை ஏற்ற “அப்படியே உன்னை இறுக்கி அனைச்சு முத்தம் கொடுக்கணும் போல இருக்கு டி”, என்று அவன் சொல்லி முடித்தது தான் தாமதம் அவனை இறுக அணைத்தவள் அவன் இதழ்களை தன் இதழ்களால் இறுக்கமாக மூடி இருந்தாள்.

அழுத்தமான முத்தம் எல்லாம் இல்லை. லேசான இதழ் ஒற்றல் தான். ஆனால் அதற்கே உடல் சிலிர்க்க உச்சி முடியில் பிடித்து இழுப்பது போல அந்த இடத்தில் இருந்து அசைய கூட முடியாமல் நின்றிருந்தான் அதிபன்.

ஒரு மாதிரி கிறுகிறுத்துப் போய் அவன் நிற்க அவனை விட்டு விலகி நின்றவள் அவனை காதலுடன் பார்க்க அவளை மொத்தமாக தீண்டி சுவைக்கச் சொல்லி அவன் உணர்வுகள் எழுந்தது. ஆனால் அதை அவளிடம் வெளிப்படையாக சொல்ல எல்லாம் அவன் தயாராக இல்லை.

ஒரு முத்தமே தன்னை இப்படி அலைகளிக்கிறது என்றால்  அடுத்த நிகழ்வுகள் பற்றி யோசிக்கவே முடிய வில்லை. அவளையும் சலனப் படுத்த அவன் தயாராக இல்லை. அதே நேரம் அவளை அப்படியே விடவும் முடியாமல் அவள் இடையை பற்றி தன்னை நோக்கி இழுத்தவன் அவள் முகம் நோக்கி குனிய சரியாக அந்த நேரம் அவனது மொபைல் அடித்தது.

சட்டென்று விலகியவன் அவளைக் கண்டு அசட்டு சிரிப்பை உதிர்த்து விட்டு போனை எடுத்தான். “இனியன் தான் கூப்பிடுறான்”, என்று சொல்லி போனை ஸ்பீக்கரில் போட்டு விட்டு “சொல்லு இனியா”, என்றான்.

“அண்ணா நீங்களும் யாழியும் ஊருக்கு வறீங்களா?”, என்று தவிப்புடன் கேட்டான்.

“என்ன ஆச்சு டா?”

“இங்க பெரிய மாமாவுக்கு”

“சேகரப்பாவுக்கு என்ன டா ஆச்சு?”, என்று பதட்டமாக கேட்டாள் யாழி.

“மாமாக்கு ஹார்ட் அட்டாக் யாழி. அதுவும் இது ரெண்டாவது தடவையாம். மாமா யார் கிட்டயுமே சொல்லலை. இன்னைக்கு அப்படியே சரிஞ்சு விழுந்துட்டாங்க, ஆஸ்பத்திரில அட்மிட் பண்ணிருக்கோம். இப்ப ஓகே தான். ஆனா யார் கிட்டயும் ஒரு வார்த்தை கூட பேசலை. எனக்கு உங்களை வரச் சொல்லணும்னு தோணுச்சு”, என்றான் இனியன்.

“நாங்க உடனே வரப் பாக்குறோம் டா. நீ அப்ப அப்ப கால் பண்ணி மாமாக்கு எப்படி இருக்குன்னு சொல்லிக்கிட்டே இரு இனியா”, என்று போனை வைத்தவன் யாழியைப் பார்த்தான்.

அவளோ ஏதோ பிரம்மை பிடித்தது போல நின்றிருந்தாள். “யாழி மாமாவுக்கு ஒண்ணும் ஆகாது டா”, என்றான் சமாதானமாக.

“அப்பாவை அந்த ராட்சசி தான் இந்த நிலைமைக்கு கொண்டு வந்துட்டா. சேகரப்பா பாவம். ஐயோ நான் இப்ப என்ன பண்ணுவேன். எவ்வளவு நல்ல மனுஷன் தெரியுமா அவர்?”, என்று புலம்பிய படியே இருக்க அதை கேட்டு அதிர்ந்து நின்றான் அதிபன்.

“ஏய் என்ன டி சொல்ற? யாரு டி அந்த ராட்சசி. என்ன ஆச்சு சொல்லு யாழி”, என்று அவன் கேட்டதும் சுயநினைவுக்கு வந்தவள் “ஒண்ணும் இல்லை மாமா. நீ டிக்கட் போடு”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து செல்லப் பார்த்தாள்.

