“ஆமா இப்ப அதுக்கு என்ன?”, என்று கேட்ட அதிபனின் குரலில் அவ்வளவு எரிச்சல்.
“உன்னைப் பாத்தா எனக்கு ஒரு பழமொழி தான் டா நினைவுக்கு வருது”
“சொல்லித் தொலை பிரகாஷ்”
“காத்திருந்தவன் பொண்டாட்டியை நேத்து வந்தவன் தூக்கிட்டு போனானான்”, என்று அவன் சொல்ல அதிபன் அதிர்ந்து போய் அவனைப் பார்த்தான். அவன் மனநிலையை ஒரே பழமொழியில் உணர்த்தியது போல இருந்தது அதிபனுக்கு.
அவனை நேருக்கு நேர் பிரகாசும் பார்க்க “என்ன சம்பந்தம் இல்லாம உளறிக்கிட்டு இருக்க பிரகாஷ்”, என்று சமாளிப்பாக கேட்டான் அதிபன்.
“இப்பவும் ஒண்ணும் கெட்டுப் போகல மச்சான். நான் சொன்னது உனக்கு புரியுதுன்னு எனக்கு நல்லாவே தெரியுது. தெளிவா யோசி. அப்புறம் கஷ்டப்படாத”
“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நான் சரியா தான் இருக்கேன். நீ தான் சம்பந்தம் இல்லாம பேசுற”
“அப்படியா அப்ப சந்தோஷம் தான். யாழிக்கும் ஜானுக்கும் கல்யாணம் பண்ணி வச்சிரு. அவன் அவளை நல்லா பாத்துக்குவான்”, என்று சொல்ல அதிபனின் முகம் இறுகிப் போனது. ஆனால் எதுவும் சொல்ல வில்லை. சொல்ல முடிய வில்லை என்பது சரியாக இருக்கும்.
அவர்கள் இருவரும் வந்ததும் பிரகாஷ் மற்றும் அதிபன் இருவரும் கை கழுவ சென்றார்கள். கை கழுவி வந்ததும் “போகலாமா?”, என்று கேட்டான் அதிபன்.
“அஞ்சு நிமிஷம் உக்காருங்க பாஸ், ழிக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச ஒரு டிஸ் ஆர்டர் பண்ணிருக்கேன். இப்ப வந்துரும். அவ அதை சாப்பிட்ட உடனே போகலாம்”, என்றான் ஜான்.
அந்த உணவு வந்ததும் யாழி சாப்பிட ஆரம்பித்தாள். அது ஒரு பழக் கலவை தான். ஆனால் அதில் ஐஸ்கிரீமும் இருந்தது.
யாழி ரசித்து ருசித்து அதை சாப்பிட “அந்த அளவுக்கு நல்லா இருக்கா யாழி?”, என்று கேட்டான் அதிபன்.
“ஆமா மாமா, நீ வேணும்னா டேஸ்ட் பாரேன்”, என்று சொல்லி தான் சாப்பிட்ட ஸ்பூனிலே அவனுக்கும் எடுத்து உதட்டின் அருகே கொண்டு சென்றாள். இது எப்போதும் அவர்களுக்குள் நடக்கும் என்பதால் அவனும் உண்ண போக “வெயிட் வெயிட் அதை நீ சாப்பிடு ழி. நான் பாஸ்க்கும் அவங்க பிரண்டுக்கும் தனியா ஆர்டர் பண்ணிட்டேன். இப்ப வந்துரும்”, என்றான் ஜான்.
யாழி “அப்ப சரி”, என்று சொல்லி விட்டு சாப்பிட ஆரம்பிக்க அதிபன் மட்டும் “நம்ம கூடவே தானே இருந்தான் எப்ப ஆர்டர் பண்ணினான்?”, என்று எண்ணி ஜானை முறைத்த படியே இருந்தான். அதை நமட்டுச் சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் பிரகாஷ்.
சொன்னது போல அவர்கள் எவ்வளவோ மறுத்தும் அன்றைய பில்லை ஜான் தான் காட்டினான். பின் அவர்கள் மூவரையும் யாழியின் வீட்டில் விட்டு விட்டு பிரகாஷ் நாளை வருவதாக கிளம்பிச் சென்றதும் ஜானும் கிளம்பிச் செல்வான், யாழியிடம் பேசலாம் என்று எண்ணினான் அதிபன்.
ஆனால் யாழி மற்றும் ஜான் இருவரும் வழக்கம் போல தோட்டத்தில் இறங்கி பேசிக் கொண்டே நடக்க ஆரம்பிக்க அதற்கு மேல் பொறுமை இல்லாமல் உள்ளே சென்று விட்டான்.
“நீயும் வாயேன் மாமா”, என்று அவள் அழைக்கும் போது கூட “இல்லை எனக்கு டயர்டா இருக்கு”, என்று சொல்லி விட்டுச் சென்று விட்டான். அவன் அமைதியை யாழி புரிந்து கொள்ளவே இல்லை.
அறைக்குள் சென்றவனுக்கு எப்படி தூக்கம் வருமாம்? கல் எறிந்த குளம் போல இருந்தது அவன் மனது. அமெரிக்கா வந்த ஒரே நாளில் அவனை மிகப் பெரிய குழப்பத்தில் தள்ளி இருந்தாள் யாழி.