அவள் தோளைப்  பிடித்து நிறுத்தியவன் “இப்ப சொல்ல போறியா இல்லையா யாழி? சேகர் மாமாவுக்கு என்ன பிரச்சனை? நீ என் கிட்ட இருந்து என்ன மறைக்கிற? சொல்லு. இப்ப நீ சொல்லியே ஆகணும். அதும் உன் மாமா பையனா கேக்கலை. உன்னை கல்யாணம் பண்ணிக்கப் போற உன் புருசங்குற உரிமைல கேக்குறேன்”, என்று சொன்னதும் “அப்பாக்கு அப்படி ஆக காரணம் அவர் பொண்டாட்டி தான்”, என்றாள் கண்ணீரோடு.

“சத்யா அத்தையா?”

“ம்ம்”

“தெளிவா சொல்லு மா”

“அப்பாவை அந்த பொம்பளை எங்க அம்மா கூட வச்சு சந்தேகப் படுது”, என்று அழுத படியே சொல்ல “ஏய் என்ன டி சொல்ற?”, என்று அதிர்ந்து கேட்டான்.

“ஆமா அப்பா பொண்ணு பாக்க வந்த அன்னைக்கு எங்க அம்மா தான் பொண்ணுன்னு முதல்ல நினைச்சிட்டாங்க போல? அதை விளையாட்டா சொன்னதுக்கு தான் அவங்க அப்பாவை பேசி பேசியே கொன்னுட்டு இருக்காங்க. இப்ப அவரை ஒரேடியா..”

“உனக்கு இது எப்ப தெரியும் யாழி?”

“டென்த் படிக்கும் போதே”

“யாழி”

“இதை எப்படி வெளிய சொல்ல முடியும்? யார் கிட்ட சொல்ல முடியும்? சொன்னா இந்த குடும்பம் இத்தனை வருஷம் ஒத்துமையா இருந்த மாதிரி ஒரே வீட்ல இருந்துருக்குமா? என்னால சேகர் அப்பா கூட இருந்திருக்க முடியுமா? ஆனா நான் தப்பு பண்ணிட்டேன். எல்லார பத்தியும் யோசிச்ச நான் அந்த நல்ல மனுஷன் கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருக்குறதை மறந்துட்டேன் மாமா. எனக்கு கில்ட்டியா இருக்கு. எனக்கு என் சேகர் அப்பா வேணும். அவர் இனியாவது சந்தோஷமா இருக்கணும். இப்ப நாம என்ன பண்ண?”

“ஒரே விஷயம் தான் பண்ண முடியும் யாழி”

“எப்படி மாமா?”

“என் கிட்ட சொல்லிட்ட தானே? இனி கவலைய விடு. இனி மாமா நல்லா இருப்பாங்க. நான் பாத்துக்குறேன் டி. நீ முதல்ல ஊருக்கு கிளம்புறதுக்கு எல்லாம் எடுத்து வை. நான் டிக்கட் போட்டுட்டு பிரகாஷ் கிட்ட பேசிட்டு வரேன். நீயும் ஜான் கிட்ட சொல்லிடு”

“சரி மாமா”

“யாழி”

“என்ன மாமா?”

“ஜான் கிட்ட தெளிவா சொல்லிட்டா நல்லது. அவன் ரொம்ப நல்லவன். அப்புறம் உன் விருப்பம்”, என்று சொல்லி விட்டுச் சென்றதும் ஜானை அழைத்தாள்.

“ழி பேபி, சொல்லு மா”

“நான் இப்ப ஊருக்கு கிளம்புறேன் ஜா, அதான் உன் கிட்ட சொல்லலாம்னு”

“எப்ப வருவ பேபி”

“நீ ஏர்போர்ட் வரியா? நான் உன் கிட்ட கொஞ்சம் பேசணும். நான்  டிக்கட் போட்டுட்டு டைம் அனுப்புறேன்”

“சரி”, என்று சொல்லி போனை வைத்தவன் உடனே வண்டியை எடுத்துக் கொண்டு கிளம்பி விட்டான்.

இரவு தான் பிளைட் என்பதால் இருவரும் அமைதியாக அமர்ந்திருக்க அப்போது அங்கே ஜான் வந்தான். “நீங்க ரெண்டு பேரும் பேசுங்க. நான் ஒரு ஃபோன் பண்ணிட்டு வரேன்”, என்று சொல்லி விட்டு வெளியே சென்றான் அதிபன்.

“என்ன ழி திடீர்னு ஊருக்கு?”

“சேகரப்பாவுக்கு ஹார்ட் அட்டாக்காம் டா”

“ஐயோ இப்ப ஓகே வா?”

“ஓகே தான் போல? ஆனா இன்னும் டிப்ரசன்ல தான் இருக்காங்க”

“சரி ஆகிரும் ழி”

“ம்ம், ஆகிறனும்”

“சரி ஊருக்கு போய்ட்டு வருவியா?”

“தெரியலை டா. அங்கயே செட்டில் ஆக தான் வாய்ப்பு அதிகம். அப்புறம் உன் கிட்ட ஒரு முக்கியமான விஷயம் பேசணும் ஜான்”

“சொல்லு மா”

“சாரி ஜான், நான் உன்னை ஹர்ட் பண்ணணும்னு நினைக்கலை. நான் வந்து..”

“நீ என்னை விரும்பலை. அதானே?”

“ஜான்”, என்றவள் அவனை வியப்பாக பார்த்தாள்.

“எனக்கு தெரியும் ழி. அப்புறம் இதுல தப்பா நினைக்க ஒண்ணுமே இல்லை. எனக்கு உன்னை பிடிச்சது. அதான் சொன்னேன். உனக்கு பிடிக்கலை. அவ்வளவு தான். எனக்கு பிடிச்சா உனக்கும் பிடிக்கணும்னு அவசியம் இல்லையே. ஆனா நாம கடைசி வரை பிரண்ட்ஸ் தான்”, என்றான் புன்னகையோடு.

“நிச்சயமா டா. நம்ம கடைசி வரை ஜாலியான பிரண்ட்ஸ் தான். உன்னை என்னால மிஸ் பண்ண முடியாது டா. அதனால தான் உன் கிட்ட ஓவரா அட்வான்டேஜ் எடுத்துகிட்டேன் போல டா? என்னை மன்னிப்பியா?”

“நீ ஒரு தப்பும் செய்யலை ழி பேபி. உனக்கு காதல் வரலைன்னு தானே சொன்ன? இதுல என்ன இருக்கு. அப்புறம் என்னாலயும் உன்னை மிஸ் பண்ண முடியாது. எனக்கும் தான் கடைசி வரை உன் நட்பு வேணும். பேசாம உன் சொந்தக்கார பொண்ணை எனக்கு கட்டி வச்சிறியா? நானும் உன் கூடவே இருக்கலாம்”

“நான் ஒரு பொண்ணைச் சொன்னா கட்டிக்குவியா டா ஜா?”

“கண்டிப்பா. ழி பேபி சொன்னா கண்டிப்பா எனக்கு ஓகே தான்”

“அந்த ஆள் உன் கூட தான் இருக்கு. ஆனா நான் யாருன்னு சொல்ல மாட்டேன். நீயே கண்டு பிடி, கொஞ்ச நஞ்சம் இல்லை. உன் மேல பைத்தியமா சுத்திக்கிட்டு இருக்கா ஒருத்தி. அவளே வந்து உன் கிட்ட சொல்லுவான்னு நான் ரொம்ப எதிர் பாத்தேன். ஆனா பயப்படுறா போல?”

“ஹேய்  என்ன சொல்ற? இங்க இருக்காளா?”

“ஆமா”

“நம்ம ஹாஸ்பிடல்ல வேலை பாக்குறாளா?”

“ஆமா, நானே கொஞ்ச நாள் முன்னாடி தான் கண்டு பிடிச்சேன். நீ என் பின்னாடி சுத்தினதுனால அவளை கவனிக்கலை. இப்ப கண்டு பிடிச்சிருவ”, என்று சொன்னதும் சிரித்தான் ஜான்.

“சரி ழி நீ எப்ப கல்யாணம் பண்ணிக்கப் போற?”

“மாப்பிள்ளை ரெடி தான். வீட்ல தான் என்ன சொல்லுவாங்களோ தெரியலை”, என்று சிரித்தாள் யாழி.

“ஹேய் அது பாஸ் தானா? சூப்பர் ஜோடி நீங்க ரெண்டு பேரும்”, என்றவன் “சரி சொல்லேன் என் தேவதை எப்படி இருப்பா? உன்னை மாதிரி அழகா இருப்பாளா?”, என்று கேட்க ஆரம்பித்தான்.

தொடரும்…..