தான் என்ன நினைக்கிறோம் என்ன ஆசைப் படுகிறோம் என்று புரிந்தால் தானே அதை அடைய முயற்சி செய்ய முடியும்? ஆனால் அவன் என்ன யோசிக்கிறான் என்று அவனுக்கு புரிய வில்லை என்பது தான் பிரச்சனை. உண்மையிலே புரிய வில்லையா இல்லை அதைப் பற்றி யோசிக்க பயந்தானா என்று அவனுக்கு மட்டுமே தெரியும்.
ஜான் எப்போது இங்கிருந்து செல்வான் என்று அவ்வளவு கடுப்பில் ஜன்னல் வழியாக அவர்களை வேடிக்கை பார்த்தன அதிபனின் விழிகள்.
ஜான் ஏதோ சிரிப்புடன் சொல்ல அதற்கு யாழி விழுந்து விழுந்து சிரித்தாள். உண்மையிலே ஜான் அவளை சிரிக்க வைத்துக் கொண்டு தான் இருந்தான். மெல்ல மெல்ல அதிபனின் விழிகள் யாழியை அளவிட்டது. இத்தனை நாள் அவன் கண்களுக்கு குழந்தையாக தெரிந்தவள் ஒரே நாளில் குமரியாக தெரிந்தாளோ? அவளையே பார்த்த படி இருந்தான்.
ஒரு வழியாக வெகு நேரம் கழித்தே ஜான் கார் அந்த கம்பவுண்டில் இருந்து செல்ல கதவை அடைத்து விட்டு யாழி உள்ளே வந்தாள். அப்போது அதிபனும் அறையை விட்டு வெளியே வந்தான்.
“இன்னும் நீ தூங்கலையா மாமா?”
“தூக்கம் வரலை யாழி”, என்ற படி தளர்ந்து போய் சோபாவில் அமர்ந்தான்.
“புது இடம்ல அதான்? அது மட்டுமில்லாம இப்ப இந்தியால பகல் டைம் அதான். உனக்கு டீ ஏதாவது எடுத்துட்டு வரவா?”
“அதெல்லாம் வேண்டாம் பாப்பு, இங்க வந்து உக்காறேன். உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”, என்று அழைத்ததும் அவன் அருகே வந்து அமர்ந்தாள் யாழி.
அப்போது சரியாக யாழியின் மொபைல் அடித்தது. விஷ்ணு தான் அழைத்திருந்தார். யாழி போனை எடுத்து பேச ஆரம்பிக்க அவள் முடிப்பாள் என்று பார்த்திருந்தான் அதிபன். அவளோ மாற்றி மாற்றி அனைவரிடமும் பேசிக் கொண்டிருக்க அதிபன் அறைக்குள் சென்று தூங்கி விட்டான். அவனுக்கு பொறுமை அவ்வளவு தான் இருந்தது. ஆனால் அவள் எப்போதுமே வீட்டினரிடம் இப்படி தான் பேசுவாள் என்பதால் அவளுக்கு வித்தியாசமாக எதுவும் தெரிய வில்லை.
அடுத்த நாள் காலையில் எழும் போதே வெளியே யாழியின் சிரிப்பு சத்தமும் ஜானின் பேச்சு சத்தமும் கேட்டது. “இந்த பணங்காய் மண்டையன் காலைலே வந்துட்டானா? இன்னைக்கு முழுக்க அவளை உன் கிட்ட பேச விட மாட்டேன் டா”, என்று எண்ணிக் கொண்டு ரெஃப்ரஷ் ஆக சென்றான்.
அவன் குளித்து முடித்து வெளியே வந்த போது அவன் தான் உண்மையிலே அதிர்ந்து நின்றான். ஏனென்றால் யாழி ஜானுடன் கல்லூரிக்கு கிளம்பிக் கொண்டிருந்தாள். ஜானோ அவள் கொடுத்த உணவை தேவாமிர்தம் போல ரசித்து ருசித்து உண்டு கொண்டிருந்தான்.
“குட் மார்னிங் மாமா, எழுந்துட்டியா? மெசேஜ்ல தான் சொல்லணும் போலன்னு நினைச்சேன். சரி எனக்கு கிளாஸ் இருக்கு. முடிச்சிட்டு ஜான் கூட ஹாஸ்பிடல் போய்ட்டு நைட் தான் வருவேன். பிரேக் பாஸ்ட் வச்சிருக்கேன். சாப்பிட்டுட்டு பிரகாஷ் கூட வெளிய போய் லஞ்ச மட்டும் வெளிய சாப்பிட்டுரு. நைட் பாக்கலாம்”, என்றாள் .
“எப்படி போற? டாக்ஸிக்கு புக் பண்ணவா?”, என்று அதிபன் கேட்க “ஹலோ பாஸ் நான் எதுக்கு இருக்கேன்? தினமும் ழி என் கூட தான் வருவா. போலாமா ழி”, என்று சொன்ன ஜான் அவளை அழைத்துச் செல்ல “இவனை கூடிய சீக்கிரம் குழில தான் இறக்கணும். எப்ப பாத்தாலும் ழி ழி ன்னு உயிரை வாங்கிக்கிட்டு”, என்று எண்ணிக் கொண்டு சோபாவில் அமர்ந்தவன் போனை எடுத்து வாட்சப்க்குள் சென்றான்.